ஆசிரியர் பற்றாக்குறையினால் தமிழுக்கு ஆபத்து

இராகவன் கருப்பையா – 

இந்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழ் பள்ளிகள் நிலைத்திருப்பதற்கும் பல்வேறு கோணங்களில் இருந்தும் பலவகையான அச்சுறுத்தல்கள் அன்றாடம் முளைத்த வண்ணமாக இருக்கும் இவ்வேளையில் அந்தச் சூழ்நிலைக்கு நாமே வழிவகுத்துவிடுவோம் போல் தெரிகிறது.

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் தமிழ்பிரிவு மாணவர்களின் பதிவு குறைவாக உள்ளதால் கூடிய விரைவில் தமிழ் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையை நாம் எதிர்நோக்கவிருக்கிறோம்.

தேசியப் பள்ளிகளில் ஆசிரியர்களாவதற்கான மாணவர் பதிவுதான் அதிகமாக உள்ளதே தவிரத் தமிழ் ஆசிரியர்களுக்கான மாணவர் பதிவு கடந்த ஆண்டில் எதிர்பார்த்ததைவிடக் குறைவாகவே உள்ளதென முன்னாள் கல்வி துணையமைச்சர் தியோ நீ சிங் அண்மையில் செய்த திடுக்கிடும் அறிவிப்பு தமிழ் ஆர்வலர்கள் மட்டுமின்றி நம் அனைவருக்குமே அதிர்ச்சி தகவல்தான்.

இந்நாட்டில் உள்ள தமிழ், சீனப் பள்ளிகள் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை என்றும் அந்தப் பள்ளிகளை இழுத்து மூடவேண்டும் எனவும் இனவெறி கும்பலொன்று அரசாங்கத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளது நாம் அறிந்த ஒன்றே.

இந்நிலையில் தமிழாசிரியர்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டால் ஒன்றன் பின் ஒன்றாக அரசாங்கமே தமிழ்ப் பள்ளிகளை மூடவேண்டிய சூழல் ஏற்படும் அபாயம் உள்ளதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்தியாவிலிருந்து தமிழாசிரியர்களை அரசாங்கம் தருவிக்கும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை, அதற்கான சாத்தியமும் மிகக்குறைவுதான்.

நாடு சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் மலேசியா முழுவதும் மொத்தம் 888 தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் இருந்தன. ஆனால் காலப் போக்கில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இப்பொழுது நாடு தழுவிய நிலையில் மொத்தம் 524 பள்ளிகள்தான் உள்ளன.

இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகிற போதிலும் மாணவர் பற்றாக்குறை என்ற வருத்தமான சூழல் அவற்றுள் முதலிடம் வகிக்கிறது என்பதுதான் உண்மை.

ஆக இந்த 524 பள்ளிகளையாவது காப்பாற்றுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் முடுக்கிவிடுவது நம் அனைவருடைய கடமையாகும்.

கடந்த ஆண்டில் சுமார் 500 மாணவர்கள் மட்டுமே தமிழாசிரியர்களாவதற்குப் பதிவு செய்துகொண்டனர் என்று நம்பப்படுகிறது.  தகுதியுடையவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இந்த எண்ணிக்கை நிச்சயம் போதாது.

கல்வியமைச்சின் புதிய விதிமுறையும் கூட இந்தப் பற்றாக்குறைக்கு இன்னொரு காரணமாக இருக்கக்கூடும். அதாவது விண்ணப்பம் செய்வோர் வெறும் தமிழ் மொழியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிராமல், இசை, அறநெறிக் கல்வி, தேகப் பயிற்சி அல்லது இணைப்பாடு நடவடிக்கைகள் போன்ற ஏதாவது ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதே அந்த விதிமுறையாகும்.

இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு, நிதி பற்றாக்குறையினால் கல்வியமைச்சே இந்தச் சூழலுக்கு வித்திட்டிருக்கக்கூடும் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

எது எப்படியாயினும் இதுபோன்ற எல்லாச் சவால்களையும் வெற்றிகொண்டு இந்நாட்டில் தமிழ் மொழியையும் தமிழ் பள்ளிகளையும் நாம் காப்பாற்றியே ஆகவேண்டும்.

நாடளாவிய நிலையில் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் நம் செல்வங்கள் அண்மைய காலமாக உலக அளவிலான சாதனைகள் புரிந்துவருவதைக் கண்கூடாக நாம் பார்க்கின்றோம். குறிப்பாகப் புத்தாக்கக் கண்டுபிடிப்பில் நூற்றுக்கணக்கான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெற்றிப் பதக்கங்களைக் குவித்தவண்ணமாக இருக்கின்றனர்.

இத்தகைய சாதனைகளைச் சாத்தியமாக்குவதற்கு அந்த மாணவர்களுக்குப் பின்னால் இருக்கும் தமிழாசிரியர்களின் அளப்பரிய பங்கை நாம் மறுக்கவோ மறக்கவோ முடியாது.

ஆக, பால் பொங்கும் நேரத்தில் தாழி உடைந்த கதையாக, ஆசிரியர் பற்றாக்குறையினால் இதுபோன்ற சாதனைகளுக்குத் தடங்கள் ஏற்பட்டுவிடாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இத்தகைய உலகச் சாதனைகள்தான் இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகளை அழிக்கத் துடிக்கும் கயவர்களின் முகத்தில் கரி பூசுவதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள பட்சத்தில் அதிகமான இந்திய மாணவர்களை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்யப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும்.

தமிழ்ப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களிடமும் பிற்காலத்தில் தமிழ் ஆசிரியர்களாவதற்கான இலட்சியங்களை மனதில் பதிவு செய்ய இப்போதே ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.