நியூசிலாந்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பள்ளிவாசளில் தொழுது கொண்டிருந்த சுமார் நாற்பது பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். இதுதான் முதல் முறையாக கண்மூடித்தனமாக, மிருகத்தனமாக சமயத்தின் பேரில் உயிர்பறிக்கும் செயல் நிறைவேற்றப்பட்டதா? இல்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் சமயத்தின்பேரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பல நூற்றாண்டுகளாக இந்தக் கொடுமை நடந்துகொண்டிருக்கிறது. அவ்வாறு கொல்லப்பட்டதற்கு காரணம் என்ன? அவர்கள் வேறு சமயத்தைச் சார்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொல்லப்பட்டனர்.
நியூசிலாந்தில் நிகழ்ந்த கொடுமையை உலகத் தலைவர்கள் கண்டித்தனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு மற்ற சமயத்தினர் ஒன்றுகூடி பாதிப்புற்ற முஸ்லிம்களுக்கு ஆறுதல் கூறவும், அவர்களோடு ஒற்றுமையோடு வாழமுடியுமென சைகை காட்டியுள்ளதானது, ஒருவகையில் மனித நேயத்திற்கு மதிப்பளிக்கும் தன்மையை வெளிப்படுத்துகிறது. அதோடு, மனித நேயம் முழுமையாக மரித்துவிடவில்லை என்பதை நினைவூட்டுவதாகக்கூட கருத தோன்றுகிறது. ஒற்றுமை உணர்வுக்கு இடமுண்டு என்பதை உறுதியாக வலியுறுத்துவதுபோல் இருக்கிறது.
ஒரு நாட்டில் எல்லோருக்கும் இணக்கமான வாழ்க்கை முறையை உருவாக்குவது எளிதான காரியமல்ல. பல இனங்கள், பல சமயங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் இயங்குகின்ற நாட்டில் கருத்து வேறுபாடுகள் எழுவது இயல்பு. இந்தக் கருத்து வேறுபாடுகளை முதிர்ந்த அணுகுமுறையோடு கவனித்தால் அவை வெறும் கருத்துகளே. ஒவ்வொருவரின் கருத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவற்றிற்கு மதிப்பளிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது கைவிடக்கூடாத அற்புதமான பண்பாகும். அதுவே நாகரிகமான, முதிர்வான மனப்பக்குவத்தை உறுதிப்படுத்தும். இந்த பண்பை வளர்க்காதவர்களைத்தான் நாம் இப்பொழுது காண்கிறோம். அதாவது மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிக்காத மனநிலையானது தனி மனிதன் மட்டுமல்ல அரசுகளும் கையாளும் கவலைக்குரிய முறையாகிவிட்டது. இப்படிப்பட்ட போக்கு எதைக் குறிக்கிறது? பக்குவமற்ற அறிவு, மனித குலத்தின்மீது பற்றற்ற நிலை போன்றவற்றைப் பிரதிபலிக்கிறது என்றால் தவறாகுமா?
இன்று உலகின் பல பகுதிகளில் சமயத்தின் பேரால் வன்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வன்செயல்கள் எல்லா கண்டங்களிலும் நிகழ்வதைக் காணலாம். காரணம் என்ன? என்ற ஆய்வு பலன் தருமா? தராது என்பதற்கு வரலாறுகளே சான்று. ஆனால், ஒன்றுமட்டும் தெளிவாகிவிட்டது. சமயத்தை அடிப்படையாக வைத்து வெறுப்பு அரசியலை நடத்த முடியும், அது லாபகரமானது என்பது உறுதியாகிவிட்டது. அது ஆபத்தான அணுகுமுறை என்பதை உணர மறுப்போரின் எண்ணிக்கை பெருகிவருவது கவலைக்குறிய நிலையாகும். இத்தகைய போக்கு நாட்டின் நலனை பாதிக்கும், ஒரு நாடு பாதிப்புற்றால் சுற்றுப்புற நாடுகளும் பாதிப்புறும், இறுதியில் உலக அமைதியும் கேள்விக்குறியாகிவிடும். நாட்டின் நலனுக்கும், உலகின் அமைதிக்கும் கேடு விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மேற்கத்திய நாடுகளில் சமயம் கலந்த அரசாட்சி நிம்மதியான ஆட்சியை வழங்கவில்லை. மனித நேயத்திற்கு எதிரான அரச செயல்கள் புரட்சிக்கு வித்திட்டன. அந்த அனுபவத்தில் இருந்து மாற்றம் காண பல நூற்றாண்டுகள் ஆயின. மக்களின் அவதிக்கு முடிவு காண்பது சிரமமாக இருந்தது. ஏனெனில் சமயம் மக்களைக் கட்டுப்படுத்தியது. சமயப் போர்தான் முக்கியமாகக் கருதப்பட்டது. இதற்குக் காரணம், பிற சமயங்களுக்குப் பாதுகாப்பு வழங்காத நிலை, அவற்றைப் புறக்கணிக்கப்பட்டு அவமதிக்கப்பட்ட நிலை. சமய அரசியல், நாட்டில் அமைதியைத் தரவில்லை.
சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அசோக சக்கரவர்த்தி தமது நாட்டில் இனப் பகைமையை வளர்க்கவிடாமல் பார்த்துக்கொண்டான். பிற சமயங்களைப் பழிப்பது, இழிப்பது குற்றமெனச் சட்டம் இயற்றினான். அவன் ஆட்சி பரவிய இடங்களில் எல்லாம் பல சமயங்கள் இயங்கின, மறுக்க முடியுமா? அசோக சக்கரவர்த்தி நல்கிய அரசியல் பாடத்தை மேலை நாட்டுக்காரர்கள் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டில்தான் உணர்ந்தனர் போலும். பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கத்தியர்கள் சமய சார்பற்ற அரசியலை முழுமூச்சாக ஆதரித்தனர். துணிந்தே அமல்படித்தினர். ஆனால், சமயங்களோ அவற்றில் இருக்கும் நன்மைகளைப் பெரிது படுத்தாமல், வெறும் வேற்றுமைகளைக் மட்டும் பெரிது படுத்தி வெறுப்பு கலாச்சாரத்திற்கு முதலிடம் தரப்பட்டதை வரலாற்றின் மூலம் கண்டோம். தொடர்ந்து கண்டுகொண்டே இருக்கிறோம்.
இன்று உலகின் பற்பல பகுதிகளில் சமயத்தின் பேரில் கொடுமைகளும் உயிர்சேதங்களும் நிகழ்கின்றன என்றால் அவை எல்லா சமயங்களிலும் புரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ள தயங்குகின்ற, மறுக்கின்ற கலாச்சாரத்தை வளர்த்துவிட்ட அரசியல்தான் காரணம் என்றால் தகும்.
மக்கள் எல்லோரும் சமம் என்கிறோம். அதை ஏற்க மறுக்கும் அரசியல்தான் இன்று தலைதூக்கி நிற்கிறது. அதைப் பார்க்கும்போது ஏமாற்றமளிக்கிறது. இனபேதம், நிறபேதம், குருதி பேதம் இயற்கையின் இரகசியங்களாகும். மொழி பேதம், கலாச்சாரப் பேதம், சமயப் பேதம் யாவும் மனிதனால் உருவாக்கப்பட்டவை. மொழி, கலாச்சார, சமயப் பேதங்களை வைத்துத்தான் தங்களின் அரசியல் செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ளவும் அரசியல் அதிகாரத்தைப் பலப்படுத்தவும் சிலர் முற்படுகிறார்கள். இவர்களால்தான் பேதமை வெறுப்புணர்வாக மாறி மனித குலத்துக்கே ஊறு விளைவிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது என்றால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
மக்களிடையே ஒற்றுமை தேவை எனும்போது எல்லா துறைகளிலும் ஒற்றுமை உணர்வை வளர்த்து, வேரூன்றச் செய்வது இன்றியமையாததாகும்.
மக்களிடையே ஒற்றுமை தேவை. உலக நாடுகளிடையே ஒற்றுமை தேவை. இந்த ஒற்றுமை மனித நேய அடிப்படையில் அமைந்தால்தான் அர்த்தம் இருக்கும். வெறுப்புணர்வு வளராத, எதிலும் ஒற்றுமை காணமுடியும் என்ற சிந்தனை வலுபெற நடவடிக்கை தேவையே அன்றி, பிளவை மிகப்படுத்தி, ஆழமாக்கும் வெறுப்பு, பகைமை போன்ற சக்திகளுக்கு இடமளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பொதுவாக, பகைமை உணர்வு வெறுப்புணர்வை வலுவடையச் செய்யுமே அல்லாது மனித ஒற்றுமைக்கும், சமய புரிந்துணர்வுக்கும் உதவவே உதவாது. இதுபோன்ற தவறான நடவடிக்கைகள் ஏன் நிகழ்கின்றன என்பதைச் சிந்தித்துப்பார்த்தால் ஒரு உண்மை புலப்படும். அதுதான் வெறுப்புணர்வு, இந்த வெறுப்புணர்வு மிக்கவர்கள் நாட்டில் நடமாடும்போது எவர்க்கும் பாதுகாப்பு இல்லாத நிலை அச்சுறுத்துகிறது. வன்செயல்கள் பெருக இந்த வெறுப்புணர்வு மட்டுமே போதும். அதுவே பயங்கர அழிவுக்குக் காரணம். ஆனால் இந்த உண்மையை ஏற்க மறுப்பது ஏன்?
சமயப் பேதத்தை வலுப்பெறச் செய்யும் செயல்கள்தான் காலப்போக்கில் பூதாகர வன்செயல் எண்ணத்தை வளர்த்து கொடுமையான விளைவுகளுக்குக் காரணம் என்பதை வரலாறு உணர்த்துகிறது. ஆனால், அதை ஏற்க மறுப்போரின் எண்ணிக்கைதான் இக்காலத்திலும் பெருகிக்கொண்டே போகிறது. வன்செயலால் ஏற்பட்ட அழிவுகள் போதாதா?
நியூசிலாந்து கொலை நிகழ்வைப்பற்றி அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் விடுத்திருக்கும் அறிக்கை விவேகமானது அல்ல. அதை மறுத்து நம் கூட்டரசுப் பிரதேச முப்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையும் காலத்துக்கேற்ற ஒன்றாக ஏற்றுக்கொள்ள சங்கடம் உண்டு. காரணம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த செயல்கள் இன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமில்லாதவையாகக் கருதப்படலாம். காரணம், சூழ்நிலைகள் மாறிவிட்டன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பரஸ்பர நம்பிக்கைக்கு இடம் இல்லை என்ற நிலை. கருத்து பறிபாற்றத்திற்கு வசதி இல்லாத காலம் அது. இன்று நிதானமான கருத்து பறிமாற்றத்திற்கு வசதிகள் அதிகரித்துவிட்டன. இதை உணராமல் பண்டைக்கால வன்செயல் போக்கே நியாயமானது என்று நினைப்பது இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற அணுகுமுறை அன்று. சிந்திக்க வேண்டும். வன்முறை மனித நேயத்தின் பிரதான எதிரி என்றால் மிகையாகாது.