தமிழ் மொழி இல்லாத தமிழ் விழா அறிவிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ள தேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின்போக்கு கண்டனதிற்கு உரியது என்கிறார் வல்லினத்தின் இணைய இதழ் ஆசிரியர் ம. நவீன்.
மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக வருடம் தோறும் நடத்தப்படும் மொழிப் போட்டிக்களுக்கான அறிக்கை இவ்வாண்டும் மலாய் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
கடந்த ஆண்டு இதேபோன்று மலாய் மொழியில் திருக்குறள் மனனப் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி ஆகியவற்றுக்கான தலைப்புகளும் விதிமுறைகளும் மலாய்மொழியில் இருந்தபடியால் மாணவர்களும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் குழப்பத்திற்கு உள்ளான சூழலில் இவ்வாண்டும் அது தொடர்வதை கடுமையான கண்டனத்துக்குரியது என்கிறார் நவீன்.
“தேசிய தலைமையாசிரியர் மன்றத்தால் தயாரிக்கப்படும் இந்த அறிக்கை தமிழ்ப்பள்ளிக்காகவும் அதில் பயிலும் தமிழ் மாணவர்களுக்காகவும் அவர்களின் புரிதலுக்காகவும் என்றால் அதில் ஏன் தமிழ் மொழி இல்லை”
“இதே அறிக்கையில் ஆங்கில மொழிக்கதைச் சொல்லும் போட்டிக்கான விதிகள் ஆங்கில மொழியிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது” என்கிறார் நவீன்.
அதோடு இடைநிலைப்பள்ளிகளுக்கான அறிக்கைக்கையும் கண்டனதிற்குரியது என்கிறார். அங்கும் இதே நிலை தொடர்வதையும் இதனால் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் ஆசிரியர்களுக்குப் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதாகக தெரிவித்துள்ளார்.
தனித்த கலைச்சொற்களைக் கொண்டுள்ள தமிழின் இலக்கியப் போட்டிகள் மலாயில் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் தேசிய தலைமையாசிரியர் மன்றம் எவ்வாறான மாற்று நடவடிக்கை எடுக்க உள்ளது என தமிழ் பற்றுள்ள ஆசிரியர்கள் எதிர்ப்பார்த்துக்காத்திருக்கின்றனர் என்கிறார் நவீன்.
மேலும் இது சார்பாக உள்ள சர்ச்சைகளை கீழ்கண்டவாறு விளக்குறார் நவீன்.
இரண்டு சர்ச்சைகள்
தேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் தமிழ்மொழிப் பேச்சுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் வட்டார ரீதியில் போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்பர். அதில் தேர்வு பெறுபவர் மாநிலத்தைப் பிரதிநிதித்து தேசிய அளவில் நடக்கும் பேச்சுப்போட்டியில் கலந்துகொள்வார்கள். இப்படி நடக்கும் போட்டியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து அடங்குவதுமுண்டு. அதில் அடிப்படையான சர்ச்சைகள் இரண்டு.
நீதிபதிகளின் முடிவே இறுதியானது
முதலாவது, பேச்சுப் போட்டியில் பங்கெடுக்கும் மாணவனின் தொனி, மொழி, பாவனை போன்றவற்றில் பார்வையாளர்களுக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் நடுவர்களின் முடிவே இறுதியானதாக இருக்கும்போது ஏற்படும் சலசலப்பு. இதற்கு தீர்வு கிடையாது. ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் ஒவ்வொன்றை சிறந்தது என தர்க்கம் செய்ய வாய்ப்புண்டு. ஒருவகையில் அது ரசனை அடிப்படையிலானது. ரசனை என்பது அரூபமானது. எனவே நீதிபதிகளின் முடிவே இறுதியானதாக இருப்பதில் தலையீடு செய்ய முடியாது.
போலி அறிவு வாதம் பரிசை வெல்வது
இரண்டாவது, பேச்சுப் போட்டியில் படைக்கப்படும் உரையின் உள்ளடக்கம் சார்ந்தது. இது நிச்சயம் அறிவுள்ள யாரும் தலையிடுவதற்குரியதுதான். தவறான தரவுகள், பொருந்தாத உதாரணங்கள், முரணான உவமைகள் போன்றவற்றை பகுத்து அறியும் ஆற்றலுள்ள நீதிபதி இல்லாவிட்டால், தவறான கருத்துகள் அடங்கிய உரைக்கு அது படைக்கப்பட்ட தோரணையின் காரணமாக பரிசு கிடைப்பது கண்டனத்துக்குரியது. எது தவறான கருத்து என அறிந்துகொள்வதற்கு முயலாமல் கைதட்டும் கூட்டத்திற்கு மத்தியில் எப்போதுமே போலி அறிவு வாதம் உற்சாகமாக சத்தமிடுவதைக் காலகாலமாக பார்த்து சலித்துவிட்டது.
தமிழ்க்கல்வி சார்ந்த பல தளங்களின் மேம்போக்கான பார்வையும் அடிப்படை புரிதலற்ற தட்டையான சிந்தனையும் வளரும் மாணவர்களின் அறிவில் நஞ்சைக் கலப்பதுதான் வருத்தத்திற்குரியது என்கிறார் நவீன்.