கருத்து | 1987, ஜூலை 31-ம் நாள் நான் பிறந்தேன். 23 வயது நிரம்பிய ஓர் இளம் தாய், என்னை இவ்வுலகிற்கு மிகவும் அன்புடன் வரவேற்றார், என் எதிர்காலம் மீது பல கனவுகளை அவர் கொண்டிருந்தார்.
தாயின் அரவணைப்பிலிருந்து சற்று மாற்றம், ஒரு லாரி ஓட்டுநராக, நேரம் காலம் அறியாமல், வெயில் மழை என்று பாராமல், கடினமாக உழைப்பவர், என் அப்பா, அவர் பெரும்பாலும் வீட்டில் அதிகம் இருந்ததில்லை. ஆனால், எங்களுக்கு நாள்தோறும் உணவு கொடுக்க அவர் தவறியதில்லை.
என் அம்மா ஓர் இல்லத்தரசி, எங்கள் குடும்பத்திற்கு அனைத்தும் அவர்தான்.
கிறித்துவ மதத்தில் ஆழமான பற்று கொண்ட குடும்பத்தில் நான் வளர்ந்தேன், ஒவ்வொரு ஞாயிறும், தவறாமல் தேவாலயம் செல்வது வழக்கமாக இருந்தது. உடன்பிறந்தோர் ஆறு பேரும், கிறித்துவ சமூகத்தின் அரவணைப்பிலும் ஆதரவிலும் வாழ்ந்தோம்.
குடும்பத்தில், அவ்வப்போது சில கருத்து வேறுபாடுகள் வந்தாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஒற்றுமையுடனேயே நாங்கள் வாழ்ந்து வந்தோம்.
நடந்தது என்ன?
‘2020 தூரநோக்குச் சிந்தனை’ எங்களால் மறக்க முடியாத ஒன்று, பள்ளி நாட்களில் எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட ஒன்று.
இளவயதில், நான் அடிக்கடி கேட்டுக்கொண்டது உண்டு, 2020-ல் என் வாழ்க்கை எப்படி இருக்கும்? நான் என்னவாக இருப்பேன்?
9 அல்லது 10 வயதிருக்கும் போது, விமானியாக வேண்டும் என நான் கனவு கண்டேன். ஏன் அந்த ஆசை ஏற்பட்டது என்று எனக்கு தெரியாது.
காலம் முன் நோக்கி நகர்ந்தது – 20 வருடங்களுக்குப் பின் – இப்போது இந்தக் கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கும் எனக்கு வயது 31, 51.48 கிராம் ஹெரோயின் கடத்தியக் குற்றத்திற்காக, நான் இன்று சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் தூக்குத் தண்டனைக்குக் காத்திருக்கும் ஒரு கைதி.
2017, மே 2-ம் தேதி, எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது, பிப்ரவரி 2018-ல் தண்டனையைக் குறைக்கக் கோரி செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
நவம்பர் 3, 2018 அன்று, பாதிரியார் தான் பூன் தெக் சிறையில் எனக்கு ஞானஸ்நானம் செய்துவைத்தார். எனக்கு ஒரு புதிய கிறிஸ்துவப் பெயர் வழங்கப்பட்டது – பால் சிலாஸ்.
நான் பாக்கியவானாக உணர்ந்தேன், எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எனது மரண தண்டனையை எளிதாக்கும் துணை அரசு வழக்கறிஞரிடமிருந்து ஒத்துழைப்பு சான்றிதழைப் பெற எனக்கு உதவுமாறு கடவுளிடம் நான் பிரார்த்தனை செய்தேன்.
சிறைச்சாலையில் ஒரு நடைமுறை உள்ளது, நீதிமன்றம், அரசு தலைமை வழக்கறிஞர் அல்லது வழக்கறிஞருக்கு எழுத விரும்பினால், நாங்கள் படிவம் B-யைப் பெற்றிருக்க வேண்டும், மேலும், அதில் சம்பந்தப்பட்டவருக்கு எழுத விரும்புவதற்கான காரணங்களையும் நாங்கள் குறிப்பிட வேண்டும்.
அதன்பிறகு, பொறுப்பதிகாரி (ஓசி) அல்லது சிறை அதிகாரிகளின் ஒப்புதலுக்காக நாங்கள் சில நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். எனவே, நான் அட்டர்னி ஜெனரலுக்கும் நீதிமன்றத்துக்கும் எழுத விரும்புகிறேன் என்பது சிறைச்சாலைக்கும் அதன் அதிகாரிகளுக்கும் தெரியும்.
ஆனால் நான் எதையும் செய்வதற்கு முன்னமே, மே 17 காலை, “மரணமும் அவரது தூதரும்” எனக்கு முன் தோன்றினார்.
செல் வாசலில், சிறை அதிகாரி தட்டி எழுப்பியது என்னை ஆச்சரியப்படுத்தியது. சுமார் ஏழு அதிகாரிகள் எனது செல்லின் முன் நின்றிருந்தனர்.
அவர்களைப் பார்த்தவுடன், அவர்கள் ஏன் அங்கே இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. ஒரு நபருக்கு மரண தண்டனையைச் செயல்படுத்த எண்ணும் போதெல்லாம், அவர்கள் அப்படிதான் கூடுவார்கள், அது அவர்களின் நடைமுறை.
நான் எழுந்து, வாசல் நோக்கி நடந்தேன், எனது மன்னிப்பு கோரிய மனு சிங்கப்பூர் அதிபரால் நிராகரிக்கப்பட்டதாகவும், அடுத்த வெள்ளிக்கிழமை மே 24-ம் தேதியன்று “என் உயிரை எடுத்துவிடுவார்கள்” என்றும் அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.
மற்ற சிறை அதிகாரிகள் நிமிர்ந்து நின்று, என் எதிர்வினையைப் பார்த்துகொண்டிருந்தனர்.
அப்போது, என் மனதில் பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அந்த நொடியில், என்னுடைய நம்பிக்கை, ஆர்வம், ஆசை, எதிர்பார்ப்பு என அனைத்தும் தொலைந்து போயின. நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன், “இதுதான் முடிவா?”
இதனை எப்படி கையாள்வது என்று நான் என்னைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். இதுவரை, என் குடும்பத்திற்கு நான்தான் ‘முதுகெலும்பு’. ஆனால், என்னுடன் சேர்ந்து, இந்தச் சிரமத்தை எதிர்கொள்ள அவர்களை எவ்வாறு ‘தயார்’ செய்வது? அதன் பிறகு, நாளை நான் இல்லாமல்…. எனக்குத் தெரியவில்லை.
இது இப்போது என் கைகளில் இல்லாததால், என் கனவுகளையும் விருப்பத்தையும் நான் புதைக்க வேண்டியிருந்தது, மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக.
அதன்பிறகு, எனது குடும்பத்தினரைத் தயார்படுத்துவதில் நான் முனைப்பு காட்டினேன், என் உடன்பிறப்புகள் அனைவருக்கும் கடிதம் எழுதினேன், விசாரணைக்குத் தயாராவதில் கவனம் செலுத்தினேன்.
என் குடும்பத்திற்கு நான் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் இந்த நேரத்தில் மிகவும் முக்கியமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் உணர்கிறேன், நான் அதை எவ்வாறு எழுதப் போகிறேன் என்பதைக் கவனமாக தேர்வு செய்ய வேண்டும், ஆனால் வார்த்தைகளையோ அல்லது அவ்வாறு செய்வதற்கானத் திறனையோ என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
வெள்ளிக்கிழமை முழுவதும், நான் ஜெபித்துக்கொண்டே இருந்தேன், என் குடும்பத்தினருடன் பேசத் தயாரானேன். அன்று இரவு நான் தூங்கவில்லை. என் இதயம் இவ்வளவு கனமாக இருந்ததை ஒருபோதும் நான் உணர்ந்ததில்லை, என்னால் கண்களை மூட முடியவில்லை.
அடுத்த நாள், என் குடும்பத்தினர் என்னைப் பார்க்க இங்கு வந்தார்கள். அவர்களின் முகம், அழுது சிவந்த கண்களால் மிகவும் இருட்டாக இருந்தது. அவர்கள் மிகவும் குழப்பத்துடனும், பயத்துடனும், ஏமாற்றத்துடனும் இருக்கிறார்கள் என்று என்னால் நிச்சயம் சொல்ல முடியும்.
அவர்களுக்காக, நான் ‘தைரியமாக’ இருக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். நாங்கள் செய்த முதல் விஷயம், சுமார் 10 நிமிடங்களுக்கு ஜெபம் வாசித்ததுதான். பிரார்த்தனைக்கு நானே தலைமை தாங்கினேன்.
நாங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. முதல் இரண்டு மணிநேரம் மிகவும் கடினமாகவும் கொடூரமாகவும் இருந்தது. அது மிகவும் மெதுவாக கடந்து சென்றது. பின்னர், எங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம் நாங்கள் எங்கள் மௌனத்தை உடைக்க ஆரம்பித்தோம்.
ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு சிறந்தது. நாங்கள் அமைதியடைந்து, எல்லா நினைவுகளையும் ஒன்றாகப் பகிர ஆரம்பித்தோம். நாங்கள் சிரிக்கிறோம், அழுகிறோம், பாடல்களைப் பாடுகிறோம், கடவுளைப் புகழ்கிறோம்.
திங்கள் பொது விடுமுறை என்பதால், எனது வாக்குமூலத்தைத் தாக்கல் செய்ய வழக்கறிஞர்களைப் பிடிப்பது என் குடும்பத்திற்குக் கடினமாக இருந்தது. அது ஒரு நீண்ட வார இறுதி, நாங்கள் தொடர்புகொள்ள முயற்சித்த சில வழக்கறிஞர்கள் வெளிநாடுகளில் இருந்தனர்.
செவ்வாய்க்கிழமை, நான் நீதிமன்றத்தில் என் பிரேரணையைத் தாக்கல் செய்ய விரும்பியபோது, அன்று மாலை, என் குடும்பத்தினர் ஒரு சத்தியப்பிரமாண ஆணையரை நான் சந்திக்க ஏற்பாடு செய்தனர்.
அன்று மாலை இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குப் பறந்து வந்த ஜீனெத், தரையிறங்கியவுடன் உடனடியாக என்னைப் பார்க்க வந்தார். நாங்கள் அவர் தொடர்பான விவரங்களை, திங்கள் கிழமையே சிறையில் ஒப்படைத்திருந்தோம்.
திங்கள் முதல் வியாழன் வரை நாங்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கினோம். ஆவணங்கள் தாமதம், அறை பற்றாக்குறை, நகலெடுப்பதில் சிக்கல் மற்றும் சட்ட ஆவணங்களுக்கான அணுகலில் பிரச்சனை போன்றவை அடங்கும். அவற்றுள் மிகவும் கவலைக்கிடமான விஷயம், சிங்கப்பூர் சிறை தரப்பினர், மலேசிய வழக்கறிஞர்கள் என்னைப் பார்க்க அனுமதிக்கவில்லை.
எனது மரண தண்டனை நிறைவேற்றப்படும் செய்தி வந்ததிலிருந்தே, நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்தேன். முதல் நான்கு நாட்களுக்கு, என்னால் சாப்பிட முடியவில்லை, இரவில் மூன்று மணி நேரத்திற்கும் குறைவாகவேத் தூங்கினேன்.
துரதிர்ஷ்டவசமாக, எங்களால் எந்த வழக்கறிஞரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, வியாழக்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் என்னை நானே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டியிருந்தது.
மே 22, 2019, புதன்கிழமை இரவு, விசாரணைக்குத் தயாராக அதிகாலை 3 மணி வரை, நான் எழுதிகொண்டிருந்தேன்.
என் மலேசிய வழக்கறிஞர், என் சுரேந்திரனைத் தொடர்புகொள்வதற்கான எனது வேண்டுகோள், சரியான காரணமின்றி சாங்கி சிறைச்சாலையால் மறுக்கப்பட்டது. நான் அவரைச் சந்திக்க முடிந்திருந்தால், குறைந்தபட்சம் விசாரணைக்கு எவ்வாறு தயாராவது என்று எனக்கு அவர் வழிகாட்டி இருப்பார்.
நான் என் அம்மா, அப்பாவுடன் கழித்த நேரம் மிகவும் சோகமாக இருந்தது. அவர்களுக்காக செலவிடும் நேரத்தை எவ்வளவு மதிக்க வேண்டும் என்பதை அந்த நேரத்தில் நான் உணர்ந்தேன். நாம் என்ன உணர்கிறோம் என்பதை விவரிப்பது மிகவும் கடினம்.
2019, மே 23, மதியம் 2.30 மணியளவில், கனத்த இதயத்துடன், என்னைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் சென்றேன்.
சிறையிலிருந்து நீதிமன்றத்திற்குச் செல்லும் வழியில், வேனில் நான் பிரார்த்தனை செய்தேன். “கடவுளே, நான் இப்போது உங்களிடம் மட்டுமே இருக்கிறேன், தயவுசெய்து என் ஜெபத்தைக் கேளுங்கள்.”
நான் நீதிமன்றத்திற்குள் நுழைந்ததும், என் கால்கள் நடுங்கின. இதை நான் இப்போது செய்ய வேண்டும், அல்லது இந்த வாய்ப்பை மீண்டும் ஒருபோதும் பெறமாட்டேன். என் மனம் நிம்மதியாக இல்லை, நான் என்னைப் பலப்படுத்துகிறேன், மோசமான சூழலை எதிர்கொள்ளத் தயாராகிறேன்.
கடவுள் கருணை கொண்டவர்! நீதிமன்றத்தில், விசாரணை கூண்டில் நான் இருந்தபோது, இரண்டு இளம் வழக்கறிஞர்கள் என்னை நோக்கி நடந்து வருவதைக் கண்டேன். என்னைப் பிரதிநிதிக்க வழக்கறிஞர்கள் இருப்பதை அறிந்து நிம்மதியடைந்தேன்.
தூ ஜிங் ஜி என்னிடம் பேசினார், எனது வழக்கறிஞராக செயல்பட அவர்கள் ஒப்புதல் கேட்டனர், என் இதயத்தின் சுமை இறக்கப்பட்டது.
தூ மற்றும் லீ ஜி என் ஆகியோர் என் சார்பாக சிறப்பாக வழக்காடினர். அவர்கள் மிகவும் அர்ப்பணிப்புள்ளவர்கள், நான் ஓர் அந்நியன் என்றாலும், என் உயிரைக் காப்பாற்ற அவர்கள் தங்கள் தொழிலைப் பணயம் வைத்து வாதாடினர்.
சுமார் ஆறு முதல் ஏழு வழக்கறிஞர்கள் எனக்கு உதவ முயன்றனர். அவர்கள் பேசுகிறார்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்குகிறார்கள், மேலும் முறையீடு செய்வதற்கான உறுதியான காரணங்களைக் கண்டறிய முயற்சி செய்கிறார்கள்.
மாலை 4.05 மணியளவில், மரண தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிக்கு நான் மிகவும் நன்றிகடன்பட்டேன். வக்கீல்கள் என்னிடம் வந்து, “நீங்கள் நாளை தூக்கிலிடப்பட மாட்டீர்கள், நாங்கள் வந்து உங்களைப் பார்ப்போம்” என்றார்.
நான் அவரது கைகளைப் பிடித்து, “நன்றி, என்னால் உங்களுக்கு நன்றியைத் தெரிவிக்க முடியவில்லை,” என்றேன்.
அந்த இரவும் நான் தூங்கவில்லை, என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்த, கடந்த கால நிகழ்வுகளைப் பற்றி மனம் அசைப்போட்டது.
மே 24 அன்று, நான் உயிருடன் இருந்தேன். நான் வழக்கம் போல் ஜெபம் செய்தேன், நான் புத்தகத்தைத் திறக்கும்போது, நான் பார்த்த முதல் வசனம் ‘கடவுள் என் உயிரைக் காப்பாற்றுகிறார்’.
பொது வழக்கறிஞரிடமிருந்து ஒத்துழைப்புச் சான்றிதழைப் பெறுவதற்கான தொடர் முயற்சிகளுக்குப் பிறகும், எனது கோரிக்கை மறுக்கப்பட்டு, தள்ளுபடி செய்யப்பட்டது.
அந்தச் சான்றிதழ் என்னைத் தூக்குத் தண்டனையில் இருந்து காப்பாற்றும். இந்தக் கடிதத்தைப் படிக்கும் அனைவரிடமும், எனது உயிரைக் காப்பாற்றி எனக்கு இரண்டாவது வாய்ப்பு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
உயிர்வாழத் தகுதி உண்டா என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் சாகக்கூடாது என்பது எனக்குத் தெரியும்.
எல்லாவற்றிற்கும், என்னைச் சுற்றியுள்ள அனைவருக்காகவும், எதிர்காலத்திற்காகவும், நான் இப்போது இருக்கும் அதே சூழ்நிலையில் இருக்கும் மற்றவர்களுக்காகவும்…..
பி பன்னீர்செல்வம், சிங்கப்பூர், சாங்கி சிறையில், மரணத் தண்டனைக்காக காத்திருக்கும் ஒரு மலேசிய குடிமகன்.