வணக்கம்.
சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றம் நடத்திய ஒரு போட்டி விழாவின் அறிக்கையைக் கண்டிக்கும் வகையில் வல்லினம் கலை-இலக்கியக் குழுவின் ம. நவீண் அறிக்கை வெளியிட்டதால் இம்மாநிலத்தில் உள்ள பல தலைமையாசிரியர்களுக்கு ஏற்பட்ட இரத்தக் கொதிப்பு இன்னும் தணியவில்லை போலும்.
ஒரு தவறு வெளிச்சத்துக்கு வருகிறது என்றால், அது நீண்ட காலமாக வளர்ந்து வந்த நிலையில், யாரும் அதைக் கவனிக்காமல் விட்டிருக்கலாம். தமிழ்ப்பள்ளிகளின் நிலையும் இதுதான். தமிழ்ப்பள்ளிகளின் தோற்றத்தை உறுகுலைக்கும் வகையில், தமிழ் பாதாளத்தை நோக்கி தானாக சரியும் நோக்கில் அதை மலையின் விளிம்புக்கு நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தவற்றைத் தலைமையாசிரியர்கள் கொஞ்சம் கூட கூச்ச உணர்வு இல்லாமல் செய்கிறார்கள். இந்த சமுதாயத்துக்கும் மொழிக்கும் தாங்கள் கடமைப்பட்டவர்கள் என்பதை மறந்தவர்களாய் செயல்பட்டதன் வெளிப்பாடுதான், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட நிலையில் வெளியான அந்த அறிக்கை.
சமுதாயத்தின் கண்டனத்துக்கு இலக்கான தலைமையாசிரியர் மன்றம், போட்டி முடிந்த பிறகு அவசர அவசரமாக அந்த அறிக்கையைத் தமிழில் வெளியாக்கி, இதோ தமிழிலும் அறிக்கை வெளியிட்டிருக்கிறோம். என்று ஒப்புக்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றி அதைச் செய்தியாக மலேசியா இன்று (https://malaysiaindru.my/173759) என்ற அகப்பக்கத்தில் போட்டிருக்கிறார்கள். நவீண் அதைக் குத்திக் காட்டவில்லை என்றால், அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அந்த அறிக்கையில் தமிழ் முற்றாக அகற்றப்பட்டிருக்கும். ஒரு வேளை தமிழில் பேச்சுப் போட்டி, திருக்குறள் போட்டி போன்றவற்றைக் கூட அகற்றியிருப்பார்கள்.
முன்பு எங்கள் வட்டாரத்தில் உள்ள மஇகா தலைவர், பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழை மலாய் மொழியில் அனுப்பியிருந்தார். பொங்கல் என்பது தமிழர் விழா என்றால், அந்த அறிக்கை தமிழிலும் இடம் பெற்றிருக்க வேண்டும். அதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருந்ததால், அதை ஆட்சேபித்து பல ஊடகங்களில் எழுதினேன். இந்தச் செய்தி சம்பந்தப்பட்ட தலைவரின் காதுக்கு எட்டி விட்டது. உடனே அவசர அவசரமாக தமிழில் ஓர் அழைப்பிதழைத் தயாரித்து அனுப்பினார். அது கூட பரவாயில்லை. ஆனால், தன் தவற்றை மறைப்பதற்கு, இது தமிழிலும் தயாரிக்கப்பட்டது. ஆனால், உங்களுக்கு வந்ததில் தமிழ் இடம் பெறவில்லை என்று மழுப்பல் செய்தியை சொன்னார்.
அதைத்தான் சிலாங்கூர் தலைமையாசிரியர் மன்றமும் செய்திருக்கிறது. குறை சுட்டிக்காட்டப்பட்ட பிறகு, அவசர அவசரமாக (ஒப்புக்காகவும்) தமிழில் ஓர் அறிக்கை வெளியாக்கி, சுட்டிக் காட்டியவர்களையே முட்டாளாக்கப் பார்க்கிறார்கள் இந்தத் தலைமையாசிரியர்கள். நான் ஆசிரியர் தொழிலில் சேர்ந்ததில் இருந்து இவர்களுடைய இந்தப் போக்கைக் கவனித்து வருகிறேன். தங்களுடைய சாமர்த்தியமான பேச்சால் மாணவர்களை முட்டாளாக்குவார்கள்….. ஆசிரியர்களை முட்டாளாக்குவார்கள்….. பெற்றோர்களையும் முட்டாளாக்குவார்கள். ஆனால், எல்லோரையும் இவர்களால் முட்டாளாக்க முடியுமா?
அது ஒரு பக்கம் இருக்கட்டும்…..
மலேசியா இன்று என்ற அகப்பக்கத்தின் அந்தக் கட்டுரைக்குப் பின்னாள் இடம் பெற்ற என் பின்னூட்டத்துக்கு சிவ நாராயணன் என்பவர், ‘மேயிர மாட்டை நக்கிற மாடு கெடுக்கிறதுதானே உங்க பிழப்பு’ என்று பதில் எழுதியிருக்கிறார். இந்த சிவ நாராயணன் நிச்சயமாக சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியராகதான் இருக்க வேண்டும் என்று நான் அறுதியிட்டுக் கூறுகிறேன். அறுவறுப்பு நிறைந்த சம்பந்தமில்லாத ‘செம்மொழிகளில்’ பேசுகிற பல அடாவடித் தலைமையாசிரியர்களைப் பார்த்திருப்பதால் நான் இப்படிச் சொல்கிறேன். இவர்களிடம் இதற்கு விளக்கம் கேட்டால், நேரடியாக ஆதாரப்பூர்வமான விளக்கத்தைத் தராமல், வாதத்தை வேறு பக்கம் திருப்பும் தந்திரமுள்ள நரிகள் இவர்கள்.
இந்தத் தலைமையாசிரியரைப் பற்றி உங்களுக்கு விபரம் தெரிந்தால் தயவுசெய்து எனக்கு அறிவியுங்கள். இவரைப் போன்றவர்கள் நிச்சயமாகத் தன் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை நிம்மதியாக வேலை செய்ய விடாமல் இப்படிப்பட்ட அடாவடித்தனமான வார்த்தைகளால் நச்சரித்துக் கொண்டிருப்பார்.
இந்த எனது பதிலைக் கண்டவுடன் அவருடைய ‘செம்மொழி வசனம்’ அகற்றப்படலாம் என்பதால், அதை நான் ‘ஸ்கிரின் ஸாட்’ செய்து வைத்திருக்கிறேன்.
நன்றி
ஜான்சன் விக்டர்