ஒரு சிறிய ஆற்றைக் கடக்க நீண்ட நேரமாகக் கரையோரம் காத்திருந்த தேள் ஒன்றுக்கு எதிரே நீந்தி வந்த தவளையைக் கண்டவுடன் அலாதி மகிழ்ச்சி. ‘நான் இந்த ஆற்றைக் கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டும், தயவு செய்து உன் மீது என்னை ஏற்றிச் சென்று அக்கரையில் சேர்த்துவிடு,’ என தேள் கேட்டது.
‘முடியவே முடியாது, ஏனென்றால் உன் கொடுக்கினால் என்னை கொட்டி விடுவாய், அது உன் பிறவி குணம்,’ என தவளை பிடிவாதமாக உதவ மறுத்தது.
‘நான் அப்படி செய்யவே மாட்டேன், தயவு செய்து எனக்கு உதவி செய், உனக்கு கோடி புண்ணியம்,’ என தேள் பல முறை மண்றாடியது.
இரக்க குணம் படைத்தத் தவளையோ, ‘சரி, என் மீது ஏறிக்கொள், அக்கரையில் உன்னை பத்திரமாகக் கொண்டு சேர்த்துவிடுகிறேன்,’ என்றது.
விளைவு – தேள் நற்றாற்றில் தனது பிறவி குணத்தைக் காட்டவே, இரண்டுமே மூழ்கி மடிந்தன.
இதே நிலைதான் தற்போது மலேசியாவுக்கு. இந்திய நீதித்துறையின் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமந்து கொண்டு இங்கே ஓடி வந்து பதுங்கியிருக்கும் ஜாக்கிர் நாயக் எனும் விஷமத்தனமான சர்ச்சைக்குறிய மத போதகர் இந்நாட்டையே இப்போது உலுக்கிக்கொண்டிருக்கிறார்.
அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரில் கடந்த 3 ஆண்டுகளாக ஓரளவு ‘நல்லப் பிள்ளை’யாக நாட்டை வலம் வந்த அவர், அண்மையில் தனது பிறவி குணத்தை காட்டிவிட்டார்.
போகிற இடங்களில் எல்லாம் இன சமய பேதங்களை உருவாக்கி, சர்ச்சைகளை உண்டுபண்ணி, பயங்கரவாதத்தைத் தூண்டக் கூடியவர் என பல நாடுகள் பட்டயம் கட்டி அவருக்குத் தடை விதித்துள்ளன. ஆனால் மலேசியாவிலோ அவருக்கு ராஜ மறியாதை, சுகபோக வாழ்க்கை. அதோடு மகாதீரின் அன்புக்குறியவர்.
இந்நிலையில், இந்நாட்டிலுள்ள சீனர்கள் விருந்தாளிகள், தான் வெளியாக வேண்டுமானால் அவர்களும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என மிகத் திமிராக அவர் பேசியதுதான் மகாதீர் உள்பட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்துக்களையும் இந்து மதத்தைப் பற்றியும் பல மேடைகளில் அவர் மோசமான கருத்துக்களை உமிழ்ந்துள்ள போதிலும், சீனர்களைத் தாக்கியது இதுவே முதல் தடவை. ஆண்டாண்டு காலமாக நாம்தானே கிள்ளுக்கீரை!
இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்நாட்டிலுள்ள சீனர்கள் இவ்விவகாரத்தைக் கையாளும் விதம்தான்.
ஒரு சில சீனத் தலைவர்கள் கருத்துரைத்தார்களேத் தவிர கீழ் நிலையில் உள்ள யாரும் உணர்ச்சிப் பொங்கி தெருவுக்கு வந்து ஆர்ப்பாட்டமோ அணிவகுப்போ செய்ததாகத் தெரியவில்லை.
நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு ஜாவி அறிமுகம் போன்ற கல்வி சம்பந்தமான விவகாரங்கள் எழும்போது, சக்தி வாய்ந்த சீன கல்வி அமைப்புக்களான டொங் ஜோங் மற்றும் ஜியாவ் ஜோங் உடனே கலமிறங்கி பிரச்னைக்குத் தீர்வு காண முற்படுகின்றன.
ஆனால் ஜாக்கிர் நாயக் கிளப்பியுள்ளதைப் போன்ற இதர விவகாரங்களை எப்படி அவர்கள் கையாளுகின்றனர், எவ்வகையில் உணர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றனர் என்பது மர்மமாகவே உள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 25 விழுக்காட்டினராக உள்ள அவர்கள் மிகவும் லாவகமாக காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர் என்பதுதான் உண்மை.
உடனே உணர்ச்சிவசப்பட்டு போராட்டத்திற்கும் புரட்சிக்கும் துடிப்பதில் பெயர் பெற்றவர்கள் நம் இனத்தவர்கள்தான். இத்தகைய நடவடிக்கைகள் முற்றிலும் தவறு என்று சொல்லிவிட முடியாது. முரட்டுத்தனமாக தட்டிக் கேட்பதும் ஒரு விதமான யுக்திதான்.
2007ஆம் ஆண்டு நவம்பர் 25ல் நடைபெற்ற ஹிண்ட்ராஃப் புரட்சியைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களை நாம் மறந்துவிட முடியாது. எனினும் அதே போன்ற சாதகமான விளைவுகள் எப்போதுமே நமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் என்று எண்ணி இப்போதும் அம்மாதிரியான போராட்டங்களை நாம் மேற்கொண்டால் அதன் தாக்கம் வேறுப்ட்டதாக இருக்கும்.
நாட்டின் அப்போதைய சூழல் வேறு. கடந்த 12 ஆண்டுகளில் மலேசிய சட்ட விதிகளில் நிறையவே மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அரசியலிலும் பெரும் மாற்றங்களை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அப்போதும் இப்போதும் சமுதாயத்திற்காகப் போராடும் நம் இளைஞர்கள், ஆர்ப்பாட்டங்களின் போது போலீசாரின் முரட்டுத்தனமான அடிதடியில் சிக்கி அவதிப்படுவது நமக்கு மிகவும் வேதனையாக உள்ளதோடு மனதையும் உருக்குகின்றது.
அப்போதைய ஹிண்ட்ராஃப் வேறு, இப்போதைய நிலைமை வேறு. அதே ஹிண்ட்ராஃப் இப்போதுகிடையாது. நான்கு இந்திய அமைச்சர்களும் வெவ்வேறு திசைகளில் சிதறிக்கிடக்கின்றனர். பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி இப்போது மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். ம.இ.கா, ஐபிஎப், மக்கள் சக்தி, பிபிபி, எம்ஐயுபி போன்ற கட்சிகள் எல்லாம் பிரிவினை நம்மிடையே உள்ள வேற்றுமைக்கு இலக்கணமாகும்.
இத்தகைய சூழ்நிலையில் சமுதாயத்திற்காக போராடத் துடிக்கும் நம் இளைஞர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. உணர்ச்சிவசப்பட்டு உடனே தெருவுக்கு இறங்காமல், சீனர்கள் எப்படி இத்தகைய விசயங்களை கையாளுகின்றனர் என்று அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும் – அது அவசரமும் கூட!
தலையாட்டி பொம்மைகளாக செயல்படும் அரசியல் கட்சிகளை நம்பியிருக்காமல் அரசு சாரா இயக்கங்கள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் இணைந்து சீன கல்வி அமைப்புக்களைப் போன்று சக்திவாய்ந்த ஒரு சம்மேளனமாகக் களமிறங்கி அரசாங்கத்தை அணுகுவதே விவேகமாகும். இதுவே சமூகமுத்தின் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும்.
சிறுபான்மையினராக இருந்தாலும் ‘சில்லி பாடி’யைப் போன்று நமது சக்தியை மற்றவர்களுக்கு புலப்படுத்த வேண்டும்.