அணைந்தது அக்னி – இன்னொரு ஆலமரம் சாய்ந்தது! – இராகவன் கருப்பையா

மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகின் இன்னொரு ஆலமரம் சாய்ந்தது.

மூத்த பத்திரிகையாளர் அக்னி சுகுமாரின் மறைவு,  மலேசிய ஊடகத்துறையினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் நெஞ்சங்களையும் சோகக்கடலில் மூழ்கடித்துள்ளது. கடந்த ஆண்டில் உதயம் துரைராஜ் மற்றும் ஆதி இராஜக்குமாரன் ஆகிய இரு ஊடகவியளாளர்களையும் இழந்த சோகம் மறைவதற்குள் இந்த அதிர்ச்சி செய்தி நம்மை ஈட்டிபோல் தாக்கியுள்ளது.

புதுக்கவிதை வேந்தன், சிறந்த அறிவியல் கட்டுரையாளர், புரட்சிக் கவிஞர், மூத்த எழுத்தாளர், நவீன ஊடக சிந்தனையாளர் மற்றும் விளையாட்டுத்துறை விமர்சகர் போன்ற பல மகுடங்களை ஒருசேர சுமந்திருந்த சுகுமாரின் இறப்பு மலேசியத் தமிழ் பத்திரிகைத் துறைக்கு பேரிழப்பு என்றால் அது மிகையில்லை.

1973 ஆம் ஆண்டில் 18 வயதில் ஊடகத்துறையில் கால் பதித்த அக்னி சுகுமார் தமது ஆயுள் முளுவதையும் தமிழுக்கே  அர்ப்பணித்து வாழ்ந்தவர்.

உருவத்தில் சிரியவர்,  எழுத்திலோ சீரியவர்! கையிலெடுக்கும் பேனாவை கதை முடியும் வரை கைவிடாதவர்! எழுதிக்கொண்டே மற்றவர்களுடன் கூர்மையான சிந்தனையுடன் பேசும் அதீத ஆற்றலைக்கொண்ட எழுத்துலக சாணக்கியர்.

தனது குறுந்தாடியை வருடிக்கொண்டே செய்திகளுக்கு வித்தியாசமான வகையில் நறுக்கென்று தலைப்பிடுவதில் அவருக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆங்கில அறிவியல் கட்டுரைகளை எளிய முறையில் தமிழாக்கம் செய்து உயிரோட்டம் கொடுப்பது மட்டுமின்றி, சுயமாக விஞ்ஞானக் கட்டுரைகளைப் படைப்பதிலும் பாண்டியத்துவம் பெறிருந்தார்.

கடந்த 1981ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழ்வேள் ஆதி குமணன் தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட தமழ் ஒசை தினசரியில் எங்கள் நட்புத் தொடங்கியது. ‘இவர்தான் அக்னியா’ என்ற ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி – தொடக்கத்தில் எனக்கு! ‘அக்னி’ என்னும் தமது புணைப் பெயருக்கு ஏற்ப சூடான எழுத்துக்கு சொந்தக்காரரான சுகுமார் கிஞ்சிற்றும் பந்தா இல்லாத எளிமை மிக்க ஒருவர்.

நாமெல்லாம் இளைஞர்கள், தமிழ் ஓசையை வித்தியாசமாக, புரட்சிகரமாக, சமுதாயத்திற்கு மிகுந்த பயனளிக்கும வகையில் நடத்த வேண்டும் என்பது ஆதி குமணனின் ஆலோசனை.

ஜாலான் ஈப்போ சுப்பிரமணியர் கோயிலுக்கு அடுத்துதான் அப்போதைய எங்கள் தமிழ் ஓசை அலுவலகம். ஏறக்குறை இரவு 9 மணிக்கெல்லாம் வேலை முடிந்த பிறகும் அக்னி சுகுமார் தலைமையில் 5 அல்லது 6 பேர் அலுவலகத்தில் காத்திருப்போம் – சடச்சுட ஆகப்புதிய செய்திகளை எதிர்பார்த்து. இதனை ஆங்கில ஊடகத்தில் ‘ஸ்க்கூப்’ (scoop) என்று சோல்வார்கள்.

முதல் பக்கத்தில் புதிய செய்திகளை அச்சேற்றி முடிப்பதற்குள் சில சமயங்களில் மணி 12ஐத் தாண்டிவிடும். அக்னி சுகுமாரோடு, இப்போதைய தமிழ் மலர் ஆசிரியர் (டத்தோ)ராஜன், பத்திரிகை வினியோகப் பிரிவு அதிகாரி பழணி, புகைப்படக் கலைஞர் சுந்தர் மற்றும் என்னோடு சேர்த்து 5 பேரும் அலுவலகத்தின் அருகில் உள்ள ‘ஹொக்கியன் மீ’ கடையில் அமர்ந்து அடுத்த நாளுக்கான திட்டமிடுதலை  செய்வோம்.

அப்போதைய ‘லென் பஸ்’, ‘லென் செங் பஸ்’, ‘சிலேங்ஙோர் பஸ்’ முலிய எல்லா பஸ்ளும் வேலை முடிந்து உறங்கும் நேரம். சுந்தரிடம் ‘டட்சன் 120Y’ எனும் கார் இருந்தது. அதுதான் எங்களுக்கு ஒரே வழி. எங்களில் யாருக்குமே சம்பளம் அப்போது 500 அல்லது 600 ரிங்கிட்டைத் தாண்டாத நிலை. தலா 1 ரிங்கிட் வீதம் சுந்தரிடம் பெட்ரோலுக்குக் கொடுப்போம். இப்படித்தான், அக்னியுடனான, நீங்கா நினைவுகளைக்கொண்ட எங்களுடையப் பயணம்.

அந்த நாள், ஞாபகம், நெஞ்சிலே, வந்ததே, நண்பனே நண்பனே நண்பனே…..இந்த நாள், அன்றுபோல், இன்பமாய், இல்லையே, அது ஏன் ஏன் நண்பனே…..

‘வணக்கம் மலேசியா’ மின்னியல் ஊடகத்தின் மூத்த ஆசிரியராகக் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்த அக்னி சுகுமாருக்கு பத்மிணி என்ற  மணைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர்.

அடுத்த நிமிடம் ஒழித்து வைத்திருக்கும் அதிசயத்தில் மரணம் கூட இருக்கலாம் என்பதை அக்னி சுகுமாரின் மறைவு நமக்கு புலப்படுத்துகிறது.

குடும்பத் தலைவரை இழந்து சொல்லொன்னாத் துயரத்தை சுமந்து நிற்கும் அவருடைய குடும்பத்தாருக்கு ‘மலேசியா கினி’ சார்பில் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.