நீதி தேவதையின் நிலை! – கி.சீலதாஸ் 

சட்டத்திற்குப்  புறம்பாக  ஏதாவது  தவறு  நேர்ந்துவிட்டாலோ,  அல்லது  ஒருவருக்கு  இழைக்கப்படும்  தவறுக்குத்  தீர்வு   தேடி  போவது  நீதிமன்றத்திற்கு.  நீதிமன்றம்  இயங்குவதற்கு  எதற்கு?  நீதி  வழங்க:  ‘அப்பழுக்கற்ற  நீதி  வழங்க’.

பத்தொன்பதாம்  நூற்றாண்டின்  இறுதியில்  இங்கிலாந்தின்  மேல்முறையீட்டு    நீதிமன்றத்தின்  தலைவர்  ஒரு  கேள்வியை  முன்வைத்தார்.  நீதிமன்றம்  என்றால்  என்ன?  என்பதே  அவர்  எழுப்பிய  கேள்வி.

அதற்கு  அவரே  பதில்  நல்கினார்.  “இந்த  சிறப்புமிகுந்த  அழகற்ற  அறையை    நீதிமன்றம்  என்றழைக்கப்படுகிறது.  ஆனால்  இந்த  அழகற்ற  அறை  அன்று  நீதிமன்றம்.  இது  நீதிமன்றம்  என்றழைப்பதற்குக்  காரணம்  நாம் (நீதிபதிகள்)  அதில்  அமர்ந்திருக்கின்றோம்”  என்றார்.

ஒரு  கட்டடத்தினுள்  நீதிபதி  அமர்ந்து  வழக்கு  விசாரிக்கும்போது  அது   நீதிமன்றம்  ஆகிறது.  அழகற்ற  அறையாக  இருப்பினும்  அது  கவுரமிக்க,  சிறப்புமிகு  அந்தஸ்தைப்  பெற்றுவிடுகிறது.  பத்தொன்பதாம்  நூற்றாண்டில்  நீதிமன்றங்கள்  நாகரிக  வசதிகளைக்  கொண்டிருக்கவில்லைதான்.

இங்கிலாந்து  போலவே  இந்த  நாட்டிலும்  சுமார்  அறுபது  ஆண்டுகளுக்கு  முன்பு  புதுமையான  குளுகுளு  வசதிகள்  இல்லாமல்   நீதிமன்றங்கள் இயங்கின.  அழகற்ற  நிலையில்  இருந்தன.  இன்று  நிலை  மாறிவிட்டது.  எல்லாவித  விஞ்ஞானம்  கண்ட  புதினங்களை  நீதிமன்றங்களில்  காணலாம்.

சற்றுமுன்பு  குறிப்பிடப்பட்ட  தலைமை  நீதிபதி  அந்த  அழகற்ற  அறையில்  நீதிபதிகள்  அமர்ந்திருப்பதால்  அது  நீதிமன்றம்  என்றத்  தகுதியை  பெறுகிறது  என்றாரே  தவிர  அந்த  நீதிபதிகள்  எப்படிப்பட்டவர்களாக  இருக்க  வேண்டும்  என்று  அவர்   விளக்கவில்லை.

ஒருவகையில்  அப்படிப்பட்ட  விளக்கம்  தேவைப்படவில்லை  என்றுகூட  சொல்லலாம்;  ஏனெனில்,  நீதிபதி  என்பவர்  ஒரு  வழக்கை  தீர  விசாரித்து  வேறு  எவருடைய  தலையீடு  இன்றி  உண்மைக்கு  மதிப்பளித்து  தன்    மனச்சாட்சிக்கு  ஏற்றவாறு  தீர்ப்பு,  நீதிவழங்கத்  தயங்காத  திராணி  கொண்டவர்தான்  நீதிபதியாக  திகழ  முடியும்  என்ற  கருத்து  பரவலாக  இருந்தது.

ஒரு  காலகட்டத்தில்  இங்கிலாந்தின்  மன்னர்தான்  சட்டத்திற்கு  அப்பாற்பட்டவர்  என்று  கர்வமாக  உரைத்தபோது,  மன்னர்  சட்டத்திற்கு  உட்பட்டவர்  என்று  துணிந்து  சொன்னவர்  ஒரு  நீதிபதி.

நீதிபதிகளின்  குணாதிசயங்கள்  என்னவென்றால்  அவர்  சட்டத்தைப்  பயின்றவர்,  அனுபவம்  மிக்கவர்,  பொறுமையோடு  விசாரிக்கும்  தன்மை  கொண்டவர்,  தம்  முன்  வந்திருப்போரை  நல்ல  முறையில்  நடத்தும்  பண்புடையவர்,  நீதி  வழங்கும்போது  யாருக்கும்  அஞ்சாமல்,  தம்  மனச்சாட்சிக்கு  கட்டுப்பட்டு  நீதி வழங்குபவர்.  இப்படிப்பட்ட  குணாதிசயங்கள்தான்  நீதிபதிகளிடம்  இருக்கவேண்டும்  என்று  உலகெங்கும்  உள்ள  நாகரிக  குணமுடைய  சமுதாயம்  எதிர்பார்க்கிறது.

நீதிமன்றம்  உயர்வான  நிலையை  அடைவதற்கு  உதவுவது  அந்த  நீதிமன்றத்தில்  செயல்படும்  நீதிபரிபாலனாகும்.  மக்களுக்கு  நம்பிக்கை  ஊட்டுவது  நீதித்துறை,  ஆறுதல்  நல்குவது   நீதித்துறை – நீதித்துறை  எப்பொழுதும்  நீதியை  நிர்வகித்து  நியாயத்தின்  பக்கம்  நிற்கும்  என்பது  மக்களின்  எதிர்பார்ப்பு.

நம்  நாட்டில்  நடந்தது  என்ன?  நடப்பது  என்ன?  

நெடுங்காலமாகவே  நீதித்துறை  மீது  சந்தேகங்கள்  எழுந்துள்ளன.  நீதித்  துறைக்கு  களங்கம்  கற்பிக்கும்  வகையில்  நடவடிக்கைகள்  நிகழ்கின்றன  என்ற  குற்றச்சாட்டுகள்  எழுந்துள்ளன.  ஆனால்  அவை  கண்டுகொள்ளப்படவில்லை.  அதே  வேளையில்,  சில  நீதிபதிகள்  அரசமைப்புச்  சட்டத்தின்படி  எடுத்துக்கொண்ட  உறுதிமொழிக்கு  மதிப்பு  அளிக்காமல்  தங்களின்  சொந்த  விருப்பங்களுக்கு  முதலிடம்  தந்ததையும்  காணமுடிந்தது.

இந்திரா  காந்தியின் வழக்கு

குறிப்பாக  இந்திரா  காந்தியின்  குழந்தைகள்  பாதுகாப்பு  வழக்கில்  நீதிபதிகள்  நடந்து  கொண்ட  முறை  அங்கீகரிக்கப்பட்ட  வியாக்கியான  மரபுகளைப்  புறந்தள்ளி  சட்டத்தில்  குழப்பத்தை  ஏற்படுத்திய  பெருமை  சில  நீதிபதிகளுக்கு  உரியதாகும்.  அதுபோல  பல  வழக்குகளில்  வந்தத்  தீர்ப்புகள்  சட்ட  நிபுணர்களின்  புருவங்களை  உயர்த்தின,  ஆனால்,  பரிகாரம்  ஏதும்  கிட்டவில்லை.  காரணம்  அரசு  நடந்துகொண்டமுறை.

அரசன்  எவ்வழி  மக்கள்  அவ்வழி  என்பதை   சிறிது  திருத்தி  அரசன்  எவ்வழி  நீதிபதிகள்  அவ்வழி  என்ற  கொடுமையான  நிலை  வடிவம்  பெற்றதைக்  காணமுடிந்தது.   மலேசிய  நீதித்துறை  ஒரு  தெளிவான  நீரோடை  போன்று  நகர்ந்துகொண்டிருந்தது.  ஊழலுக்கும்,  அடாவடித்தனத்திற்கும்  அங்கே  இடமில்லை.  மலேசிய  அமைந்த  பிறகு  ஓய்வு  பெற்ற  தலைமை  நீதிபதி  தோமஸின்   தமது  இறுதி  செய்தியில்  குறிப்பிட்டது  என்ன  தெரியுமா?

இந்த  நாட்டின்  நீதித்துறையை  நல்ல  கைகளில்  விட்டுச்  செல்வது  பெருமையாக  இருக்கிறது  என்றார்.  அந்தத்  தெளிவான  ஓடையைக்  களங்கப்படுத்திவிட்டவர்களை  நினைக்கும்போது,  இவர்கள்  நீதியை  நிலைநாட்ட  வராதவர்கள்.  மாறாக  தங்கள்  சுயநலத்தில்  கவனம்  கொண்டவர்களாகத்  திகழந்தனர்.  இது  மலேசியாவுக்கு  நேர்ந்த  அவமதிப்பு  பெரும்  சோதனை  என்றுதான்  சொல்லவேண்டும்.

நீதித்  துறையில்  நிகழ்ந்த  முறை  கேடுகள்  பகிரங்கப்படுத்தப்பட்டது

சமீபத்தில்   மேல்முறையீட்டு  நீதிமன்ற   நீதிபதி  டத்தோ  டாக்டர்  ஹமீது  சுல்தான்  அபு  பக்கர்  நீதித்துறையில்  நிகழ்ந்த –(நிகழ்ந்து  கொண்டிருக்கும் ?)  முறை  கேடுகளைப்  பற்றி  வெளியிட்டுள்ளார்.  நீதித்  துறையில்  நிகழ்ந்த  முறை  கேடுகளைப்பற்றி  அவர்  பகிரங்கப்படுத்தியது  இது  முதல்  தடவையல்ல.  முன்பொரு  முறையும்  வெளிப்படுத்தினார்.  இந்த  முறை,  உயர்  மட்டத்தில்  இருக்கும்  நீதிபதிகளின்  அடக்குமுறை  அடாவடித்தனம்  போன்றவற்றை  வெளிப்படுத்தியதின்  விளைவு  நாடே  அதிர்ச்சியில்  மூழ்கியுள்ளது  எனலாம்.

அரசியலில்  எதுவும்  நடக்கும்.  அரட்டல்,  மிரட்டல்,  அடாவடித்தனம்  போன்றவை  அரசியல்  இலக்கணங்கள்,  அரசியல்  லட்சணங்கள்,  அரசியல்  அணுகுமுறை  என  ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன.  நீதித்துறையில்  அப்படிப்பட்ட  முறைகேடுகளுக்கு  இடந்தரலாமா?

அன்று மகாதீரின்  ஆட்சியின்போது

அந்தக்  கேள்விதான்  இப்பொழுது  நாட்டை  உலுக்குகிறது.  ஹமீது  சுல்தான்    நீதித்துறையில்    நிகழும்  நெறிகேடுகளை  அம்பலப்படுத்தினார்  என்று  முடிவு  கட்டக்  கூடாது.  காரணம்  1996ஆம்  ஆண்டு  உயர்நீதிமன்ற  நீதிபதி    சைது  அகமது  ஐடிப்   ஓர்  அற்புதமானவர்.  அவர்  ஒரு  கடிதத்தை  எழுதினார்.  நீதித்துறையில்   நிகழும்  சீர்கேடுகளை  அம்பலப்படுத்தினார்.  அவர்  தமது  பதவியைத்  துறக்கும்படி  செய்தனர்  ஆட்சியாளர்கள்.  இது  துன்  டாக்டர்  மகாதீர்  முகம்மது  பிரதமராக  இருந்த  காலகட்டத்தில்  நிகழ்ந்தது.

மகாதீரின்  ஆட்சியின்போதுதான்  மலேசியாவின்  அன்றைய  தலைமை  நீதிபதி  துன்  சாலே  அப்பாஸ்  பதவி  நீக்கம்  செய்யப்பட்டார்.  அந்த  சம்பவத்தின்  உண்மையான  விவரங்கள்  இன்றுவரை  வெளிவரவில்லை.  சில  முக்கியமான  கேள்விகளுக்கு  இன்றுவரை  யாதொரு  விடையும், விளக்கமும்  தரப்படவில்லை.

துன்  அப்துல்லா  படாவி  பிரதமராக  இருந்த  காலத்தில்  சாலே  அப்பாஸ்,  மற்றும்  சில  பாதிப்புற்ற  நீதிபதிகளுக்கு   இழப்பீடு  கொடுக்கப்பட்டது.  அவர்களின்  பதவி  நீக்கத்தில்  தவறு  நேர்ந்ததை  ஒப்புக்கொண்டது  படாவி  அரசு. அந்த  இழப்பீடு  வழங்கிய  சம்பவம்  மகாதீருக்கு  திருப்திகரமாக  இருந்திருக்கமுடியாது.

ஒரு  நீதிபதி  தமது  தீர்ப்பால்  சாட்சியங்களைப்  பற்றி  தவறாகப்  புரிந்துகொண்டிருக்கலாம்.  அது  குற்றமல்ல.  மேல்முறையீட்டு  நீதிமன்றம்  அந்தத்  தவறைத்  திருத்தலாம்.  ஆனால்,  ஒரு  நீதிபதி,  அல்லது  மேல்முறையீட்டு  நீதிமன்றம்  என்றால்  நீதிபதிகள்   தங்களின்   தீர்ப்பை   ஒரு  தரப்பினருக்குச்  சாதகமாக  வழங்கவேண்டும்  என்று  வற்புறுத்தப்படுவது  நியாயமாகாது.

மூன்று  மேல்முறையீட்டு  நீதிமன்ற  நீதிபதிகள்  ஒரு  வழக்கை  விசாரிக்கும்போது  கருத்துவேறுபாடு   ஏற்படுவது  இயல்பு.  அந்த  மூன்று  நீதிபதிகளும்  ஒன்றுகூடி  விவாதித்து  ஒருமனதாகத்  தீர்ப்பு  வழங்கலாம்  அல்லது   இருவர்  ஒருபக்கமும்  மூன்றாவது  நீதிபதி  தமது  மாறுபட்டத்  தீர்ப்பை  வழங்கலாம்.  இதில்.  அதிசயம்  ஏதும்  கிடையாது.  ஆனால்,  உயர்  பதவியில்  இருப்பவர்,  இருப்பவர்கள்   அதிகாரச்  செருக்கைப்  பயன்படுத்தித்  தீர்ப்பு  தமது  எண்ணத்திற்கேற்ப  இருக்கவேண்டும்  என  கட்டாயப்படுத்துவது  மிரட்டுவது  போன்ற  நடவடிக்கைகள்  ஏற்புடையவை  அல்ல  கண்டிக்கத்தக்கவை.  இதை  நீதித்துறை  ரவுடியம்  (அடாவடித்தனம்)  என்கிறார்  ஹமீது  சுல்தான்.

இந்த  அளவுக்கு   நீதித்துறை    தமது  சுதந்திரத்தை  இழந்து  நிற்கிறது.  நீதிபதிகள்  சுந்தந்திரமாகத்  தீர்ப்பு  வழங்க  முடியவில்லை  என்றால்,  அது  நாட்டின்  நீதி  நிர்வாகத்துக்கே  பெரும்  இழுக்கை  தந்துவிடும்.  நீதித்  தேவதை   ஆபத்தான   நிலையில்  இருக்கிறாள்  என்ற நிலை உடனடியாக மாறவேண்டும்.

நீதித்  துறையில்  நிலவும்  அதிருப்தியான  சூழ்நிலைகளை  விசாரிக்கும்  பொருட்டு   அரசு  நீதி  விசாரணை  ஆணையத்தை  அமைக்கவேண்டும்  என்ற  கோரிக்கை  பல  தரப்பினரிடம்  இருந்து  வருகிறது.

மகாதீர்  எந்தத்  தயக்கமும்  இன்றி  விசாரணை  ஆணையம்  அமைய  ஏற்பாடு  செய்யவேண்டும்.  அதே  வேளையில்  நீதித்  துறையின்  இந்த  பாழ்நிலை  எப்போது  ஆரம்பித்தது  என்பதையும்  விசாரித்தால்  நல்லதே.  நீதித்  துறை  வரலாற்றில்  ஏற்பட்ட  களங்கத்தை  நீக்க  இதுவே  தகுந்த  தருணம்.