மனம் அடக்கப்பட வேண்டியது அல்ல; ஆளப்படவேண்டியது.
உலகில் மிகப்பெரிய ஆராய்சிகள் எல்லாம் மனித மனதினைப் பற்றி நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும் மனதின் செயல்பாடுகளை அத்தனை எளிதாக அறிய இயலவில்லை. ஒவ்வொரு வினாடியும் அது ஓராயிரம் கிலோ மீட்டர் வரை பயணம் செய்கிறது.
ஒவ்வொரு மனிதரையும் படைத்து ஆளுக்கொரு மனதையும் படைத்திட்ட இயற்கையும் இறைவனும் எத்தகைய வலிமை படைத்தவர்கள் என்பதை நாம் அறிய முடியும். ஒவ்வொரு நிகழ்வையும் மனது எதோ ஒரு செல்லில் தேக்கி வைத்து வேண்டும்போதெல்லாம் தரும் உண்மையான கணினி.
ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒன்றை நினைத்து வேறு ஒன்றைச் செய்திடும் விபரீத மனம் படைத்தவர்களும் இங்கே உண்டு என்பதும் நாம் அறிந்த ஒன்றே. உண்மையில் மனம் என்பது நமக்கு மட்டுமல்ல நம்மைச் சார்ந்தவர்களுக்கும் மாமருந்து என்பதை நாம் உணரவேண்டும்.
மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம் என்ற வரிகளை நாம் கேட்கும்போதெல்லாம் எத்தைகைய உணர்வுகளைப் பெறுகிறோம் என்பதை எழுத்தால் சொல்லிட இயலாது.
அடுத்தவர்களுக்கும் பயன்படும்படியான வாழ்வியலை நமக்கு கற்றுத் தருவதே கருணையுள்ள நமது மனமே ஆகும். பிறரின் துன்பங்களை நமது துன்பங்களாக நினைத்து அவற்றைப் போக்கும் பொருட்டு செயலாற்றும் மனம் படைத்தவர்கள், பணம் படைத்தவர்களை விட பணக்காரர்கள் தான். அந்த மனம் ஒரு அழகிய சேமிப்பு கிடங்கு. அதில் நாம் எதைச் சேமிக்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது வாழ்வு மலர்கிறது.
“வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்களும் மாறுமோ ?”
என்ற வரிகளை பலரும் அடிக்கடி முணுமுணுப்பதுண்டு. உண்மைதான் சாவல்கள் நிறைந்த ஒன்றுதான் இந்த வாழ்க்கை. அதைவிடவும் வலிமை படைத்த ஒன்று நமது மனம் என்பதை நாம் உணர வேண்டும். சின்ன சின்ன தோல்விகளிலும் புறக்கணிப்பிலும் நாம் சோர்ந்து போய் அமர்ந்துவிட்டால் நம்மை விட முட்டாள்கள் யாரும் இருந்திட இயலாது. இங்கே நாம் வந்து பிறந்ததிற்கு எதோ ஒரு காரணம் இருக்க கூடும். நிச்சயமாக அதை நோக்கி நமது மனதை வலிமையாக செலுத்திட வேண்டும்.
வேண்டாத குப்பைகளை நிரப்பும் குப்பை தொட்டியாக நமது மனதை மாற்றிக் கொள்ளக் கூடாது. தேவையற்ற சிந்தைகளையும் எதிர்மறை சிந்தனைகளையும் நமது மனதிற்குள் கொண்டு செல்வதே நமக்கு நாம் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.’வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’என்று பாடிய வள்ளல் பெருமானின் மனம் எத்தகையது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
சமதர்மமும் ஜீவகாருண்யமும் ஒருங்கே அமைந்த மனம் அது. பாரம் சுமந்து செல்லும் வண்டி மாடுகளைப் பார்த்தால் சிறிது நேரம் அந்த மாடுகளின் கால்களை தடவிக் கொடுப்பாராம் வள்ளல் பெருமான். சிறு உயிர்கள் கூட துன்பம் சந்திக்க கூடாது என்ற வள்ளல் மனம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கும்.
சாதனையாளர்கள்’எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?’ என்பான் பாரதி. உலகம் நோக்கிய அவனது பார்வை அவ்வாறே இருந்தது. வீட்டில் வறுமை இருந்தாலும் அதை தனது வார்த்தைகளில் ஒருபோதும் அனுமதிக்கதவன் பாரதி. எங்கோ இருக்கும் பிஜித் தீவில் துன்பப்படும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தனது பாடல்கள் வழியாக உலகின் கவனத்திற்கு கொண்டு வந்த மாமனம் அவனுக்கு இருந்ததது.
இந்த உலகம் என்னால் மாறவேண்டும் என்ற ஞான நிலையில் இருந்தது அவனது மனம் என்றால் அது மிகையில்லைபெரிதினும் பெரிது கேள்என்பான் பாரதி. இந்த மனம் எதை ஆசைப்படுகிறதோ அதை அடையும் வரை ஓயாது. அதுவரை நிலைகொள்ளாமல் அலையும் இயல்பை உடையது என்பதை நாம் அறிவோம்.
நம்முடைய லட்சியங்களையும் எண்ணங்களையும் எப்போதும் உயர்ந்த நிலை நோக்கி வைத்துக் கொண்டு அதை நோக்கி இயங்க ஆரம்பித்தால் நம்முடைய மனமும் உடலும் மிக மகிழ்வாக இருக்கும் என்பதே சாதனையாளர்கள் உணர்த்தும் உண்மை.
நீங்கள் எதுவாக நினைகிறீர்களோஅதுவாகவே மாறமுடியும் என்பார்சுவாமி விவேகானந்தர். உங்கள் ஒவ்வொரு சிந்தனையும் செயலும் உயர்ந்த இலக்கினை நோக்கியே அமையட்டும். தொடர்ந்து உங்கள் மனதிலே படமாக வரைந்து பாருங்கள் . தடைகளை நினைத்து கவலைப்படும் மனம் ஒருபோதும் சாதனைகள் படிப்பதில்லை. புறக்கணிப்புகளும் தடைகளுமே நம்மை உந்தித் தள்ளும் ஊக்கிகளாக நினைத்து முன்னேற வேண்டும்.
நீங்கள் தடை என்று நினைத்தால் அது தடைதான். நீங்கள் அதை அனுபவமாக ஏற்றால் அது தடையாக தெரியாது. தேங்கி நிற்கும் குட்டைகளில் நாம் நல்ல நறுமணத்தை எதிர்பார்க்க முடியாது. ஓடும் நதிகளாக நாம் இருக்கும் போதுதான் நமது மனதில் கசடுகள் தேங்காது.
“உங்களால் மறக்க முடியாத நிகழ்வுகள் ஏதேனும் சொல்ல இயலுமா?”
ஒவ்வொரு தன்னம்பிக்கை பயிற்சியாளர்களும் கேட்கும் கேள்வி. இதை உங்கள் மனதிடம் கேட்டுப்பாருங்கள். என்ன பதில் கிடைக்கும். பெரும்பாலான பதில்கள் அவர்கள் சிறிய வயதில்
சந்தித்த கசப்பான அனுபவங்களையே சொல்வார்கள். அல்லது சொல்லத் தயங்குவார்கள். காரணம் எதிர்மறை சிந்தனைகளும் செயல்களும் நமது மனதிலே எளிதில் இடம்பிடித்து விடுகின்றன. இதுதான் கசப்பான உண்மையும் கூட . இதில் இருந்து வெளியேறி வாருங்கள். இந்த உலகம் முழுக்க உங்களுக்காக காத்திருக்கும் வாய்ப்புகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.
எதிர்மறையாக நடக்கும் நிகழ்வுகளை தோல்விகளாக நினைத்து விடாதீர்கள். அதை நாம் கடந்து வரும்போது அது அனுபவமாக நமது பயணத்தில் அமைய வேண்டும். அப்போது அது உங்கள் மனதில் நிச்சயமாக எதிர்மறையாக பதிவாகாது.நமது உடல் அற்புதமானது.
நமக்கு பிடிக்காத அல்லது ஒவ்வாத பொருள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால் உடனே அதை உடல் வெளியேற்றி விடும். உடலே அவ்வாறு வெளியேற்றி விடும்போது மனம் மட்டும் ஏன் எதிர்மறைகளை ஏற்க வேண்டும். மனம் அழகிய கோவில் போன்றது. அதை துாய்மையாக வைத்திருப்பது நமது கடமை.
அதைவிட முக்கியம் அந்த மனதில் நேர்மையான விஷயங்களை நிரப்பி விட வேண்டும்.
ஒவ்வொரு முறையும் நாம் நல்ல சிந்தனைகளோடு நம்மை நிரப்பும்போது நாம் மட்டுமின்றி நம்மை சார்ந்து இயங்குபவர்களுக்கும் அது உற்சாகத்தையும் நம்பிக்கையும் கொடுக்கிறது.மனிதில் உறுதி பிறக்கட்டும்.
-முனைவர். நா.சங்கரராமன்
தமிழ்த்துறை பேராசிரியர்