மெர்டேக்கா 62-இல் குடியுரிமையற்ற நாட்டு மக்கள்- அடையாளமா, அவமானமா? -இராகவன் கருப்பையா

நாளை மறுநாள் மலேசியா தனது 62ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறது. ஆனால் உண்மையான சுதந்திரம் இன்னும் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.

ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, உதாசினப்படுத்தப்பட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலாக துடுப்பற்ற படகில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் இருந்த நம் சமுதாயத்திற்கு கடந்த பொதுத் தேர்தல் கொஞ்சம் ஒளியைக் காட்டியது என்பதில் ஐயமில்லை.

ம.இ.க. மீதான அதிருப்தியும் இந்தியர்களுக்கான பக்காத்தான் ஹராப்பானின் சிறப்புத் தேர்தல் அறிக்கையும், 80%கும் மேற்பட்ட இந்தியர்களின் வாக்குகளை திசை திருப்பியது எல்லாரும் அறிந்த ஒன்றே.

ஆனால் நஜிப் அரசாங்கத்தின் ‘மேகா’ ஊழலின் விளைவாக, நாட்டின் பொருளாதார நிலை எதிர்பார்த்ததைவிட மிக மோசமாக இருப்பதால் எல்லா வாக்குறுதிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற இயலாது என்று பிரதமர் துன் மகாதீர் கூறியது பலத்த ஏமாற்றத்தை தந்தது.

பணச் செலவு இல்லாத வாக்குறுதிகள் என்ன ஆயிற்று?

மலேசிய இந்தியர்களுக்கென பக்காத்தான் ஹராப்பான் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ‘இந்தியர்களின் குடியுரிமை பிரச்னைகள் தீர்க்கப்படும்’ என்பது முதலிடத்தில் இடம்பெற்றதை மக்கள் மறக்கவில்லை.

குடியுரிமை விவகாரத்தில் இந்திய சமூகத்தினருக்கு சிறப்பு சலுகைகள் கிடையாது என முன்னாள் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான அஹமட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டிருந்த வேளையில், பக்காத்தான் ஹராப்பானின் இந்த அறிக்கை நமக்கு ‘பாலைவனத்தில் நீரைப்போன்று’ தெரிந்தது.

உள்நாட்டு அரசியலை பிடிக்காதவர்கள் நாட்டைவிட்டு வெளியேருங்கள் என்றும் கூட இதே அஹமட் ஸாஹிட் ஒரு காலக்கட்டத்தில் மிகத் திமிராக மக்களை மிரட்டியிருந்தார் – ஏதோ இந்த நாட்டின் உரிமையாளரைப் போல!

இந்நிலையில் இந்தியர்கள் பலருக்கு அடையாள ஆவனங்களை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது என சில மாதங்களுக்கு முன் பிரதமர்  செய்த அறிவிப்பினால் மக்கள் ஆனந்தத்தில் துள்ளி குதிக்கவில்லை. ஏனென்றால் அது ஏமாற்றத்துக்குறிய மிகச்சிறிய எண்ணிக்கை என்பதுவே காரணம்.

இந்நாட்டில் குறைந்த பட்சம் 25,000 இந்தியர்களுக்கு முறையான அடையாள ஆவனங்கள் இல்லை என அதிகாரப்பூர்வ தகவல்கள் (Malaysian Indian Bluprint 2017) காட்டும் வேளையில் மகாதீரின் அந்த அறிவிப்பு வெறும் கண் துடைப்பாகவே கருதப்பட வேண்டும்.  நாம் என்ன இளிச்சவாயர்கள் என்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக பிச்சை போட்ட மாதிரி (காணொளி ) அடையாள அட்டைகளை அரசாங்கம் வழங்கி வருவது நமது கோபத்தை மேலும் அதிகரிக்கவே செய்கிறது.

கடந்த காலங்களில், அதாவது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல் நெருங்கும் வேளைகளில் ஒரு சிலருக்கு அடையாள ஆவனங்களை பெற்றுத் தந்து மலிவு விளம்பரம் தேடிக்கொண்ட ம.இ.க.வினரின் ‘டிராமா’ இப்போது மீண்டும் அரங்கேற்றம் காண்கிறது.

குடியுரிமை தொடர்பான விவகாரங்களைப் பொருத்த வரையில்  இந்நாட்டில் நம் சமூகம் இன்னும் பாவப்பட்ட ஜென்மவாகவே உள்ளதுதான் சோகத்திலும் சோகம்.

அண்மையில் 102 வயது அம்மையார் ஒருவருக்கு அடையாள அட்டையை வழங்கி பத்திரிகையில் படத்தைப் போட்டு பல் இளிச்சார்கள். இதனை இள வயதில் அவருக்குக் கொடுத்திருந்தால் வாழ்க்கையில் அவர் சிரமப்பட்டிருக்கமாட்டார், நல்ல வேலையில் அமர்ந்திருப்பார், குடும்பத்திற்கு பயனாகவும் அமைந்திருக்கும்.

‘இந்த வயசுல இத வச்சிக்கிட்டு நான் என்ன பன்றது? செத்த பிறகு இந்த ஜ.சி.ய என் நெத்தியிலதான் வைக்கெனும்’ என 81 வயதுடைய ஒரு முதியவர் அண்மையில் மிக விரக்தியுடன் குறிப்பிட்டது நம் சிந்தனையை வெகுவாகவே கலக்கியது.

இந்த மோசமான சூழ்நிலைகளுக்கு நாமும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அனுமானிக்கப்பட்டுள்ள அந்த 25000-இல்   12 வயதில் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள், தங்களுடைய திருமணத்தை பதிவு செய்யாதவர்கள் மற்றும் குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்யாதவர்கள் போன்றோர் நிறையவே உள்ளனர். இது ஒரு வருமை கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு என்பதை உணர்ந்து அரசாங்கம் உதவவேண்டும்.

எது எப்படியாயினும் இந்நாட்டில் முறையாகப் பிறந்த குழந்தைகள் எல்லாருக்கும் குடியுரிமை பெற மலேசிய அரசியல் சாசனம் வழிவகுக்கிறது. எனவே மேற்குறிப்பிட்ட சிக்கள்களில் மாட்டியுள்ளோரைத் தவிர்த்து பிரச்னைகள் இல்லாத மற்றவர்களுக்கு முதலில் அடையாள ஆவனங்களை வழங்குவதில் அரசாங்கம் உடனே கவனம் செலுத்தினால் நமக்கு சந்தோசமாக இருக்கும்.

இந்நாட்டுக்கு பிழைப்புத் தேடிவந்த வங்காளதேச நாட்டவர்கள், இந்தோனேசியர்கள், பாக்கிஸ்தானியர்கள் மட்டுமின்றி சமய இனவேற்றுமையை  தூண்டக் கூடியவர் என உலகின் பல நாடுகள் முத்திரை குத்தியுள்ள சர்ச்சைக்குறிய மத போதகர் ஜாக்கிர் நாயக்கிற்குக் கூட இங்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது சினத்துக்குறிய வேதனையான விசயம்.

இதற்கிடையே குடியுரிமை தொடர்பான சிக்கள்களை எதிர்நோக்கியுள்ள இந்தியர்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி அறிவித்துள்ளார்.

தேசிய பதிவு அலுவலகங்களில் பலதரப்பட்ட நடைமுறைத் தடைகள் உள்ளதாகவும் அவை அனைத்தும் களையப்பட்டு சிக்கள்களை எதிர்நோக்கியுள்ளவர்கள்  வகைப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதெல்லாம் ஓர் இந்தியரை வைத்து நமது கோபத்தை தணிக்கும் நாடகமாக இல்லாமல் அமைச்சரவை ஒரு தீர்க்கமான முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும். 62-ஆண்டுகளாக தொடரும் இந்தப் பிரச்சனை நாட்டுக்கே ஓர் அவமான அடையளமாக இருக்கக் கூடாது.