குடியுரிமை பிரச்சனைக்குத் தீர்வுகாண, பிஎஸ்எம்-ன் ஆலோசனைகள்

பக்காத்தான் ஹராப்பான் (பிச்) நிர்வாகம் ஆட்சிக்கு வந்தபின்னரும், மலேசியர்களுக்கான குடியுரிமை சிக்கலுக்கு இன்னும் தீர்வு கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கவலையை எழுப்பியுள்ளதாக அண்மையில், பத்திரிகைகள் / ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மலேசிய நண்பன் நாளிதழ் (14.03.2019), பொதுத் தேர்தலின் போது மக்களின் வாக்குகளைக் கவருவதற்கு மட்டுமே பாரிசான் நேசனல் (பிஎன்) குடியுரிமை வழங்கி வந்துள்ளது, தற்போது இதனையே பிஎச் அரசாங்கம் இடைத் தேர்தலின் போது கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது என சிறப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டது.

சில அமைச்சர்களும் பிரதமரும் தங்களின் முயற்சியாக, மைகார்ட் பதிவு போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளபோதும், மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) மலேசியர்களின் குடியுரிமை பிரச்சினை இதுபோன்ற பிரச்சார நடவடிக்கைகள் மற்றும் மைகார்ட் பதிவு நடவடிக்கைகளால் தீர்க்க முடியாது என்று கருதுகிறது. தகுதியுடைய மக்களுக்குப் பிரச்சனையில்லாமல் குடியுரிமை கிடைக்கும் வகையில், பிஎச் அடிப்படை கொள்கைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என பிஎஸ்எம் கருதுகிறது.

இப்பிரச்சனைக்குத் தீர்வு காண, பிஎஸ்எம் சில திட்டங்களைப் பரிந்துரைக்கிறது. தற்போது இருக்கும் தரநிலை இயக்க நடைமுறை (எஸ்.ஓ.பி.) அல்லது ஜேபிஎன் மற்றும் கேடிஎன் செயல்திறன்களில் மாற்றங்கள் செய்ய வேண்டும், காரணம் அச்செயல்முறைகளால் குடியுரிமை பிரச்சனைக்கு, இலாகா நிலையில் தீர்வுகாண முடிவதில்லை, அமைச்சரின் ஒப்புதல் அதற்குத் தேவைபடுகிறது. உள்துறை அமைச்சர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளதால், குடியுரிமை தொடர்பாக குவிந்துவரும் வழக்குகளுக்கு நேரம் ஒதுக்க அவரால் முடிவதில்லை, இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, இலாகா நிலையிலேயேப் இப்பிரச்சனைக்குத் தீர்வுகாணும் வகையில், ஜேபிஎன்-னுக்கு அதிகாரம் வழங்க எஸ்.ஓ.பி.-யில் மாற்றம் செய்ய வேண்டும்.

சிக்கல்களும் அதற்கான பரிந்துரைகளும் :-

  1. மலேசியக் குடியுரிமை கொண்ட தந்தைக்கும், மலேசியர் அல்லாத தாய்க்கும், திருமணப் பதிவு செய்யாமல் பிறந்த குழந்தை

தற்போது முதல் பிரச்சனை என்னவென்றால், 2-வது அட்டவணை, பிரிவு II, (1) (a) மத்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள, ‘தாய் அல்லது தந்தை யாராகினும் ஒருவர் குடியுரிமை உள்ளவராக இருந்து, மலேசியத் தினத்திற்குப் பிறகு நாட்டில் பிறந்த அனைவருமே சட்டப்படி மலேசிய குடிமகன்’ (“Every person born within the Federation after Malaysia Day is a citizen by operation of law if one of his/her parents was, at the time of his/her birth, a citizen of Malaysia’) எனும் விதி, ஜேபிஎன் செயல்முறையில் இல்லை. முந்தைய பிஎன் அரசாங்கம், செக்‌ஷன் 17, பகுதி III, கூட்டாட்சி அரசியலமைப்பு, அட்டவணை 2-ல் குறிப்பிட்டுள்ள: “ஒருவரின் பெற்றோர் அல்லது பெற்றோரில் ஒருவர், ஒரு நபருடன் சட்டவிரோதமாக (திருமண உறவு) தொடர்புள்ளவராக இருப்பின், அவரது தாயாரைப் பின்பற்றுவதாகக் கருதப்பட வேண்டும்,” (“references to a person’s parents, or one of his parents, are in relation to a person who is illegitimate, to be construed as references to his mother”) எனும் காரணத்தைப் பயன்படுத்தியது.

இந்த செக்‌ஷன் 17-ன் படி, தந்தையின் பெயர் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டாலும், தாய் தந்தை இருவரும், குழந்தையின் உண்மையான தந்தை அவர்தான் என்று கூறினாலும், குழந்தையின் குடியுரிமை தாயின் தகுதியை ஒட்டியே குறிப்பிடப்படும். டி.என்.ஏ. சோதனைகள் வழி, உண்மையில் அக்குழந்தையின் உயிரியல் தந்தை அவர்தான் என்பதை நிரூபித்தும், ஜேபிஎன் நடைமுறையினால் ஒதுக்கப்பட்ட வழக்குகளும் உண்டு.

இந்த அணுகுமுறையின் காரணமாக, இவ்வகை வழக்குகள் அனைத்தும், கூட்டாட்சி அரசியலமைப்பின் 15 (A) வழக்கு எனக் கூறப்படுகின்ற: “மத்திய அரசானது, இது போன்ற சூழ்நிலைகளில், பொருந்தக்கூடியது எனக் கருதப்படும் 21 வயதிற்கு உட்பட்ட எவரையும், ஒரு குடிமகனாகப் பதிவு செய்யப்பட வேண்டும்”, (“the Federal Government may, in such special circumstances as it thinks fit, cause any person under the age of 21 years to be registered as a citizen”) ஆனால், அவர்களில் பலரின் குடியுரிமை விண்ணப்பங்கள் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்படுகின்றன.

அ. தாயாருக்குச் சுய ஆவணங்கள் இல்லாததால், திருமணத்தைப் பதிவு செய்ய முடியாத பல வழக்குகள் உள்ளன. அதனால், தந்தையின் குடியுரிமை பயன்படுத்த முடியாது. இந்தப் பிரிவில் உள்ள பெரும்பாலான வழக்குகளில், ஏழை மற்றும் பின்தங்கிய வர்க்கத்தினரே சம்பந்தப்பட்டுள்ளனர். குடியுரிமை பெறுவதில் அடைந்த தோல்வியானது, அவர்களின் பிள்ளைகளையும் ஓரங்கட்டும். மேலும், இந்தப் பிள்ளைகள் வேறு எந்தவொரு நாட்டிலும் குடியுரிமை கோர முடியாது. அதனால், அவர்கள் மலேசியாவிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை, கல்வியும் தொழில்நுட்பத் திறனும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை.

ஆ. இந்தக் குழுவில் உள்ள இரண்டாம் உப பிரிவு, வெளிநாட்டு பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் மலேசிய ஆண்கள். ஆனால், பணி அனுமதிப்பத்திர நிலை காரணமாக, அவர்களின் திருமணத்தைப் பதிவு செய்ய அனுமதிக்காத சூழ்நிலை.

பி.எஸ்.எம். பரிந்துரை : கூட்டாட்சி அரசியலமைப்பின் 15 (A) விதியின்படி, மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒரு புதிய எஸ்.ஓ.பி. உருவாக்கப்பட வேண்டும். அதன்படி, மலேசியாவில் பிறந்த அல்லது மலேசியக் குடியுரிமை கொண்ட தந்தைக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, தந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது டிஎன்ஏ பரிசோதனை மூலம் ஒரு பதிவு அடையாளம் காணப்பட்டால், அக்குழந்தைக்கு மலேசிய குடியுரிமை வழங்கப்பட வேண்டும். இந்த விண்ணப்பங்கள், உள்துறை அமைச்சரின் சிறப்பு முடிவுக்கு அனுப்பப்படாமல், ஜேபிஎன் நிலையிலேயே அங்கீகரிக்கப்பட வேண்டும்.

  1. உயிரியல் தாய் குடியுரிமை அற்றவர் மற்றும் தந்தை எந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர் என்பதை அறியாத நிலையில் பிறந்த குழந்தைகளைத் தத்தெடுக்கும் மலேசிய குடியுரிமை கொண்ட குடும்பம்

இதுவரை, இதுபோன்ற வழக்குகளுக்கு, அரசியலமைப்பு 15(A) விதிபடி, மலேசியக் குடியுரிமை கோரும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால், இவர்களின் விண்ணப்பங்கள் காரணங்களேக் கூறப்படாமல், பலமுறை நிராகரிக்கப்படுகின்றன. இது அக்குடும்பங்களை அதிகம் பாதிக்கிறது, காரணம் அவர்களால் அக்குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு கொடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

பி.எஸ்.எம். பரிந்துரை : இக்குழந்தைகள் ‘குடியுரிமை அற்றவர்கள்’ என்பதால், வேறு நாட்டிற்கு அனுப்ப முடியாது என்பதால், மலேசியக் குடியுரிமை கொண்ட குடும்பத்தின் ஒரு பகுதியாக அவர்களும் ஆகிவிட்டதால், குழந்தையைத் தத்தெடுத்து 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக ஆகியிருந்தால், அக்குழந்தைக்குக் குடியுரிமை வழங்க அனுமதிக்கும் வகையில், ஜேபிஎன் எஸ்.ஓ.பி.-யில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம், ஜேபிஎன்-னின் உயர் அதிகாரிக்கு வழங்கப்பட்டு, ‘நிர்வாக’ முடிவாக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  1. செக்‌ஷன் 16-ன் கீழ் வரும் விண்ணப்பம் : சுதந்திரத்திற்கு முன் மலேசியாவில் பிறந்து, இன்றுவரை இங்கேயே வசிப்பவர்கள்

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் 16-வது பிரிவின் கீழ் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

“சுதந்திரத்திற்கு முன் கூட்டரசில் பிறந்த எவருமே, மத்திய அரசாங்கத்தைத் திருப்திபடுத்தும் வகையில் இருந்தால், குடிமகனாகப் பதிவு செய்ய உரிமை உண்டு: (“any person who was born in the Federation before Merdeka is entitled to be registered as a citizen if he satisfies the Federal Government that”)

எ) விண்ணப்பம் செய்வதற்கு முன், 7 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கூட்டரசில் வசித்து வருகிறார் (he has resided in the Federation for at least 5 out of the 7 years preceding his application;)

பி) நிரந்தரமாக இங்கேயே வசிக்க விரும்புகிறார் (he intends to do so permanently;)

சி) நன்நடத்தைக் கொண்டவர் (he is of good character;)

டி) மலாய் மொழியில் அடிப்படை அறிவை கொண்டிருக்கிறார். (he has elementary knowledge of the Malay language)

இந்தப் பிரிவில் “உரிமையுண்டு” என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றாலும், காரணம் கூறப்படாமலேயே அநேகரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. மேலே குறிப்பிட்டுள்ள எ – டி பிரிவுகளில், எதில் அவர்கள் பொருந்தவில்லை என்பதனையும் அவர்களிடம் கூறுவதில்லை.

பி.எஸ்.எம். பரிந்துரை : செக்‌ஷன் 16-இன் கீழான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களை விண்ணப்பத்தாரரிடம் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மேல்முறையீடு செய்யும் வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மேல்முறையீட்டைச் செவிமடுத்து, முடிவெடுக்க 4 பேர் கொண்ட தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட வேண்டும், அதில் இருவர் ஜேபிஎன் சாராதவர்களாக இருத்தல் அவசியம்.

பிரிவு ‘சி’-ஐப் பயன்படுத்தி, ஒருவரின் விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடாது, காரணம் ஒரு சிறு குற்றம் பதிவில் இருந்தாலும், உதாரணத்திற்கு, 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சண்டை என்றாலும், அது ஒருவரின் விண்ணப்பத்தைப் பாதிக்கும்.

ஜேபிஎன் (டி) பிரிவைக் காரணமாகக் கூறினால், விண்ணப்பதாரரின் மலாய் மொழி ‘அடிப்படை அறிவில்’ உள்ளதா இல்லையா என்பதைக் குழு தீர்மானிக்க வேண்டும்.

  1. செக்‌ஷன் 19-ன் கீழ் வரும் விண்ணப்பத்தாரர்

செக்‌ஷன் 19 கூறுவதாவது : “திருப்திகரமாக இருந்தால், விண்ணப்பதாரருக்கு மத்திய அரசு ஒரு சான்றிதழை வழங்கலாம்: (“the Federal Government may grant a certificate of naturalization to an applicant if satisfied that:)

எ) போதுமான காலம் அவர் கூட்டரசில் தங்கியிருக்கிறார், நிரந்தரமாக தங்க விரும்புகிறார்; (He has resided in the Federation for the required period and intends to do so permanently;)

பி) அவர் நன்நடத்தைக் கொண்டவர் (He is of good character;)

சி) மலாய் மொழியில் அவருக்குப் போதுமான அறிவு உள்ளது. (He has adequate knowledge of the Malay language)

இளம் வயதில் மலேசியாவிற்கு வந்தவர்களில் பலர், சிவப்பு அடையாள அட்டையை வைத்துகொண்டு, பணி ஓய்வு பெறும்வரை இங்கேயே வாழ்ந்துள்ளனர். ஆனால், அவர்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவர்களில் பலர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வாழ்ந்தவர்கள், மலேசியக் குடியுரிமை கொண்ட பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களுக்கு உண்டு.

பி.எஸ்.எம். பரிந்துரை : 15 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் வாழ்ந்தவர்களுக்கு, மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஜேபிஎன்-னின் முடிவு, தீர்ப்பாயத்தின் முன்னிலையில் விவாதிக்க வேண்டும்.

  1. ஆதரவற்றோர் இல்லங்களில் வளரும் குழந்தைகள்

சிறுவயதிலேயே, குடும்பத்தாரால் கைவிடப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள், ஆதரவற்றோர் இல்லங்களின் பராமரிப்பில் இருக்கின்றனர். பொதுவாக, அந்த இல்லங்களின் நிர்வாகத்தார், குழந்தைகளை ஜேபிஎன்-னில் பதிந்து, பிறப்புப் பத்திரத்தை எடுத்துவிடுவர். ஆனால், அக்குழந்தைகளுக்குத் தாய், தந்தை பெயர் மற்றும் குடியுரிமை தகுதி பிறப்புப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்காது. அதனால், அவர்களும் ‘குடியுரிமை அற்றவர்’ என வரையறுக்கப்படுவர்.

மலேசிய குடியுரிமை கொண்ட ஒருவர், ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் போது, செக்‌ஷன் 15(A) கீழ் விண்ணப்பம் செய்யலாம், ஆனால், பலர் தத்தெடுக்கப்படாமல் இருப்பதால், இதனைப் பயன்படுத்த முடியாது. 21 வயது பூர்த்தி அடைந்துவிட்டால், இந்த 15(A) பிரிவு விதி பயன்படாது. தற்போது வழக்கில் இருக்கும் ஜேபிஎன் எஸ்.ஓ.பி. படி, இந்தப் பிரிவில் உள்ளவர்கள் பெடரல் அரசியலமைப்பின் பிரிவு 19 (2) கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் இத்தகைய விண்ணப்பங்கள் அரிதாகவே அனுமதிக்கப்படும்.

குடியுரிமை இல்லாத காரணத்தால், பள்ளி செல்லும் குழந்தைப் பருவத்தில் இருந்து, பெரியவர்களாகி வேலை தேடும் காலம் வரை, இந்த ஆதரவற்றக் குழந்தைகள் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். அடையாள அட்டை இல்லாத காரணத்தால், அவர்களால் ஊழியர் சேமநிதி வாரியம் மற்றும் பெர்கேசோவில் பதிய முடியாது. அவர்களால் குறைந்த ஊதியத்தில் அல்லது குத்தகை அடிப்படையிலான வேலைகளை மட்டுமே செய்ய முடியும். அவர்களால் வங்கியில் கணக்கு வைத்துக்கொள்ள முடியாது, வாகன உரிமம் பெற முடியாது.

அவர்களுக்குத் திருமணம் நடக்கும்போது, திருமணத்தைப் பதிவு செய்ய முடியாது, காரணம் திருமணப் பதிவுக்கு அடையாள அட்டை அல்லது கடப்பிதழை ஜேபிஎன் –னில் காட்ட வேண்டும். திருமணப் பதிவு செய்யவில்லை என்றால், பிறக்கும் குழந்தைகள் அவர்களுக்குப் பிறந்ததாக அங்கீகரிக்க முடியாது. அடையாள அட்டை இல்லாதப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகள் ‘குடியுரிமை அற்றவர்கள்’ என்றே குறிக்கப்படுகின்றனர். ஆக, இந்தப் பிரச்சனை புதியத் தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இவர்கள் நோய்வாய்ப்பட்டால், சிகிச்சைப் பெறுவதிலும் சிக்கலை எதிர்நோக்குகின்றனர். அரசாங்க மருத்துவமனையில் இவர்களுக்குப் பன்மடங்கு அதிகமாக கட்டணம் விதிக்கப்படுகின்றது.

பிஎஸ்எம் பரிந்துரை :  தங்கள் பெற்றோர் யார் என்று தெரியாதது, இந்த ஆதரவற்றக் குழந்தைகளின் தவறு அல்ல, அவர்கள் தொடர்ந்து மலேசியாவிலேயே வாழப் போகிறவர்கள், இங்கேயே வேலை செய்யப் போகிறவர்கள் என்பதனால், அவர்களின் பிரச்சனைக்கு உடனடி தீர்வுகாண வேண்டியக் கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு.

ஆக, செக்‌ஷன் 19(2) வழி, ஆதரவற்ற குழந்தைகளின் இப்பிரச்சனைகளைக் களைய, ஜேபிஎன் புதிய எஸ்.ஓ.பி.யை வடிவமைக்க வேண்டும். விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம், ஜேபிஎன்-னின் உயர் அதிகாரிக்கு வழங்க வேண்டும், ‘நிர்வாக’ முடிவாக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிரிவு 19(2)-ல் இதற்கான அதிகாரம் குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்த மாற்றத்திற்கு அரசியலமைப்பில் எந்தவொரு திருத்தத்தையும் செய்ய தேவையில்லை.

  1. கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் செக்‌ஷன் 15(1)-ன் படி, குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படாத பெண்கள்

செக்‌ஷன் 15 (1) கூறுகிறது: “திருமணமான பெண்ணின் கணவர், குடிமகனாக இருக்கின்ற பட்சத்தில், மத்திய அரசு திருப்தி அடைந்தால் எ) விண்ணப்பத் தேதிக்கு முன்னதாக, இரண்டு ஆண்டுகள் கூட்டரசில் அப்பெண் வசித்திருந்தால், அவர் நிரந்தரமாக இங்கு வசிக்க விரும்புகிறார் என்றால் பி) அவர் நன்நடத்தை  உடையவராக இருந்தால்(“any married woman whose husband is a citizen is entitled to be registered as a citizen if the Federal Government is satisfied that a) she has resided in the Federation throughout the two years preceding the date of application and intends to do so permanently and b) she is of good character.”) குடியுரிமை பதிவு செய்ய உரிமை உண்டு.

செக்‌ஷன் 15(1) விதியைக் கடைப்பிடிக்க நினைத்தால், அதற்கு ஜேபிஎன்-னுக்குத் திருமணச் சான்றிதழ் தேவைபடும். ஆனால், அடையாள அட்டை அல்லது கடப்பிதழ் இல்லாத பெண்கள் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய ஜேபிஎன் அனுமதிப்பது இல்லை. சில வழக்குகளில், குழந்தைகளின் பிறப்புப் பத்திரத்தில் பெண்ணின் பெயரும் அவரது கணவர் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கும், ஆனால் அவர்கள் திருமணத்தைப் பதிவு செய்ய அனுமதி இல்லை.

பிஎஸ்எம் பரிந்துரை :  இத்தகையப் பெண்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழை வைத்து, திருமணப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.

குடியுரிமை இல்லாதப் பிரச்சினை நாட்டைப் பாதிக்கிறது

குடியுரிமை அற்ற பிரச்சனை தனிநபர்களை மட்டுமின்றி, குடும்பங்களையும் சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. இது நாட்டிற்கும் நட்டமாகும். அவர்களில் பெரும்பாலானோர் வேறு எந்த நாட்டிற்கும் செல்ல முடியாது. ஆக, அவர்களை ஒதுக்கி வைப்பது, சமுதாயத்திற்கோ அல்லது நாட்டிற்கோ எந்தவொரு நன்மையையும் கொண்டுவரவில்லை.

நாம் அவர்களை அதிகம் காயப்படுத்தினாலும், அவர்கள் இங்குதான் தங்கியிருப்பார்கள். ஏனென்றால், மலேசியாதான் அவர்களின் “தாயகம்”. அவர்களின் நண்பர்களும் குடும்பத்தாரும் மலேசியாவில் உள்ளனர். அவர்களைத் தொந்தரவு செய்வதாலோ அல்லது ஏழைகளாக்குவதனாலோ, நாட்டிற்கு எந்தவொரு பயனும் இல்லை.

பிஎஸ்எம் பரிந்துரைகளின் சுருக்கம்

  1. மலேசியாவில் பிறந்த அல்லது மலேசியக் குடியுரிமை கொண்ட தந்தைக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, தந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது டிஎன்ஏ பரிசோதனை மூலம் ஒரு பதிவு அடையாளம் காணப்பட்டால், அக்குழந்தைக்கு மலேசிய குடியுரிமை வழங்கப்பட வேண்டும். இந்த விண்ணப்பங்கள், உள்துறை அமைச்சரின் சிறப்பு முடிவுக்கு அனுப்பப்படாமல், ஜேபிஎன் நிலையிலேயே அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  2. மலேசியக் குடியுரிமை கொண்ட குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்டு, 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக ஆகியிருந்தால், அக்குழந்தைக்கு குடியுரிமை வழங்க அனுமதிக்கும் வகையில், ஜேபிஎன் எஸ்.ஓ.பி.-யில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம், ஜேபிஎன்-னின் உயர் அதிகாரிக்கு வழங்க வேண்டும், ‘நிர்வாக’ முடிவாக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  3. செக்‌ஷன் 16 அல்லது 19-ன் கீழான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களை விண்ணப்பத்தாரரிடம் தெரிவிப்பதோடு, மேல்முறையீட்டிற்கும் அனுமதிக்க வேண்டும். மேல்முறையீட்டை செவிமடுத்து, முடிவெடுக்க 4 பேர் கொண்ட தீர்ப்பாயம் ஒன்றை அமைத்து, அதில் ஜேபிஎன் சாராத இருவரை நியமிக்க வேண்டும்.
  4. செக்‌ஷன் 19(2) வழி, ஆதரவற்ற குழந்தைகளின் பெற்றோரை அடையாளம் காண முடியவில்லை என்றாலும், அவர்களுக்கும் குடியுரிமை வழங்கும் வகையில், ஜேபிஎன் புதிய எஸ்.ஓ.பி.யை வடிவமைக்க வேண்டும். விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம், ஜேபிஎன்-னின் உயர் அதிகாரிக்கு வழங்க வேண்டும், ‘நிர்வாக’ முடிவாக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  5. சிறுவயது முதல் மலேசியாவில் வசிக்கும் பெண்களுக்கு, போதிய ஆவணங்கள் இல்லை என்றபோதிலும், அவர்களின் பிறப்புப் பத்திரம் அல்லது ஜேபிஎன்-னால் வழங்கப்படும் வேறு சிறப்பு ஆவணங்களின் வழி, திருமணத்தைப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.
  6. இவ்வழக்குகளைக் கையாள, போதுமான ஊழியர்கள் ஜேபிஎன்-னில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  7. மேலே விவரிக்கப்பட்டுள்ள குடியுரிமை விண்ணப்பங்களின் பிரிவுகளைக் கையாள்வதில், ஜேபிஎன் –னின் செயல்திறனைக் கண்காணிக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.

நாட்டின் குடியுரிமை பிரச்சனையைக் கையாள, மேலே குறிப்பிடப்பட்டுள்ள  பரிந்துரைகளை, மலேசிய அரசாங்கம் ஆய்வு செய்து, நடைமுறைபடுத்தும் என நாங்கள் நம்புகிறோம். தற்போதுள்ள எஸ்.ஓ.பி-யில் மாற்றங்கள் செய்யாமல், மலேசியாவில் வாழும் குடியுரிமை அற்றவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது.

  • டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், அரசு கொள்கை ஆய்வு மையம்