நிகரற்ற படைப்பாளிகளில் ஒருவர் – ம.நவீன்

மலேசிய எழுத்தாளரும் வல்லினம் இதழ் நிறுவனருமான ம.நவீனுக்குக் கனடா, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்தில் கடந்த 14 ஆண்டுகளாக காத்திரமான செயல்பாடுகளால் தொடர்ந்து பங்காற்றி வரும் நவீனுக்கு ஜூன் 9 இல் கனடா டொரோன்டோவில் அமைந்துள்ள Grand Cinnamon Convention Centre -இல் இந்தச் சிறப்பு விருது (1000 கனடியன் டாலர்) அளிக்கப்படவுள்ளதாக இலக்கியத் தோட்டத்தின் அறிவிப்பு தெரிவித்தது.

தமிழ் உலகின் மதிப்புமிக்க இயல் விருதை வழங்கி வரும் கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின் இந்தச் சிறப்பு விருது இலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதை முதன் முறையாக மலேசியாவிலிருந்து பெரும் ம.நவீனை செம்பருத்திக்காக நேர்காணல் செய்தோம்.

செம்பருத்தி: ம.நவீன் என்று சொன்னாலே வல்லினமும் நினைவுக்கு வருகிறது. வல்லினம் தோற்றம் வளர்ச்சி பற்றி கொஞ்சம் சொல்லலாமே.

ம.நவீன்: 2007இல் நான் வல்லினத்தைத் தொடங்கியபோது என்னிடம் பண வசதி என பெரிதாக ஒன்றும் இல்லை. ஆசிரியர் வேலைக்குச் சென்று இரண்டாவது ஆண்டு. என் ஒருமாத சம்பளத்தில் 500 ரிங்கிட்டை என் செலவுக்காக ஒதுக்கி வைத்துவிட்டு மீதப்பணத்தை வல்லினம் இதழுக்குப் பயன்படுத்தலாம் என முடிவு செய்திருந்தேன். அப்போது அச்சிதழ். பொருளாதார சிக்கலைத் தீர்க்க பா.அ.சிவம்  மட்டுமே துணை இருந்தார்.

அவருக்குத் தெரிந்த இடங்களில் நன்கொடை வாங்கிக்கொடுப்பார். அச்சு இதழ் தொடங்கப்போகிறேன் என்றவுடன் லண்டனில் இருந்து என்.செல்வராஜா சிங்கப்பூரில் இருந்து லதா ஆகியோர் மட்டும் பணம் அனுப்பி உதவினர். அப்போதெல்லாம் பெரும் கனவுகள் சுமந்த கண்களுடன் பா.அ.சிவமும் நானும் இரவு முழுவதும் பேசிக்கொண்டிருப்போம். சிவம் நல்ல கவிஞர்.

அதனாலேயே வெகு எளிதில் சொற்களால் சஞ்சலம் அடையக்கூடியவர். இதனாலேயே எங்களுக்குள் இணக்கமும் பிணக்கும் அவ்வப்போது வந்து சென்றன.

செம்பருத்தி: எப்படி பொருளாதார சிக்கலைச் சமாளித்தீர்கள்?

ம.நவீன்: இதழ் தொடர்ந்து நடக்க இலக்கிய ஆர்வளர்களிடம் ஒவ்வொரு இதழுக்கும் நூறு ரிங்கிட் என வாங்கினோம். இதழ் தயாரிப்புக்கு 3000 ரிங்கிட் அவசியம் என்பதால் முப்பது பேர் தேவைப்பட்டனர்.  அப்போதெல்லாம் முகநூல் இல்லை. எனவே எனக்குத் தெரிந்த ஒவ்வொரு ஆளாகத் தொலைப்பேசியில் அழைப்பேன். என் முயற்சி குறித்த விளக்கம் கொடுப்பேன். பலருக்கு அது விளங்கவில்லை. சிலருக்கு நம்பிக்கை இல்லை.

வெகுசிலர் ஒப்புக்கொண்டனர். இதழ்கள் அச்சானப்பின் நூறு ரிங்கிட்டுக்கு 25 இதழ்களை அவர்களுக்கு அனுப்பி வைப்பதாகத்  திட்டம். அதனை அவர்கள் விற்றால் 125 ரிங்கிட் கிடைக்கும். மீண்டும் எனக்கு 100 ரிங்கிட் கொடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தை அச்சு இதழ் பிரசுரமான இரண்டு வருடமும் அமுல் படுத்தினோம்.

இதில் சிலர் இணைந்தனர். சிலர் பாதியில் கலண்டு கொண்டனர். சிலர் நான் பிச்சை எடுப்பதாகவும் பரிகசித்தனர். எந்தப் பணமும் என் பாக்கெட்டுக்கு வராதவரை எனக்கு எந்த கிண்டலிலும் அவமானம் ஏற்படவில்லை. எனக்குப் பெரும் கனவு இருந்தது. அது என்னை பாதுகாத்தது.

செம்பருத்தி : லட்சியம் என்று சொல்லலாமா?

ம.நவீன் : இல்லை. அது மாபெரும் கனவு. நான் லட்சியவாதியல்ல. கனவுக்கும் லட்சியத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. வல்லினத்தின் இரண்டாவது அச்சு இதழ் தயாரித்து முடித்தபோது என் கால் மூட்டில் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போதெல்லாம் மெனுவல் ரக வாகனத்தைதான் பயன்படுத்தினேன்.

காலில் பாதுகாப்பு இரும்பை மாட்டிக்கொண்டு கைத்தடியுடன் காரை எடுத்துக்கொண்டு இதழ்களை தபால் நிலையத்திற்குக் கொண்டுச் சென்று சந்தாதாரர்களுக்கும் நூறு ரிங்கிட் செலுத்திய நண்பர்களுக்கு இதழ்களை அனுப்பிவைத்தேன். இது குறித்தெல்லாம் சுய பட்சாதாபத்தை எனக்கு ஏற்படுத்தியதில்லை.

இதுவரை வல்லினம் மூலம் நான் நண்பர்களுடன் செய்துள்ள செயல்பாடுகள் குறித்த  அலுப்பான, சலிப்பான, எரிச்சலான, கருணையை கோரும், ஏமாற்றத்தைச் சொல்லும் ஒரு வாசகத்தை என் வாயிலிருந்து நீங்கள் கேட்டிருக்க முடியாது.  யாரும் என்னை இதைச் செய்ய சொல்லி வற்புறுத்தவில்லை. நானாகவே செய்கிறேன். அது அந்த மாபெரும் கனவு இருந்தால் மட்டுமே சாத்தியம்.

செம்பருத்தி : அந்த வயதில் இதை செய்ய நோக்கம் என்ன? எது உங்களை அவ்வாறு செயல்பட வைத்தது?

ம.நவீன்: அப்போதெல்லாம் மலேசியாவுக்கு எழுத்தாளர்கள் வந்தால் நானும் அவர்களுடன் இருப்பேன். அவர்கள் பேசுவதைக் கேட்க ஆசையாக இருக்கும். அவர்கள் இந்நாட்டு இலக்கியத்தை அறிய முயல்கையில் மலேசிய எழுத்தாளர்கள் பற்றி மலேசியாவில் உள்ளவர்கள் பேசும்போதே ஒரு கிண்டல் தொணி எழுவதைப்  பார்ப்பேன்.

நானும் அவர்களுடன் சேர்ந்து கிண்டல் செய்து சிரிப்பதுண்டு.  ஆனால் எனக்குள் அது பல கேள்விகளை உண்டு பண்ணியது. அவ்வளவு எளிதாக எள்ளி நகையாட வேண்டியவையா மலேசியத் தமிழ் இலக்கியங்கள் என என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

இதற்கு நேர்மாறாக மலேசியாவில் இருந்த இலக்கிய அமைப்புகள், நாளிதழ்கள் பலவீனமான படைப்பாளிகளை அவர்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்ற காரணத்திற்காக மட்டுமே முன்னெடுத்தன. எனக்கு அதிலும் உடன்பாடில்லை. இதற்கான தீர்வு சிற்றிதழ் போக்கு என முடிவு செய்தேன்.

செம்பருத்தி : புதிய தரமான படைப்பாளிகளைச் சிற்றிதழ் போக்கின் வழி உருவாக்குவதுதான் உங்கள் நோக்கமாக இருந்ததா?

ம.நவீன்: இல்லை. மலேசியாவில் தரமான எழுத்தாளர் வரிசை உண்டு அவர்கள் முறையாக அடையாளப்படுத்தப்படவில்லை என்பதை உணர்ந்தேன். தரமான படைப்பாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை வல்லினம் மூலம் அறிமுகம் செய்ய வேண்டும். அதே சமயத்தில் தரமற்ற படைப்பாளிகள், படைப்புகள் கொண்டாடப்படும்போது கறாரான விமர்சனத்தையும் முன்வைக்க வேண்டுமென விரும்பினேன்.

அப்படித்தான் சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, மா.சண்முகசிவா, சை.பீர்முகம்மது போன்ற படைப்பாளிகளை வல்லினம் அச்சு இதழில் எழுத வைத்தேன். அமைப்புகள் பெரும் ஆளுமையாக உருவாக்கிக் காட்டிய மூத்தப் படைப்பாளிகள் பலரை கடுமையாகவும் விமர்சனமும் செய்தேன். அவர்கள் படைப்புகளை முற்றும் முழுதாக நிராகரித்தேன்.

அவர்கள் இலக்கிய நிகழ்ச்சிகளில் செய்யும் அரசியலை பகடி செய்தேன். கலகக் காரனாகவே கருதப்பட்டேன். இது அமைப்புகளும் நாளிதழ்களும் என் குரலை நசுக்க ஏதுவாக இருந்தது. “வல்லினம் மூத்தப்படைப்பாளிகளை புறக்கணிக்கிறது. அவர்களுக்கு அவர்கள் எழுதுவது மட்டும்தான் இலக்கியமாம்” என பரவலாகக் குற்றம் சாட்டினர்.

அந்த அவதூறை பலரும் நம்பவும் செய்தனர்.  வல்லினம் ஒரு காலத்தின் ஓலம் மட்டுமே என்பதாகவே பலரும் நம்பினர். இன்று அது வந்து சேர்ந்துள்ள இடம் யாரும் எதிர்ப்பார்க்காதது.

செம்பருத்தி : இதனால் உங்கள் படைப்பிலக்கிய முயற்சிகள் பாதிக்கப்படவில்லையா?

ம.நவீன்: உண்டு. வல்லினம் தொடங்கிய ஐந்து ஆண்டுகள் நான் மற்றவர்கள் நூல்களைப் பதிப்பிப்பதில் அதிக ஆர்வம் காட்டினேன். தரமான புதிய எழுத்தாளர்களின் நூல்கள் வாசிப்புக்குச் செல்ல வேண்டும் என விரும்பினேன். நான் 2004இல் சிவம் மற்றும் சிவா (சுங்கைப்பட்டாணி) ஆகியோருடன் சேர்ந்து கவிதை நூல் பிரசுரிக்க வேண்டும் என விரும்பினேன்.

அதுகுறித்து எழுத்தாளர் சங்க தலைவர் ராஜேந்திரனிடம் உதவி கேட்டபோது ஐயாயிரம் ரிங்கிட் தயார் செய்துக்கொண்டு வந்து சந்திக்கச் சொன்னார். எங்களிடம் அப்போது அவ்வளவு பணம் இல்லை. எனவே முயற்சியைக் கைவிட்டோம். இந்த நிலை புதிதாக வருபவர் யாருக்கும் நிகழக்கூடாது என விரும்பினேன்.

எனவே நூலைப் பதிப்பித்து முதல் கலை இலக்கிய விழாவிலேயே 20% ராயல்டியும் வழங்கினேன். படைப்பாளி முதலில் கௌரவாக நடத்தப்பட வேண்டும். அதுவே ஒரு நாட்டில் இலக்கியம் வளர்வதற்கான சூழலை உருவாக்கும் என்ற எண்ணம் எனக்கிருந்ததால் எழுதுவதை விட செயல்பாடுகளில் கவனம் அதிகம் குவிந்தது.

செம்பருத்தி : இதுவரை வல்லினம் மூலம் மலேசியாவில் நிகழ்ந்த புதிய முயற்சியாக எவற்றை நீங்கள் அடையாளப்படுத்துவீர்கள்?

ம.நவீன்: முதன்மையானது ஆவணப்படங்கள். ஏறக்குறைய மலேசிய – சிங்கப்பூரின் பதினைந்து முக்கிய இலக்கிய ஆளுமைகளை ஆவணப்படம் செய்துள்ளேன். அதன் நீட்சியாக பல ஆளுமைகளின் புகைப்படங்களை அகப்பக்கத்தில் தொகுக்கும் பணிக்கு ஊக்கியாக இருந்துள்ளேன். இன்று ‘சடக்கு’ எனும் அத்தளத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் எல்லா தகவல்களோடும் உள்ளன.

அதேபோல 25 முக்கியமான ஆளுமைகளை விரிவாக நேர்காணல் செய்து ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ என நூலாகத் தொகுத்துள்ளேன். இவை அனைத்தும் மலேசிய இலக்கியத்தை அறிய விரும்பும் எவருக்கும் அடிப்படையான வலுவான தரவுகளைக் கொடுக்கக்கூடியவை.

சமகால இலக்கியத்தின் வளர்ச்சிக்கு ‘வல்லினம் 100’ எனும் ஐந்நூறு பக்க களஞ்சியத்தை சமகால மலேசிய – சிங்கை இலக்கிய, சமூக, அரசியல் சூழலை அறியத்தருவதற்காகத் தொகுத்துள்ளேன். மலேசியாவில் சிற்றிதழ் மற்றும் ஆய்விதழ் முயற்சிகள் உருவாக வல்லினம் மற்றும் பறை போன்ற இதழ்களை தொடங்கி நண்பர்களுடன் இணைந்து நடத்திக்கொண்டிருக்கிறோம். முப்பதுக்கும் மேற்பட்ட தரமான நூல்களை இதுவரை பதிப்பித்துள்ளேன். புதிய எழுத்தாளர்களைக் கண்டடைய சிறுகதை, குறுநாவல் என வல்லினம் நண்பர்கள் துணையுடன்  நடத்தியுள்ளேன். 

இம்முயற்சிகள் அனைத்தும் பரந்த தளங்களில் சேர்வதற்கு ‘கலை இலக்கிய விழா’ எனும் பெரிய நிகழ்ச்சியைக் கடந்த 10 ஆண்டுகளாக வல்லினம் மூலம் நடத்தியுள்ளோம். மேலும் இலங்கை, தமிழகம், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் நூல் அறிமுகக்கூட்டங்களை அந்தந்த நாட்டில் உள்ள நண்பர்களோடு இணைந்து நடத்தியுள்ளோம். இம்முயற்சிகள் அனைத்தும் மலேசியாவின் நவீன இலக்கிய முகத்தை தமிழ் வாசகர்கள் மத்தியில் அறிமுகம் செய்துள்ளது.

செம்பருத்தி : கனடா இலக்கியத்தோட்டம் வழங்கும் விருதுகள் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்கள் தேர்வு மிக கவனமானது. உங்களுக்கு அவ்விருது கிடைத்துள்ளது. எப்படி உணர்கிறீர்கள்?

ம.நவீன் :  நான் புனைவுகள் எழுதுவதையும் இலக்கியச் செயல்பாடுகளை மட்டுமே இலக்காகக் கொண்டிருக்கவில்லை. கருத்துகளைப் பதிவு செய்பவனாகவும் இருக்கிறேன். இலக்கியச் சூழலில்  போலியான, சுயநலமான, லாப நோக்குடைய எதற்கும் என் எதிர் குரலைப் பதிவு செய்கிறேன். இதனால் பலரின் புறக்கணிப்புக்கு உள்ளாவதுண்டு. 

பலர் திட்டமிட்டு வல்லினம் பெயரை அல்லது என் பெயரை சொல்வதை தவிர்ப்பதைப் பார்த்துள்ளேன். நீங்கள் புகழுக்கு ஆசைப்படுபவராக இருந்தால், இலக்கியம் வழி சமூகத்தின் கவனத்தைப் பெற்று அந்தக் கவனத்தின் வழி அமைப்புகளின் வளர்ப்பு நாயாக இருக்க விரும்பினால் மட்டுமே  இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டும்.  நான் என்ன செய்துக்கொண்டிருக்கிறேன் என்பதை நன்கு அறிவேன்.

கல்விச்சூழலில் உள்ள உயர் அதிகாரிகள் பலர் மத்தியில் வல்லினம் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் பதிவாகியுள்ளதையும் அறிவேன். உயர்பதவிக்குச் செல்ல விரும்புபவர்களுக்கும் அல்லது இலக்கியம் வழி கிடைக்கும் அடையாளத்தை தங்கள் தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம் என்று நினைப்பவருக்குதான் இவையெல்லாம் சிக்கலாகத் தெரியும்.

எனக்கு எது குறித்தும் கவலையில்லை. நான் நியாயமான அகங்காரத்துடனேயே இந்த மலுங்கிய சூழலை எதிர்க்கொள்கிறேன். ஒரு காலத்தை நகர்த்தும் மாபெரும் ஆற்றல் கொண்டவன் என்பதை உள்ளூர உணர்ந்தவனாக இருப்பதால் இந்த எளிய லௌகீக புறக்கணிப்புகள் என்னை பாதிப்பதே இல்லை.  இந்த விருது அறிவிப்புக்குப் பிறகு  பலர் என்னைத் தொடர்புக் கொண்டனர். வல்லினத்தைப் பற்றியும் என்னைப்பற்றியும் அவர்களுக்கு இருந்த எதிர்மறையான எண்ணங்கள் இந்த விருதின் மூலம் அகன்றுள்ளதாகக் கூறினர். ஒரு தரமான விருது அவர்களை மீளாய்வு செய்ய வைத்துள்ளது. இந்த எண்ணத்தை எல்லா விருதுகளும் வழங்குவதில்லை. கனடா இலக்கியத்தோட்டம் பற்றி அறிந்தவர்களுக்கு மட்டுமே அதன் தேர்வு நிலைபாடு தெரிந்திருக்கும். அவ்வகையில் மகிழ்ச்சிதான்.

செம்பருத்தி : உங்கள் படைப்பிலக்கிய முயற்சிகள் பற்றி சொல்லுங்கள்.

ம.நவீன் : புனைவிலக்கியம் சார்ந்த எனது முயற்சி சொற்பமானவைதான். இரண்டு சிறுகதை தொகுதிகள், இரண்டு கவிதை தொகுதிகள், இரண்டு பத்தி எழுத்து தொகுதிகள், இரண்டு இலக்கியக் கட்டுரை நூல்கள், ஒரு நேர்காணல் தொகுப்பு, ஒரு மாணவர் உளவியல் சார்ந்த   தொகுப்பு.

இவை மட்டுமே இதுவரையிலான எனது ஆக்கங்கள். படைப்பிலக்கியத்தில் என் போதாமையை நான் நன்கு அறிவேன். மிக விரைவில் எனது முதல் நாவலைப் பதிப்பிக்க உள்ளேன். நான் இளம் படைப்பாளிகள் பலருடன் உரையாடலில் இருக்கிறேன். என்னைக்காட்டிலும் வாசிப்பிலும், ரசனையிலும், எழுத்துத்தீவிரத்திலும் பலர் தமிழகத்தில் உள்ளனர். அவர்களோடு ஒப்பிடுகையில் நானெல்லாம் ஒன்றுமே இல்லை.

என் புனைவுகள் வழியாகத்தான் என்னை நிரூபிக்க வேண்டியுள்ளது. எதைக்காட்டிலும் எழுத்தாளானாக என்னை அடையாளம் காண்பதையே நான் விரும்புகிறேன்.

செம்பருத்தி : பத்து ஆண்டுகளில் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும் விடயம் என ஏதேனும் உண்டா?

ம.நவீன்: சாணத்தில் மொய்க்கும் ஈக்கள் போல முகநூலில் உருவாகும் எழுத்தாளர்களைச் சுற்றி ஙொய் என சத்தமிட்டு பறக்கும் சோம்பேறி வாசகர்களைப் பார்க்கும்போது இந்தச் சலிப்பு வருவதுண்டு. சாணத்தைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அது மக்கி மண்ணோடு மண்ணாகிவிடும்.

ஈக்கள்தான் அதன் ஒரு துளியை எங்கெங்கோ கொண்டு சேர்க்கின்றன. இந்த ‘ஈ’ வாசகர்கள் தரமான எதையும் வாசிப்பதில்லை.

இவர்கள் ஒன்றாக சேர்ந்து பறக்கும்போது பெரிதாகத் தெரிவதால் தங்களை கருடன் என அங்கீகரிக்கச் சொல்வதுதான் வேடிக்கை.