மலேசியாவில் பூர்வக்குடி மக்களின் துயரம் தொடர்கதையா?

-சிவா லெனின்

மலேசியாவில் வாழும் பூர்வக்குடியினர், நாளுக்கு நாள் பல்வேறு சிக்கல்களையும் பிரச்சனைகளையும் எதிர்நோக்கி வருவதோடு, அவர்கள் தங்களின் வாழ்வியல் முறையையே இழந்து வரும் நிலை உருவாகியுள்ளது.

இந்நாட்டின் மண்ணின் மைந்தர்கள் எனவும் பூர்வக்குடியினர் எனவும் வரையறுக்கப்படும் அந்தச் சமூகம் நாளுக்கு நாள் மலேசியாவிற்கு அந்நியமாகி வருகிறார்கள். அவர்களுக்கெதிரான துயரம் தொடர்கதையாக உருவெடுத்துள்ளது.

நாடு வளர்ச்சியும் மேம்பாடும் கண்டுவிட்ட நிலையில், இன்னமும் தங்களின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் அதேவேளையில் தங்களின் வாழ்வியல் முறையையும் கட்டிக் காக்கும் பூர்வக்குடியினருக்கு, அவர்களின் இயல்பியல் வாழ்வியலைப் பறிக்கும் நடவடிக்கைகள் அண்மையக்காலமாய் தொடர்ந்து அதிகார வர்க்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருவது வேதனையானது.

 

தலைமுறை தலைமுறையாகக் காடுகளில் சுதந்திரமாய் இயற்கையோடு வாழ்ந்துக் கொண்டிருந்த அம்மக்களை, அக்காடுகளுக்கு அந்நியமாக்கும் நடவடிக்கை ஓர் இனத்தின் அடையாளத்தையே அழிக்கும் வகையிலானது. அந்த இனத்திற்கு எதிராக பாய்ச்சப்படும் பெரும் இன அழிப்பு அது. அவர்களுக்கு இதுநாள் வரை சொந்தமானதைப் பறித்துக்கொண்டு, நாடோடிகளாய் நாட்டுக்குள் அலையவிடுவது மிகவும் மோசமானது.

பூர்வகுடிகளுக்கு எதிரான மனித உரிமை இந்நாட்டில் காக்கப்படவில்லை என்பதுதான் இயல்பியல் உண்மை. அந்த இனத்தின் உரிமைகள் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது. அவர்களின் குரல்வலை நசுக்கப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக எழும் குரல்கள் இங்கு விரல்விட்டு எண்ணும் நிலையில்தான் உள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் பறிப்பது மனித உரிமை மீறல் என்பதனை மறுத்திட முடியாது.

இந்நாட்டின் மண்ணின் வாசம் இப்பூர்வக்குடிகளைச் சார்ந்துதான் இருக்கும். அவர்கள் வாழும் காடுகள் அவர்களுக்கானது. இந்நாட்டில் எல்லா இனங்களும் எங்கிருந்து வந்தார்கள், அவர்களின் தொடக்கம் இந்நாட்டில் எந்த நூற்றாண்டு என்பதெல்லாம் துள்ளியமாக பதிவு செய்யப்படும் நிலையில், மலேசியாவின் பூர்வக்குடிகளின் மூலம் எங்கிருந்து தொடங்குகிறது என்பதை இதுவரை துள்ளியமாகக் கூற முடியவில்லை.

மலேசியாவில் பூர்வக்குடி மக்கள் இந்நாட்டில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருந்தாலும், அவர்கள் அரசியல் ரீதியில் இன்னமும் புறக்கணிக்கப்படும் ஓர் இனமாகவே வரையறுக்கப்பட்டுள்ளனர். மதங்களுக்கு அப்பாற்பட்டு, தங்களின் மூதாதையர் கடைபிடித்து வந்த கலை, பண்பாடு, பாரம்பரியம், நாகரிகத்தை இந்த 21-ம் நூற்றாண்டிலும் அதன் தடமும் சுவடும் தொலையாமல் பேணி காத்திடும் அந்த இனத்திற்கு எதிரான ஒடுக்குமுறைகளும் அநீதிகளும் கண்டுக்கொள்ளப்படாமல் அலட்சியம் செய்யப்படுவது வரலாற்றின் பெரும் பிழையெனலாம்.

அதுமட்டுமின்றி, நாட்டின் பூர்வக்குடிகளின் வாழ்வாதாரத்தையும் வாழ்வியல் முறையையும் பறிக்கும் அதிகார வர்க்கம், இயற்கையைக் கடவுளாய் போற்றும் அந்தச் சமூகத்தை மதமாற்றம் செய்யும் நடவடிக்கையைச் சத்தமில்லாமல் அரங்கேற்றியும் வருகிறது. இயலாமை மற்றும் வறுமையின் காரணியத்தால் மத மாற்றங்களுக்கு ஆளாகும் பூர்வக்குடிகள், ஒரு காலக்கட்டத்திற்குப் பின்னர், தங்களின் இயல்பியலைத் தொலைத்துவிடக்கூடும் என்பதை அறியாமலேயே அந்தச் சமூகம் அதிகாரவர்க்கங்களின் மாயவலையில் சிக்குண்டு அழிவை நோக்கி பயணிக்கத் தொடங்கிவிட்டது.

ஒவ்வொரு முறையும் பூர்வக்குடிகளின் இருப்பிடம் அல்லது அவர்கள் சார்ந்த பகுதிகளில் அதிகார வர்க்கம் அத்துமீறி நுழையும் போது, சிறுபான்மை சமூகமான அவர்கள் ஒருகாலகட்டம் வரை மௌனம் தான் காத்து வந்தனர். ஆனால், அவர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் உச்சத்தை நோக்கி நகர்ந்தபோது, அவர்களின் குரல்களும் ஓங்கி ஒலிக்க தொடங்கிவிட்டன. அவர்களும் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். ஆனால், அந்தச் சிறுப்பான்மை சமூகத்தின் போராட்டங்கள் அதிகார வர்க்கத்தாலும் ஆளும் வர்க்கத்தின் கைக் கூலிகளாலும் விலங்கிடப்பட்டுவிடுகிறது.

பூர்வக்குடிகளின் வாழ்வாதார நிலங்கள் (காடுகள்) அழிக்கப்படுவது நடப்பியல் சூழலில் சர்வசாதரணமாகி விட்டது. காடுகளில் பிறந்து வளர்ந்து, காடுகளோடு ஒன்றிவாழும் அவர்கள் அக்காடுகளுக்கு அந்நியமாகி வரும் நிலையில், இயற்கையாகக் கிடைக்கூடிய தண்ணீர் மாசு அடைந்து விட்டது. விலங்குகளும் பறவைகளும் கூட போக்கிடம் இல்லாமல் அழிந்து வருகின்றன.

கிளாந்தான், குவா மூசாங், பேராக், கிரிக் பகுதிகள் உட்பட நாட்டில் பல்வேறு இடங்களில் காடுகள் அழிக்கப்படுவதும் அழிக்கப்பட்டதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. தங்களின் இருப்பிடத்தைத் தற்காத்துக் கொள்ள முனைந்த பூர்வக்குடிகளை, இதற்கு முன்னர் கைவிலங்கிட்டு நீதிமன்றம் கொண்டு சென்ற அவலம் எல்லாம் நம் நாட்டில் அரங்கேறியிருப்பது கொடூரத்தின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்.

காடுகளை மட்டுமின்றி பூர்வக்குடிகள் வாழும் கிராமங்களும் அதன் வரலாற்றைத் தொலைத்து நிற்கும் அவலம் நடந்தேறியுள்ளதையும் சுட்டிக்காட்டதான் வேண்டும். பூர்வக்குடிகளின் குடிசைகளும் குடில்களும் கூட அதிகாரவர்க்கத்தின் பிடியிலிருந்து மீட்க முடியாமல், அந்தச் சமூகம் எல்லாவற்றையும் இழந்து காடுகளுக்குள் நாடோடிகளாய் திரியும் அவலம் எவ்வளவு கொடுமையானது. இம்மாதிரியான மனித உரிமை மீறல்களுக்கு யார் நடவடிக்கை எடுப்பது?

நாட்டில் பூர்வக்குடிகளின் காடுகள் அழிக்கப்பட்டு வந்த துயரம் ஒருபுறம் வேதனையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அண்மையில் கிளாந்தான் கம்போங் குவா கோ-வில் நிகழ்ந்த மரணங்கள், இந்நாட்டில் பூர்வக்குடிகளின் பாதுகாப்பு உத்தரவாதம் அற்ற நிலையில் இருப்பதை உறுதி செய்துள்ளது.

சொந்த நாட்டில் சுத்தமான குடிநீர் இல்லாமல், உணவு இல்லாமல், ஓர் இனம் காட்டுக்குள் நாடோடியாக இருப்பிடம் தேடி அலைந்த வரலாற்றைக் கேள்விப்படும் போது, மனிதம் இந்நாட்டில் செத்துதான் போனது என்பதை உணர முடிகிறது. வெறும் வெள்ளை சோற்றை மட்டுமே உண்டு உயிர்வாழும் நிலையை நம்மால் கற்பனைகூட செய்துபார்க்க முடியவில்லை. அவர்களின் துயரங்களையும் வலியையும் வெறும் வார்த்தைகளில் பதிவு செய்வது என்பது இயலாத காரியமாகும்.

“சாப்பிடவில்லையெனில், எங்களுக்குப் பசிக்கும். அதனால், எது இருக்கிறதோ அதைச் சாப்பிடுகிறோம்” எனத் தொடர் மரணங்களுக்கு மத்தியில் குவாலா கோ-வில் ஒலிக்கும் குரல்கள் எவ்வளவும் வலிமிகுந்தது.

வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையிலான நம்பிக்கையைச் சுமந்து, நம்பிக்கையற்ற, வலி மிக்க சொல் அது. உணவிற்குப் பஞ்சமற்ற காடுகளில் உணவைத் தேடி நகர்ந்துக் கொண்டிருக்கும் அந்த இனத்தின் வலியை என்னவென்று சொல்வது.

காடுகளில் இயற்கையாக நிரம்பி கிடக்கும் ஆறுகளும் நீர்வீழ்ச்சிகளும் கூட மாசு அடைந்திருப்பதாக அவர்கள் கூறும் போது, மலேசியர்கள் இயற்கையை நேசிப்பதிலிருந்து அந்நியமாகி விட்டனர் என்பதை உணராமல் இருக்க முடியவில்லை.

இதுவரை 14 மரணங்கள் என்றும், 50-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்களின் மரணத்திற்குக் காரணம், மர்ம நோய் என்றும், இயல்பான மரணம் என்றும் மாறிமாறி விடப்படும் பொறுப்பற்ற அறிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரும் மன உலைச்சலைக் கொடுத்திடும் என்பதை உணர்த்த வேண்டியுள்ளது.

இவர்களின் மரணங்களுக்கான காரணம் இன்னமும் அறியப்படாத நிலையில், கிளாந்தான் மாநிலத் துணை மந்திரி பெசார் முகமட் அமார், அந்தப் பூர்வக்குடியினர் மரணம் இயல்பான தொற்றுநோய் சார்ந்தது என்று கூறியிருப்பது, அம்மாநில அரசாங்கத்தின் பொறுப்பற்றதனத்தின் உச்சம் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

இவர்களின் மரணங்களுக்கு என்ன காரணம்? நீர் மாசு தான் காரணமா என்பதை கண்டறிய வேண்டும். அவர்களின் உயிரைப் பறித்த மர்ம நோய் என்ன? அது எதனால் உருவானது? இதற்கு விடைகாண அரசாங்கமும் மனித உரிமை அமைப்புகளும் வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். பூர்வக்குடி மக்கள் தானே எனும் அலட்சியமும் எண்ணமும் கைவிடப்பட வேண்டும்.

நாட்டில் பூர்வக்குடி மக்கள் மீது மக்களின் கவனம் மட்டுமல்ல, அரசாங்கத்தின் பார்வையும் திரும்புவதில்லை. அந்தச் சமூகத்தின் மீது அக்கறைக் கொள்ளாமல் கடந்து போகும் நிலை இன்னமும் மலேசியர்களிடையே மேலோங்கிதான் இருக்கிறது. இப்போக்கு மாற வேண்டும், அவர்களும் மனிதர்கள்தான், இம்மண்ணின் மைந்தர்கள்தான், என்பதில் ஒவ்வொரு மலேசியரும் அக்கறைக் கொள்ள வேண்டும்.

பணத்திற்காக காட்டின் இயற்கை வளங்களை அழிப்பதில், முந்தைய தேசிய முன்னணி அரசாங்கமாக இருந்தாலும் சரி, நடப்பு பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கமாக இருந்தாலும் சரி, ஒரே மாதிரியான போக்கைதான் கடைபிடிக்கின்றனர். அதுபோலவே, கிளாந்தான் உட்பட, பாஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் அதேநிலைதான் உள்ளது.

நாட்டில் காடுகளும் அவற்றோடு சேர்ந்து பூர்வக்குடிகளின் வாழ்வாதார அடையாளமும் தொலைக்கப்படும் போது ஆளும் கட்சிகளும் எதிர்கட்சிகளும் கண்டுக்கொள்ளாமல் இருப்பதற்கு, அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் முதலாளித்துவ வெளிப்பாடே காரணம்.

அன்மையில், பேராக் மாநிலத்தில் பூர்வக்குடிகளின் பாரம்பரிய நிலம் தொடர்பில் எழுந்த சர்ச்சையில், மந்திரி பெசார் பூர்வக்குடி மக்களின் நெருக்குதல்களுக்கு செவிசாய்க்க முடியாது என முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பாணியில் அறிக்கை விட்டிருந்ததையும், மனிதநேயம் பேசும் பாஸ் கட்சி கிளாந்தான் மாநிலத்தில் வாழும் பூர்வக்குடிகளுக்கு எதிராக பெரும் அநீதிகளையும் கொடூரங்களைப் புரிந்து வருவதையும் மறுத்திடலாகாது. இந்நாட்டில் பூர்வக்குடிகளின் பிரச்சனைக்காக பி.எஸ்.எம். கட்சியைத் தவிர மற்றவை உண்மையாகவும் நேர்மையாகவும் இல்லை என்பதை துணிந்து கூறலாம்.

அரசியல் காரணியங்களுக்காக முன்பு குரல் கொடுத்தவர்கள், தற்போது அதிகார நாற்காலியில் அமர்ந்து விட்டதால் பூர்வக்குடி மக்களுக்கு எதிரான கொடூரங்களும் இன்னல்களும் இவர்களின் கண்களுக்குப் புலப்படாமல் போய்விட்டது. மலேசியாவில் பூர்வக்குடி மக்களுக்கெதிரான அட்டூழியங்களுக்குத் தீர்வு காண்பது யார்? அரசாங்கம் தான் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்ல வாய் எழும்போது, வேலியேப் பயிரை மேய்ந்த கதையாகத்தான் இருக்கிறது இங்கு அரங்கேறும் கொடுமைகள் எனச் சிந்தை தடுக்கிறது.

நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் தவிர்த்து, ஊடகங்களும் பூர்வக்குடி மக்களின் மீதும் அவர்களுக்கெதிரான கொடுமைகள் மீதும் தனித்துவ கவனம் செலுத்திட மறுக்கிறது எனும் உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும். பூர்வக்குடி மக்களின் ஒவ்வொரு பிரச்சனையையும் செய்தியாக மட்டுமே பார்க்கும் ஊடகங்கள், அஃது ஓர் இனத்திற்கு எதிரான கொடுமை என்பதை சுட்டிக்காட்ட மறந்துவிடுகிறது. ஜனநாயகத்தின் குரலாக ஒடுக்கப்படும் சமூகத்தின் பலமாக நிற்க வேண்டிய ஊடகங்கள் கூட அம்மக்களிடமிருந்து அந்நியமானால், அவர்களின் துயரத்தை யார்தான் துடைத்தெடுப்பது?

நாட்டில் பூர்வக்குடி மக்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்கதையாக இருக்கும் நிலையில், அம்மக்களின் பிரச்னைகளைக் கண்டுக்கொள்ளாமல் இருப்பது நாட்டில் வாழும் ஒவ்வொரு மலேசியனும் மனித உரிமைக்குச் சாவுமணி அடித்துவிட்டு, பிணங்களின் வாடையில் மனித நேயத்தை உயர்த்தி பிடித்துக் கொண்டிருப்பதற்கு ஈடானது.

பூர்வக்குடி மக்களுக்கு எதிரான அநீநிதிகள் மரண ஓலங்களாய் விஸ்வரூபம் எடுக்காத வரை அவர்கள் குறித்து யாரும் கண்டுக்கொள்ளப் போவதில்லை. அவர்களின் பாரம்பரியக் காடுகள் அழிக்கப்பட்ட போதெல்லாம், எந்தத் தரப்பும் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டினை மேற்கொள்ளவில்லை. காடுகளின் அழிப்பு, இயற்கை நீர் மாசு உட்பட உணவிற்குக் கூட வழியில்லாமல், கண்ணுக்குத் தெரியாத நோயால் மரணங்கள் சாட்சியாகும் போது விசாரணைகளும் அறிக்கைகளும் அர்த்தமற்றதாகி போகிறது.

நாட்டில் வாழும் மக்களில் ஓர் இனம் குடி தண்ணீரும், உண்ண உணவும், இருக்க இடமும் இல்லாமல் வாழும் சூழல் உருவாகும் போது, அந்நாடு அம்மக்களுக்கு அந்நியமாகிறது. அந்நாட்டு அரசாங்கம், அம்மக்களைப் புறக்கணித்து விட்டது என்றுதான் பொருள்படும். அத்தகைய மிகக் கொடூரமான உச்சத்தைதான் நம் நாட்டில் பூர்வக்குடி மக்கள் எதிர்நோக்கி வருகிறார்கள் என்பது நடப்பியல் சான்று.

மற்றவரின் உடமையிலும் உரிமையிலும் அத்துமீறி தலையிடுவதில் நனிசிறப்போடு செயல்படும் மனித சமூகம், அதனால் ஏற்படும் எதிர்கால விளைவுகள் குறித்து துளியும் கவலைப்படுவதில்லை. பூர்வக்குடி மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இல்லையேல், உலகில் சொந்த நாட்டில் பூர்வக்குடியினம் அதன் வாழ்வியல் வரலாற்றைத் தொலைத்த பெரும் வரலாற்று பிழை நம் நாட்டில் உருவாகிவிடும்.

செத்த பின்னர் அனுதாபப்படுவதை விட, இயற்கையோடு வாழும் பூர்வக்குடிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்காமல் இருந்தாலே போதுமானது. பூர்வக்குடி மக்களின் உரிமைக்காகவும் அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படவும் ஒட்டுமொத்த மலேசியர்களின் குரலும் ஒலிக்க வேண்டும் மனிதத்தோடு. மலேசியாவில் சுமார் 60,000 ஆண்டுகள் பழமையான பூர்வக்குடி மக்களின் வரலாற்று தடத்தை அழிப்பது ஓர் இனத்தின் அடையாளத்தையும் வரலாற்றையும் மரணிக்கச் செய்வதற்கு ஈடானது.