காணாமல் போகும் போர்வையில் ஓடிப் போகும் பெண்கள் – இராகவன் கருப்பையா

கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு வரையில் நாட்டில் மொத்தம் 15,042 பேர் காணாமல் போனதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ வான் அஸிஸா அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவர்களில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டுபிடிக்கப்பட்டுள்னர் அல்லது சுயமாக வீடு திரும்பினர்.

இதில் மிகவும் வருத்தமான விஷயம் என்னவென்றால் இந்த எண்ணிக்கையில் நம் இனத்தவரின் விகிதாச்சாரம்தான் – குறிப்பாக நமது இளம் பெண்கள்.

காணாமல் போகும் இந்திய இளம் பெண்களின் எண்ணிக்கை அண்மைய காலங்களில் சற்று அதிகமாகவே உள்ளது.

போலீஸில் புகார் செய்யப்படுகிறதோ இல்லையோ வாட்ஸப் புலனத்தில் படத்துடன் வெளியாகி மின்னல் வேகத்தில் அந்த செய்தி பரவுகிறது. சில வேளைகளில் சம்பந்தப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் குரல் பதிவையும் செய்து அனுப்புகின்றனர்.

இந்த விஷயத்தில் வட்ஸப் தொழில்நுட்பம் நமக்கு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும். அதோடு நம் இனத்தவர் சார்புடைய அரசு சாரா இயக்கங்களும் – குறிப்பாக நம் இளைஞர்கள் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி தேடல் வேலைகளை முடுக்கி விடுவது மிகவும் பாராட்டத்தக்கது.

ஆனால், இந்த பெண்களில் எத்தனை பேர் உண்மையிலேயே காணாமல் போகிறார்கள் என்பதுதான் நாம் அனைவரும் சிந்திக்கவேண்டிய வேதனையான விஷயம். காணாமல் போகிறவர்களில் சிலர் கடத்தப்படுகின்றனர் என்ற போதிலும், ஏறக்குறைய 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தங்களுடைய காதளர்களுடன் ஓடிப் போகின்றனர் என அதிகாரப்பூர்வமற்ற புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. இவர்களில் பெரும்பாலோர் பதின்ம வயதினர் மற்றும் 30 வயதுக்கு உள்பட்டவர்கள்.

கல்வியறிவு குறைந்தவர்கள் மட்டுமின்றி படித்த பெண்களும் கூட இத்தகைய சூழ்நிலைகளுக்கு தங்களை உட்படுத்திக்கொள்வது சற்று ஆச்சரியமாகவே உள்ளது.

மற்ற சமுகத்தினருடன் ஒப்பிடும்போது நம் இன பெண்களே இதுபோன்ற வலைகளில் அதிகம் சிக்கித் தவிப்பதாகத் தெரிகிறது.

இந்த அவலத்தின் புள்ளி விபரத்தில் இனிமேலும் நாம் முன்னிலை வகிக்க வேண்டிய அவசியமில்லை.

இந்நிலைக்கு சமூக வலைத்தளங்களும் ஒர் காரணம் என்ற போதிலும் பெற்றோர்கள் முக்கிய பங்காற்ற வேண்டியது அவசியமாகும். தங்களுடைய பிள்ளைகளின் நண்பர்கள் யார், எப்படிப்பட்டவர்களுடன் அவர்கள் பழகுகிறார்கள், யாருடன் வெளியே செல்கிறார்கள் என்பனவற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அவர்களுடைய நடத்தை மற்றும் செயல்பாடுகளில் திடீர் மாற்றங்கள் தென்பட்டாலும் அவற்றுக்கான காரணங்களை கண்டறிவது பெற்றோரின் தலையாயக் கடமையாகும்.

இவையெல்லாம் புளித்துப்போன பழைய ஆலோசனைகள்தான் என்ற போதிலும் தங்களுடைய பிள்ளைகளின் படங்கள் கேவலமான வகையில் வட்ஸப் புலனத்தில் வலம் வராமல் இருப்பதற்கு பெற்றோர்கள் மீண்டும் மீண்டும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களாகும். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதில் அர்த்தமில்லை.

இதற்கிடையே சமுதாய நலன் கருதி அரசு சாரா இயக்கங்களும் கூட தங்களுடைய தகுதிக்கு எற்ப சில நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையை சீர் செய்ய உதவலாம்.

இளம் பெண்களை, குறிப்பாக பதின்ம வயதினரை ஆங்காங்கே ஒன்று திரட்டி சிறப்பு கருத்தரங்கங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதுபோன்ற நிகழ்வுகள் தற்போது ஓரளவு நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் பெரும்பாலும் தன்முணைப்பு தொடர்பானவை.

காதளர்களை நம்பி வீட்டை விட்டு ஓடிப்போகும் பெண்களின் அவல நிலையை சித்தரிக்கும் வகையில் சில கருத்தரங்கங்களை ஏற்பாடு செய்யலாம் – தன்முனைப்போடு சேர்த்து. கண்மூடித்தனமாக  கவரப்பட்டு இத்தகைய விபரீத முடிவுகளை எடுத்து வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்ட பெரும்பாலான பெண்களின் கதைகளை உதாரணமாக படம் பிடித்து காட்டினாலும் தவரில்லை. அது நன்மையைத்தான் பயக்கும்.

ஆக, பல துறைகளிலும் வழிகளிலும் நம் சமுதாயம் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், காணாமல் போனார் என்ற போர்வையில் ஓடிப்போகும் நம் இனப் பெண்களின் எண்ணிக்கையை குறைக்க உதவுவது நம் அனைவரின் கடப்பாடாகும்.