பணக்கார மலேசியர், ஏழை மலேசியர் – மெர்டெக்கா இடைவெளி

கருத்து | சமீபத்திய வாரங்களில், தீவிர வறுமை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர், பிலிப் ஆல்ஸ்டனின் கூற்று சரியானதா அல்லது தவறானதா என்ற வாதத்தில் நாம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளோம்.

மலேசியாவின் முழுமையான வறுமை விகிதம் 0.4 விழுக்காடாக இருக்க முடியாது, அது 15 விழுக்காட்டை நெருங்கி இருக்கும் என்று ஆல்ஸ்டன் முடிவு செய்துள்ளார்.

உடனடியாக, பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி, அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த அறிக்கை பொறுப்பற்றது என்றும் நிராகரித்தார்.

அதே நேரத்தில், பிரதமர் டாக்டர் மகாதீர் கூறுகையில், அரசாங்கம் இந்தக் கோரிக்கையை ஆய்வு செய்யும் என்றும், புள்ளிவிவரங்களை மதிப்பாய்வு செய்யலாம் என்றும் கூறினார்.

ஆயினும்கூட, மகாதீர் அந்த அறிக்கையைக் கேலி செய்தார், “ஒருநாள் இங்கு வந்து, ஒரு பெரிய ஹோட்டலில் தங்கி, பின்னர் அறிக்கை வழங்குவோர் சுட்டிக்காட்டியதைப் போல இங்கு மோசமாக இல்லை,” என்றார்.

30 ஆண்டுகள் பணியாற்றியும், அதே RM 1,100 ஊதியம்தான்

கடந்த வார இறுதியில், தைப்பிங்கிற்கு அருகிலுள்ள ‘கேம்ப் பெராசானி’ல் , சுமார் 70 துப்புரவாளர்களுடனான நான் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சி தொடர்பாக கூற விரும்புகிறேன். இது 5 நட்சத்திர ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சி அல்ல, குறைந்த பட்ஜெட்டிலான ரிசோர்ட், கலந்துகொண்டவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள்.

இவர்கள்தான், எப்போதும் நெரிசலாகவே இருக்கும் நம் அரசு மருத்துவமனைகளைச் சுத்தமாக வைத்திருக்கப் பாடுபடும் தொழிலாளர்கள். அவர்களின் சம்பளம் என்ன என்று நான் கேட்டபோது, RM 1,100 வழங்கப்படுவதாகச் சொன்னார்கள். 30 ஆண்டுகளாகப் பணியாற்றும், அக்குழுவிலேயே மிக மூத்த ஒருவரிடம் கேட்டபோது, அவர் தந்த அதிர்ச்சியூட்டும் பதில் என்னவென்றால், அவரது சம்பளமும் RM 1,100 தான்.

அவர்கள் சேவைக் காலத்தைப் பொருட்படுத்தாமல், குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் அரசாங்கத்தால் அமர்த்தப்பட்ட ஒரு குத்தகையாளரின் கீழ் வேலை செய்கிறார்கள். நிரந்தரமான வேலைகளுக்கு, குத்தகை அடிப்படையிலான பணியாளர்களை நியமிப்பதை, மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) எப்போதும் எதிர்த்து வந்துள்ளது.

இது அமைப்பு முறையில் கையாளப்படும் அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகும். இது நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வேலை பாதுகாப்பு விதிமுறைகளுக்கும், மனித உரிமைகள் குறித்த உலகளாவிய பிரகடனத்திற்கும் எதிரானது.

அதன்பின்னர், நான் அவர்களின் சம்பளத்தை, உயர் சம்பளம் பெறும் அல்லது மலேசியாவில் தலைமை நிர்வாக அதிகாரிகளால் 2017-ஆம் ஆண்டில் பெறப்பட்ட வருமானத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். இந்த புள்ளிவிவரங்களை நான் பகிர்ந்து கொண்டபோது, அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வெறுப்பூட்டும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பளம்

இந்தப் புள்ளிவிவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் மற்றும் எஃப்.டி.எஸ்.இ புர்சா மலேசியா கே.எல்.சி.ஐ. குறியீட்டு பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டவை (மே 31, 2018 வரையிலான துல்லியமான விவரம்). இந்த அறிக்கை மிக உயர்ந்த நிறுவனங்களை உள்ளடக்கியது, பதிவை நேராகச் சொல்வதென்றால், இவை 2017 வருமான புள்ளிவிவரங்கள் மற்றும் முதல் பத்து பணக்காரர்களின் தரவு அல்ல, அவை நிச்சயமாக மிக அதிகமாக இருக்கும். இதை நாம் கூகிளில் தேடி தெரிந்துகொள்ளலாம்.

இவை 14-வது பொதுத் தேர்தலுக்கு முந்தைய ஊதியம் என்று நினைக்க வேண்டாம், 2018-ம் ஆண்டில், அதிக வருமானம் ஈட்டியவர்களின் வருவாய் 2017-ஐ விட இன்னும் அதிகமாக உள்ளது என்பதை நான் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். 2017-ம் ஆண்டின் சம்பளத்தை நான் ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்கிறேன், காரணம், 2018 அறிக்கையில் உள்ள சம்பளங்கள் மற்றும் போனஸ் ஆகியவை 2017-ம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் இல்லை.

உதாரணத்திற்கு, சைம் டார்பி தோட்டத்தை எடுத்துக்கொள்வோம் – ஒரு ஜி.எல்.சி. நிறுவனம் – அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ மொஹமட் பக்கே சல்லேவின் சம்பளம் மற்றும் சலுகைப் பணம் 2017-ல் RM7.8 மில்லியன் ஆகும். இது ஒரு மாதத்திற்கு RM 652,416 ஆக இருக்கும். இப்போது, இவரின் சம்பளத்தோடு, சைம் டார்பி தோட்டத்தில் வேலை செய்யும் ஒரு சாதாரணத் தொழிலாளியின் சம்பளத்தை ஒப்பீடு செய்யும் தைரியம் யாருக்காவது இருக்கிறதா?

இப்போது அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட (ஜி.எல்.சி.) மற்றொரு நிறுவனமான பெட்ரோனாஸை எடுத்துக் கொள்வோம்.

பெட்ரோனாஸ் கெமிக்கல்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ சஸாலி ஹம்சாவிற்கு அந்நிறுவனம், 2017-ம் ஆண்டிற்கான ஊதியமாக RM1,013,352-ஐ வழங்கியுள்ளது. இவரின் மாத வருமானம் RM 84,446 ஆக இருக்கும்.

அடுத்ததாக, இன்னும் இரண்டு ஜி.எல்.சி. நிறுவனங்கள், தங்கள் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு எவ்வளவு கொடுக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

2017-ம் ஆண்டில், மலாயன் பேங்க் பெர்ஹாட், அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அப்துல் ஃபாரிட் அலியாஸுக்கு RM2,400,000 சம்பளத்தையும், போனஸ் தொகை மட்டும் RM4,300,000-யும் வழங்கியது.

இப்போது அவரது மொத்த வருவாய் RM8.7 மில்லியன் என்று ஓர் அறிக்கை கூறுகிறது, இதை நான் மாத வருமானமாக உடைத்தால், ஒரு மாதத்திற்கு RM727,916 ஆக இருக்கும், மேலும் அதனை நான் தினசரி ஊதியமாகப் பிரித்தால், அது RM 24,000 ஆக இருக்கும்.

மின்சாரத்திற்கான மாதக் கட்டண உயர்வை முன்மொழிந்த தெனாகா நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம் என்ன தெரியுமா? மற்றொரு ஜி.எல்.சி. நிறுவனமான, அதன் தலைமை நிர்வாக அதிகாரி டந்தோ ஶ்ரீ அஸ்மான் பின் முகமட்டின், 2017-ம் ஆண்டிற்கான மொத்த சம்பளம் மற்றும் போனஸ் முறையே RM3,494,120 மற்றும் RM3,000,000 ஆகும்.

இதனுடன் பிற சலுகைகளும் சேர்க்கப்பட்டால், அவரது மொத்த ஆண்டு வருமானம் RM7,247,219 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, மொத்த மாத வருமானம் RM 603,935 என்றும் RM 20,131 தினசரி வருவாய் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டியவர், பப்ளிக் பேங்க் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி டான் ஸ்ரீ டத்தோ தேய் ஆ லெக் ஆவார். அவர் 2017-ம் ஆண்டில், RM27 மில்லியன் சம்பாதித்தார். அவரின் சம்பளம் RM11,079,000 மற்றும் அவருக்கு கிட்டத்தட்ட RM16 மில்லியன் (RM15,974,000) போனஸ் கிடைத்தது. 2017-ம் ஆண்டிற்கான அவரது மொத்த வருமானம் RM27.8 மில்லியன்.

ஆக, இவரின் மொத்த வருமானத்தை நாம் பிரித்து பார்த்தால், மாதந்தோறும் RM2.3 மில்லியன் அல்லது நாள் ஒன்றுக்கு RM77,000. யாரும் 24 மணிநேரமும் வேலை செய்வதில்லை, இருப்பினும் நாம் இதை 24 மணி நேரத்திற்குப் பிரித்து பார்த்தால், அவரது சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு RM 3,200-ஆக இருக்கும். இது நமது குறைந்தபட்ச சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகம்.

இப்போது, தலைமை நிர்வாக அதிகாரியின் ஒரு நாள் வருமானத்தை அரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் நம் துப்புரவு பணியாளர்களின் மாத வருமானத்துடன் ஒப்பிடுவோம்.

துப்புரவு பணியாளரின் 6 ஆண்டு சம்பளம் = சி.இ.ஓ.-வின் ஒருநாள் சம்பளம்

தலைமை நிர்வாக அதிகாரியின் ஒரு நாள் சம்பளத்தைப் பெற, நம் துப்புரவு பணியாளர்களுக்கு கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் பிடிக்கும், மேலும் அவரது ஒரு மாத சம்பளத்தைப் பெற 174 ஆண்டுகள் ஆகும்.

இதுவும் ஒருவகை ஒடுக்கப்படுதல்தானே? ஒவ்வொரு முறையும் நாம் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்த கோரிக்கைவிடும் போதும், இந்த ஏழைத் தொழிலாளர்கள் என்னவோ, நாட்டின் பொருளாதாரத்தையே அழிப்பது போல பெரும் எதிர்ப்பு கிளம்புகிறது. ஆனால், மலேசியாவில் அதிக, மில்லியன் கணக்கான ரிங்கிட் சம்பாதிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஜி.எல்.சி. நிறுவனங்களைச் சார்ந்தவர்கள். இது பகல் கொள்ளை அல்ல என்றால், வேறு எப்படி சொல்வது?

இந்தப் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, நமது வறுமை விகிதத்தைப் பற்றி விவாதிப்பது உண்மையில் தேவையா என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இனப் பிளவுகளைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோம், ஆனால், பணக்காரர் – ஏழை இடைவெளி கட்டுப்படுத்த முடியாததாகவே இன்றுவரை உள்ளது.

வறுமை மற்றும் குறைந்த ஊதியத்திலிருந்து, தொழிலாளர்கள் உண்மையான சுதந்திரத்தைப் பெறட்டும்.

அனைவருக்கும் மெர்டேக்கா வாழ்த்துகள்!!

எஸ் அருட்செல்வன் , பி.எஸ்.எம். தேசியத் துணைத் தலைவர்