இந்தியச் சட்டத்துறையின் பிடியிலிருந்து நழுவிவந்து மலேசியாவில் பதுங்கியிருக்கும் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாக்கிர் நாயக்கைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி துன் டாக்டர் மகாதீரை வலியுறுத்தியதாக இரு நாட்டு ஊடகங்களும் அண்மையில் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன.
ஆனால், உண்மையில் நடந்தது என்ன? மர்மம் இன்னும் நீடிக்கிறது!
இரஷ்யாவில் நடைபெற்ற கிழக்கு மண்டலப் பொருளாதார மாநாட்டின் இடைவெளியில், மோடியும் மகாதீரும் தனிப்பட்ட முறையில் சந்தித்துக்கொண்டனர்.
ஜாக்கிரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு, மகாதீரை மோடி கேட்டுக்கொண்டார் என இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் விஜய் கோக்கல் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இரு நாட்டு அதிகாரிகளும் அது குறித்து பேச்சு வார்த்தை நடத்துவர் என்றும் விஜய் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
இந்திய ஊடகவியலாளர்கள் எந்த ஒரு செய்தியையும் பரபரப்பாக மாற்றுவதில் வல்லவர்கள். குறிப்பாக, மலேசியா ஜாக்கிரை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்றக் கோரிக்கை தொடர்பாக, கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் வெளியிட்டுவரும் செய்திகளில் உண்மை நிலவரங்கள் மிகவும் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.
இரஷ்யாவில், ஜாக்கிர் தொடர்பாக மோடி மிகவும் சாதாரணமாகவேப் பேசியதாகவும் காஷ்மீர் விவகாரம் சம்பந்தமாகத்தான் இரு தலைவர்களும் விரிவாக கலந்தாலோசித்தனர் என்றும் மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுடின் அப்துல்லா கூறினார். மேலும், ஜாக்கிர் பற்றி மகாதீர் ஒன்றுமே கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டது நமக்கு வியப்பாகவே உள்ளது.
‘ஜாக்கிருக்கு உங்கள் நாட்டில் நீதி கிடைக்காது. அங்கு அவருடைய உயிருக்கு ஆபத்து. அதனால் உங்கள் நாட்டுக்கு அவரை திருப்பி அனுப்ப மறுக்கிறோம், அது எங்களுடைய உரிமை,’ என மோடியிடம் நறுக்கு தெரித்த மாதிரி மகாதீர் நேரடியாகவே கூறியிருக்கலாமே! ஏன் மெளனம் சாதித்தார்? அப்படியானால் அத்தகைய வீர வசனம் எல்லாம் உள்நாட்டில் மட்டும்தானா?
ஆக, இரஷ்யாவில் அந்த 4 சுவருக்குள் ஜாக்கிர் சம்பந்தமாக என்னதான் நடந்தது என இரு நாட்டுத் தலைவர்களும் நேரடியாக கருத்துரைக்காத வரையில், நம்மை பீடித்திருக்கும் ‘ஜாக்கிர் நாயக்’ எனும் ஒரு தலைவலி நம்மை விட்டு இப்போதைக்கு விலக வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
எனவே இந்திய ஊடகங்களின் செய்திகளைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைவதிலும் அர்த்தமில்லை.
இதற்கிடையில், ஜாக்கிரை இங்கு பதுக்கி வைத்திருப்பதால் மலேசியாவுக்கு ஏற்படக்கூடிய மிகப்பெரிய ஒரு பாதகமான விளைவு குறித்து ‘புளும்பெர்க்’ எனப்படும் அனைத்துலகச் செய்தி நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் வெளியிட்டிருந்த அனுமானம் இப்போது பலித்துவிட்டது.
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெய்க்கான வரி விகிதத்தில், 5 விழுக்காடு சிறப்பு கழிவை இந்தியா இதுநாள் வரையில் அமல்படுத்தியிருந்தது.
ஆனால், மலேசியாவுக்கு மட்டுமான அந்தச் சிறப்பு சலுகையை இந்திய வர்த்தகத்துறை அமைச்சு இம்மாதத் தொடக்கத்தில் மீட்டுக்கொண்டது. இதனால், அந்நாட்டுக்கான மலேசிய செம்பனை எண்ணெய் ஏற்றுமதியில் ஏற்படக்கூடிய பெரும் பாதிப்பு நமக்கு கவலையை அளிக்கிறது.
இவ்வாண்டு முதல் 7 மாதங்களில் மலேசியாவிடமிருந்து இந்தியா மொத்தம் 3 மில்லியன் டன் செம்பனை எண்ணெய்யை இறக்குமதி செய்திருந்தது. இதன் அளவு இனி கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செம்பனை எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டால், மலேசியப் பொருளாதாரம் நேரடியாகவேப் பாதிப்புக்கு உள்ளாகும் என்பது நாம் அறிந்த ஒன்றே. துரதிர்ஷ்டவசமாக மலேசியப் பொருளாதாரம் தற்போது மோசமான ஒரு காலக்கட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும்.
இந்நிலையில், பயங்கரவாதி எனப் பல உலக நாடுகளால் முத்திரைக் குத்தப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய ஒரு மனுசனுக்கு, இங்குப் புகலிடம் கொடுத்திருப்பது, ‘வழியில் கிடந்த கோடரியைத் தூக்கிக் காலில் போட்டுக்கொண்ட’ கதைதான்.
இதனைக் கருத்தில் கொண்டு இந்தியா போன்ற ஒரு வல்லரசைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது விவேகமான செயலாகும். ‘வாழைப்பழத்தில் ஊசியை நுழைப்பதைப் போன்று’ இந்தியா மிக நாசுக்காக ஒரு காரியத்தைச் செய்துள்ளதை உணர்ந்து, ஜாக்கிர் விவகாரத்தில் மகாதீர் இன்னமும் பிடிவாதமாக இருக்கக் கூடாது.
அந்தக் குடும்பத்தை நாம் தொடர்ந்து இங்கு ஒலித்து வைத்திருப்பதால் பல கோணங்களில் இருந்தும் நம் நாட்டுக்குப் பாதகமான விளைவுகள் ஏற்படுவதை மகாதீர் அவசியம் உணர வேண்டும்.