பதினைந்து மாதங்களுக்கு முன் ஒட்டு மொத்த நாட்டு மக்களின் புதிய விடியலுக்கு வித்திட்ட நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தற்போது நம்பிக்கையில்லா கூட்டணியாக படிப்படியாக மாறி வருவது நமக்கெல்லாம் மிகவும் வேதனையாகத்தான் உள்ளது.
அண்மைய காலமாக தான்தோன்றித்தனமாக இவர்கள் செய்யும் காரியங்களை வைத்துப் பார்த்தால் இந்த அரசாங்கம் சுயமாகவே கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சம் அம்பைப் போல் நம் நெஞ்சத்தில் அவ்வப்போது பாயத்தான் செய்கிறது.
கடந்த சில மாதங்களாக திடீர் திடீரென நம் நாட்டில் நிகழும் சம்பவங்கள், பிரதமர் துன் மகாதீரின் 22 ஆண்டுகால முன்னைய ஆட்சியைத்தான் நம் கண் முன் கொண்டு வந்து படம் போட்டு காண்பிக்கின்றன என்பதில் துளியளவும் ஐயமில்லை.
அவர் ஒரு முதிர்ந்த அரசியல் சாணக்கியர் – அரசியல் சித்து விளையாட்டில் கெட்டிக்காரர்.
அரசியல் அரங்கில் எந்தக் காயை எங்கே எப்போது எப்படி நகர்த்தினால் எம்மாதிரியான சாதகமான முடிவு கிடைக்கும் என மிகக் கூர்மையாக அறிந்து வைத்திருப்பதில் அவருக்கு நிகர் யாருமில்லை என்றே சொல்ல வேண்டும்.
கடந்த மாதம் தமது 94ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய மகாதீர் சிந்தனையிலும் செயலிலும் எவ்வகையிலும் சோர்வடையவில்லை என்பதோடு அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் தற்போது ‘பழைய குருடி கதவைத் திரடி’ என்ற நிலைதான். ‘சிறுத்தையின் உடம்பில் உள்ள புள்ளிகளை மாற்ற முடியாது’ என்று பொருள்படும் சொற்றொடர் ஒன்றுக் கூட ஆங்கிலத்தில் உள்ளது.
நாட்டில் நிலவும் சர்ச்சைக்குறிய விஷயங்கள் எதுவாக இருந்தாலும் மக்களின் கவனத்தை மின்னல் வேகத்தில் அதிலிருந்து உடனே திசை திருப்புவதில் அவர் வல்லவர் – அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது!
பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி, மகாதீரின் நம்பிக்கைக்குறிய மின்னும் நட்சத்திரம். அவரை வீழ்த்துவதற்கு ஆபாச வீடியோ ஒன்றை தொடர்பு படுத்தி மிகப் பெரிய ஒரு தரங்கெட்ட போராட்டமே வெடிக்கும் என மகாதீர் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.
இந்த சர்ச்சை உச்சக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் ‘காட்’ எனப்படும் அரபு மொழி ஓவியப் பாடம் தொடர்பான அறிவிப்பை மக்கள் எண்ணத்தில் பரபரப்பாகத் திணித்து, ‘நான் இன்னும் பழைய மகாதீர்தான்’ என நிருபித்துவிட்டார்.
ஆனால் இந்த அறிவிப்பின் வழி, மகாதீர் மற்றும் கல்வியமைச்சர் மஸ்லி மாலிக் மட்டுமின்றி, ஒட்டு மொத்த அரசாங்கமும் மக்களின் அனாவசிய வெறுப்பைத்தான் தேடிக்கொண்டுள்ளது.
ஒரு சில புல்லுருவிகளைத் தவிர்த்து, இந்திய மற்றும் சீன சமூகத்தினர் மட்டுமின்றி சில மலாய்க்கார பிரமுகர்களும் கூட இந்த பாடத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே இதனை எதிர்க்கின்றனர் என்ற மகாதீரின் சாமர்த்தியப் பேச்சு கோமாலித்தனமாக உள்ளது.
கடந்த ஆண்டின் தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில், இந்த ‘காட’ திணிப்பு, ‘செய்ற வேலையை விட்டுட்டு கோழி முட்டைக்கு சவரம் செய்தது’ போல் உள்ளது.
நாட்டின் கல்வித் தரம் மோசமான நிலையில் இருப்பது நமக்கு ஒரு நீண்ட காலக் குறையாகவே இருந்து வருகிறது. அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் மட்டுமின்றி வியட்நாமின் கல்வித்தரம் கூட மலேசியத் தரத்தை விட உயர்வாக உள்ளது என அனைத்துலக கல்வி ஆய்வாளர்கள் அண்மையில் செய்த அறிவிப்பு நம்மையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சோகம் மட்டுமின்றி கோபமும் கூட!
தேசிய நிலை ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் இப்போதெல்லாம் சமயப் பள்ளிகள் போலாகிவிட்டதால் அவற்றின் புகழ் மங்கிவிட்டது என மகாதீரே பல தடவை தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த பாடத்தை போதிக்க இஸ்லாமிய ஆசிரியர்கள் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளில் அமர்த்தப்படுவார்கள். அவர்களுடைய ஆதிக்கத்தினால் பத்தே வயதுடைய நமது மாணவர்கள் இஸ்லாத்தை மிக எளிதில் உள்வாங்கக் கூடிய ஆபத்து அதிகமாகவே உள்ளதென பெரும்பாலான பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். நம் மொழியும் மதமும் சன்னம் சன்னமாக அழிவதற்கு இந்த ‘காட்’ ஒரு அடிக்கல் என்றே அவர்கள் கருதுகின்றனர்.
இந்தோனேசியா மற்றும் மொரிஷியஸ் முதலிய நாடுகளில் மொழியை முற்றிலும் இழந்து நிற்கும் தமிழர்களின் தொடக்க காலமும் அநேகமாக இப்படித்தான் இருந்திருக்கும். இது போன்ற நிலை மலேசியாவில் உருவாகமல் இருக்க சீனர்கள் கொண்டுள்ள மொழிப்பற்றை நாமும் பின்பற்ற வேண்டும்.
சக்தி வாய்ந்த சீனக் கள்வி அமைப்புக்களான ‘டொங் ஸொங்’ மற்றும் ‘ஸியாவ் ஸொங்’ மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட இந்திய அமைப்புக்களும் அரசு சாரா இயக்கங்களும் கூட இந்த பாடத் திட்டத்திற்கு எதிராக போர்க் கொடியை தூக்கியுள்ளன.
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸய்ட் இப்ராஹிம், முன்னாள் அனைத்துலக தொழில்துறை அமைச்சர் தான்ஸ்ரீ ரஃபிடா அஸிஸ் மற்றும் பிரபல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான சித்தி காசிம், முதலியோரும் இந்த கட்டாயத் திணிப்பை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். மலாய் கலாச்சாரத்தில் அரபு அம்சங்களை திணிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் கலை கலாச்சார அமைச்சர் ராயிஸ் யாத்திம் கூட வெளிப்படையாகவே குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே முஸ்லிம் அல்லாதார் ‘அல்லா’ என்ற சொல்லை பயன்படுத்த அனுமதி மறுத்துள்ள அரசாங்கம் ஏன் இந்த ‘காட்’ கல்வியை வலுக்கட்டாயமாக அவர்களிடத்தில் திணிக்க முற்பட்டுள்ளது என மலேசிய தேவாலயங்கள் சபையின் தலைமைச் செயலாளர் ஹெர்மன் ஷாஸ்த்ரி கேள்வி எழுப்பியுள்ளார் – நியாயமான வாதம்தான்.
அம்னோவுடன் சேர்ந்து தனது பலத்தை வலுப்படுத்திவரும் பாஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர்களை கவருவதற்கு மகாதீர் இவ்வாறு செய்கிறார் என்று பிரிதொரு சாரார் கணிக்கின்றனர்.