ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம்! ~இராகவன் கருப்பையா

சர்ச்சைக்குறிய மத போதகர் ஜாக்கிர் நாயக் ஒழுங்காக நடந்துகொண்டால் இந்நாட்டில் அவர் தொடர்ந்து வசிக்கலாம் என பக்காத்தான் அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தவுடன் பிரதமர் துன் மகாதீர் அறிவித்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
அதனைத் தொடர்ந்து, தங்கள் நாட்டுக்கு அவரை திருப்பி அனுப்புமாறு இந்தியா கோரிக்கை விடுத்த போது, அவருக்கு இந்தியாவில் நீதி கிடைக்காது, அவரை இங்கேயே வைத்திருக்க மலேசியாவுக்கு உரிமை உள்ளது என சற்று ஆனவத்துடன் குறிப்பிட்ட மகாதீர் பலரின் கண்டனத்துக்கு ஆளானார்.
ஜாக்கிர் நாயக்கை வேறு எந்த நாடும் ஏற்கத் தயாராயில்லை, இந்தியா சென்றால் அவருடைய உயிருக்கு ஆபத்து என கடந்த மாதத்தில் மகாதீர் செய்த அறிவிப்பு மக்களுக்கு மேலும் சினமூட்டியது.
இதற்கிடையே சொந்த ஊருக்கே அவரை திருப்பி அனுப்புமாறு சில அமைச்சர்கள் உள்பட அரசு சாரா இயக்கங்களும் பொது மக்களும் கூட தொடர்ந்து வலியுறுத்தி வருகிற போதிலும் அவர் மீது மகாதீருக்கு ஏன் இவ்வளவு அன்பு, பாசம், பற்று, ஈர்ப்பு, என்றுதான் புரியாத புதிராக உள்ளது.
ஆகக் கடைசியாக, சில தினங்களுக்கு முன் கிளந்தானில் இஸ்லாமிய பேருரையாற்றிய ஜாக்கிர், இந்நாட்டிலுள்ள சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் எதிராக இனத்துவேச கருத்துக்களை உமிழ்ந்துள்ள போதிலும் கூட அவரை திருப்பி அனுப்ப மகாதீர் இன்னும் முடிவெடுக்காதது விசித்திரமாகவே உள்ளது.
மகாதீரின் செல்லப் பிள்ளையாகக் கருதப்படும் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர்  சைட் சாடிக், வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஸுராய்டா கமாருடின், மற்றும் பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் யூசோப் உள்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜாக்கிர் மீது சினமடைந்தோர் பட்டியலில் ஆகக்கடைசியாக சேர்ந்துள்ளனர்.
ஆனால் இந்தியர்களின் நலன் காப்பதாக அரை நூற்றாண்டுக்கும் மேலாக பிதற்றிக்கொண்டிருந்த ம.இ.க. வழக்கம் போல மெளன விரதம்தான். ரோசமுள்ள ம.சீ.ச. கூட தனது பங்குக்காக எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் பண சலவை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள ஜாக்கிருக்கு இங்குள்ள சீனர்களையும் இந்தியர்களையும் தேவையில்லாமல் சீண்டுவதற்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது, யார் இதற்கெல்லாம் பின்ணணி என்றுதான் மக்கள் இப்போது குழம்பியுள்ளனர்.
மனிதவள அமைச்சர் குலசேகரன், நீர் நில இயற்கைவள அமைச்சர்  டொக்டர் ஸேவியர் ஜெயக்குமார், பினேங் மாநில துணை முதலவர் பேராசிரியர் ராமசாமி, சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி, கிளேங் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ மற்றும் முன்னாள் தூதர் டென்னிஸ் இக்னேஷியஸ் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடுக்கும் அளவுக்கு அவருக்கு தைரியம் கொடுப்பது யார் என்பதுவே இப்போதைய கேள்வி. தனது கருத்தை திரித்து இனவாதத்தைத் தூண்டுவதாக மேல் குறிப்பிட்ட எழுவர் மீதும் அவர் வழக்குத் தொடுத்துள்ளது கேளிக் கூத்தாகவே உள்ளது.
இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் மகாதீரை விட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கே அதிக விசுவாசமாக உள்ளனர் என உளரிய ஜாக்கிர் இங்குள்ள சீனர்கள் பழைய விருந்தாளிகள் எனவே அவர்கள் நாட்டை விட்டு வெளியேர வேண்டும் என மிகத் திமிராக ஆற்றிய உரை நாட்டையே உளுக்கியது. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாகத்தான் உள்ளது இவருடைய ஆணவப் பேச்சு. இதனால் ஒட்டு மொத்த சீனர்களும் இந்தியர்களும் மிகுந்த சினமடைந்துள்ளனர்.
இருந்தாலும் கூட, ஜாக்கிர் வரம்பை மீறியுள்ளார், உள்நாட்டு அரசியலில் அவர் தலையிடக் கூடாது, அவருக்கு வழங்கப்பட்டுள்ள நிரந்தர குடியிருப்பு ரத்து செய்யப்படலாம் என்று மட்டுமே மகாதீர் கோடிக் காட்டுகிராரேத் தவிர, அவரை நாட்டை விட்டு வெளியேற்ற தீர்க்கமான ஒரு முடிவை எடுப்பதாகத் தெரியவில்லை.
இந்தியாவில் ஜாக்கிரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என கவலைப்படும் மகாதீர், இனங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டும் அவருடைய உரையினால் இங்கு ஏற்படக்கூடிய ஆபத்தான விளைவுகளைப் பற்றி சிந்தித்தாரா என்று தெரியவில்லை.
இதற்கிடையே பெர்லிஸ் மற்றும் கெடா ஆகிய மாநிலங்களில் உரை நிகழ்த்த அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘சிறுத்தையின் மேலுள்ள புள்ளிகளை மாற்ற முடியாது’ என்பதற்கு ஏற்ப போகிற இடங்களில் எல்லாம் இனவாதத்தைத் தூண்டும் வகையில் அவர் உரையாற்றுவதால் போலீசார் இந்தத் தடையை விதித்துள்ளது நமக்கு சற்று ஆறுதலாகவே உள்ளது.
இந்திய நீதித்துறையின் வலையிலிருந்து தப்பிக்கும் நோக்கத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் மலேசியாவுக்கு ஓடிவந்த அவருக்கு முன்னாள் பாரிசான் அரசாங்கம் அசட்டுத்தனமாக நிரந்தர குடியுறிமை வழங்கியது. அவருடைய சுய ரூபம் தெரியாமல் முன்னைய அரசாங்கத் தலைவர்கள் அவரை தலை மீது வைத்துத் துதி பாடினார்கள்.
கடந்த வாரத்தில் கிளந்தானில் அவருக்கு ராஜ மறியாதயுடன் வரவேற்பு நல்கப்பட்டது. அங்கு அவர் ஆற்றிய சர்ச்சைக்குறிய உரையைத் தொடர்ந்து நாடு முழுவதும் அவருக்கு எதிராக 150கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புகார்களை அடிப்படையாகக் கொண்டு சில நாள்களுக்கு முன் போலீசார் அவரை சுமார் 5 மணி நேரம் துருவித் துருவி விசாரணை செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஏற்றுவதற்கு நம்மிடம் போதுமான சட்ட விதிகள் உள்ளன என்று பல வழக்கறிஞர்கள் கருத்துரைத்துள்ளனர்.
போலீஸ் விசாரணை முடிவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, அவரை உடனே நாடு கடத்த வேண்டும் என முன்னாள் போலீஸ் படைத் தலைவர் தான்ஸ்ரீ ரஹீம் நோர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவில் அவர் சட்டத்தை எதிர்நோட்கத்தான் வேண்டும் என கடுமையாக அவர் விமர்சித்தார்.
‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்ற எதிர்பார்ப்பில் இனங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி அதில் குளிர் காய்ந்து இந்நாட்டில் தனது குடியுறிமையை வளுப்படுத்தும் எண்ணத்தில் அவர் தனது விஷமத்தன ஆட்டத்தைத் தொடக்கியிருக்கக் கூடும் என்றும் ஒரு சாரார் கணிக்கின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு மனுஷனை இங்கு வைத்துக்கொண்டு நாம் அவதிப்படுவதைப் பார்த்தால், ‘வழியில் கிடந்த கோடறியைத் தூக்கி காலில் போட்டுக்கொண்ட கதை’தான். பிறகு ‘குத்துதே குடையுதே’ என அங்களாய்த்துக்கொண்டிருப்பது வேடிக்கையாகவே உள்ளது.