பகாங் மாநில அரசின் செயலால் பாதிக்கப்பட்ட கேமரன் மலை விவசாய்களுக்காக மனம் வருந்துவதாகவும், இந்த சூழலுக்கு தீர்வு காணும் அதிகாரம் தேசிய முன்னணியின் கீழ் இயங்கும் மாநில அரசின் கையில் இருப்பதால், தான் மேற்கொண்ட முயற்சிகளை மாநில அரசு புறக்கணித்திருப்பதாக டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
“நான் அமைச்சரவையில் இருப்பினும், இது ஒரு எதிர்கட்சியின் மாநில அரசின் விவகாரமாக இருப்பதாலும், அதோடு இதில் உள்ள சிக்கல்கள் காரணமாகவும், மத்திய அரசின் அதிகாரத்துடன் தீர்வு காணும் வாய்ப்பு பாதிக்கப்பட்டது.” என்கிறார் சேவியர்.
“சுமார் 60 விவசாய்களின் தோட்டங்கள் அழிக்கப்படும் போது அது அனைவரையும் பாதிக்கின்றது. இந்த சூழலில் தனிப்பட்ட வகையில் யாரின் மீது குற்றம் உள்ளது என்பதை பற்றி அலசும் பொறுப்பை மக்களிடமே விட்டு விடுகிறேன்”, என்றார்.
கேமரம் மலையின் மக்கள் தொகை சுமார் 34,000, இதில் சுமார் 20% இந்தியர்கள் ஆவர். இந்தத்தொகுதி நாடளுமன்ற தொகுதியாக 2004-இல் உருவாக்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை இந்த இடம் தேசிய முன்னணியின் கோட்டையாக இருந்து வருகிறது.
இதற்கு முன்பு இதன் நாடாளுமன்ற உறுப்பிணர்களாக இருந்தவர்கள் மாஇகாவின் தலைவர்களாகவும் அமைச்சர்களாகவும் இருந்த தேவமணி மற்றும் பழனிவேல் ஆகும். இவர்கள் 2004 முதல் 2018 வரயில் இருந்தனர். 2019 இல் வென்ற சிவராஜின் வெற்றி முறையற்ற செயலால் பெற்றது என்ற நீதிமன்ற ஆணையால் உண்டான இடைத்தேர்தலில் தேசிய முன்னணியே மீண்டும் வென்றது. அதன் வேட்பாளர் இரம்லியாகும். இத்தொகுதி மஇகா-விடமிருந்து பறிக்கப்பட்டது.
மேலும் விளக்களித்த சேவியர், “கேமரன் மலை விவசாய்களுக்கு ஒரு முழுயான தீர்வு வேண்டும். இந்த இடம் தொடர்ந்து தேசிய முன்னணியின் கீழ் இருந்தாலும், நாட்டு மக்கள் என்ற நிலையிலும், அதைவிட இவர்கள் விவசாய்கள் என்ற நிலையிலும் இவர்களுக்கான ஒரு நிரந்தர தீர்வு தேவை” என்கிறார்.
இவர்களுக்காக மஇகா பல வழிகளில் உதவியுள்ளதை மறுக்க இயலாது என்றவர், “தற்போதுள்ள சிக்கலுக்கு அமைச்சர் என்ற நிலையில் நான் தான் தீர்வுக்கு வழி வகுக்க வேண்டும் அல்லது அமைச்சரவையில் உள்ள இந்திய அமைச்சர்கள் தான் போறுப்பேற்க வேண்டும் என்று வாதிடுவதில் பலத்த எதிர்பார்ப்பு இருப்பதை உணர முடிகிறது”
“இதில் நியாயம் உள்ளதா என்றும் சீர்தூக்கி பார்க்க வேண்டும், கடந்த காலங்களில் இந்த விவசாய நிலங்களுக்கு தற்காலிக நிலப்பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலப்பட்டாவின் காலவரம்பு ஒரு வருடம் மட்டும்தான். அதை வருடாவருடம் புதுபிக்க வேண்டும். இதன் அதிகாரம் மாநில அரசிடம்தான் உள்ளது.”
மேலும் விவரிக்கையில், அன்மைய காலங்களில் ஏற்பட்ட பல்வேறு வகையான இயற்கை சுற்றுச்சூழல் கேடு, மண் அரிப்பு, நதியில் உள்ள நீர் இராசாயனத்தால் பாதிப்படைதல் போன்றவை ஒரு முறையான தீர்வற்ற நிலையில் இருந்து வந்தன. அதற்கு மாநில அரசும் காரணமாகும். இவை ஒரு தேசிய பிரச்சனையாக வரும் போது ஒரு பொருப்புள்ள அமைசராகவே என்னால் இயங்க முடியும் என்றார்.
“கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 23 ந் தேதி நடந்த துயரச் சம்பவத்தை அடுத்துக் கேமரன் மலை காடுகளைக் காப்பதும், திடீர் வெள்ளத்தை, நிலச் சரிவைத் தடுப்பதும், நீர் தூய்மையைக் காப்பதும் பெரிய பொருள் மற்றும் உயிர் சேதங்கள் மீண்டும் நடப்பதைத் தடுக்கவே, அப்போதிலிருந்து மாநில அரசுக்குச் சில ஆலோசனைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.”
“ஆனால், சுங்கை இட்சாசை சார்ந்த 60 இந்திய விவசாயிகளைத் தனிமைப்படுத்தியோ அல்லது வேறு எந்தத் தனிப்பட்ட நிலத்தையோ, பிரிவினரையோ குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு என்றும் உத்தரவிட்டதில்லை” என்கிறார் சேவியர் ஜெயக்குமார்.
இருப்பினும், தற்போது உள்ள சிக்கலில் எனது நிலைபாடு, இந்த விவசாய்களுக்கான தீர்வு ஒரு கலந்தாலோசனையின் பின்புதான் எடுக்கப்பட வேண்டும் என்பதாகும். சட்டம் என்பது மாநில அரசின் பக்கம் இருந்தாலும், இதில் விவசாய்களின் வாழ்வாதாரமும் பலத்த முதலீடும் அதோடு கடுமையான் உடலுழைப்பும் கலந்துள்ளது என்றார்.
“நாம் மட்டும் அல்ல, மஇகாவின் அரசியல்வாதிகளும் தங்களால் இயன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிகிறது, அவர்களை நான் பாராட்டுகிறேன்” என்றார் சேவியர்.
குறிப்பாக, மாநில அரசுடன் சமரசம் பேச முற்படும் அதற்கேற்ற வியூகத்துடன், விவசாய்கள் மாநில அரசின் மீது போட்ட தற்காலிக தடையுத்தரவை மீட்டுகொள்ள வேண்டிய சூழல் உருவானதாக தெரிகிறது. ஆனால், சமரசம் உருவாகவில்லை, தடையுத்தரவு அகற்றப்பட்டதை சாதகமாக மாநில அரசு பயன்படுத்திக் கொண்டதாக விவசாய்கள் கூறுகின்றனர்.
அடுத்த கட்ட தீர்வாக விவசாய்களின் நிலைபாடு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என நாம்புவதாகவும் அதற்கான வழிமுறைகளை அவர்கள் அறிந்துள்ளனர் என்கிறார் சேவியர்.
இதற்கிடையே, மக்களின் துன்பங்களில் அரசியல் இலாபம் தேடும் வகையில் ஒரு சில மஇகா அரசியல்வாதிகளும், குறிப்பிட்ட நாளேடும் அறிக்கை விடுவது பொறுப்பற்ற செயலாகும் எனச்சாடினார்.
கடந்த கால சாதனைகள் என்ன?
நாடு சுதந்திரத்திற்கு முன்பு கொண்டிருந்ததை எல்லாம் தேசிய முன்னணி காலத்தில் இந்தியர்கள் இழந்ததை ஏற்றமெனக் கூறும் அறிவிலி தனத்திலிருந்த இவர்கள் விடுபட வேண்டும் என்றார்.
உதாரணமாக அன்று தேசியப் பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்கு 28 விழுக்காடாக இருந்தது அது பாரிசானின் 60 ஆண்டுக்கால ஆட்சியில் 1.1 விழுக்காடானது. அதேப்போல் 24 விழுக்காடாக இருந்த மக்கள் தொகை 7 விழுக்காடானது. 7.9 விழுக்காடாக இருந்த உயர் கல்விக்கூட மாணவர் எண்ணிக்கை 1- விழுக்காடாகி விட்டது.
இந்தியர்களுக்குச் சொந்தமாக 3 வங்கிகள் இருந்தன இன்றைக்கு இல்லை. 1960 ம் ஆண்டில் இந்தியர்களுக்குச் சொந்த மாக இருந்த நிலம் 37 விழுக்காடு 0.8 விழுக்காடு ஆனது. இவை அனைத்தையும் விட அரசாங்கச் சேவையில் கொடிகட்டி ஆண்ட இனத்தை இருந்த இடம் தெரியாமல் ஆகி விட்டது.
இவற்றையும் மனதில் கொண்டு நிதானத்துடன் இந்தப் பொறுப்பற்ற மஇகா தலைவர்கள் தங்களது நிலைப்பாட்டை பரிசீலனை செய்ய வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
மாநில அரசின் மீது இருந்த நீதி மன்ற தடை உத்தரவை மீட்டு கொள்ள சொன்ன ம.இ.காவினர் விவசாயிகளுக்கு மாற்று இடம் மாநில அரசான தேசிய முன்ணணி அரசிடம் இருந்து வாங்கி கொடுத்திருக்க வேண்டும். இந்த வழக்கை மீட்ட பின்பு .இதை சாதமாக பயன் படுத்திக்கொண்ட மாநில அரசு அதிரடி நடவடிகையாக அந்த இடத்தை அநியாயமாக கையகப்படுத்தியுள்ளது. இது பாதிக்கப்பட்ட 60 ஏழை விவசாயிகள் அதிலும் தமிழர்கள் வயிற்றில் மண்ணை வாரி போட்டுவிட்டார்கள்.இதனை மாநில அரசும் மற்றும் மத்தியில் ஆட்சி செய்யும் நம்பிக்கை கூட்டணி அரசும் இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் இல்லையேல் பாதிக்கப்பட்ட இந்த விவசாயிகளின் சாபம் சம்மந்தப்பட்டவர்களை சும்மா விடாது.