கழுதை தேய்ந்து கட்டெரும்பானக் கசப்பான வரலாறு மேலும் புதுப்பொழிவுடன் தொடர்கிறதா என்கிற ஐயப்பாட்டில் மலேசியத் தமிழர்கள் இந்தத் தருணத்தில் இருக்கின்றனர். உரிமைகள் இழந்து சலுகைகளுக்குக் கையேந்தும் நிலைக்கு நாட்டின் அதிகாரப்பூர்வக் குடிமக்களான தமிழர்கள் தள்ளப்படுவதை இன்றையப் புதிய மலேசியாவிலும் தெள்ளத் தெளிவாக தெரிந்துகொள்ள முடிகிறது. இது பல வகைகளில் தமிழர் உணர்வாளர்களை அச்சுறுத்தல் செய்கிறது.
இன ரீதியாக இதைத் தமிழர்கள் சிந்திக்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். காரணம் மலேசியத் திருநாட்டில் தமிழர்களின் உரிமைகள் சட்டத்துக்கு உட்பட்டு இருக்கிறது. அதில் இனம், மொழி, பள்ளி, சமயம், பண்பாடு என அனைத்தும் தமிழர்களின் சான்றாக அடையாளமாக, அவசியமாக இருக்கிறது. இதை எந்த வகையிலும் இழந்துவிடக் கூடாது என்கிற துடிப்புமிகு பொறுப்பு நாட்டின் ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிற பட்சத்தில், அதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு உறுதியில்லா கேள்விக்குறியாக இருக்கும் வேளையில், தமிழர்கள் இங்கே ஒன்றிணைந்து எதிர்காலத்தைச் சிந்திக்கும், சந்திக்கும் களப்பணியை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
நாட்டில் இந்தியர் என்கிற கட்டமைப்பில் தற்போது மிஞ்சி நிற்பது தமிழியலே. அது தமிழ்ப்பள்ளிகள், வானொலி, தொலைக்காட்சி ஒலியொளி அலைவரிசைகள், நாளிதழ், வார இதழ், மாத இதழ் என தமிழர்களின் உரிமைக்கும் அதிகாரத்துக்கும் உட்பட்டு இருக்கின்ற நிலையில், இதில் ஏதேனும் சரிவுகள் முடக்கங்கள் என்றால் அது தமிழர்களின் இறையாண்மையைத் திட்டமிட்டு வேரறுக்கும் திணிப்பாகவே பார்க்க, எதிர்க்க வேண்டி வரும் என்பதைப் புதிய அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். இது எச்சரிக்கை அல்ல எடுத்துரைப்பே.
தமிழ்ப்பள்ளிகளில் சித்திரைப் புத்தாண்டு சிறப்பு விடுமுறை
கடந்த காலங்களில் இருந்தே பற்பல எண்ணிலடங்கா உரிமைகளைச் சமரசத்துக்கு உட்பட்டு ஏற்று அல்லது விட்டுக் கொடுத்து இழந்து, துறந்து, ஏமாற்றங்களை அனுபவங்களாக மிக மிக அதிகமாகவே கொண்டிருக்கும் தமிழினம், தற்போது சந்திக்கும் குறுகிய கால சிக்கலில் ஒன்று சித்திரைப் புத்தாண்டுக்குத் தமிழ்ப்பள்ளிகளில் சிறப்பு விடுமுறையை அமல்படுத்தும் கல்வி அமைச்சின் முன்மொழிதலாகும்.
சித்திரைப் புத்தாண்டுக்கு விடுமுறை கிடைப்பதில் தமிழர்களுக்கு எந்த சிக்கலும் ஏமாற்றமும் இல்லை. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளிகளில் அமலில் இருந்த தமிழர்களின் இனமொழிப் பண்பாட்டின் உயர் அடையாளமான சுறவத் தை முதல் நாள், பொங்கல் புத்தாண்டின் சிறப்பு விடுமுறையை முடக்கிவிட்டு, நீக்கிவிட்டு அதற்கு மாற்றாக தற்போது சித்திரைக்கு அதை வழங்க முன்வருவது தான் இங்கே தமிழர்களுக்கு பெரும் சிக்கல் ஏமாற்றம்.
மத விழாக்களைத் தமிழ்ப்பள்ளிகளில் கொண்டாட வேண்டாம்
இந்த முடிவுகளை எல்லாம் தற்போதைய நாடாளும் அரசாங்கம் எந்த இனமொழி வல்லுனர்களைக் கொண்டு அலசி ஆய்வு செய்து முன்மொழிந்து வழிமொழிகிறது என்று புரியவில்லை, தெரியவில்லை, அறியவும் முடியவில்லை. இது தமிழ்ப் பள்ளிக்கூடங்களை ஒருசார்பு மதத்திற்குள் அடக்கும் திட்டம். தமிழர்கள் பற்பல மதங்களை ஏற்று வாழ்ந்து வரும் நிலையில், இதுபோன்ற ஒரு சார்பு மதத்தை முன்னிருத்துவதானது, பிற மதங்களை ஏற்றவர்களுக்கு அது கசப்பாகி தமிழ்ப்பள்ளியைப் புறக்கணிக்கும் நிலை மேலோங்கும்.
ஆக, மதச்சார்பைத் திருக்கோயில்களில் அல்லது நிலையங்களில் வளர்த்தெடுத்து தற்காத்து பின்பற்றுவது தான் முறையாகுமே தவிர, தமிழ்ப்பள்ளியில் அல்ல. தமிழ்ப்பள்ளிக்கு மூலத் தேவை தமிழியலே. அதை தமிழ்ப் புத்தாண்டான தை முதல் நாள் உறுதியாகப் பறைசாற்றும் பொழுது, அதற்கான சிறப்பு விடுமுறையை பறித்து விட்டு, ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கொண்டாடும் சித்திரைப் புத்தாண்டுக்குச் சிறப்பு விடுமுறையை அமல்படுத்தி, இந்திய ஒருங்கிணைப்பில் இருக்கும் எல்லா இனங்களும், மதம் சார்ந்தவர்கள் கொண்டாடும் பொங்கலுக்குச் சிறப்பு விடுமுறையைத் தடை செய்து சித்திரைப் புத்தாண்டுக்கு மாற்றியது ஏற்புடையது அல்ல.
தற்போது கல்வி அமைச்சு அமல்படுத்தும் சித்திரைப் புத்தாண்டுக்கு சிறப்பு விடுமுறையை அமல்படுத்தும் கல்வி அமைச்சு, அதேவேளையில் ஏற்கனவே பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பொங்கலுக்கான சிறப்பு விடுமுறையை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.
குறைந்த மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளை ஒருங்கிணைத்தல்
தமிழ்ப்பள்ளி தமிழர்களின் உரிமை என்ற அடிப்படையில், குறைந்த எண்ணிக்கையில் உள்ள மாணவர்களைக் கொண்டு செயல்படும் பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஒரே பள்ளியாக மாற்றுவதையும் நாங்கள் எதிர்க்கிறோம்.
எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் உரிமத்தைத் தமிழர்கள் அதிகம் வாழும் இடத்திற்கு மாற்றி தீர்வு காண வேண்டும் என்று ஒட்டு மொத்த தமிழ் இனமும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறது. இதற்கு தேவையான முன்னெடுப்புகளை நம்பிக்கைக் கூட்டணியில் பங்கு வகிக்கும் தமிழ் அமைச்சர்கள் தொடங்க வேண்டும்.
தமிழ்ப்பள்ளி விவகாரங்களுக்கானப் பொறுப்பாளர்
அதுபோக தமிழ்ப்பள்ளிகளின் விவகாரங்களுக்குப் பொறுப்பாளராக, துணையமைச்சர் மாண்புமிகு தியோ அவர்களைக் கல்வியமைச்சு நியமித்திருப்பதானது, தமிழர்களுக்கு அளித்த உட்சபட்ச வஞ்சகமாகக் கருதி, அதனை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவையெல்லாம் புதிய மலேசியா என்று நம்பி வாக்களித்த தமிழர்களுக்கு ஏமாற்றமே என்று மலேசியத் தமிழர் அமைப்புகள் தனது கூட்டறிக்கையில் தெரிவித்துக் கொள்கின்றன.
1) மலேசியச் செந்தமிழர் பேரவை இயக்கம்
2) தமிழர் குரல் இயக்கம் சிலாங்கூர்
3) மலேசியப் புதியத் தமிழ்த் தலைமுறை இயக்கம்
4) மலேசியத் தமிழர் எழுச்சி இயக்கம்
5) மலேசியத் தமிழர் சங்கம்
6) தமிழர் ஒற்றுமை இயக்கம் சிலாங்கூர், கோலாலம்பூர்.
7) மலேசியத் தொழில் மேம்பாட்டுக் கழகம்
8) மலேசியத் தமிழ்நெறி வாழ்வியல் கழகம்
9) மலேசிய நாம் தமிழர் இயக்கம்
10) மலேசிய வள்ளுவர் சமூக மேம்பாட்டுக் கழகம்
11) மலேசிய இந்திய சிகை அலங்கார உரிமையாளர்கள் சங்கம் (மிண்டாசு)
என்னது புதிய மலேசியாவில் தமிழர் உரிமைகள் நிராகரிக்கப்படுகிறதா ???
அப்படியானால்
“மலேசிய தமிழியம் மெல்ல வெல்கிறது. தமிழரசியல், தமிழர் சமயம், தமிழர் பொருளாதாரம்,தமிழ்க்கல்வி,ததமிழர் இன மீட்சி என பல தடங்களில் நம் நாம் தமிழர் பதிவுகள் பரிணாம வளர்ச்சிக் காண்கிறது”.
என்பதெல்லாம் பொய்யா ???
தமிழவனே !!!
மன்னிக்கவும்
தமிழவலமே !!!