கருத்து | நம்பிக்கை கூட்டணியின் (பக்காத்தான் ஹராப்பான் – பிஎச்) 14-வது பொதுத் தேர்தல் (ஜிஇ14) அறிக்கை, விரிவான சீர்திருத்தங்களை முன்னெடுக்க உள்ளதாக உறுதியளித்தது, இதனால், தேசிய முன்னணி (பாரிசான் நேசனல் -பிஎன்) ஆட்சியின் கீழ் இருந்தது போல் அல்லாமல், மிகவும் வித்தியாசமான ஓர் அரசாங்கம் அமையவுள்ளது என்று நம்பி, 2018, மே 9-ம் தேதி, மலேசியர்கள் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய்தனர். சில மாதங்கள் கடந்த பின்னர், இப்போது பிஎச், பிஎன் 2.0 –ஆக மாறிவருவதை நாம் காண்கிறோம், குறிப்பாக, மலேசிய பிரிபூமி பெர்சத்து கட்சியில் (பெர்சத்து) அதிகமான அம்னோ எம்பி-க்கள் நுழைந்த பின்னர்.
இதுதான், ஜிஇ14-ல் நாம் விரும்பி தேர்ந்தெடுத்த மாற்றமா? 22 வருடங்கள் பிரதமர் பொறுப்பு வகித்தபோது, மலேசியத் தொழிற்துறைகளில் கிட்டத்தட்ட அனைத்தையும், தனியார் மயமாக்கிய, ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைத்த, ஒருவரிடம் ஹராப்பான் கைக்கோர்த்தது. அதிலும் மோசமான ஒன்று, பாஸ் அம்னோவுடன் ஒத்துழைக்க ஹராப்பான் உந்துசக்தியாக இருந்தது.
ஜிஇ14 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பொறுப்பின்மை
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், ஹராப்பான் மிகவும் பலவீனமாக இருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிலுள்ள பாதுகாப்பு குற்றச் சட்டம் (சோஸ்மா), விசாரணையற்ற தடுப்புக்காவல் போன்ற இன்னும் பிற கொடுங்கோல் சட்டங்களை அகற்றுவோம் எனும் அவர்களின் வாக்குறுதியில், அரசாங்கம் மெத்தனப்போக்காக இருப்பதை நாம் பார்க்கிறோம். அதுமட்டுமின்றி, முன்னுரிமை கொடுக்க வேண்டிய, நீண்டகாலமாக சமூக ஆர்வலர்கள் குரல்கொடுத்துவரும் சீர்திருத்தங்களில், ஹராப்பான் முழுமையான கவனம் செலுத்தவில்லை.
மேலும், மகாதீர் 1.0 காலத்திய, கொள்கை மற்றும் சர்வாதிகார முடிவெடுக்கும் செயல்முறைகளை மீண்டும் நாம் பார்க்க தொடங்கியுள்ளோம். ஹராப்பான் தேர்தல் அறிக்கை, பிரதமர், நிதி அமைச்சில் பொறுப்பு வகிப்பதைத் தடுக்கிறது. ஆனால், டாக்டர் மகாதீர், முதல் 100 நாள்கள், அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்களான (ஜி.எல்.சி.) கஸானா, பி.என்.பி. மற்றும் பெட்ரோனாஸ் ஆகியவற்றைப் பிரதமர் துறை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். மகாதீரின் முந்தைய சர்வாதிகாரத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தியதையே இது காட்டுகிறது.
புரோட்டன் 2 உருவாக்கம் குறித்து, அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டதா? கஸானாவைத் தனியார் மயப்படுத்துதல், தோல்வியடைந்த F1 கார் பந்தயத் தளத்தைப் புதுப்பித்தல் போன்றவை அமைச்சரவையில் பேசப்பட்டதா? கஸானா நேசனல் பெர்ஹாட் குழுவில் பிரதமர் டாக்டர் மகாதீர் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி ஆகியோரின் நியமனமும் ஹராப்பான் தேர்தல் வாக்குறுதிக்கு முரணானது. தங்கள் பதவியின் பொறுப்புகளைப் பலவீனமாக்கும் என்பதால், பொது முதலீடுகளில் அரசியல்வாதிகள் ஈடுபடுவதைத் தடுப்பதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிஎச், பிஎன் 2.0-ஆக மாறிவிட்டது
புதிய பிஎச் அரசாங்கம், பழைய பிஎன் ஆட்சியின் பொருளாதாரக் கொள்கைகளில் இருந்து குறிப்பிடத்தக்க வித்தியாசம் எதையும் காட்டவில்லை. புரோட்டன் 1.0 திட்டம் தோல்வியில் முடிந்து, மலேசிய வரி செலுத்துவோர், பொது போக்குவரத்து மற்றும் மலேசியப் பயனர்களுக்கு அதிக செலவினங்களை ஏற்படுத்தியது.
ஒருகாலத்தில், புரோட்டன் 1.0 திட்டத்திற்கு எதிராக உரக்கக் குரலெழுப்பிய ஹராப்பான் தலைவர்கள், இன்று புரோட்டன் 2.0 திட்டத்தை ஆதரிக்கின்றனர் என்பதை நம்ப மிகவும் கடினமாக உள்ளது. இன்னுமொரு தேசியக் கார் திட்டம் தோல்வியில் முடிந்தால், அதனால் அதிகப் பாதிப்புக்குள்ளாகப் போவது அரசாங்கம் மட்டுமல்ல, மக்களாகிய நாமும்தான்.
நஜிப் மீது தனிப்பட்ட விரோதம்
புதிய பிஎச் அரசாங்கம் ஊழலை அழிப்பதாக உறுதியளித்தது. ஜிஇ14-ல் அவர்கள் வெற்றிபெற, இது ஒரு முக்கியக் காரணம். ஆனால், அவர்கள் மலேசியர்களை ஏமாற்றிவிட்டார்கள், குறிப்பாக சரவாக் மக்களை, சரவாக் மாநிலத்தின் வளங்கள் ஒருசில ஊழல்வாதிகளின் பேராசையால் முழுமையாக உறிஞ்சப்பட்டதை, அம்மக்கள் நேரிடையாகக் கண்டனர். இதுவரை பிஎச் அரசாங்கம், முன்னாள் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாமுட், அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினரின் சொத்துகளை அறிவிக்கக் கோரவில்லை.
சரவாக்கில் தனது பழைய கூட்டாளியும், மலேசியாவின் பணக்கார நபர் என்று கூறப்படும் தாயிப் மாமுட்டை விடுவிப்பதன் வழி, நஜிப் ரசாக் மீது முன்னெடுக்கப்படும் வழக்குகள், அவருக்கு எதிரான, பிரதமரின் தனிப்பட்ட மனப்போக்கு என்பதையே தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.
உள்ளூராட்சி தேர்தல்
1965 முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி தேர்தலை, மீண்டும் நடத்த பிஎச் அரசாங்கம் தாமதிக்கிறது, அதற்குக் காரணம் அரசாங்கத்தின் கடன் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. உள்ளூர் அரசாங்கச் சட்டம் 1976 விதிமுறைகளை அகற்றி, உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், அத்தேர்தலை சுலபமாக நடைமுறைபடுத்த முடியும்.
1957-ல், நம்முடைய தனிநபர் வருமானம் AS$800 அமெரிக்க டாலர் மட்டுமே, ஆனால் நாம் உள்ளூராட்சி தேர்தலை நடத்தும் திறனைக் கொண்டிருந்தோம், இப்போது நமது தனிநபர் வருமானம் AS$10,000. ஆக, இப்போது உள்ளூர் தேர்தலை நடத்தும் திறன் நமக்கு இல்லை என்று சொல்லாதீர்கள்.
யூ.இ.சி. சான்றிதழ்களை ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே அங்கீகரிக்க முடியும் என, சீனத் தனியார் பள்ளி பட்டதாரிகளிடம் சொல்வதும் நியாயமற்றது. ஜிஇ14 தேர்தல் அறிக்கையின் கடுமையான மீறல் இதுவாகும், காரணம் 80 விழுக்காடு சீன வாக்காளர்கள், அந்த வாக்குறுதியை நம்பியே ஹராப்பானுக்கு வாக்களித்தனர்.
கொடுங்கோல் சட்டங்களை அகற்றுதல்
மனித உரிமைகளை மீறும் சில சட்டங்களை இரத்துசெய்தல் அல்லது மீளாய்வு செய்யும் பணிகளை, முதல் 100 நாட்களுக்குள், விரைவாக செய்ய முடியுமென பல வழக்கறிஞர்கள் புதிய பிஎச் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். அதில், விசாரணையின்றி தடுத்துவைக்கும் சட்டமான ‘பாதுகாப்பு குற்றச் (சிறப்பு நடவடிக்கை) சட்டம் 2012 (சொஸ்மா), குற்றவியல் தடுப்புச் சட்டம் 1959 (போக்கா), வன்முறை தடுப்பு சட்டம் 2015 (பொடா) போன்ற சட்டங்களை அகற்றுவதும் அடங்கும். இவற்றைச் செய்யாமல் போனது, ஜிஇ14 தேர்தல் அறிக்கை வாக்குறுதியை மீறிய, ஒழுக்கமற்ற ஒரு செயலாகும்.
99% மக்களுக்காக, ‘மூன்றாம் முற்போக்கு சக்தி’யை உருவாக்க காலம் கனிந்தது
‘இரு அணி அமைப்பு’ முறையைக் கடந்த பின்னர், அதேத் தன்னலக்குழு, 1981-ல் அறிமுகப்படுத்தப்பட்ட அதேக் கொள்கைகளைச் செயல்படுத்த முயற்சி செய்வதை நாம் பார்க்கிறோம். கூடுதலாக, பாஸ் அம்னோவுடன் ஒத்துழைக்க, ஹராப்பானே வெற்றிகரமாக பாதை அமைத்து கொடுத்துவிட்டது, குறிப்பாக ஜிஇ14-கிற்குப் பிறகு.
எனவே, மலேசியாவில் உண்மையான மாற்றத்தை விரும்பும் அனைவரும், பிஎன் மற்றும் பிஎச் அரசாங்கம் கொடுக்கத் தவறிய நேர்மையான, ஜனநாயக, நிலைத்தன்மையான எதிர்காலத்திற்காக, ‘மூன்றாம் முற்போக்கு சக்தி’யை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
செமினி இடைத்தேர்தலில், ‘மூன்றாம் முற்போக்கு சக்தி’யை உருவாக்க, பி.எஸ்.எம். கட்சியால் முடியும். மலேசியர்களின் எதிர்கால தலைமுறையினருக்காக, நீண்ட காலம் எதிர்பார்த்து காத்திருக்கும், இனப் பாகுபாடற்ற, முற்போக்கான, நிலைத்தன்மையான ஒரு தேர்வை வழங்க, பி.எஸ்.எம்.-ஆல் முடியும்.
இன வெறி மற்றும் ஒடுக்குமுறையை அழிக்க வேண்டும்
வாக்குகளுக்காகவும் பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவும், பிஎன் மற்றும் பிஎச் கூட்டணிகளை ஆக்கிரமித்து இருக்கும் கட்சிகள், இன அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்றி வந்துள்ளன. அதனால், இந்த இரு அணியிலிருந்தும் வெளியேறுவது, அக்கட்சிகளுக்குக் கடினமான ஒன்றாக இருக்கிறது போலும்.
பிஎச் கூட்டணியின் புதிய உறுப்பினரான பெர்சத்து, அம்னோவைவிட, ‘பூமிபுத்ரா’க்களுக்காகப் ‘உண்மை’யாகப் போராடும் ஒரு கட்சியாக தன்னை நினைத்துக் கொண்டுள்ளது. அதன் விளைவாக, இந்த இரண்டு கூட்டணிகளில் அங்கத்துவம் பெற்றிருக்கும் எந்தக் கட்சியும், 1990-ல் முடிவடையும் என அட்டவணையிடப்பட்ட, இன ஒடுக்குமுறைக்கு வழிவகுத்த, புதியப் பொருளாதாரத் திட்டம் எப்போது நிறைவடையும் எனக் கேள்வி எழுப்பாமலேயே இன்றுவரை இருக்கின்றனர்.
முற்போக்கு கூட்டணி, தேவை அடிப்படையிலான கொள்கைக்கு அழைப்பு விடுக்குமே தவிர, இன அடிப்படையிலான கொள்கையை அது ஆதரிக்காது. இன ஒடுக்குமுறை கொள்கைகள், சமத்துவச் சட்டத்தின் கீழ் பழமையானதாகி போகும், சமத்துவம் என்பது மனித உரிமைகள் ஆணையத்தின் உள்ளார்ந்த பகுதியாகும். நாம் உருவாக்க இருக்கும் முற்போக்கு அமைப்பு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரே நாடாக முன்னேற, மனித உரிமைகளைத் தீவிரமாக கருதுவதோடு; இனம், மத நம்பிக்கை, பாலியல் ஆகியவற்றைக் கருதாமல், அனைத்து மலேசியர்களின் உரிமைகளையும் மதிக்கும்.
நாட்டின் வளத்தை 99% மக்களுக்குச் சமமாக விநியோகித்தல்
நவீன தாராளமயக் கொள்கைகளை, முதலீட்டாளர்களுக்கு வழங்குவதில், யார் சிறந்தவர் என்பதைப் பறைசாற்ற, பிஎன் –னும் பிஎச்-உம் நீயா நானா எனப் போட்டி போட்டு கொண்டிருக்கின்றன, காடுகளை அழித்து ‘மேம்பாட்டு’ திட்டங்களை நடைமுறைபடுத்துதல், நிலங்களை மீட்டெடுத்தல் மற்றும் பொது சொத்துக்களை எடுத்துக் கொள்ளுதல் என பலவற்றை அவர்கள் அரங்கேற்றி வருகின்றனர்.
நாட்டின் செல்வங்களைப் பகிர்ந்தளிப்பதில், இந்த இரு கூட்டணிகளும் கொள்கை வகுத்து செயல்படுவதைக் காண முடியவில்லை. B40 (ஏழைகள்) மற்றும் M40 (நடுத்தர வர்க்கம்) குழுவினரைவிட அதிக வளம் கொண்ட, 1% (செவ்வந்தர்கள்) குழுவினருக்கு, வருமான இலாப வரி, மூலதன ஆதாய வரி, பரம்பரை மற்றும் ஆடம்பர வரி போன்ற முற்போக்கு நிதிக்கொள்கை ஏதும் அவர்களிடம் இல்லை. மலேசியாவில், முதல் 50 செல்வந்தர்களின் மதிப்பு (மேல் 0.00017%) மட்டும் கிட்டத்தட்ட RM300 பில்லியனைக் கொண்டது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நான்கில் ஒரு பங்கு, RM1 டிரில்லியன் மதிப்பு கொண்டது!
நியாயமான விலையில் வீட்டு வசதிகள், சுகாதாரம், போக்குவரத்து மற்றும் கல்வி
அனைத்து தொழிலாளர்களுக்கும், நியாயமான ஊதியம், ஜனநாயக முறையிலான உரிமைகளை வழங்குவது; ஓய்வு பெறும்போது நியாயமான ஓய்வூதியம், மலிவு விலையில் வசதியான வீடுகள்; மலிவான கட்டணத்தில் சிறப்பான சேவை வழங்கும் சுகாதாரச் சேவை மற்றும் பொது போக்குவரத்து, இலவசக் கல்வி (பணக்கார மாணவர்களுக்குத் தகுதித் தேர்வு) போன்றவற்றை உறுதிபடுத்த வேண்டும்.
தனியார் மயமாக்கப்பட்ட பொது சொத்துகளை மீட்டெடுப்தோடு, பொது சொத்துகள் தனியார் மயமாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். நீர், ஆற்றல் (சக்தி) போன்றவற்றைத் தேசிய மயமாக்குவதோடு, ஜிஎல்சி-யை ஜனநாய மயமாக்க வேண்டும். எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்களுக்கு (மாநிலங்கள்) அதிக வருவாயை வழங்குவது, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்கு உறுதியளிப்பது, பெட்ரோனாஸ் முதலீட்டுப் பங்குகளை நாடாளுமன்றத்திலும் பொது மக்களிடமும் வெளிப்படையாக அறிவிப்பது போன்றவையும் செயல்முறைக்குக் கொண்டுவர வேண்டும்.
வீட்டுவசதி மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பிஎச்-இன் முயற்சிகள் யாவும், அத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள சில தனியார் நிறுவனங்களால் தடுக்கப்படுகின்றன, முன்பு பிஎன் -இன் கீழ் நடந்ததைப் போன்று. எனவே, நமது வீட்டுவசதி மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள், பொதுத் துறையின் ஈடுபாடுகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.
பிஎன் 2.0-ஆக மாறிவரும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தைப் பார்க்கும்போது, இவையாவும் நனவாவது சிரமமான ஒன்றே. மலேசியாவை ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கு இட்டுச்செல்ல, சமத்துவம், நேர்மை, ஜனநாயகம் மற்றும் மனித உரிமை அடிப்படையிலான, ‘மூன்றாம் முற்போக்கு சக்தி’யாலேயே முடியும் என்பது திண்ணம். இன்றைய சூழலில், அதற்கு சிறந்ததொரு தேர்வு, பி.எஸ்.எம். கட்சி மட்டுமே.
எழுத்து :- குவா கியா சோங், சுவாரா ரக்யாட் மலேசியா (மலேசியர்களின் குரல் – சுவாராம்) ஆலோசகர்
(தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரை)