விருட்சமாகிய ஆதி குமணனின் ஆளுமை

இளைய தமிழ்வேள் அமரர் ஆதி குமணனுக்கு இன்று (9.2.2020) 70ஆவது பிறந்தநாள். இந்நாட்டில் எத்தனையோ தமிழ் பத்திரிகையாளர்கள் நம்மை விட்டு பிரிந்துள்ள போதிலும் ஆதி குமணனின் மறைவு கடந்த 15 ஆண்டுகளாக நம்மை வருத்திக்கொண்டுதான் இருக்கிறது. பதிய திருப்பம், பத்திரிகை தர்மம், மறுமலர்ச்சி, தைரியம், எழுத்துச் சுதந்திரம் போன்ற அனைத்துக்குமே நாயகன் அவர்தான்.

இந்தியாவில் தமிழிசைத் துறைக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் வரவு எப்படியோ, அதேபோல்தான் மலேசிய தமிழ் பத்திரிகை உலகுக்கு ஆதி குமணனின் பிரவேசம் என்றால் மிகையாகாது.

1970ஆம் ஆண்டுகளில் வெளிவந்த தமிழ் மலர் என்ற பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக தனது பத்திரிக்கைத் துறை வாழ்க்கையை 1972-இல் தொடங்கியவர் குமணபூபதி என்ற இயற்பெயரைக் கொண்ட ஆதி.குமணன். தமிழ் நாட்டின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி.

1981ஆம் ஆண்டில் தமிழ் ஓசையில் இணந்தார். இதுதான் 2005-இல் மக்கள் ஓசையாக உருமாறியது.

வானம்பாடி என்ற வார இதழைத் தோற்றுவித்து, அதன் ஆசிரியராகப் பணியாற்றி, மலேசியாவின் முன்னணி வார இதழாக அதனை உயர்த்தியதோடு மக்களுடன் ஒரு இணக்கத்தையை உண்டாக்கியவர் அவர்.

ஆனால், ஆதி 1990-இல் மலேசிய நண்பனின் துணையாசிரியராக இணைந்தவர் 2000இல் முதல் அதன் தலைமை நிருவாகியாக தனது இறுதிநாள் வரையில் பணியாற்றினார்..

1981ஆம் ஆண்டில் தொழிலதிபர் க.சிவலிங்கத்துடன்(முன்னாள் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ க.சிவலிங்கம்) சேர்ந்து தமிழ் ஓசை நாளிதழை அவர் ஆரம்பித்த காலத்தில் இருந்து சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு அங்கு ஒரு துணை ஆசிரியராக அவருடன் பயணித்த அந்த நாட்கள் எனக்கு ஒரு பொற்காலம்தான்.

அவரிடம் நான் கற்றுக்கொண்ட பத்திரிகை துறை சார்ந்தவை மட்டுமின்றி பொதுவான விசயங்களும் ஏராளம். பிறகு ராய்ட்டர் மற்றும் ஏ.எஃப்.பி. முதலிய ஆங்கில மின் ஊடகங்களில் பணியாற்றுவதற்கும் பெரும் உதவியாக அவை அமைந்தன.

ஒரு காலக்கட்டத்தில் பல அரசியல்வாதிகளுக்கு ‘ஆதி என்றால் அலர்ஜி’. அவர்களுடைய அக்கிரமங்களையும் அட்டகாசங்களையும் அக்கு அக்காக அச்சமின்றி அவர் பிரித்து போட்டுவிடுவார்.

தமிழ் பத்திரிகை துறையின் பழமையான பயனற்ற பாரம்பரியத்தை ஆதி குமணன் மாற்றினார். பத்திரிகை முதலாளிகளின் குடும்ப செய்திகளை பக்கம் பக்கமாக போடும் அசிங்கத்தை அவர் எதிர்த்தார்.

பத்திரிகை தர்மத்தை கடைபிடிப்பதிலும் நடுநிலையான போக்கை நிலைநாட்டுவதிலும் உறுதியாக இருந்தார்.

சமுதாயத்திற்கு தேவையான, குறிப்பாக இந்திய சமுதாயம் தொடர்பான செய்திகளை, இந்திய சமுதாயம் எதிர் நோக்கும் பிரச்னைகளை முதல் பக்கத்தில் பிரசுரிக்க வேண்டும் என்பார். உண்மையை தயங்காமல் எழுதுங்கள் – யாருக்கும் பயப்படவேண்டாம் என்று ஆலோசனை கூறுவார்.

சாதாரனமான பாமர மக்களும் பள்ளிப்பிள்ளைகளும் கூட புரிந்துகொள்ளும் அளவுக்கு எளிமையான வார்த்தைகளில் செய்தி எழுதவேண்டும் என்பார். புரியாத பெரிய பெரிய வார்த்தைகளை பயன்படுத்தி வாசகர்களை குழப்பக்கூடாது என்பார்.

ஞாயிரு ஓசையில் தொடர்ச்சியாக அவர் எழுதி வந்த ‘பார்வை’ அதற்கு சான்றாகும்..

எங்களுடைய ஆசிரியர் பகுதி கூட்டங்களை பல வேளைகளில் எங்களுக்கிடையே வேறுபாடில்லாமல் அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஹொக்கியன் மீ கடையில் நடத்துவார். அவ்வளவு எளிமையானவர் ஆதி குமணன்.

அவர் தலைமையிலான தமிழ் ஓசை அந்த காலக்கட்டத்தில் விற்பனையிலும் கூட எல்லா சாதனைகளையும் முறியடித்த உண்மையை யாரும் மறுக்க இயலாது, மறந்திருக்கவும் முடியாது.

அவருடைய பாசறையில் வளர்ந்த பலர் இதர தமிழ் பத்திரிகைகளில் இன்று உயரிய பொறுப்புகளில் உள்ளனர் என்பது பெருமைக்குறியது. எனினும் ஆதி குமணன் அன்று கற்றுக்கொடுத்த பத்திரிகை தர்மம் இன்று கடைபிடிக்கப்படுகிறதா என்பதுதான் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள வேதனையான விசயம்.

தமிழ் ஓசை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், புதிய பத்திரிகை என்ற காரணத்தால், தரத்தோடு நேரத்தோடு வெளியாக வேண்டும் என்ற வேட்கையில் எவ்வித சுயநலமும் பாராமல் கடுமையாக ஒருமித்து உழைத்தோம்.

பல வேளைகளில், செய்தி சேகரிப்பதற்கு போக்குவரத்து அலவன்ஸ் கூட இல்லாமல் பஸ்ஸில் பயணித்த அனுபவங்களும் உண்டு. அத்தகைய கடமை உணர்வோடு விசுவாசத்துடன் நேர்மையாக உழைத்தால்தான் ஆதி குமணன் விதைத்த அந்த புதிய தலைமுறை பத்திரிகை உலகத்தை மீண்டும் காண வாய்ப்புண்டு.

அரசியலில் இணைந்து  ஐபிஎப் என்ற இந்தியர் முன்னேற்ற முன்னனி கட்சியின் துணைத்த்லைவராக இருந்து மக்களின் ஆழ்மனதில் பதிந்தவர் இவர். தனது 55-வது வயதில் மார்ச் 28ஆம் நாள் 2008-இல் காலமான போது, அவரின் பூதவுடல் புதைக்கப் பட்டது, ஆனால் அன்னாரின் எழுத்து படைப்புகளின் ஆளுமை வெகுசன மக்களின் மனங்களிம்  விதைக்கப்பட்டது எனலாம். அவை இன்று எழுத்துலகில் விருட்சமாயுள்ளதை மறுக்க இயலாது.

இராகவன் கருப்பையா