மலேசிய அரசியல் அரங்கில் துன் டாக்டர் மகாதிர் ஈடு இணையற்ற ஒரு சகாப்தம் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
நாட்டின் நீண்டகால பிரதமரும் அவரே; நாட்டின் குறுகியகால பிரதமரும் அவரே.
அநேகமாக 3-வது தடவையாக நாட்டின் பிரதமராவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளவரும் அவரே.
கடந்த 1981-ம் ஆண்டிலிருந்து 22 ஆண்டுகளுக்கு நாட்டை வழிநடத்திய அவர், பிறகு 2018-ம் ஆண்டு மே மாதம் தொடங்கி ஏறக்குறைய 22 மாதங்களுக்கு மீண்டும் பிரதமர் பதவியை வகித்தார்.
இம்மாதம் 24-ம் தேதி தமது பிரதமர் பதவியை அவர் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவருடைய பெர்சத்து கட்சி பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியிலிருந்து வெளியேறியதால், அரசாங்கம் கவிழ்ந்தது நாம் அறிந்த ஒன்றே.
இதற்கெல்லாம் யார் காரணம், எதனால் நாடு இந்தப் பரிதாபத்திற்குரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என மக்கள் குழம்பித் தவித்துக் கொண்டிருப்பதும் நியாயமான ஒன்றுதான்.
அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு கடந்த ஒரு ஆண்டுக்கு மேலிருந்தே திரை மறைவில் சதி வேலைகள் நடந்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணமாக இருந்த போதிலும், கடந்த ஒரு வாரமாக அது சூடு பிடிக்கத் தொடங்கி இவ்வாரத்தில் அந்தத் துரதிர்ஷ்டம் நடந்தேறிவிட்டது.
எப்படியாவது அரசாங்கத்தைக் கைப்பற்றிவிட்டால் தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் ஒரு முடிவுகட்டிவிடலாம் என அம்னோ தலைவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் வேளையில், பின் கதவு வழியிலாவது ஆட்சியைக் கைப்பற்றி அரசாங்க அனுகூலங்களை அனுபவித்துவிட வேண்டும் என்பது பாஸ் கட்சியின் நீண்ட நாள் கனவு.
இந்நிலையில், ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பதுக்கு ஏற்ப பி.கே.ஆர். கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமிற்கும் அதன் துணைத் தலைவர் அஸ்மினுக்கும் இடையிலான பூசல் அந்த இரு கட்சிகளுக்கும் கற்கண்டு போலாகிவிட்டதும் நாம் அறிந்த ஒன்றே.
ஆக, மகாதிரின் பெர்சத்து கட்சி திடீரென பக்காத்தான் கூட்டணியை விட்டு வெளியாகியதுதான் அரசாங்கத்தைக் கவிழ்த்து நாட்டு மக்களை நிலைகுத்தச் செய்தது என்பது நாடறிந்த உண்மை. கடந்த பொதுத் தேர்தலில் வெறும் 13 தொகுதிகளை மட்டுமே வென்ற அந்தக் கட்சி பிறகு அம்னோவிலிருந்து மேலும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தன் வசம் இழுத்து சற்று பலப்படுத்திக்கொண்டது.
கூட்டணியை விட்டு பெர்சத்து வெளியேறியதற்கும் மகாதிருக்கும் சம்பந்தம் உள்ளதா என்பது மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கும் மற்றொரு விசயமாகும். அந்தக் கட்சியின் துணைத் தலைவர் முக்ரிஸ், மகாதிரின் இளையப் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த பொதுத் தேர்தலின் போது, பெர்சத்துவின் தேர்தல் சின்னத்தை நஜிப் அரசாங்கம் தடை செய்ததால், அன்வாரின் பி.கே.ஆர். கட்சி சின்னத்தில் அவர்கள் போட்டியிட்டதை மற்றவர்கள் மறந்திருந்தாலும் மகாதிர் மறந்திருக்க வாய்ப்பில்லை.
இந்நிலையில் மகாதிர் ஏன் இராஜினாமா செய்ய வேண்டும்? பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கியிருக்கலாமே! இதுதானே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பும் கூட!
நிலைமை இவ்வாறு இருக்க, இடைக்காலப் பிரதமராக இருக்குமாறு மாட்சிமை தங்கியப் பேரரசரால் நியமிக்கப்பட்ட மகாதிருக்குத் தற்போது ஏறக்குறைய எல்லா 222 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிப்பதாகக் கூறுவதுதான் சற்று வேடிக்கையாக உள்ளது. உலக அரசியல் அரங்கில் இது ஓர் அபூர்வ சூழல் என்றே கருதப்படுகிறது.
அப்படியென்றால் எந்தத்தரப்பு ஆட்சியமைத்தாலும் மகாதிர்தான் பிரதமர்.
அதாவது, நாட்டின் 4-வது பிரதமரும் அவரே, 7-வது பிரதமரும் அவரே, 8-வது பிரதமரும் அவரே.
இந்த வித்தியாசமான நிலைமைக்கு அவரே வித்திட்டாரா அல்லது தள்ளப்பட்டாரா என்பதும் மக்கள் மனதைத் தற்போது துளைத்துக்கொண்டிருக்கும் மற்றொரு கேள்வியாகும்.
இந்தச் சூழலில், ஆட்சியமைக்கும் தரப்புக்கு அவர் பிரதமராக இருப்பாரா அல்லது அன்வாருக்கு அந்தப் பதவியை விட்டுக்கொடுப்பாரா அல்லது வேரொருவரை நியமனம் செய்வாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமது அடுத்தக்கட்ட நகர்வை யாரும் யூகிக்க முடியாத அளவுக்குக் காய்களை நகர்த்துவதில் வல்லவரான இந்த 94 வயது அரசியல் சாணக்கியர், உண்மையிலேயே ஒரு சகாப்தம்தான்.