வாழ்க்கை என்பது சிலருக்குப் போராட்டமாகவும் சிலருக்கு பூந்தோட்டமாகவும் அமையும். பூந்தோட்டமாக அமைந்தாலும் சரி போராட்டமாக அமைந்தாலும் சரி யாரும் கவலையோ பயமோ கொள்ள தேவை இல்லை. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும்.
தேர்வில் தோல்வி அடைந்து விட்டோமே, நினைத்த படிப்புக்கு இடம் கிடைக்கவில்லையே என்று மாணவர்கள் கவலைப்படக்கூடாது. தொழிலில் தோற்று விட்டோமே என்று தொழில் செய்வோர் கவலை கொள்ளத் தேவையில்லை. தவறான முடிவுகளையும் எடுக்கத் தேவை இல்லை. தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி உறுதி. யானைக்கு பலம் தும்பிக்கையில் மனிதனுக்குப் பலம் தன்னம்பிக்கையில் என்பார்கள். “தோல்வி உன்னைத் துரத்துகிறது என்றால் வெற்றி உன்னை நெருங்குகிறது” என்று பொருள் என்பார் பல வெற்றிகளை குவித்த மாவீரன் நெப்போலியன்.
‘தோல்வி என்பது வெற்றிப் பயணத்திற்கு வழிகாட்டும் நெடுஞ்சாலை’ என்பார் கவிஞர் கீட்சு. ஏழ்மையில் வாடிய ஹென்றிபோர்டு என்பவர் அமெரிக்க வீதிகளில் குதிரைகள் பூட்டப்படாத தேரில் பவனி வருவேன் என்று அறிவித்தார். கடினமான ஆராய்ச்சிகளை செய்தார். மோட்டார் வாகனத்தைக் கண்டு பிடித்தார். பெரும் பணக்காரர் ஆனார். பத்திரிகை நிருபர்கள் உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டனர். ரகசியம் ஒன்றும் இல்லை. எனது தன்னம்பிக்கை, முயற்சி, கடின உழைப்பு இவையே காரணம் என்றார். தோல்விகள் பலவற்றை சந்தித்த பலர் தன்னம்பிக்கையாய் வெற்றி பெற்ற வரலாறுகள் பல உண்டு.
அயர்லாந்து மன்னராக இருந்த ராபர்ட்புரூஸ் இங்கிலாந்தின் மீது படையெடுத்து ஆறுமுறை தோற்றார். கவலையோடு ஒரு குன்றில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு சிலந்திப் பூச்சி ஒரு குன்றில் இருந்து அடுத்த குன்றிற்குத் தாவித்தாவி வலை பின்னியது. ஆறு முறை அதனால் முடியவில்லை. ஏழாவது முறை வென்றது. இதைப் பார்த்த ராபர்ட் புரூஸ் சிலந்தியின் தன்னம்பிக்கையைகண்டு வியந்தார். தானும் ஏழாவது தடவை இங்கிலாந்தின் மீது படையெடுத்தார். வெற்றி பெற்றார். தோல்வி என்பது நிரந்தரம் அல்ல.
ஆபிரகாம்லிங்கன் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் சிலமுறை தோற்றார். தன்னம்பிக்கையோடு மீண்டும் போட்டியிட்டு அமெரிக்க குடியரசு தலைவர் ஆனார். நிற வேறுபாடுகளை நீக்கி உலகப்புகழ் பெற்றார். விறகு வெட்டியின் மகனாகப் பிறந்த ஆபிரகாம் லிங்கன் வெற்றிக்கு ஏழ்மையோ தோல்வியோ தடை அல்ல என்பதை நிரூபித்தார்.
படிப்பில் மிகவும் மந்தமாக இருந்த தாமஸ் ஆல்வா எடிசன் பிற்காலத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்தார் என்றால் அவரது தன்னம்பிக்கையும் முயற்சியும் செயல் திறமுமே காரணம்.
சிறுவனாக இருந்தபோது ஏழ்மையில் வாடினால் சீர்திருத்தவாதியான எமர்சன், தாயையும் தந்தையையும் சகோதரர் சிலரையும் இழந்தார். ஆயினும் தன்னம்பிக்கையோடு படித்தார். உலகப் பொருட்கள் பலவற்றை ஆராய்ந்து நூல்கள் பலவற்றை எழுதினார். புகழ் பெற்றார். தமது அனுபவத்தை சில வரிகளில் இவ்வாறு தருகிறார். “தன்னம்பிக்கை இல்லாதவன் காலால் நடப்பவனைப் போல் அல்லாமல் தலையால் நடப்பவனைப் போன்றவன்” என்றார். தனது வெற்றிக்கு காரணம் தன்னம்பிக்கையே என்றார்.
வாழ்வது ஒருமுறைதான் அதில் எழுத்தராக இருந்து காலத்தை வீணாக கழிக்க மாட்டேன் என்றுதான் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து விலகி முழு நேர எழுத்தாளர் ஆனார் பெர்னாட்ஷா. பத்திரிகை அலுவலகங்களுக்கும் பதிப்பகங்களுக்கும் ஏறி ஏறி இறங்கினார். தொடக்கத்தில் யாரும் அவரது நூல்களை வெளியிட முன்வரவில்லை. கடின முயற்சிக்குப் பிறகு அவரது நூல்களை வெளியிட முன்வந்தனர். பல நாடகங்களை எழுதிப் புகழ் பெற்றார்.
இங்கிலாந்தின் நாடக அரங்குகளில் திரைச்சீலைகளை ஏற்றி இறக்கும் வேலையிலும் நாடகம் காண வருபவர்களின் குதிரைகளைப் பராமரிக்கும் வேலையையும் செய்து வந்த ஷேக்ஸ்பியர் உலகப் புகழ் பெற்ற நாடகங்களை எழுதினார். இன்றும் புகழுடன் நிற்கிறார். மனிதன் உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் செயல்பட்டால் வெற்றி உறுதி’ என்கிறார் ஷேக்ஸ்பியர்.
மகாத்மா காந்தி இளைஞராக இருந்தபோது லண்டனில் ‘பார் அட்லா’ படித்தார். இந்தியா வந்தபிறகு முதல் வழக்கை மும்பையில் நடத்தினார். நீதிமன்றத்தில் பேசவே முடியாமல் தவித்தார். இடையிலேயே வெளியேறினார். ஆனாலும் தென்ஆப்பிரிக்கா சென்றார். அங்கே இன வேறுபாட்டை நீக்கப் பல்வேறு போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தினார். இந்தியா திரும்பியதும் அகிம்சை வழியில் இந்திய விடுதலைப் போராட்டத்தை நடத்தினார். ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கும் தடியடிகளுக்கும் சிறைவாசத்திற்கும் அஞ்சாமல் தன்னம்பிக்கையோடு செயல்பட்டார். இந்தியாவில் விடுதலை மலர்ந்தது.
ஏழ்மையில் பிறந்து ஏழ்மையில் வாழ்ந்து பள்ளிப் படிப்பையே முடிக்காமல் விட்ட காமராசர் விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்றார். முதல்-அமைச்சராக வந்தார். படிக்காத மேதை, கர்ம வீரர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ் பெற்றார்.
தமிழகத்தின் முன்னேற்றத்திற்குப் பல சிறந்த திட்டங்களை செயல்படுத்தினார். தன்னம்பிக்கையில் உயர்ந்தார். தன்னம்பிக்கை இருந்தால் வயதோ, ஏழ்மையோ தடையாக இருக்காது.
வயதான காலத்தில்தான் மில்டன் சொர்க்கத்தின் இறப்பு, சொர்க்கத்தின் மீட்பு போன்ற காவியங்களைப் படைத்தார். நோய் வாய்ப்பட்டவர்களும் உடல்குறைபாடு உடையவர்களும் தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி பெற முடியும்.
இரட்டைப் புலவர்கள் என்று அழைக்கப்படும் கண் தெரியாதவர் ஒருவரும் நடக்க இயலாதவர் ஒருவரும் பல தமிழ் பாடல்களை பாடினர். இளம் வயதில் மாவீரன் அலெக்சாண்டர் பல நாடுகளை வென்றார். இளம் வயதில் கரிகாலன் கல்லணை கட்டி சோழநாட்டை வளம் கொழிக்கச் செய்தார். இளம் வயதில் அரியனை ஏறிய தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் எதிர்த்த மன்னர்களை வென்றான்.
கணவனை இழந்த ராணிமங்கம்மாள் மதுரை அரசியானார். பதினெட்டு ஆண்டுகள் நல்லாட்சி செய்தார். அறச்செயல்கள் பல புரிந்தார். அவர் போட்ட சாலைகள் ‘மங்கம்மா சாலை’ என்று தமிழகத்தில் பல இடங்களில் இன்றும் உள்ளது. அவரால் கட்டப்பட்ட சத்திரங்கள் பலவும் இன்று உள்ளன. மதுரையில் உள்ள மங்கம்மா சத்திரம் புகழ் பெற்றது. அவுரங்கசீப்பின் படைத் தலைவன் படையெடுத்து வந்தபோதும் அஞ்சாமல் நின்றவர் ராணி மங்கம்மாள்.
அறிவியல் வளராத காலத்தில் கப்பல் படையை அமைத்துப் பல நாடுகளை வென்றான் ராஜேந்திர சோழன். கங்கை வரை படையெடுத்துச் சென்று பல மன்னர்களை வென்றான். ‘கங்கை கொண்ட சோழன்’ என்று புகழ் கொண்டான். தமிழரை பழித்த ஆரிய அரசர்களை வென்று கண்ணகிக்கு இமயத்தில் இருந்து சிலை செய்ய கல்லெடுத்து வந்தான் சேரன் செங்குட்டுவன்.
இவ்வாறு தன்னம்பிக்கையோடு செயல்பட்டு அரிய சாதனைகள் செய்து புகழ் பெற்றவர் பலர்.
மாணவர்களும் சரி பிற தொழில் செய்வோரும் சரி யாராக இருந்தாலும் தன்னம்பிக்கை இருந்தால் தலை நிமிர்ந்து வாழலாம்.
பேராசிரியர் அ.பாஸ்கரபால்பாண்டியன், திருச்செந்தூர்.