தேர்தல் காலத்து வாக்குறுதிகள் வெறும் ஏட்டில் எழுதிய மைதான். அதனை கட்டாயம் நிறைவேற்றவோ அல்லது அமல்படுத்தவோ வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்பதை மீண்டும் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) அரசாங்கம் நிரூபித்துவிட்டது.
நாட்டின் 14-வது பொதுத் தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், ஆட்சி அரியணை ஏறி ஓராண்டில் கேள்விக்குறிகளாய் தொடரும் அவலமாய், நம்பி வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே விளங்குகிறது.
கடந்தப் பொதுத் தேர்தலில், இளம் தலைமுறையின் பங்களிப்பும் அவர்களின் ஆதரவும் பிஎச் கூட்டணியின் வெற்றிக்குப் பெரும் பங்காற்றியது. இளம் தலைமுறையினரின் சிந்தனை மாற்றமே, நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது, அம்னோ-பிஎன் ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்டது. இது மலேசிய அரசியலில் பெரும் வரலாற்று நிகழ்வு என்பதை மறுத்திட இயலாது.
அம்னோ-பிஎன் ஆட்சியில் இளம் தலைமுறையினரின் குரல்கள் நெறிக்கப்பட்டன. அவர்கள் உரிமைக்காக தங்களின் கைகளை உயர்த்தும் போது, அஃது வெட்டியெறியப்பட்டது. குறிப்பாக, உயர்க்கல்வி கூடங்கள், பல்கலைக்கழக மாணவர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. அவர்களின் பேச்சு உரிமையும் செயல்பாடுகளும் தடுக்கப்பட்டதை நாடே அறியும்.
மேலும், பட்டதாரிகளுக்கு வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி கடன் உதவி என இளம் தலைமுறையினரின் துயரங்கள் தொடர்கதையானது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இளம் தலைமுறைக்குக் கொடுக்கப்பட்ட நெறுக்குதலும் அவர்கள் மீது திணிக்கப்பட்ட அழுத்தங்களும் வெடித்து சிதறியபோது நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் அரசியல் மாற்றம் விஸ்பரூபம் எடுத்தது.
அன்றைய நடப்பு அரசாங்கம் இளம் தலைமுறையின் மீது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்ட நிலையில், எதிர்கட்சியான பிஎச் இளம் தலைமுறையினருக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. தங்களுக்காக குரல் கொடுக்கும் பிஎச் மீது இளம் தலைமுறையின் கவனம் திரும்பியது.
உயர்க்கல்விக் கூடம், பல்கலைக்கழகம் என எங்கெல்லாம் இளம் தலைமுறையினரின் குரல் நசுக்கப்பட்டதோ, அங்கெல்லாம் அம்னோ-பிஎன்’னுக்கு எதிராக துணிந்து குரல் கொடுக்க இளம் தலைமுறை முன் வந்தது, ஆளும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக, அவர்களின் கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இளம் தலைமுறையினரால் உடைத்தெறியப்பட்டது.
இளம் தலைமுறையின் அந்த ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் தான் ஒவ்வொரு குடும்ப ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அரசியல் சிந்தனை மாற்ற எழுச்சியாய் எழுந்தது எனலாம். ஒரு நாட்டின் வரலாற்றையேத் திருப்பி போட்ட இளம் தலைமுறையின், எழுச்சிகரமான சிந்தனையை அரசியல் ரீதியில் சாதகமாக்கிக் கொள்ள, அன்றைய எதிர்க்கட்சியான பிஎச் கொடுத்த வாக்குறுதிகள் இளம் தலைமுறையினருக்கு பெரும் நம்பிக்கையாகவும் மாபெரும் உந்துசக்தியாகவும் விளங்கியது.
பிஎச்-இன் நம்பிக்கையான வாக்குறுதிகளை நம்பி, அரசியல் ரீதியில் இளம் தலைமுறை மாபெரும் மாற்றத்தை வித்திட களமிறங்கியது. இலவசக் கல்வி, வேலையில்லாத் திண்டாட்டத்திற்குத் தீர்வு, பிடிபிடிஎன் பிரச்னைக்குத் தீர்வு, கருப்பு பட்டியலில் இருந்து நீக்கம் போன்ற வாக்குறுதிகள், பிஎச் ஆட்சியில் அமர்ந்து ஓராண்டை எட்டிய நிலையிலும்; இன்னமும் கிணற்றில் போட்டக் கல்லாய் கிடக்கிறது.
நாட்டின் 14-வது பொதுத் தேர்தலின் போது, இலவசக் கல்விக்காக குரல் கொடுத்தவர்களை காணவில்லை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்றவர்களும் மௌனமாகிப் போனார்கள், பிடிபிடிஎன் கடன் பிரச்னைக்குத் தீர்வு, கருப்புப் பட்டியலில் இருந்து நீக்கம் எனப் பேசியவர்கள் கண்டும் காணாமல் போய்விட்டனர்.
கல்விக் கடன் உதவி (பிடிபிடிஎன்) பெற்றவர்கள் மீண்டும் விடாது துரத்தும் கருப்பு என்பது போல் துயரத்தில் மூழ்கிவிட்டனர். ஆட்சி மாற்றத்திற்கு நம்பிக்கையோடு போராடிய இளம் தலைமுறை ஆட்சி மாறியும் எங்களின் காட்சி மாறவில்லையே என புலம்பிக் கொண்டிருக்கிறது. பிடிபிடிஎன் விவகாரம் மீண்டும் இளம் தலைமுறைக்கு அச்சுறுத்தலாக விஸ்பரூபம் எடுத்து வருகிறது என்றால் அதனை ஒப்புக் கொள்ளதான் வேண்டும்.
தொடக்கத்தில், பிடிபிடிஎன் கடனாளிகள் RM 4,000 ஊதியமாகப் பெறும்போது மட்டுமே அதனைத் திருப்பி செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்தது. நிஜத்தில் இது ஏற்புடையதாகவும் விவேகமானதாகவும் அமைந்திருந்தது.
பிடிபிடிஎன் கடன் செலுத்தாதவர்கள், கருப்புப் பட்டியலில் இருந்து கட்டங்கட்டமாக நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒராண்டு முடிவதற்குள் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல், மீண்டும் நாட்டில் பிடிபிடிஎன் பிரச்னை தலைத்தூக்கத் தொடங்கி விட்டது.
கல்விக் கடனைத் திருப்பி செலுத்த, RM 4,000 ஊதியம் என்று வரையறுத்த அரசாங்கம், அதனை RM 1,000-ஆகக் குறைத்தது. ஆயிரம் வெள்ளி ஊதியம் பெறுவோர் பிடிபிடிஎன் கடனைத் திருப்பி செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்வது இளம் தலைமுறையின் கழுத்தை நெரிப்பதற்கு ஈடானது. இதற்கு எதிராக, கல்விக்கடன் பெற்றவர்களும் உயர்க்கல்வி மாணவர்களும் இலவசக் கல்விக்குக் கோரிக்கை விடுவோரும், கவன ஈர்ப்பு போராட்டத்தில் குதித்ததையும் நாடு மறந்திருக்காது.
அரசின் இந்த நிர்பந்தத்திலிருந்தே இன்னும் மீளாத நிலையில் பிடிபிடிஎன் கடனைச் செலுத்தாதவர்களை மீண்டும் கருப்பு பட்டியலில் சேர்க்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் அறிவித்திருப்பது ஏற்புடையதாக இல்லையெனலாம். அம்னோ-பிஎன் காலத்தில் எதிர்க்கப்பட்ட ஒன்றுக்கு, மீண்டும் உயிர்கொடுப்பது இளம் தலைமுறையின் நம்பிக்கைக்குச் சாவு மணி அடிப்பது போல் அமைந்துள்ளது.
இலவசக் கல்வி என முழங்கியவர்கள், மீண்டும் கல்விக் கடன் பெற்றவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என அறிவித்திருப்பது தேர்தல் வாக்குறுதிக்கு எதிரானதாக அமைந்துள்ளது. கொடுத்த வாக்குறுதியைப் பிஎச் காப்பாற்றத் தவறிவிட்டது. அதேவேளையில், கடப்பிதழ், வாகன உரிமம், வியாபார உரிமம், ஓட்டுநர் உரிமம் ஆகியவைகளைப் புதுப்பிப்பதற்கு எதிராக தடைவிதிக்கவும் பிடிபிடிஎன் நிர்வாகம் ஆலோசித்து வருவதாகவும், அதன் துணை இயக்குநர் ஒருவர் கூறியிருப்பது துளியும் அறிவுக்கு எட்டாத ஒன்றாகவே அமைந்துள்ளது.
தனி மனித உரிமைகளையும் அவர்களின் அத்தியாவசியங்களையும் கட்டாயமாகப் பறித்து, அதன் மூலம் பிடிபிடிஎன் கடனை வசூலிக்க முனைவது அறிவுக்கு ஒவ்வாத ஒன்று. ஆக்கப்பூர்வமான வழியில் கடனை திரும்ப பெற சிந்திக்க வேண்டும். அதைவிடுத்து, இதுபொன்ற வழிகளில் வசூல் செய்ய நினைப்பது நாட்டில் பாதகமான சூழலை உருவாக்கும் என்பதை நினைவுறுத்த வேண்டியுள்ளது.
நாட்டின் கடனை காரணம் காட்டி, பிடிபிடிஎன் கடன் பெற்றவர்கள் மீது சுமையைத் திணிப்பது அர்த்தமற்றது, அரசாங்கத்தின் நிர்வாகத்திறன் அற்ற போக்கையே இது காட்டுகிறது. பிடிபிடிஎன் கடன் பெற்று கல்வியை முடித்தவர்களுக்கு வேலை இல்லை, வேலை செய்தாலும் காலத்திற்கு ஏற்ற ஊதியம் இல்லை. இந்நிலையில் கடனைத் திரும்பச் செலுத்த கட்டாயப்படுத்துவது, அரசாங்கத்தின் மீது அதிர்ப்தியையும் நம்பிக்கை இல்லா சூழலையும் உருவாக்கிவிடும்.
பிடிபிடிஎன் கடனைத் திரும்பப் பெறுவதன் மூலம், 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நன்மை அடைவார்கள் எனக் கூறப்பட்டாலும், கடனைத் திரும்பப் பெறுவதில் காட்டும் முனைப்பும் அக்கறையும் இலவசக் கல்வி எனும் இலக்கை நோக்கி பயணிக்காதது வேதனையாக உள்ளது.
பாக்காத்தான் ஹராப்பானின் இலவசக் கல்வி எனும் தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று? இளையர்களுக்குச் சாதகமான இந்த வாக்குறுதிகளை முழங்கியவர்களில் மிக முக்கியமானவர்களான நூருல் இசா அன்வார் மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சிட்டிக் ஆகியோர் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்களா? நாட்டின் நம்பிக்கையும் எதிர்காலமும் இளம் தலைமுறையினர்தான். ஆனால், அவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் அழுத்தங்கள் அவர்களின் வாழ்வதாரத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருவதை அரசாங்கம் சீர்த்தூக்கிப் பார்க்க வேண்டும்.
இதற்கிடையில், கல்வி அமைச்சர் மற்றும் பிடிபிடிஎன் வாரியத்தின் இயல்பிற்கு ஒத்துவராத ஆலோசனைகளுக்கும் பரிந்துரைகளுக்கும் எதிராக, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் பி இராமசாமி குரல் கொடுத்திருப்பதோடு; அதனைக் கண்டித்திருப்பதும் இளம் தலைமுறையினர் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது. பிஎச் அரசாங்கம் இன்னமும், முந்தைய அரசாங்கத்தின் பாணியையும் அவர்களது விதிமுறைகளையும் தொடர்வது ஏற்புடையதல்ல எனவும் இராமசாமி கல்வி அமைச்சுக்கு நினைவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இலவசக் கல்விக்கு நாட்டில் சாத்தியமான சூழல் உருவாகும் என இதற்கு முன்னர் நம்பிக்கையான வார்த்தைகளை உதிர்ந்திருந்த அன்வார் இப்ராஹிம், பிடிபிடிஎன் கடன் பெற்றவர்களுக்குப் பெரும் அழுத்தங்களைக் கொடுக்காதீர்கள் என வேண்டுக்கோள் விடுத்திருப்பதும், இளம் தலைமுறையினர் மத்தியில் சிறு நம்பிக்கையையும் ஆறுதலையும் ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
இதுவரை கொடுக்கப்பட்ட RM 5,600 கோடி கடனில் RM 840 கோடி மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும்; இதற்கு முன்னர் தடை விதிக்கப்பட்ட காலக்கட்டத்தில் மட்டும் 6 இலட்சம் பேர் தங்களின் கடனைத் திருப்பி செலுத்தியுள்ளதாகவும் கூறும் பிடிபிடிஎன் நிறுவனம், இக்கடன் சுமை 20 ஆண்டுகளில் RM 7,600 கோடியாக விஸ்வரூபம் எடுக்கும் எனவும் கூறுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், நாட்டின் கடனை அடைக்க மக்கள் தங்களின் பங்களிப்பைத் ‘தாபோங் ஹராப்பான்’ மூலம் வழங்கிய நிலையில், நாட்டின் அரசியல் மாற்றத்திற்கு வித்திட்ட இளம் தலைமுறைக்கு அரசாங்கத்தின் பங்களிப்பு என்னவெனும் கேள்வியும் எழுகிறது.
பிடிபிடிஎன் கடனை முழுமையாகவோ அல்லது ஒரு குறிப்பிட்டத் தொகையையோத் தள்ளுபடி செய்ய அரசாங்கம் முன் வரவேண்டும். அல்லது, திருப்பி செலுத்துவதற்கு சில சலுகைகளை வழங்கிட வேண்டும். மேலும், கடன் பெற்று படித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு அரசாங்கம் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி, அதன் மூலம் அவர்கள் கடனைத் திருப்பி செலுத்த வழி செய்ய வேண்டும். அதுவும் இல்லாவிட்டால், இலவசக் கல்விக்கு வித்திட்டு பிடிபிடிஎன் கடனை முற்றாக ஒழித்திடல் வேண்டும்.
பெல்டாவைக் கடனிலிருந்து மீட்க, அதன் கடனைத் தள்ளுபடி செய்ய அரசாங்கம் ஆலோசித்து வரும் நிலையில், கல்விக் கடன் பெற்ற நாட்டின் எதிர்கால சமூகத்திற்கு எதிராக, பெரும் அழுத்தத்தையும் சுமையையும் திணிப்பது ஏன்? பிடிபிடிஎன் கடனை தள்ளுபடி செய்து இளம் தலைமுறையின் வாழ்வில் ஒளியேற்ற அரசாங்கம் முன் வரலாமே? வாழ்க்கை தொடங்குவதற்கு முன்னரே கடனாளியாக மாறும் இளம் தலைமுறையினரின் வாழ்வாதார நிலைக்கு அரசாங்கத்தின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு என்ன?
பிடிபிடிஎன் விவகாரத்தில் அரசாங்கம் கடுமையான பிடிவாதத்தையும் கெடுபிடியையும் கொண்டிருக்ககூடாது. அந்நிலை நீடித்தால் இளம் தலைமுறைகளின் கோபங்கள் வெடித்து சிதறினால், மீண்டும் அரசியல் புரட்சி நாட்டில் வெடிக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. அறுபது ஆண்டுக்கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த மலேசியர்களுக்கு, 5 ஆண்டு ஆட்சிக்கு முடிவுக்கட்டுவது சிரமமான காரியம்மல்ல என மக்களின் முணுமுணுப்பிற்கு அரசாங்கம் கவனமாய் செவிசாய்க்க வேண்டியுள்ளது என்பதை நினைவுறுத்ததான் வேண்டும்.
‘புதிய அரசாங்கம், பழைய பாணி’ , ‘மாறியது அரசாங்கம் மட்டுமே, கொள்கையும் திட்டங்களும் அல்ல’ என்பது போன்ற அரசியல் ரீதியிலான மக்களின் பார்வை தொடர்வது பிஎச் அரசாங்கத்திற்கு ஒரு பின்னடைவு.
பிஎச் அரசாங்கம் முன்னெடுக்கும் ஒவ்வொரு விடயமும் எதிர்க்கட்சிகளால் மிக அணுக்கமாக கண்காணிக்கப்படுகிறது. அவ்வகையில், பிடிபிடிஎன் விவகாரத்தில் பிஎச் அரசாங்கத்தின் நடவடிக்கைகள், எதிர்க்கட்சியினரின் அரசியல் பேசு பொருளாக உருமாறி, தகவல் ஊடகங்களில் அரசாங்கத்திற்கு எதிராக பரவி வருவதை காணமுடிகிறது.
அதேவேளையில், பாக்காத்தான் ஹராப்பானின் ஆதரவாளர்கள் கூட அரசாங்கத்தின் போக்கினை சாடும் நிலை உருவாகியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. மக்களின் நம்பிக்கையையும் அவர்களின் செல்வாக்கையும் தொடர்ந்து தற்காத்துக் கொள்ள பிஎச் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.
ஒவ்வொரு முறையும் கல்வி கடனுதவி பெற்றவர்கள் வீதியில் போராடும் நிலைக்கு தள்ளப்படுவது அரசியல் ரீதியில் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்கும். உலகில் அண்மையக்காலமாய் வெடித்த போராட்டங்களும் எழுச்சிகளும் பல்வேறு மாற்றங்களும், இளம் தலைமுறை வீதியில் களமிறங்கியதிலிருந்தே தொடங்கியது என்பதைப் பக்காத்தான்