இராகவன் கருப்பையா
தனது 90ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் 24 துறைகளில் சிறந்து விளங்கும் மொத்தம் 52 பேருக்கு உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நம்மிடையே தற்போது இத்தனை தொழில் முனைவர்கள் வெற்றியாளர்களாக வலம் வருகின்றனர் என்றால் அது நம் சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்கிறது.
ஆட்சி மாறியும் கூட இன்னமும் கவனிக்கப்படாத சமுதாயமாகவே இந்நாட்டில் தொடர்ந்து இருந்துவரும் இந்திய சமுதாயம் தொழில்துறையில் மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு, சிறுதொழில் முதலிய இதரத் துறைகளிலும் தலைதூக்குவதற்கு அளவுக்கு அதிகமாகவே போராட வேண்டியுள்ளது. இத்தகைய சாதகமற்ற சூழ்நிலையிலும் எதிர்நீச்சலிட்டு கடுமையான உழைப்பின் வழி உயர்ந்து மிளிரும் அந்த வெற்றியாளர்களை அவசியம் பாராட்ட வேண்டும்.
இருப்பினும், பல துறைகளிலும் அபார சாதனைகளைப் படைத்துள்ள மேலும் நூற்றுக்கணக்கானோர் இந்த வெற்றியாளர்கள் பட்டியலில் விடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக சட்டத்துறை. நாட்டிலுள்ள வழக்கறிஞர்களில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினர் இந்தியர்கள். அவர்களில் நிறையபேர் மிகவும் உயரிய நிலையில் வெற்றிநடை போடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
மற்றொன்று காப்புறுதித்துறை. இதர விற்பனைத் துறைகளோடு ஒப்பிடும்போது காப்பீட்டுத் துறையிலும் நம் இனத்தவர்கள் நிறையபேர் கொடிகட்டி பறக்கின்றனர் என்பதை நாம் மறுக்க இயலாது.
இவற்றைத் தவிர்த்து நாட்டின் மருத்துவத் துறையிலும் இந்திய டாக்டர்களின் பிரம்மாண்டமான ஆதிக்கம் இன்னமும் தொடர்கிறது.
உலோக மறுசுழற்சித் துறையிலும் கூட நம்மவர்கள் பெருமளவில் சாதனை புரிந்து வருகின்றனர்.
ஆக இப்படிப்பட்ட மேலும் பல துறைகளைச் சார்ந்த வெற்றியாளர்கள் அந்த விருதளிப்பு நிகழ்வில் விடுபட்டுபோய்விட்டனர்.
விருது பெற்றவர்களை தேர்ந்தெடுப்பதில் எந்த ஒரு பாகுபாடு, பாராபட்சமும் இல்லாமல் தேர்வுக் குழு செயல்பட வேண்டும் எனவும், சங்கத்தில் அங்கத்துவம் பெற்றவர்களும் பெரும் தொகையை நன்கொடையாக வழங்கியவர்களுக்கும் விருது என்ற நிலை இருக்குமாயின் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய சங்கம் உடனடியாக ஆவன செய்யவேண்டும் என்பதுமே அனைவரது நம்பிக்கையும் எதிர்ப்பார்ப்புமாக இருக்கின்றன.
ஆளும் கூட்டணியைச் சேர்ந்த பல இந்திய அரசியல் தலைவர்கள் புடைசூழ பி.கே.ஆர். கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்கள் நிறையபேர் விடுபட்டுள்ளது வேதனையாகத்தான் உள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பட்டதாரி உருவாக வேண்டும் என்ற முன்னைய பிரச்சாரம் நல்ல வெற்றிகண்டுள்ள நிலையில் இப்போது ஒவ்வொரு வீட்டிலும ஒரு தொழில் முனைவர் உருவாக வேண்டும் என்ற, சங்கத்தின் தலைவர் டத்தோ இராமநாதனின் கருத்து நியாயமான, வரவேற்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது.
பலதரப்பட்ட துறைகளைச் சார்ந்த தகுதியுள்ளவர்களை அடையாளங்கண்டு, அரவணைத்து, நியாயமாக தேர்வு செய்து விருதளிப்பதன் மூலம் மட்டுமே இராமநாதனின் கூற்று அர்த்தமுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை.