அண்மையில் ஷா அலாமில் நடந்தேறிய மலாய்க்காரர்களின் ‘தன்மானத்தைத் தற்காக்கும்’ மாநாடு தொடர்பான விவாதங்களும் சர்ச்சைகளும் நாடலாவிய நிலையில் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
தன்மானத்துக்கு என்ன குறைச்சல்? ‘இப்படி ஒரு மாநாடு தேவைதானா’ என மிதவாத மலாய்க்காரர்கள் உள்பட பல முற்போக்குவாதிகள் கேள்வி எழுப்பும் பட்சத்தில், தங்களுடைய தன்மானத்தைக் காக்க பெரியதொரு அடித்தளம் அமைத்துவிட்டதைப் போல ஏற்பாட்டாளர்கள் திளைத்துள்ளனர்.
பேராசிரியர் ஜைனால் க்கிலிங் தலைமையில் 4 தேசிய பல்கலைக்கழகங்கள் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாடு, கல்வி, கலாச்சாரம், சமயம், அரசியல், பொருளாதாரம், ஆகியத் துறைகளில் மலாய்க்காரர்களின் தன்மானம் காக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் பங்கேற்ற பேச்சாளர்கள் அனைவரும் மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிராக வசைப்பாட ஒரு சந்தர்ப்பமாக அதனை பயன்படுத்திக்கொண்டதுதான் பெரிய ஆச்சரியம்.
இத்தகைய ஒரு நிகழ்வை அரசாங்கப் பல்கலைக்கழகங்கள் ஏற்று நடத்துவது அதைவிட வேடிக்கையாக உள்ளது.
தன்மானம் என்பது ‘பாசார் மாலாமிலோ’ வங்சாக்கடைகளிலோ விற்கப்படும் ஒரு பண்டமல்ல – நினைச்ச மாத்திரத்தில் போய் வாங்குவதற்கு! ஒவ்வொரு மனிதனும் தனது கல்வி, குணநலன், நடத்தை, முதலியவற்றின் வழி அதனை சுயமாகத்தானே சம்பாதித்துக்கொள்ள வேண்டும்! மாநாட்டு ஏற்பாட்டாளர்களும் அதில் பங்கேற்றவர்களும் இதனை உணர்ந்திருந்தார்களா இல்லையா என்று தெரியவில்லை. இவர்களுடைய தன்மானத்தை யாரும் இவர்களிடமிருந்து பறிக்கவோ, திருடவோ, கொள்ளையடிக்கவோ முடியாது.
ஆக, பொதுவாக பார்க்கப்போனால் அவர்கள் அனைவருமே தன்மானம் உடையவர்கள்தான். மாநாட்டின் பின்னணியில் இனத்துவேசத்தைத் தூண்டக் கூடிய அரசியல் சாயம் பூசப்பட்டிருந்ததுதான் வேடிக்கையான விசயம். பக்காத்தான் ஹராப்பான், ஆட்சியை கைப்பற்றிய நாளிலிருந்து இத்தகைய நிகழ்வுகள் நிறையவே நடக்கின்றன.
மாநாட்டுக்குப் பிறகு கருத்துரைத்த அம்னோ துணைத் தலைவர் முஹமட் ஹசான், மலாய்க்காரர்களின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, பெர்ஜயா, அம்னோ, பாஸ், ஆகிய 3 கட்சிகளும் கூட்டு அரசாங்கம் அமைக்க வேண்டும் என பரிந்துரைத்தார். அதே போல நாட்டின் ஆட்சி அதிகாரம் எப்பொழுதும் முஸ்லிம்களின் கைகளில்தான் இருக்கவேண்டும் என பாஸ் கட்சித் தலைவர் ஹடி அவாங் வழக்கம் போல சமயத்தை முன்வைத்துப் பேசினார்.
எப்படியாவது ஆட்சி பீடத்தில் அமர்ந்துவிடவேண்டும் என இவர்கள் கங்கணம் கட்டுவதைத்தான் இது புலப்படுத்துகிறது.
பில்லியன் கணக்கில் மக்கள் பணத்தை கொள்ளையடித்திவிட்டு, தெருவில் இறங்கி வந்து திரையுலக நட்சத்திரங்களைப் போல் மக்களுடன் தம்படம்(செல்ஃபி) எடுத்துத் திரிபவர்கள்தான் தன்மானம் இல்லாதவர்கள்.
ஹோட்டல் அறையில் ஓரின காதல் லீலைகள் புரிந்து, அதனை வீடியோவில் பதிவு செய்து, ‘நான்தான் அந்த வீடியோவில் உள்ளேன்’ என கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் பகிரங்கமாக அறிவிப்பு செய்கிறவர்கள்தான் தன்மானத்தை முற்றிலும் இழந்தவர்கள்.
சொந்த மகள்களையே மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் பாலியல் வல்லுறவு செய்து சில வேளைகளில் குழந்தைகளைக் கூடப் பெறும் கயவர்கள்தான் தன்மானம் இல்லாத ஜென்மங்கள்.
நாடாளுமன்றக் கட்டிடம் ஒழுகுகிறது என பெண் உறுப்பினர் ஒருவர் எழுந்து புகார் கூறிய போது, ‘உங்களுக்கும் மாதம் ஒரு முறை ஒழுகுகிறதுதானே’ என மிகவும் அல்ப்பத்தனமாகக் கிண்டலடித்தவர்கள்தான் தன்மானமே இல்லாமல் பிறந்தவர்கள் என நாம் முத்திரைக் குத்தலாம்.
நிறைமாத கர்பிணியாக இருந்த ஒரு அயல் நாட்டுப் பெண்ணை மிகக் கொடூரமாக வெடிவைத்துக் கொன்றவர்கள்தான் தன்மானமே இல்லாதவர்கள்.
ஆக, இதுபோல தன்மானமற்றவர்களின் பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். சுயமாக சம்பாதித்து கௌரவமாக வாழ்பவர்கள் அனைவருமே தன்மானம் உடையவர்கள்தான்.
இந்நிலையில், பிரதமர் துன் மகாதீர், அமைச்சர்கள் அஸ்மின் அலி, மாட் சாபு, மஸ்லி மாலிக் மற்றும் சைட் சாடிக் போன்றோர் இம்மாநாட்டில் கலந்துகொண்டதுதான் வேடிக்கை. ‘தமிழ் பள்ளிகளையும் சீனப் பள்ளிகளையும் மூட வேண்டும், மலாய்க்காரர் அல்லாதாரின் ஆதிக்கத்தினால்தான் நாம் தன்மானத்தை இழந்துள்ளோம்’ என சில பேச்சாளர்கள் ஆர்ப்பரித்தனர்.
ஆனால், எரியும் விளக்கில் தண்ணீரை ஊற்றுவதைப்போல மகாதீர் ஆற்றிய உரைதான் அங்கு வந்த மலாய்காரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“நானும் மலாய்காரர்” என்று ஆரம்பித்த அவர், தனது ஐம்பது நிமிட உரையில், தன்மானம் சுயகௌரவம் போன்றவை மற்றவர்களால் எடுத்துக்கொள்ளப் பட வில்லை, அவற்றை நாம் தான் நமது முயற்சியாலும், உழைப்பாலும் உருவாக்க வேண்டும். மற்ற இனத்தவர்கள் இங்கு வந்து கடினமான ஆபத்தான வேலைகளை செய்கிறார்கள், ஆனால் நாம் அப்படி அல்ல அரசாங்கம் உதவ வேண்டும் என்று காத்து கொண்டிருக்கிறோம். நமக்கு வாய்ப்பு இருந்தும் ஆதரவு இருந்தும் உருப்படியாக முன்னேற்றம் அடைய முடியவில்லை என்றால் குறைபாடுகள் நம்மிடம்தான். எத்தனை மாநாடுகள் போட்டாலும், நாமாக கௌரவத்தை தேடிக்கொள்ளாவிட்டால், அதுவாக வராது என்றார்.
உங்களுடைய தன்மானத்தை இழப்பதற்கு நீங்களே காரணம் என மலாய்க்காரர்களை நோக்கி அவர் குறிப்பிட்ட அவர் அரசாங்கம் தொடர்ந்து அவர்களிக்கு உதவும் ஆனால், அதன் வழி அவர்கள் கௌரமாக முன்னேற வேண்டும் அதற்கு அவர்களிடையே அதற்கேற்ற ஒற்றுமையும் உணர்வும் இருக்க வேண்டும் என்றார்.
நல்ல வலிமை இருந்தும், தன்னம்பிக்கை குறைவினால் அவதியுறும் ஒருவனை, ‘எஃப்ரேட் ஒஃப் ஹிஸ் ஓன் ஷேடோ'(Afraid of his own shadow) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். சொந்த நிழலையேப் பார்த்து பயப்படுபவன் என்று அதற்கு பொருள். 60%கும் மேலான மக்கள் தொகையைக் கொண்டு, அரசாங்கத்தின் எல்லா நிலைகளிலும் உயர் பதவிகளை அலங்கரிக்கும் மலாய்க்காரர்கள் தங்களுடைய தன்மானத்தைப் பற்றி மாநாடு நடத்துவது ஓர் வகை இன அரசியலாகும். மகாதீரின் உரையில் அதற்கான மருந்திருந்தது, கசப்பானதும் கூட.