மாற்றுத்திறனாளி பாலனின் இறுதி ஆசை நிறைவேறுமா?

எஸ் அருட்செல்வன் | “அண்ணா, பாலனின் கண்கள் திறந்திருக்கின்றன. அவரது கனவு இன்னும் நிறைவேறவில்லை.” இந்த வார்த்தை மிகவும் வலி நிறைந்தது. பாலனோடு உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் வேதனையை அனுபவித்தவரின் உருக்கம் அது. பி.எஸ்.எம் கட்சியில் பாலனுடன் மிகவும் நெருங்கிய நட்புக் கொண்டிருந்த தீனாவின் உருக்கம் அது. 10 மே 2019, காலை மணி 10-க்குப் பாலனின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது.

பக்டீரியா தொற்றுக் கிருமி காரணமாக, இரவு மணி 10 அளவில் பாலன் மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை விட்டார். அவர் இறந்துவிட்டதை சிரம்பான் மருத்துவமனை மருத்துவர்கள் உறுதி செய்தனர். பாலன் இந்த உலகின் வலியிலிருந்து வேதனையிலிருந்து விடுவிடுக்கப்பட்டிருந்தாலும், அவர் நாம் செய்து முடிக்க, சில வேலைகளை விட்டுச் சென்றுள்ளார்.

அவர் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், அதாவது மே 24-ம் தேதி, எனக்கு தொலைபேசியில் ஓர் அழைப்பு வந்தது. அந்த அழைப்பில், என் உடல்நலம் உட்பட பல்வேறு கேள்விகளை அக்குரல் என்னிடம் கேட்டது. அந்தக் குரல் பாலனுடையதுதான். தன் உடலின் கீழ்ப்பகுதி செயலிழந்திருந்தாலும், எப்பவுமே அடுத்தவர்களின் நலனை விசாரிப்பதில் அவர் தனித்துவமானவர். உரையாடலின் போது, தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பாலன் கூறினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், ஜூன் 24-ம் தேதி நடக்கவிருக்கும் அவரது நீதிமன்ற வழக்கில், அவர் அதிக அக்கறைக் கொண்டிருந்தார்.

“கவலைப்படாதே பாலன், நாம் அதை எதிர்த்து போராடுவோம், நீதிமன்றத்திற்கு நான் வருவேன்,” என்று அந்த உரையாடலின் போது நான் உறுதி அளித்தேன். நீதிமன்றத்தில் சந்திப்போம் என்றதோடு, எங்களின் அன்றைய உரையாடல் முடிவுற்றது. பாலனின் இறுதிச் சடங்கில், அவரது இரு சகோதரிகளும் சோகமாய் அழுதபோது பாலனின் அன்றைய தொலைபேசி அழைப்பை எண்ணினேன். அவரது வாழ்க்கையை நினைவுக்கூர்ந்தேன். அவரது ஆசை இன்னும் ஈரேடவில்லை, அதேப்போல் நம் நாட்டின் ஆதரவு முறைமையும்.

வாழ்க்கை சூழல்

நாற்பது வயதாகும் பாலன் பெருமாள், ஆகஸ்டு 28, 1979-ல் பிறந்தார். தனது 20-வது வயதில் திருமணம் செய்துகொண்டார். இளம் வயதில் திருமணம் செய்துகொண்ட பாலனின் திருமண வாழ்க்கை 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அவரது மனைவி 2001-ல் பாலனை விட்டுப்பிரிந்து சென்றார். அப்போது பாலனுக்கு ஓர் ஆண் மகன் இருந்தான்.

கடந்த 2013-ல், பாலனின் அக்கா தேவியின் கணவர் கடத்தப்பட்டார். இதுவரை அவர் கண்டுப்பிடிக்கப்படவில்லை. இந்நிலையில், அக்காவையும் அவரது பிள்ளைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு பாலனுக்கு வந்தது. அதுமட்டுமின்றி, கணவரை இழந்த பாலனின் இன்னுமொரு அக்காவும் அவரது மூன்று பிள்ளைகளும்கூட பாலனிடம் தஞ்சம் புகுந்தனர்.

அவர்கள் அனைவரும், 2005-ல், பேங்க் சிம்பானான் நேசினல் (பி.எஸ்.என்.) வங்கியில் ரிம 115,000 கடன் பெற்று, எண் 6323, ஜாலான் 5/10 தாமான் சிரம்பான் ஜெயா, சிரம்பான் எனும் முகவரியில் பாலன் வாங்கிய வீட்டில் வசித்து வந்தனர்.

அவர் வாழ்ந்த இந்த வீட்டைக் காப்பாற்றும் முயற்சியில் களமிறங்கிய வேளையில், கொஞ்சம் பின்னோக்கி பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு விபத்து எல்லாவற்றையும் திருப்பிப் போட்டது

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பாலனுக்குத் துயரமான அச்சம்பவம் நிகழ்ந்தது. 2015, ஜூன் 22-ல், வேலை செய்யும் இடத்தில், ஓர் இரும்புத் துண்டின் மீது விழுந்ததால், பாலனுக்கு இடுப்புப் பகுதி, முதுகெலும்பில் பெரும் காயம் ஏற்பட்டது. அதனால், அவர் உடலின் கீழ் பகுதி செயலிழந்தது. அவ்விபத்தின் போது சுமார் 9 மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மரணத்தை வென்று வீடு திரும்பிய பாலன் முடங்கிப் போனார், சக்கர நாற்காலியில் தனது வாழ்க்கையைப் பயணிக்க தொடங்கினார். பின்னர், சிரம்பான் சமூகநல இலாகாவின் மூலம் மாற்றுத்திறனாளி அட்டையைப் பெற்றார்.

இரு சகோதரிகளுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் அரணாக விளங்கிய பாலன் திடீரென செயலிழந்து போனது, அக்குடும்பத்திற்குப் பெரும் துயரமாய் ஆனது. இந்நிலையில்தான், அக்குடும்பத்திற்கு மற்றொரு பேரிடி விழுந்தது. பி.எஸ்.என். வங்கியும் அதன் அரசு தொடர்பு நிறுவனமும் இணைந்து, பாலனின் வீட்டை ஏலத்தில் விடும் நடவடிக்கையில் இறங்கின. இது அக்குடும்பத்திற்கு மற்றொரு பெரும் பாதிப்பாக எழுந்தது. அச்சமயம்தான், பி.எஸ்.எம். பாலனின் வீட்டுப்பிரச்சனையில் கைகொடுக்கக் களமிறங்கியது.

பிஎஸ்என் வீட்டு காப்புறுதி நாடகம்

மருத்துவமனையில் இருந்தபோது, வீட்டுக் கடனுக்கான தவணைப் பணத்தைச் சில மாதங்கள் கட்டத் தவறிவிட்டதாகக் கூறி, அக்டோபர் 22, 2015 –ல், பிஎஸ்என் வங்கி, பாலனுக்கு நோட்டிஸ் ஒன்றை அனுப்பியது. ஆனால், பாலன் தவணைப் பணத்தை, 2015, ஜூன் 11-ம் தேதிவரை, அதாவது, விபத்துக்குள்ளாவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் வரை  செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டை வாங்கியதிலிருந்து சுமார் 12 ஆண்டுகள் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் வங்கிக் கடனை முறையாகச் செலுத்தி வந்த நிலையில், விபத்தின் காரணமாக, மருத்துவமனையில் இருந்த காலக்கட்டத்தில், செலுத்த இயலாமல் போனது. இந்நிலையில், பாலனின் சகோதரி பிஎஸ்என் வங்கி அதிகாரி திரு கைருல் என்பவரைச் சந்தித்து, பாலனின் நிலையை எடுத்து சொல்லியதோடு, எங்களுக்கு வாழ்வாதாரமே பாலனின் வருமானம்தான். தற்போதைய நிலையில், பாலன் உடல்நிலை மோசமாக இருப்பதால், பணத்தைச் செலுத்த இயலாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், திரு கைருல், பாலனின் மருத்துவரை நேரில் சந்தித்துள்ளார். மருத்துவரும் பாலனின் நிலையை, அந்த வங்கி அதிகாரியிடம் எடுத்து சொல்லியுள்ளார்.

இந்நிலையில், திரு.கைருல் காப்புறுதி இழப்பீட்டைப் பெறுமாறு அவர்களுக்கு ஆலோசனை கூறியதோடு அதற்காக சில பத்திரங்களையும் கேட்டுள்ளார். எம்.ஆர்.டி.ஏ. எனப்படும் காப்புறுதியில் ஒருவர் கடுமையான நோய்க்கு ஆளானாலோ, அல்லது மரணம் அடைந்தாலோ, அத்திட்டத்தின் கீழ் இவ்வாறு இழப்பீடு பெற இந்தக் காப்புறுதி திட்டம் வழிசெய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அவர்கள் கேட்ட பத்திரங்களை அடுத்த மாதத்தில் பாலனின் சகோதரி, வங்கி அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால், பாலன் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்ததால், அவரின் முழு மருத்துவ அறிக்கையை ஒப்படைக்க முடியவில்லை. மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர்தான், பாலனின் முழு மருத்துவ அறிக்கையை ஒப்படைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், காப்புறுதி நிறுவனத்தினர் பாலனின் மருத்துவ அறிக்கை முழுமையாக இல்லை எனக் கூறி அதனை நிராகரித்தனர். இந்த விடயங்கள் எதுவும் பாலனுக்கும் அவரது சகோதரிகளுக்கும் தெரியாது. இந்நிலையில், 2016, ஜனவரி 6,ம் தேதி, பாலனின் வீட்டை ஏலத்தில் விடும் நோட்டிஸ் அவர்களுக்குக் கிடைத்தது. இது அவர்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. பாலனின் சகோதரிகள் வங்கியில் தங்களின் நிலையை எடுத்து சொல்லி முறையிட்டும், வங்கி அவர்கள் மீது சற்றும் இரக்கம் காட்டாமல் நிராகரித்தது.

பாலனின் வீட்டை அவசர அவசரமாக ஏலத்தில் விடுவதற்கான நோக்கம்தான் என்ன? அதேவேளையில் ஜூன் 2016-ல், பாலன் 2015 ஜுலை முதல் பிப்ரவரி 2016 வரை, 9 மாதங்களாய் வீட்டு தவணையைச் செலுத்தவில்லை என பிஎஸ்என் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. எனவே, பாலன் விபத்துக்குள்ளாவதற்கு முன்புவரை, அதாவது ஜூன் 2015 வரை வங்கி கடனை ஒவ்வொரு மாதமும் முறையாக செலுத்தியுள்ளார் என்பதைத் தெளிவுப்படுத்துகிறது.

அரசாங்கத்தின் தொடர்பு நிறுவனமாய் விளங்கும் பிஎஸ்என், பாலன் குடும்பத்தின் மீது கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்க வேண்டாமா? ஆனால், இரக்கமும் பரிதாபமும் பாலனுக்கும் அவரின் குடும்பத்திற்கும் அன்று அந்நியமானது. அவர்களின் வீடு பிப்ரவரி 16, 2016-ல், சிரம்பான் உயர்நீதி மன்றத்தில் RM 150,000-க்கு ஏலமிடப்பட்டது. மருத்துவமனையில் உடலின் கீழ் பகுதி செயலிழந்து கிடந்த பாலனால், அப்போதைக்கு எதுவும் செய்ய முடியாமல் போனது.

மருத்துவ சிகிச்சைக்கு பின்னர், 2016, மார்ச் 4-ம் நாள், மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பாலன், பி.எஸ்.எம். உதவியை நாடினார். சூழலையும் பிரச்சனையையும் கவனத்தில் கொண்ட பி.எஸ்.எம் தோழர்கள், பாலனுக்கு உதவிட முன் வந்தனர். தொடக்கத்தில் இப்பிரச்சனை தெளிவாக இருப்பதால், மிக எளிதானது என்று நினைத்தோம். தனியார் வங்கிகளைக் காட்டிலும், அரசு தொடர்பு நிறுவனமான பிஎஸ்என் வங்கியோடு இப்பிரச்சனை குறித்து பேசுவதும் கையாளுவது எளிதாக இருக்கும் என நம்பினோம். அதுமட்டுமின்றி, சில தவறான புரிதல்களால் பாலனின் வீடு ஏலத்திற்கு வந்து விட்டது எனக் கருதிய நாங்கள், பாலனின் வீட்டைக் காப்பாற்றிவிடலாம் என நம்பினோம்.

இதற்கிடையில், சிரம்பான் வட்டார பி.எஸ்.எம். செயல்பாட்டாளர் தீனா, பாலனின் நிலையை, அவரது சகோதரிகள் எடுத்து சொல்லியும், வீட்டை அவரச அவசரமாக ஏலம் விட்டதற்கான காரணம் என்னவென்பதை அறிய வங்கி அதிகாரிகளுடன் பல சந்திப்புகளையும் மேற்கொண்டிருந்தார். இதற்கிடையில், பாலன் 120 நாட்களுக்குப் பின்னர், ஜுன் மாதத்தில் மீண்டும் காப்புறுதி இழப்பீடுக்கு மறுவாய்வு விண்ணப்பம் செய்யலாம் என ஏப்ரல் 2016-ல் நடந்த சந்திப்பில், வங்கி தரப்பு கூறியது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இது எம்மாதிரியான நாடகம் என்று புரியவில்லை. வீடு ஏலத்தில் விடப்பட்ட பின்னர், எப்படி காப்புறுதி இழபீடு கோரமுடியும்? வீட்டைக் காப்பாற்ற வேண்டியதுதானே காப்புறுதியின் பங்கு, இது ஒருவகை ஏமாற்று வேலை அல்லவா?

அதனைத் தொடர்ந்து, எந்தவொரு தீர்வும் கிடைக்காத பட்சத்தில், 2016 மே 10-ம் நாள், கோலாலம்பூர் ஜாலான் அம்பாங்கிலுள்ள பிஎஸ்என் தலைமையகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டத்தில் நாங்கள் இறங்கினோம். அதன் தலைமை செயல்முறை அதிகாரி திரு அடினான் பின் மனிங்கிடம் மகஜர் கொடுக்க முனைந்தோம். அந்த மகஜரை நிறுவனத்தின் நலன் பிரிவு துணை அதிகாரி திரு அரிடா அரிஃப்பின் பெற்றுக் கொண்டார். பிஎஸ்என் வங்கியின் தலைமையகத்தில் நடந்த சந்திப்பில், வங்கியின் அதிகாரிகள் கூட பாலனின் வீடு ஏலம் போனதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். மேலும், அவர்கள் பாலனின் வீடு தொடர்பிலான அடுத்தக்கட்ட செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்தி வைப்பதாகக் கூறினார்கள். அதேவேளையில், இது ஏதோவொரு சின்ன, தவறான புரிதலில் நாங்கள் செய்த பெரும் தவறு என்றும் ஒப்புக் கொண்டனர்.  இப்பிரச்சனையைத் தீர்க்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர்.

அதன் பின்னர், பிஎஸ்என் எங்களைப் புறக்கணிக்க தொடங்கியது. எங்களின் தொலைபேசி அழைப்பையும் மின் அஞ்சலையும் புறக்கணித்தது. பதில் கொடுக்க மறுத்தது. இது எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜூன் 8, 2016-ல், சிரம்பான் பிஎஸ்என் வங்கியிடமிருந்து ஒரு கடிதம் பெறப்பட்டது. அதில் எந்தவொரு காரணத்தையும் உங்களுக்குத் தெரிவிக்காமல், நாங்கள் வீட்டை ஏலத்தில் விடும் நடவடிக்கை மேற்கொள்வோம் என அதில் கூறப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து நாங்கள் வேறு விதமாய் இப்பிரச்சனையைக் கையாள முனைந்தோம். அனைத்து பிஎஸ்என் மேலாளர்களுக்கும் இப்பிரச்சனை குறித்து தனித் தனி கடிதம் அனுப்பினோம். அவர்களில் யாராவது ஒருவர் பாலனின் சூழலை புரிந்துகொண்டு, இப்பிரச்சனையில் கைக்கொடுப்பார்கள் எனும் எண்ணத்தோடு, அக்கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்களுள் ஒருவர் மட்டும், தாம் அப்பதவியைத் துறந்து விட்டதாகக் கடிதம் அனுப்பியிருந்தார். மற்றவர்கள் அது தொடர்பில் எந்தவொரு பதிலையும் கொடுக்கவில்லை. இந்நிலையில், பாலன் வீட்டை எதுவும் செய்யக்கூடாது என தடையுத்தரவைச் (கேவியட்) சமர்ப்பித்தோம்.

ஒருவர் எந்தவொரு வங்கியின் மீதும் அதிருப்தியோ அல்லது புகாரோ கொண்டிருந்தால், அவர் அதனைப் பேங்க் நெகாராவிடம் முறையிடலாம். நாட்டில் இயங்கும் அனைத்து வங்கிகளுக்கும், பேங்க் நெகாரா மையக் கண்காணிப்பாளராகச் செயல்படுவதால், எங்களின் அடுத்த இலக்கு, இப்பிரச்னையைப் பேங்க் நெகாராவின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக அமைந்தது.

பேங்க் நெகாரா – எங்களுக்கு அதிகாரம் இல்லை

2016 மே மாதத் தொடக்கத்தில், பேங்க் நெகாராவின் கவர்னருக்கு நாங்கள் ஒரு கடிதம் அனுப்பினோம். அக்கடிதத்தில், பாலனின் வீட்டுப் பிரச்சனை தொடர்பில் ஒரு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்; இதில் நிலவியுள்ள பல்வேறு முறண்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தோம். நாங்கள் பாலனின் வீட்டைக் காப்பாற்ற, பல்வேறு முயற்சிகளில் இறங்கியிருந்த நிலையிலும், பிஎஸ்என் வீட்டை ஏலத்தில் விட தயாராகிக் கொண்டிருந்தது. இந்நிலையில், 2016 ஜூன் 15-ம் நாள் பேங்க் நெகாராவிற்கு மற்றொரு கடிதம் அனுப்பினோம். ஆனால், அதனால் எந்தவொரு பலனும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களின் தொடர் கடிதங்களுக்கு எந்தவொரு பதிலும் கிடைக்காத பட்சத்தில், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த பாலனோடு, பேங்க் நெகாரா கட்டடத்தின் முன், கவனயீர்ப்பு போராட்டத்தில் களமிறங்குவது என நாங்கள் முடிவெடுத்தோம். கடந்தாண்டு, அக்டோபர் 26-ல், பேங்க் நெகாரா முன் கவனயீர்ப்பு போராட்டத்தில் இறங்கிய நாங்கள், அதேநாளில் பேங்க் நெகாராவின் சில உயர்நிலை அதிகாரிகளுடன் சந்திப்புக் கூட்டத்தையும் நடத்தினோம். அச்சந்திப்பில் மனிதாபிமானமும் பரிவும் கொண்ட அதிகாரிகள் சிலர் பாலனின் வீட்டுப் பிரச்சனையில் எங்கோ, ஒரு பெரும் தவறு நிகழ்ந்திருப்பதாகக் குறிப்பிட்டு, பிஎஸ்என் வங்கியோடு சந்திப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதாகக் கூறினர். பேங்க் நெகாராவின் இச்செயல் எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இரண்டு மாதங்களுக்குப் பின்னர், பேங்க் நெகாரா எங்களை மூன்று முறை சந்திப்புக் கூட்டத்திற்கு அழைத்தது. ஆனால், பிஎஸ்என் தரப்பில் யாரும் வர முடியாத காரணத்தால், ஒவ்வொரு முறையும் அச்சந்திப்புக் கூட்டம் இரத்தானது. அந்த வங்கியிலிருந்து ஒரு செயல்முறை அதிகாரியைக் கூட கூட்டத்திற்குத் தலைமையேற்க அழைத்து வர முடியவில்லை என, ஒருமுறை அவர்களின் தரப்பு காரணம் காட்டியது. இம்மாதிரியான, அறிவுக்கு ஒவ்வாத காரணங்களால் நாங்கள் பொறுமை இழந்தோம். நாட்டில் பெரும் அதிகாரம் வாய்ந்த பேங்க் நெகாராவினால், பிஎஸ்என் வங்கிக்கு எதிராக எதுவும் செய்ய முடியாமல் போனதை அன்று நாங்கள் உணர்ந்தோம்.

வீடற்றப் பிரச்னையை எழுப்ப வேண்டாம் – சுஹாகாம்

எந்தவொரு தீர்வும் கிடைக்காதப் பட்சத்தில், இப்பிரச்சனையை நாங்கள் மனித உரிமை அமைப்பான சுஹாகாம் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். இவ்விவகாரத்தில் பாலன் பிஎஸ்என் வங்கியால் பாதிக்கப்பட்டவர் என்பதை நாங்கள் நம்பினோம். அந்நிலையில், சுஹாகாமிடம், 2016, செப்டம்பர் 9-ம் தேதி, மகஜர் ஒன்றைச் சமர்ப்பித்தோம். அதில், ஒரு மாற்றுத்திறனாளியின் குடும்பம், வீட்டற்றவர்களாக உருவாவதற்கு முன்னர், அவர்களைக் காப்பாற்றுங்கள் எனத் தலைப்பிட்டிருந்தோம்.

“அனைவருக்கும் உணவு, உடை, வீட்டு வசதி, மருத்துவப் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் உட்பட நல்வாழ்வுக்கான வாழ்வியல் சூழல்”… இது, சுஹாகாம்-இன் மனித உரிமைகள் வரையறையில், 25-வது பிரிவில் கூறப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டி, பாலனின் உடல் நிலை மற்றும் வேலையின்மை ஆகியவற்றைக் சுட்டிக்காட்டி, அவர்களின் கவனத்திற்கு இப்பிரச்னையைக் கொண்டு சென்றோம்.

அதனைத் தொடர்ந்து, 2017, மார்ச் மாதத்தில், சுஹாகாமிடமிருந்து நாங்கள் ஓர் அழைப்பைப் பெற்றோம். அனைத்து தரப்பினரிடையே, ஒரு சுமூகமான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக சுஹாகாம் கூறியது. பாலனின் வீட்டை வாங்கிய புதிய உரிமையாளர், பாலனையும் அவரது குடும்பத்தையும் அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் இறங்கியிருந்த வேளையில், சுஹாகாமின் இந்த அழைப்பு எங்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையை அளித்தது.

சுஹாகாம் தலைவர், இரண்டு முறை சுமூகமான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில், 2017, மே 7-ம் நாள் நடைபெற்ற இரண்டாவது சந்திப்புக் கூட்டத்தின் போது, இரு தரப்பும் சமரசம் காண முன்வராததால், அதிருப்த்தியடைந்த சுஹாகாம் தலைவர் அக்கூட்டத்திலிருந்து திடிரென வெளிநடப்பு செய்தார்.

அதுமட்டுமின்றி, ஒருவரை வீடற்றவராய் உருவாக்குவது குறித்து நான் செய்த விவாதத்தால் கோபம் அடைந்த சுஹாகாம் தலைவர், என்னிடம் அதனை வெளிப்படுத்தினார். அவர் எங்களிடம் வீட்டற்றவர் நிலை குறித்து பேச வேண்டாம் என விவரித்தார். இந்நிலையில், உண்மையான பிரச்சனையிலிருந்து சுஹாகாம் தடம் புரளுவதை உணர முடிந்தது. அதுவே அவர்களின் வழக்கமான பெரும் தவறாக இருந்தது.

வழக்கமாய் இது போன்ற பிரச்சனைகளில், ஒரு தரப்பு அத்தவற்றை இழைத்திருக்கும், ஒரு தரப்பு பலியாகியிருக்கும். ஆனால், பாலனின் வீட்டு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களாய் பாலனும் பாலனின் வீட்டை வாங்கியவரும் இருக்கும் சுழலில், பிஎஸ்என் தவறுசெய்த இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலன் தனது வீட்டுக்கான காப்புறுதியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாத நிலையில், அவ்வீட்டை ஏலத்தில் விட்டிருக்கும் பிஎஸ்என் தரப்பைச் சுஹாகாம் கண்டுக்கொள்ளாமல்; பாலனையும் பாலனின் வீட்டை வாங்கியவரையும் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து சமரசம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டது.

புதிய உரிமையாளர் அவ்வீடு தமக்கு வேண்டும் எனவும், தன் தாயார் தங்குவதற்கு அவ்வீடு அவசியமென்றும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். அதேசமயம், அவ்வீட்டோடு பாலனுக்கு நீண்ட உறவும் நினைவுகளும் உண்டு. அது அவர் வாங்கிய முதல் வீடு, பல ஆண்டுகள் குடும்பத்தோடு வசித்தும் வருகிறார் என்பது பாலன் தரப்பு விவாதமாக இருந்தது.

நீதிமன்ற வழக்கு

பாலனின் வீட்டுப் பிரச்னையில், நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தோம். அதேவேளை, சமூகச் செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான கார்த்திகேசு, நீதிமன்றத்தில் நாங்கள் இதற்கு முன்னர் பாலனின் வீட்டிற்கு எதிராக போட்ட ‘கேவியட்’ தடையுத்தரவை இரத்து செய்ய வேண்டுமென பிஎஸ்என் தொடுத்த வழக்கிற்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார். கார்த்திகேசு ஹிண்ட்ராஃப் வழக்கறிஞர், நெகிரி செம்பிலான வழக்கறிஞர் மன்றத்தில், மனித உரிமை பிரிவின் செயலவை உறுப்பினர்.

ஜூன் 2016-ல், நாங்கள் போட்ட தடையுத்தரவு கோரிக்கையை இரத்து செய்ய வேண்டுமென, செப்டம்பர் 2016-ல், பிஎஸ்என் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. பிப்ரவரி 2017-ல், வெளியான அவ்வழக்கின் தீர்ப்பு, பிஎஸ்என் பிஎஸ்என்-க்கு சாதகமாக அமையவில்லை. தடையுத்தரவை இரத்து செய்வதில் அது தோல்வியுற்றது. இந்நிலையில், மே 30, 2017-ல், பாலனின் வீட்டை ஏலத்தில் வாங்கிய உரிமையாளர் தடையுத்தரவை இரத்து செய்ய வேண்டுமென நீதிமன்றத்தில் செய்திருந்த விண்ணப்பத்திற்கு, ஆகஸ்டு 11, 2017-ல் அவருக்குச் சாதகமாக தீர்ப்பு வெளியானது.

இந்நிலையில், பிஎஸ்என் வங்கியும் பாலனும் மறுபரிசீலனை மனுவைத் தாக்கல் செய்தனர். பின்னர், பிஎஸ்என் தனது மறுபரிசீலனை மனுவை வாப்பஸ் பெற்றுக் கொண்டதன் விளைவாக, இவ்விவகாரத்தில் பாலனுக்கும் வீட்டின் புதிய உரிமையாளருக்கும், நீதிமன்றத்தில் நேரடி மோதல் ஏற்பட்டது.

இதற்கிடையில், 2018 மே மாதம், பிஎஸ்என் மற்றும் பாலனின் வீட்டை வாங்கியவருக்கு எதிராக, வழக்கறிஞர் கார்த்திகேசு வழக்கு ஒன்றைப் பதிவு செய்தார். ஆனால், பதிவு செய்யப்பட்ட அவ்வழக்கு பலமுறை ஒத்தி வைக்கப்பட்டதோடு, 27 செப்டம்பர், 2018-ல் சமரசம் செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.

பின்னர், சமரசப் பேச்சுவார்த்தைத் தொடங்கியது. பாலனின் வீட்டை வாங்கியவர் வீட்டை விட்டுக்கொடுக்க பெரும் தொகையை எதிர்பார்த்தார். அத்தொகை வீட்டின் விலையைக் காட்டிலும் அதிகமாய் இருந்தது. பிஎஸ்என் மிகவும் குறைந்த தொகையைச் செலுத்த இணக்கம் தெரிவித்தது. பாலனுக்கு அவ்வீடு வேண்டும் என்றால், அவர் அவ்வளவு தொகைக்கு என்ன செய்வார்? அவரிடம் அவ்வளவு பெரியத் தொகை இல்லை.

பாலன் தற்போது நம்மோடு இல்லை, அவர் இறந்துவிட்டார். முந்தைய அனுபவத்தில் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், எம்.ஆர்.டி.ஏ. காப்புறுதி நிறுவனம் அனைத்து செலவையும் ஏற்றும் கொள்ளும். அதேவேளையில், பாலனின் சகோதரி தொடர்ந்து அவ்வீட்டில் இருப்பதில் எந்தத் தடையும் இல்லை. இவ்வழக்கு விசாரணை, எதிர்வரும் ஜூன் 24-ம் தேதி நடைபெறவுள்ளது. இம்முறை நீதிமன்றத்திற்குப் பாலன் வரமாட்டார். பாலன் இல்லாதது அடுத்தத் தரப்பினருக்குச் சந்தோசத்தைக் கொடுக்குமா? பாலனின் ஆத்மா அடுத்து நடக்கவிருக்கும் நகர்வால் அமைதிக் கொள்ளுமா? தெரியாது.

ஆதரவு (சமூக) அமைப்புகளின் தோல்வி

பாலன் வேலை இடத்தில் விபத்துக்குள்ளானார். எம்.ஆர்.டி.ஏ. காப்புறுதி பாலனுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டது. அரசு தொடர்பு வங்கியான பிஎஸ்என் தனியார் வங்கிகளைக் காட்டிலும், மிக மோசமாக, மனிதாபிமானமும் இரக்கமும் இல்லாமல் நடந்துக் கொள்கிறது. பெரு நிறுவனங்களின் சமூகக் கடப்பாடு என்னவாயிற்று? இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் சுஹாகாமிற்கு ஆர்வம் இல்லை. தற்போது நீதிமன்றம் தன் முடிவைச் சொல்லட்டும், நிறைவேறாதக் கனவோடு மறைந்துப் போன பாலனின் நீதிக்கு.

பாலனின் உடல் எரியூட்டத் தயாராக இருந்த போது அங்கு பெரும் மழை பெய்தது. அச்சமயம், பாலனின் 19 வயது மகன் அங்குத் திடீரென வந்தது, அந்தச் சோகமான நேரத்தில் புதியதொரு விடியலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. 18 ஆண்டுகளாகப் பார்க்காத தந்தையை, அம்மகன் கண்ட போது, அவர் இவ்வுலகில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வது சற்று வலி மிக்கதே.

பாலனின் மரணச் செய்தியை, இணையம் வாயிலாக கண்ணுற்ற பாலனின் உறவினர் ஒருவர், தீனாவைத் தொடர்புகொண்டு, இறுதிச் சடங்கை சற்று ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். பாலனின் மகன் இறுதி சடங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டது என எங்களுக்குத் தெரியவந்தது. நீண்டகாலம் தடைப்பட்டுப் போன அவர்களின் சந்திப்பாக அமைந்த அதுவே, அவர்களின் இறுதி சந்திப்பாகவும் ஆனது.

பாலனின் குடும்பத்திற்கு அந்த வீடு கிடைக்குமா? இது இன்னமும் தீர்வு கிடைக்காத கேள்வியாகவே தொடர்கிறது. பாலனின் இறுதி மூச்சும், வீட்டுக்கான அவரின் போராட்டமும், அந்த வீட்டில் தான் முடிவுற்றது. எனவே, பாலனின் ஆத்மா அந்த வீட்டில் தான் உலாவிக் கொண்டிருக்கும் எனப் பாலனின் சகோதரி நம்புகிறார்.

பாலனின் வீட்டுப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காத நிலையில், பாலன் இவ்வுலகை விட்டுச் சென்றுவிட்டார். ஆனால், நாம் செய்து முடிப்பதற்கான பெரும் கடமையை அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழாக்கம் :- சிவா லெனின்