சட்டம் இன்னமும் இருட்டறையில்தான் – இராகவன் கருப்பையா

பாரிசான் ஆட்சியின் போது, குறிப்பாக நஜிப் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் நீதித்துறையில் குளருபடிகள் நிறையவே இருந்தன, அது அனைவரும் அறிந்த ஒன்றே.

தான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேல், சட்டத்துறை தலைவராக இருந்த காலத்திலும், பிறகு தான்ஸ்ரீ முஹமட் அஃப்பாண்டி அப்பதவியில் இருந்த போதும், நஜிப்பை எதிர்த்தவர்கள் மற்றும் எதிர்கட்சியினருக்கு எதிராகத்தான், பல தருணங்களில் சட்டம் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டது. எம்மாதிரியான குற்றமாக இருந்தாலும் அரசு சார்பானவர்களுக்கு எதிராக பல வேளைகளில் எவ்வித சட்டமும் பாயவில்லை. பில்லியன் கணக்கில் அரசாங்கப் பணத்தைப் பல பேர் சுருட்டுவதற்கு இத்தகைய போக்கு ஏதுவாக இருந்ததையும் மக்கள் நன்றாகவே அறிவர்.

எனினும், பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் கீழ், இம்மாதிரியான பாரபட்சத்திற்கு எல்லாம் இடமில்லை, சட்டம் இனிமேலும் இருட்டறையில் உறங்காது என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்குக், கடந்த சில மாதங்களாக பெருத்த ஏமாற்றமே.

புதிய சட்டத்துறைத் தலைவராக நியமனம் பெற்ற தோம்மி தோமஸ், தொடக்க காலத்தில் இன ரீதியான சில எதிர்ப்பு அலைகளை எதிர்நோக்கியப் போதிலும், முதல் ஓராண்டில் பாரபட்சமின்றி சிறப்பாகவே தமது பணிகளை மேற்கொண்டார். ஆனால், அண்மையக் காலமாக அவருடைய அலுவலகம் செய்யும் முடிவுகளை வைத்துப் பார்த்தால் அவர் நடுநிலையாக செயல்பட முடியாத அளவுக்கு அரசாங்கத் தலையீடு இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கூட, தற்போது சற்று சுணக்கம் கண்டுள்ளதைப் போல் தெரிகிறது. பாரிசான் ஆட்சியின் போது நஜிப், ரோஸ்மா, அஹமட் ஸாஹிட், அப்துல் அஜிஸ், தெங்கு அட்னான் மற்றும் இசா சாமாட் போன்ற சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் உத்தமர்களா? வேறு யாரும் ஊழல் புரியவில்லையா? ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்பதைப் போல் அரசியல் தலையீடு மீண்டும் தொடங்கிவிட்டதோ?

பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலியைத் தொடர்புப்படுத்தி செக்ஸ் வீடியோ ஒன்று வெளியான போது, மலேசிய அரசியல் வானில் பெரிய பூகம்பமே வெடிக்கும் போல் தோன்றியது. அந்தக் காணொலியில், அஸ்மின் அலி இருப்பதாகத் தெரியவில்லை எனப் போலீஸ் தனது விசாரணை முடிவை அறிவித்த போதும்,  அவருடன் ஓரினப் பாலுறவில் ஈடுபட்டு, அதனை வீடியோவில் பதிவு செய்தேன் என் அஸிக் அப்துல் அஸிஸான் எனும் ஓர் இளைஞர் பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டார். கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட போதிலும் இதுநாள் வரையில் அவர் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் இல்லை. என்ன காரணம். அஸிக் மூலத்தொழில் துணையமைச்சர் ஷம்சுல் இஸ்கண்டாரின் அப்போதைய அந்தரங்கச் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாக்கிர் நாயக்கிற்கு வலது கரம் போல் செயல்படும் ஸம்ரி விணோத் என்பவர், இந்து மதத்தை அவலப்படுத்தி பேசியக் காணொலி ஒன்று சமுக வலைத்தளங்களில் பெரிய அளவில் பகிரப்பட்டது. அதன் தொடர்பாக, நாடு முழுவதும் அவருக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன. போலீஸ் அவரை விசாரித்ததோடு சரி, எவ்வித தொடர் நடவடிக்கையையும் காணோம்.

அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது எனச் சட்டத்துறை அலுவலகம் அண்மையில் செய்த அறிவிப்பினால் ஒட்டு மொத்த மலேசிய இந்துக்களும் கொதிப்படைந்துள்ளனர். ஜாக்கிர் நாயக்தான் நாட்டின் செல்லப் பிள்ளையென்றால் அவரைச் சார்ந்தவர்களுக்கும் அதே சலுகைதானா? இந்து மதத்தை அவர் தொடர்ந்து இழிவுபடுத்தி பேசுவதற்கு இது மேலும் ஊக்கமளிப்பதாக அல்லவா உள்ளது! அதோடு உள்நாட்டுக் கல்லூரி ஒன்றில் அவர் மதப்பிரச்சாரம் செய்யும் காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது மேலும் ஆச்சரியமாக உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து தப்பி ஓடிவந்து இங்கு ஒளிந்துகொண்டிருக்கும் ஜாக்கிர் நாயக், இந்து மதத்தையும் கிருஸ்துவ மதத்தையும் மட்டுமே இழிவு படுத்தி பேசி வந்தார். அவருக்கு எதிராக பல புகார்கள் செய்யப்பட்டும் கூட பாரிசான் அரசாங்கம் அவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கி பாதுகாத்ததேத் தவிர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குளிர்விட்டுப் போய் திரிந்த அவருக்குப், பாரிசான் அரசாங்கம் வழங்கிய அரச மரியாதையையும் சலுகைகளையும் பக்காத்தான் அரசும் தொடர்ந்ததுதான் ஆச்சரியத்திலும் அதிசயம்.

 

இத்நிலையில் இனங்களுக்கிடையேப் பிளவை ஏற்படுத்தும் வகையில் அண்மையில் சீனர்களையும் தாழ்த்திப் பேசி, அந்தச் சமூகத்தினரின் கோபத்தையும் சம்பாதித்துக்கொண்டார் ஜாக்கிர். அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான போலீஸ் புகார்கள் செய்யப்பட்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

போலீஸ் அவரை அழைத்து மணிக்கணக்கில் துருவித் துருவி விசாரித்ததேத் தவிர அவருக்கு எதிராக இன்று வரையில் எவ்வித குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. இதற்கு என்ன காரணம்? பொது இடங்களில் உரை நிகழ்த்தக்கூடாது என்ற நிபந்தனை மட்டும்தான். வெள்ளிக்கிழமைகளில், அழைப்பின் பேரில் சிறப்புக் கூட்டுத் தொழுகைகளில் கலந்துகொள்ளும் அவர் தொழுகைகளுக்குப் பிறகு தனது திருவாயை மூடிக்கொண்டா இருப்பார்? மற்ற இனங்களை இழிவு படுத்துவது அவருக்கு கைவந்த கலையாயிற்றே!

இதற்கிடையே அண்மையில் நடந்தேறிய ஒரு துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது கூட சட்டம் எங்கே போய் ஒளிந்துகொண்டது எனத் தெரியவில்லை. கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவரையும் மற்றொரு நபரையும் பத்து அராங் பகுதியில் விரட்டிச் சென்று சுட்டுத்தள்ளிவிட்டோம் என்று போலீஸ் மார்தட்டிக்கொண்டது நம் நினைவிலிருந்து இன்னும் அகலவில்லை.

ஆனால், மாண்டவர்களின் குடும்பத்தினரோ வேரொரு கதையை முன் வைக்கின்றனர். லண்டனில் வசிக்கும் மகளும் மருமகனும் தங்களைப் பார்க்க 3 பிள்ளைகளுடன் கோலாலம்பூர் வந்தனர் என்றும், அவர்கள் எப்படி போலீஸ் பார்வையில் குற்றவாளிகளாகத் தென்பட்டனர் எனவும், வயதான பெற்றோர் கதறி அழுவது நமது நெஞ்சை உலுக்குகிறது. சம்பவத்தின் போது அந்தக் காரில் தங்களுடைய மகள் இருந்ததாகவும், இதுநாள் வரையில் அவரைக் காணவில்லை என்றும் அவர்கள் குமுறுகின்றனர். ஆனால், அப்படிப்பட்ட பெண் யாரும் காரில் இல்லை என போலீஸ் வாதிடுவது ஆச்சரியமாக உள்ளது. யாரைக் காப்பாற்ற இந்த ‘டிராமா’ என்றுதான் தெரியவில்லை. பொது மக்களுக்கு எதிரான இத்தகையப் போலீஸ் அராஜகம் இந்நாட்டில் புதிதான ஒன்றல்ல என்பதும் நமக்கு நன்றாகவேத் தெரியும்.

ஆக, பக்காத்தான் அரசாங்கம் சட்டத்தை தங்களுக்கு ஏற்றவாறு வளைத்து பந்தாடி களிப்படையாமல் இருப்பது மிகவும் அவசியம். கடந்த ஆண்டு மே மாதம் புதிய மலேசியாவுக்கு வித்திட்ட நாட்டு மக்களின் சினத்தைச் சீண்டி பார்க்காமல், சட்டம் அனைவருக்கும் சமமே என்ற கோட்பாட்டுக்கு உரமிட வேண்டும்.