ஒரு விடியலை நோக்கி வேதமூர்த்தி! – இராகவன் கருப்பையா

இந்நாட்டில் 10கும் மேற்பட்ட இந்திய அரசியல் கட்சிகள் உள்ள போதிலும் இதுநாள் வரையில் இந்திய சமுதாயத்தைத் தூக்கி விடுவதற்கென ஒரு கட்சிக் கூட பிரயோஜனமாக இல்லை என்பதுதான் மிகவும் வருத்தத்திற்குறிய உண்மை.

மலேசிய இந்தியர்களுக்கு தாய் கட்சி என்று 60 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தமாகவே பிதற்றிக் கொண்டிருந்த ம.இ.க.வும் கடந்த பொதுத் தேர்தலில் பாரிசான் குடையில் கூண்டோடு கவிழ்ந்தது மக்களுக்கு சந்தோசத்தையே கொடுத்தது என்றால் அது மிகையில்லை. ஏனென்றால் அந்த அளவுக்கு மக்களின் வெறுப்பை அவர்கள் சொத்தாக சம்பாதித்து குவித்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் பதிய அமைச்சரவையில் வரலாற்றுப்பூர்வமாக அதிக அளவில் இந்தியர்கள் நியமனம் பெற்றது ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தையும் இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்தது.

ஆனால் நீண்ட காலத்திற்குப் பிறகு வாழ்வில் வசந்தம் மலரப்போகிறது என எதிர்பார்த்திருந்த மக்களின் மகிழ்ச்சி இப்போது காற்றிழந்த பலூனைப் போலாகியது ஒரு பெருத்த ஏமாற்றம்தான்.

ஆக சமுதாயத்தின் நிலை இன்னமும் கயிறு அறுந்த பட்டத்தைப் போல திக்கற்றுத்தான் உள்ளது என்பது வேதனையான விஷயம்.

நம் சமுதாயத்தின் குறைகளையும் சிக்கல்களையும் இன்னல்களையும் செவிமெடுத்து அவற்றை களைவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த ஒரு மையம் அல்லது செயலகம் வேண்டுமென ஊடகங்களும் அரசு சாரா இயக்கங்களும் பொது மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிற போதிலும் அது செவிடன் காதில் ஊதிய சங்குதான் – இதுநாள் வரையில்!

இந்நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, இதுதான் சமயம் என ம.இ.க.வினர் இப்போது திடீரென வீறுகொண்டெழுந்து புகுந்து விளையாட ஆரம்பித்துவிட்டனர்.

நிலப் பிரச்னை, அடையாள அட்டை விண்ணப்பம், பள்ளிக்கூட பிரச்னை முதலிய விவகாரங்களில் மக்களுக்கு உதவி செய்ய முண்டியடிக்க முயல்வது வேடிக்கையாகவே உள்ளது. கடப்பிதழில் உள்ள புகைப்படத்தில் இந்திய பெண்கள் நெற்றியில் பொட்டு இருக்கக்கூடாது என்ற முட்டாள்தனமான சர்ச்சை எழுந்த போது கூட ம.இ.க. வினர்தான் முதலில் கலத்தில் இறங்கினார்கள். இதுபோன்ற அவர்களுடைய செயல்பாடுகள் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்றாலும் அந்த கட்சியினரின் நிலை இப்போது ‘கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ போலத்தான். ஆளும் கூட்டணியில் இருந்த போதே எதனையும் உருப்படியாக செய்யாத அவர்கள், எதிர் கட்சியாக இருந்து கொண்டா வெட்டி முறிக்க போகிறார்கள்? கடந்த சில காலங்களாகவே ம.இ.க. மக்களால் மறக்கப்பட்ட ஒரு கட்சி என்பது மறுக்க முடியாத உண்மை இப்போது.

நிலைமை இவ்வாறு இருக்க, பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தொடக்கியுள்ள மக்கள் முன்னேற்றக் கட்சி(ம.மு.க.) நம் சமுதாயத்திற்கு ஒரு விடியலைப் போல் தெரிகிறது.

இன சார்புடைய, குறிப்பாக இந்தியர்களுக்கென இன்னொரு கட்சி தேவையா என தொடக்கத்தில் பரவலாக கேள்வி எழுந்தாலும், இலக்கற்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருக்கும் நமது சமுதாயத்திற்கு உருப்படியான ஒரு கட்சி அவசியம் தேவை என்றே தோன்றுகிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நம் மக்களின் அவசரத் தேவைகளை கருத்தில் கொண்டு அமைச்சர் வேதமூர்த்தி ம.மு.க.வை மிக விரைவில் வளுப்படுத்தி விரிவுப்படுத்தி பக்காத்தான் கூட்டணியில் இணைப்பதற்கான வேலைகளை உடனே செய்ய வேண்டும். இல்லையேல் ஐ.பி.எஃப்., மக்கள் சக்தி, அல்லது ம.இ.கா. போன்று இந்தக் கட்சியும் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று கைக்கட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய நிலைதான் உருவாகும்.

மேலும் நாடு முழுவதிலும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி, துடிப்பாக செயல்படக் கூடிய படித்த இளைஞர்களை அதிக அளவில் கவருவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக அம்னோவிடம் கூழை கும்பிடு போட்டு, அவர்களுடைய கைகளை வெட்கமில்லாமல் முத்தமிட்டு, அவர்கள் போட்ட ரொட்டித் துண்டுக்காக ஆமாம் சாமிகளாக மிகக் கேவலமாக அடிமைப்பட்டுக் கிடந்ததெல்லாம் போதும். ம.மு.க. வாவது சோற்றில் உப்பிட்டு சாப்பிட்டவர்களாக கொஞ்சம் ரோசத்தோடு, பெர்சத்து, பி.கே.ஆர்., ஜ.செ.க., மற்றும் அமானா முதலிய கட்சிகளுக்கு இணையாக பக்காத்தான் கூட்டணியில் செயல்பட்டால்தான் மக்களின் மதிப்பையும் மறியாதையையும் சம்பாதிக்க முடியும்.

ஏமாந்ததெல்லாம் போதும். இனிமேலும் நமது மக்கள் ஏமாறத் தயாராயில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் துடிப்பாக, தைரியமாக, ஆக்ககரமாக செயல்படக் கூடிய ஒரு தலைமைத்துவம்தான். இதனையே குறிக்கோலாகக் கொண்டு ம.மு.க. செயல்படுவது மக்களின் தேவை – காலத்தின் கட்டாயம்.

நாடு முழுவதிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தியர்கள் வசிக்கும் எல்லாத் தொகுதிகளிலும் மக்கள் சந்திப்பு மையங்களை அமைத்து சமுதாயத்தின் நம்பிக்கைக்கு உரமூட்டுவது மிகவும் அவசியம்.

உதவி நாடி வருவோரை மணிக்கணக்கில், மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் காக்க வைத்து, அவர்களை அவமானப்படுத்தி கேவலப்படுத்தி உதாசினப்படுத்தாமல் சம்பந்தப்பட்ட அரசாங்க இலாகாக்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு பாலமாக அமைய வேண்டும்.

நம் சமூகத்தில், உதவ ஆளின்றி ஆயிரக்கணக்கான நெஞ்சங்கள் இன்னமும் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களுடைய ஒட்டு மொத்த பிச்னைகளை காது கொடுத்துக் கேட்க ஒரு வழியை ஏற்படுத்த வேண்டும் இந்த ம.மு.க.

இன்று வரையில் மித்ராவிடமிருந்து எப்படி உதவிகளைப் பெறுவது என்று கூட தெரியாத பி40 தரப்பினர் நிறையவே உள்ளனர். எனவே இவர்களுக்கும் மித்ராவுக்கும் இடையிலான இணப்பாகவும் ம.மு.க. செயல்பட வேண்டும்.

இவைகளை எல்லாம் செயல் வடிவத்திற்கு கொண்டு வருவது மிகப் பெரிய ஒரு பொறுப்பு என்ற போதிலும் நல்லதொரு விடியலுக்காக ஏங்கித் தவிக்கும் நமது மக்களுக்கு நம்பிக்கை நாயகனாக ஒளியேற்றுவது ம.மு.க. வின் கடமையாகும்.