உயர்ந்த வருமானமும் நெறியும் கொண்ட மலேசியாவை உருவாக்க, 56-வது மலேசியத் தினத்தில் உறுதி எடுப்போம்

மலேசியத் தினத்தின்  உண்மையான அர்த்தத்தையும் உன்னதத்தையும் உணர்ந்து மக்கள்  கொண்டாடும் அதே வேளையில், நம் முன்னோர்களின் இலட்சியங்களின் படி வாழ்ந்து காட்டுவதே மலேசியத் தினத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும்.

நமது முன்னோர், ஆசியா என்னும் பரந்த நிலப்பரப்பின் பலதரப்பட்ட அம்சங்களின் கலாச்சாரங்களின் பிரதிபலிப்பாக விளங்கும் வண்ணம், பெரிய கனவுடன் ஒற்றுமையின் சின்னமாக இந்நாட்டை உருவாக்கினார்கள்.  மலாயா என்ற அன்றைய சின்னஞ்சிறிய பல இன நாட்டுடன், சபா, சரவா மற்றும் சிங்கப்பூர் ஆகிய மாநிலங்களையும் இணைத்து மலாயா என்ற வார்த்தையுடன் சியா என்ற கூடுதல் பதம் சேர்த்து உருவாக்கியதே மலேசியா என்ற தேசம்.

ஆசியாவின் பல இன, சமய, மொழி மக்களைப் பிரதிபலிக்கும் வண்ணமே நமது முன்னோர்கள் நாட்டுக்கு மலேசியா என்று பெயர் சூட்டினர். அவர்களின் ஆசைகளைக் கனவுகளை நிறைவேற்றுவது இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்

ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற பல இன மலாயாவை, முதல் 5 ஆண்டுகளில் வெற்றிகரமாக வழிநடத்திய பின்பே, பற்பல இனம், மொழி, சமயத்தை ஒன்றுபடுத்திப் பிரதிபலிக்கும் வண்ணம் மலேசியா என்ற பெரியதொரு தேசமாக இந்நாடு மறு உருவாக்கம் செய்யப்பட்டு, முன் நடத்தும் பணியும் இந்நாட்டு மக்களிடம் ஒப்படைக்கப் பட்டது.

அப்படிப்பட்ட தேசத்தின் பெருமைகளுக்குச் சொந்தக்காரர்கள் நாம். என்பதனை உணர்ந்து அனைவரும், பல இன, சமய, கலாச்சாரக் கோட்பாடுகள் மேலும் சிறந்து ஓங்கவும்,  ஒற்றுமையில், செல்வ வளத்தில், ஒன்றுபட்ட உழைப்பில்  ஆனந்தம் அடைவோம், அனைவரும் இணைந்து 56-வது ஆண்டு மலேசியத் தினத்தை ஒற்றுமைத் தினமாகக் கொண்டாடுவோம்.

இந்த அற்புத வேளையில், நம் முன்னோர்கள் கஷ்டப்பட்டு ஒன்றிணைத்த தேசத்தின் பல இன, சமய மக்களின் ஒற்றுமையான வாழ்வுக்குக் கேடு விளைவிக்கும் வண்ணம், மலேசியாவில் ” உம்மா  ஒற்றுமை, முஸ்லிம் அல்லாதவரின் கடை, பொருட்கள் புறக்கணிப்பு” போன்ற கோசங்களும், கூச்சல்களும் ஆர்ப்பாட்டமும் நாட்டை அதன் வளத்தை நாசமாக்கும் செயலாகும் என்பதால்  அது கண்டிக்கப்பட வேண்டும்.

நாடு நீண்டகாலம் ஜனநாயக ஆட்சிமுறைக்குச் சரியான அடித்தளமிட்டுள்ள போது, தனது  ஆட்சிக் காலத்தில் நாட்டின் செல்வத்தைச் சூறையாடிய கட்சி, ஜனநாயக முறையில் தோல்வியடைந்தவர்கள் இன்று ”உம்மா  ஒற்றுமை” என்ற குறுகிய இனச் சமய ரீதியான கோட்பாட்டில் மக்களைத் திசை திருப்ப இனச் சமயப் பேதங்களை வளர்க்கவும் சூழ்ச்சி செய்துவருவதைக் கண்டிக்க வேண்டும். எல்லாவற்றையும் இனப் பாகுபாடு உணர்வுடன் நோக்கும் பாணி நாட்டில் துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்றார்.

மலேசியா போன்ற ஒரு பல இன நாட்டின்  அமைதி, நிலைத்தன்மை, சகோதரத்துவம் மற்றும் வளர்ச்சிக்கு மிக ஆபத்தாக முடியக் கூடியது இனச் சமய வாதங்கள். இப்படிப்பட்ட பிற்போக்குவாதங்களினால்  அழிந்து வரும் பல நாடுகளை நாம் கண்டு வருகிறோம். தவறியும் அந்த வரிசையில் நம்நாடு இடம் பெற விட்டுவிடக் கூடாது. இறுதியில் பிற்போக்கு வாதத்திற்கு அந்நாட்டு மக்களே பழியாகின்றனர். எந்த இனம், எந்த மதம் என்ற பாகுபாடின்றி எல்லா மக்களும் தோல்வியையே சந்திக்கின்றனர், சொந்த நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி, அடுத்த நாடுகளில் உணவுக்குக் கையேந்துவதும், கடலின் அகோரப் பசிக்கு  ஆகாரமானதுதான் மிச்சம்.

அதனால், எல்லா மக்களும் குறுகிய இன, மத வாதங்களும், வெறித்தனமும் அவரவரின் அறிவு ஆற்றலைத் தோற்கடிக்க இடம் கொடுத்து விடக் கூடாது. சகோதரத்துவம், உண்மை, நேர்மை, உழைப்பு என்ற நேர்த்தியான கோட்பாட்டின் படி நம் முன்னோர்கள் பெற்ற சுதந்திரத்தையும், அவர்கள் உழைப்பால், அறிவு ஆற்றலால் நிறுவிய முன்னேற்றகரமான மலேசியாவைப் பிற்போக்கு வாதங்களும், சூழ்ச்சிகளும், பேராசைகளும் அழித்துவிட இடமளித்து விடக் கூடாது.

அனைத்து இன மக்களும், தொடர்ந்து ஒற்றுமையாகப் பாடுபட்டு ஒரு உயர்ந்த வருமானமும், உயர்ந்த நெறியும் கொண்ட மலேசியத் தேசத்தை உருவாக்கப் பாடுபடுவோம். அதுவே நாம் நமது அடுத்த சந்ததிக்குச் செய்யும் சிறந்த சேவை, நமது பிள்ளைகளுக்கு நாம் விட்டுச் செல்லும் சொத்தாக இருக்க வேண்டும்.

டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

நீர், நிலம் மற்றும் இயற்கைவள அமைச்சர் , கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர், கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர்