கி.சீலதாஸ், நவம்பர் 15, 2018.
பிரதமர் துன் மகாதீர் முகம்மது எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற சர்ச்சை நெடுங்காலமாக இருந்து வருகிறது. அவரை இந்திய வம்சாவளித் தோன்றல் என்றார்கள். பாகிஸ்தானிய வம்சாவளித் தோன்றல் என்றும் சொல்லப்பட்டது. மகாதீர் முதன்முதலில் பிரதமரானதும் கேரளத்தின் பிரபல பத்திரிகையாளர்கள்: “நம்ம ஆள் மலேசியாவை ஆளுகிறார்” என்று சொன்னார்கள். இப்படிப்பட்ட கருத்துகளுக்கு மகாதீர் விளக்கம் அளிக்காதது மட்டுமல்ல, தம்முடைய பூர்வீகம் எது என்பதைத் தெளிவுப்படுத்த யாதொரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அது தேவையற்ற செயல் என அவர் கருதி இருக்கலாம். அவருடைய மவுனம் பலரின் பற்பல அனுமானங்களுக்கு இடம் அளித்தது. அவருடைய “பிரதமர் வாரிசு” என எண்பதுகளில் அறிவிக்கப்பட்ட டத்தோஸ்ரீ அன்வர் இபுராஹிமோடு உறவு முறிந்து பகைமை வளர்ந்த காலகட்டத்தில் மகாதீரை வைவதற்கும், கேலி செய்வதற்கும் மேற்கொள்ளப்பட்ட வருணனைகளில் “கிளிங்மாமா” என்பதும் ஒன்றாகும். இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது முதிர்ந்த அரசியல்வாதியைப் போல் நடந்து கொண்டார், செயல்பட்டார் மகாதீர். பிரதமர் பதவில் இருந்து ஓய்வு பெற்றவருக்கு நாட்டுச் சூழ்நிலை, அவரை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்தினர் மலேசியர்கள்.
தொண்ணூற்று மூன்று வயதைக் கடந்தவர் பிரதமரானதும் பல சீர்த்திருத்தங்களுக்கு உடன்பட்டு செயல்பட்டார். இப்படிப்பட்டச் சூழலில் மகாதீர் ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டபோது அவருடைய பூர்வீகத்தைப் பற்றி கேள்வி எழுந்தது. விளக்கமளித்த மகாதீர் “ஒரு கரண்டி இந்திய இரத்தம் இருந்தது” என்பதை ஒப்புக்கொண்டார். கேள்வி பூர்வீகத்தைப்பற்றியது, இரத்தத்தின் அளவு என்ன என்பதை கேட்கவில்லை. அதாவது ஒரு கரண்டியா? ஒரு துளியா? ஒரு குடமா? அப்படிப்பட்ட அளவுக்கு இடமே கிடையாது. யார் மூதாதையர் என்பதுதான் முக்கியம். பல தலைமுறைகளுக்குப் பிறகு மாற்றம் ஏற்படலாம். ஆனால் போட்ட உரத்தின் அடையாளம் மாறாது.
2017ஆம் ஆண்டு சிங்கப்பூர் அதிபருக்கானத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த முறை மலாய்க்கார சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அதிபர் பதவி ஒதுக்கப்பட்டது. அதிபருக்கான வேட்பாளர்களில் திருமதி ஹலிமா யாக்கூபும் ஒருவர். மற்ற இரு மலாய்க்காரர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படன. ஹலிமாவின் தந்தை ஒரு தமிழ் முஸ்லிம், அவரின் தாய் மலாய்க்காரர். அவரின் அதிபர் வேட்பாளருக்கான மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹலிமா ஒரு மலாய்க்காரர் அல்ல என்ற அச்சம் கிளம்பியபோது அவர் ஒரு மலாய்க்காரர் என்ற சான்றிதழை சிங்கப்பூர் அரசு வழங்கியது.
மலர்ச் செடிகளில் இருந்து உதிர்ந்த மலர்கள், இறந்து விதைகளாக மாறி, புதுச் செடிகளாக உயிர் பெறுகின்றன. அந்தச் செடி நறுமணம் கொண்ட புது மலர்களைத் தருகின்றது. அந்தப் புது செடியும் அது தரும் மலர்களும், பழைய மலர்ச் செடிக்கும் எங்களுக்கும் சிறு விதை அளவு உறவுதான். அதற்குமேல் ஒன்றும் இல்லை என்பதில் என்ன நியாயம் இருக்கிறது? அந்த இறந்துவிட்ட விதையின் மூலத்தை மறுப்பது அடையாளத் தடுமாற்றம் எனலாம். ஆனால் மலர்களின் நிபுணர்கள் மலரின் பூர்வீகம் இறந்த மலர் விதையின் அடையாளத்தை உறுதிசெய்யாமல் விடுவதில்லை.
ஆகமொத்தத்தில், ஒருவரின் பூர்வீகத்தைப் பற்றி அடையாளக் குறிகள் தேடப்படும்போது இரத்தத்தின் அளவு, தானாக ஏற்படுத்திக் கொண்ட அடையாளக் குறிப்புகள் பயனடையா. ஒருவரின் மூதாதையர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவரோ அந்த உறவு பட்டுப்போகாது. ஒருவேளை பல தலைமுறைகள் உறவுகளைவிட்டு யாதொரு இரத்தத் தொடர்பு இல்லாதவர்களோடு திருமணம் நடந்து பிள்ளைப்பேறு காணும்போது தந்தைவழி இரத்த உறவு மாறலாம். ஆனால் முழுவதுமாக அழிந்துவிடுமா? அதுபோலவே தாய்வழி குணாதிசயங்கள் முற்றிலும் அறுந்துவிடும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
இந்தியர்கள் இனிமேலாவது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையவேண்டுமானால் மற்றவர்களோடு சரிசமமாக தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமானால், கவுரவிக்கத்தக்கவர்களாக மாற வேண்டும். பிறர் கண்டு மதிக்க வேண்டும். போற்றுதற்குரிய சமூகமாக மாறவேண்டுமே அன்றி, கண்டு அஞ்சும் சமூகமாக இருக்கக்கூடாது.
பிற இனத்தவர்கள் மத்தியில் செட்டியார்களுக்கு நல்ல மதிப்பு உண்டு – காரணம் அவர்கள் பணம்படைத்த செல்வந்தர்கள் என்பதால் மட்டுமா? இல்லை எதிலும் கச்சிதமாக நடந்து கொள்வார்கள் என்ற நற்பெயர் உண்டு. அவர்களைப் போலவே யாழ்பாணத்தமிழர்கள். அவர்களை சீனர்கள் மதிப்பது போல் வேறு யாரும் மதித்தாகத் தெரியவில்லை. அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதும் பல உயர்ரகத் தொழில்களில் புலமை பெற்றிருப்பதும் நாம் தெரிந்து, தெளிந்த மனதோடு பாராட்டி பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாகும்.
பெரும்பான்மையானத் தமிழர்கள் பண வசதியை மனதில் கொண்டு தாங்கள் பெற்றிருக்கும் தொழில் அறிவு நுணுக்கமானத் தரங்களை அடைவதற்கு துணிவது கிடையாது. மனமாற்றம் தேவை. நல்ல ஆய்வுகளை நடத்தி வாழ்வில் வெற்றி கண்ட தமிழர்கள் உள்ளனர். அவர்கள் சமுதாயத்தின் புகழ் சின்னங்களாக விளங்குகின்றனர். அதுதான் முக்கியம். இதையெல்லாம் சிந்திக்கும்போது தமிழர்கள் அல்லது பொதுவாக இந்தியர்கள் எவ்வகையிலும் தரம் குறைந்தவர்கள் அல்லர். அவர்களுக்கும் தனிப் பெருமை உண்டு. அதை நிலைநாட்டும் பொறுப்பு நம் கையில்தான் இருக்கிறது.