எம்.ஆர்.எஸ்.எம் மாணவர்களுடன் துணையமைச்சர் ஆர். சிவராசா சந்திப்பு

“வெற்றிக்கான எனது பாதை இங்கே தொடங்குகிறது” என்றக் கருப்பொருளுடன் புறநகர் மேம்பாட்டு அமைச்சு மற்றும் மஜ்லிஸ் அமானா ரக்யாட் என்றழைக்கப்படும் மாரா நிறுவனத்தின் இணை ஏற்பாட்டில், கடந்த சனிக்கிழமையும் (07.08.2019) ஞாயிற்றுக்கிழமையும் (08.08.2019) மூவார், ஜொகூர் மற்றும் கோல கங்சார், பேராக் மாரா இளநிலை அறிவியல் கல்லூரிகளில் (எம்.ஆர்.எஸ்.எம்.) சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

மூவார் எம்.ஆர்.எஸ்.எம். கல்லூரி சந்திப்பு நிகழ்ச்சியில் மூவார், பத்து பகாட், முஹாட்ஷாம் ஷா, ஜோகூர் பாரு, மெர்சிங், தெரெண்டாக், துன் டாக்டர் இஸ்மாயில் ஆகியக் கல்லூரிகளில், படிவம் 1 பயின்று வரும் 64 மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

கோல கங்சார் எம்.ஆர்.எஸ்.எம்.-இல், கோல கங்சார், பாரிட், பாலிங், சுல்தான் அஹ்லான் ஷா, பெங்காலான் உலு, கிரிக், லெங்கோங், பாசீர் சாலாக், துரோலாக் ஆகியக் கல்லூரிகளில் படிவம் 1 பயின்று வரும் 42 மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பு நிகழ்ச்சி பெற்றோர் மற்றும் மாணவர்களுடனான ஒரு நாள் கலந்துரையாடல் நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை ஒன்பது மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சியில், மாரா இளநிலை அறிவியல் கல்லூரி கல்வித் திட்டத்தின் நன்மைகள், மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் மாணவர்களை 21-ஆம் நூற்றாண்டு சவால்களுக்குத் தயார்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. மாணவர்களுக்கான பயிற்சியில் அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் அதனை எதிர்காள்ளும் வழிமுறைகளும், மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அடிப்படை கூறுகள் குறித்தும் அவர்களுடன் பேசப்பட்டது.

இவ்விரு சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கும் புறநகர் மேம்பாட்டு துணையமைச்சர் ஆர். சிவராசா நேரடியாக வருகையளித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறிய கருத்துகளைச் செவிமடுத்து அதற்கு ஆவனச் செய்வதாகக் கூறினார்.

குறிப்பாக, மாணவர்களுக்கான தயார்நிலை வகுப்புகளுக்கான நேரம், தமிழ் வகுப்பு, கோவிலுக்குச் செல்வதற்கான வாய்ப்பு, ஐந்தாம் படிவம் முடித்த பிறகு மாணவர்கள் மேற்கல்வி தொடர்வதற்கான வாய்ப்புகள் போன்றவை முக்கியமாக விவாதிக்கப்பட்டன.

பெற்றோர்கள் இப்படியான சந்திப்புகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். 2019-ஆம் ஆண்டில்தான் அதிகமான இந்திய மாணவர்கள் எம்.ஆர்.எஸ்.எம்.-இல் இணைந்து பயில்வதற்கான வாய்ப்பினைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஆர்.எஸ்.எம். கல்லூரிகளில், அனைத்துலகத் தரத்திலான கல்விச் சூழலில், முழு தங்கும் வசதியுடன் கல்வி பயில்வதற்கான வாய்ப்பினை இந்திய மாணவர்களும் தற்போது பெற்றுள்ளனர். எம்.ஆர்.எஸ்.எம். கல்லூரிகளில் 2020-ஆம் கல்வி ஆண்டுக்கான பதிவு தற்போது திறக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தங்களின் UPSR தேர்வினை எழுதியுள்ள மாணவர்களும் PT3 தேர்வெழுதவுள்ள மாணவர்களும் தங்களின் மாதிரி தேர்வு முடிவுகளைக் கொண்டு https://mrsm.mara.gov.my/mymrsm/frmLoginF1.aspx அல்லது https://mrsm.mara.gov.my/mymrsm/frmLoginF4.aspx என்ற அகப்பக்க முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை நிறைவு செய்தபின் அதன் நகலினை [email protected] மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.