எங்கே போனீர்கள் என்ஜிஓ? வேதமூர்த்திக்கு குரல் கொடுங்கள் – இராகவன் கருப்பையா

என்று தனியும் இந்த சுதந்திர தாகம்…..
என மகாகவி பாரதியார் பாடினார்.
அதே போல, என்று தனியும் நம் ஒற்றுமை தாகம்?

கடந்த மே 9ஆம் தேதியன்று  ‘மலேசியா பாரு’ பிறந்ததில் இருந்து நிறைய மாற்றங்கள், மறுமலர்ச்சி, சுதந்திரம், என பல விஷயங்களில் நாம் குதூகலம் அடைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், நம் இனத்தாரிடையே ஒற்றுமை இன்னும் மலரவில்லையே எனும் ஏக்கம் ஒரு பெரிய குறையாகவே உள்ளது.

இன்னும் சண்டை சச்சரவு, வெட்டு, குத்து, கொலை – இப்படி பழைய புராணம்தான். புளித்து போய்விட்டது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, அண்மையில் நடந்தேறிய ‘சீஃபீல்ட் நாடகத்தில்’ ஒரு குண்டர் கும்பலை அனுப்பி கோயிலை சேதப்படுத்தி அங்கிருந்த பக்தர்களை தாக்குவதற்கு அமைச்சர் வேதமூர்த்தியா உத்தரவிட்டார்?

அதோடு மட்டுமின்றி தீயணைப்பு வீரர் அடிப்பை அடித்துக் கொல்லுங்கள் என்று அவரா ஆணையிட்டார்.

நடந்து முடிந்த சம்பவங்கள் துயரம்தான். குறிப்பாக அடிப்பின் மரணம் மிகவும் வேதனையான ஒன்று.

இவற்றுக்கெல்லாம் காரணம் காட்டி, அமைச்சர் வேதமூர்த்தி அவர்தம் வேலையை சரியாக செய்யவில்லை என ஆளுங்கட்சி பெர்ஜாசாவின் இளைஞர் பிரிவு, பாஸ் மற்றும் அம்னோ உள்பட பல மலாய் தீவிரவாத இயக்கங்களும் அரசு சாரா (NGO) அமைப்புக்களும் குரல் எழுப்பி கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளன.

பாரிசான் அரசாங்கத்தில் ஒரு பெரிய கும்பல் கோடி கோடியாக மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்டிருந்த போது யாரையும் பதவி விலகச்சொல்ல இவர்களுக்கு தில் இல்லை.

அப்படினா இந்தியர்கள் கிள்ளுக்கீரயா?

இத்தருணத்தில் இந்தியர் சார்புடைய அரசு சாரா இயக்கங்கள் எல்லாம் எங்கே போய் சுறுங்கிக் கொண்டன என்பதுதான் மக்களின் ஆதங்கம்.

நாம் அறிந்த வரையில், கடந்த 6 மாதங்களாக வேதமூர்த்தி தமது கடமைகளை சிறப்பாக செவ்வனே செய்து வருகிறார்.

இதனை நாம் அங்கீகரிக்க வேண்டாமா? அவருக்காக ஆதரவு கரம் நீட்ட வேண்டாமா?

சாதாரணமான விஷயங்களுக்கெல்லாம் வீரப்பாண்டிய கட்டபொம்மனைப் போல மீசையை முறுக்கிக் கொண்டு வீர வசனம் பேசும் என்ஜிஓ (NGO) மார்களே, இப்ப எங்கப்பா போனீங்க?
எங்கே யாரையும் காணோம்?

ஹிண்ட்ராஃப் போராட்டத்தை  இதர 4 தலைவர்களுடன் சேர்ந்து வேதமூர்த்தி வழி நடத்தினார். அதனைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலில் படாவி தலமையிலான பாரிசான் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் 3இல் 2 பங்கு ஆதிக்கத்தை இழந்ததற்கு அந்த பேரணிதான் காரணம் என்பதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்த ஒரு  சரித்திரம்.

அதன் பிறகு மலேசிய இந்தியர்களின் அவல நி லையை முன்னிறுத்தி பிரிட்டன் அரசுக்கு எதிராக அவர் வழக்கு தொடுத்ததையும் நாம் மறந்துவிட முடியாது. வழக்கில் வெற்றி கிட்டவில்லை என்பது வேறு விஷயம். வெற்றி கிடைத்திருந்தால் அவரை தலைமேல் தூக்கி வைத்து துதி பாடியிருக்கும் இந்த சமூகம்.

இப்படிப்பட்ட வேதமூர்த்தி இன ரீதியிலான, அர்த்தமற்ற ஒரு நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.

அவருடைய ஆற்றலில் பிரதமர் மகாதிர் திருப்தி கொண்டுள்ள போதிலும் பலரின் நெருக்கதலுக்கு அவர் அடிபணிய வாய்ப்பிருக்கிறது. ஐசெர்ட்(ICERD) விவகாரத்தில் இதனை அவர் நிரூபித்துவிட்டார் என்பது நாம் அறிந்த உண்மை.

ஆக, அமைச்சர் வேதமூர்த்தியை இனவாதிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டியது நம் கடமையாகும். தனிப்பட்ட மனிதர்களால் அதனை செய்ய முடியாது. ஆனால் என்ஜிஓ அமைப்புக்களுக்கு அதற்கான வலிமை உண்டு.

இதுவரையில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி மட்டுமே வேதமூர்த்திக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறார்.

ஒரு மனுஷன் நல்ல விஷயங்களை செய்யும் போது, அவரை பாராட்டி ஊக்கப்படுத்துவது நமது மறபு. அதனை விடுத்து தேவையில்லாத பழைய விஷயங்களை மனதில் பதிய வைத்துக்கொண்டு அவரை பழிவாங்கக் கூடாது.

எனவே நமது என்ஜிஓ மார்களே, தயவு செய்து எழுந்து வாருங்கள். நம் அமைச்சருக்காக குரல் கொடுங்கள்.

அது நமது கடமை மட்டுமல்ல – பொறுப்பும் கூட!