கோவிட் -19 ஆதிக்கம்: இனவாதம், கொள்கை மற்றும் அரசியல்! ~ எஸ்.அருட்செல்வன்

தாதியர், மருத்துவர்கள், அறிவியல்கூட பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், பாதுகாவலர்கள், நாடு முழுவதும் உள்ள சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் கோவிட்-19 வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தங்களை இணைத்துகொண்ட அனைத்து மக்களுக்கும் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்) நன்றி கூற விரும்புகிறது. உங்கள் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் விடாமுயற்சி பாராட்டுதலுக்கு உரியது.

நாடு, இனம், மதம் என எதனையும் கருத்தில் கொள்ளாமல். கோவிட்-19 இன்று உலகையே தாக்கி வருகிறது. தொடக்கத்தில், இந்த வைரஸ் சீன நாட்டை உலுக்கியபோது, ‘அவர்களுக்கு இது தேவை’ என என் நாட்டில் சிலர் கிண்டலடித்து பேசியதுண்டு.

இன்று, அதே வைரஸ் ஶ்ரீ பெத்தாலிங் பள்ளிவாசலில் தொழுகை மேற்கொண்ட ஒருவரையும் தாக்கியுள்ளது. அந்த ஓர் இனத்தை, மதத்தை இந்த வைரஸ் தாக்கியதை எண்ணி, என் மண்ணில் நிச்சயம் யாராவது ஒருவர் மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஆனால், இந்த வைரஸின் மகத்துவமும் மேன்மையும் என்னவென்றால், அது வெள்ளைக்காரர்கள், கறுப்பினத்தவர், மஞ்சள் மக்கள் என்று யாரையும் நிறம் பிரித்துப் பார்க்கவில்லை, அனைவரிடமும் நியாயமாக நடந்துகொள்கிறது.

இந்த வைரஸ் சாதாரணக் கண்களுக்குத் தென்படவில்லை என்றாலும், அதன் விளைவுகள் இன்று ஒவ்வொரு மனிதனையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆடம்பரமாக வாழ்பவர்கள், அங்கும் இங்குமாகப் பயணம் செய்பவர்கள் என யாரும் இதிலிருந்து விடுபடவில்லை. இன்று அனைவரும் ஒருபடி இறங்கி, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியையும் தங்கள் ஆணவம் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் மனித நோய் எதிர்ப்பு சக்திக்கும் சுயநலத்திற்கும் வெற்றிகரமாக சவால் விட்டுள்ளது.

நம் நாட்டில், கடந்த காலத்தில், 3D (ஆபத்தான, அழுக்கான & கடினமான) வேலைகளைச் செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்கள் நோய்வாய்ப்படும்போது, அவர்களுக்குச் சுகாதாரப் பாதுகாப்பு வழங்க 3 மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இந்த நடைமுறையைப் பிஎஸ்எம் விமர்சித்தபோது, பலர் அதை ஏற்கவில்லை.

ஆனால் இன்று, கோவிட்-19 காரணமாக, அந்நோயின் அறிகுறிகள் காணப்படும் வெளிநாட்டு தொழிலாளர்களை இலவச சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வருமாறு அரசாங்கம் அழைக்கிறது. காரணம், பொது சுகாதாரப் பிரச்சினையில், நோயாளிகளுக்கு எதிராக நாம் பாகுபாடு காட்ட முடியாது என்பதை அவர்கள் இறுதியாக தற்போது உணர்ந்திருக்கிறார்கள். இன்று கோவிட்-19, பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென கொள்கை வகுப்பாளர்களை வெற்றிகரமாக எச்சரித்துள்ளது.

என் நாட்டில், எந்நேரமும் இனரீதியான பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு விளையாடும் அனைத்து உணர்ச்சிவசமிக்க அரசியல்வாதிகளுக்கும், இது தேவை. எந்நேரமும் அதிகாரம், கட்சி தாவுதல், இராஜினாமா, அங்கும் இங்குமாக அரசியல்வாதிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதற்கான பேச்சு வார்த்தைகள் என்று இன்னும் யோசித்துக்கொண்டிருப்பவர்களை, இன்று கோவிட்-19 ஒருகணம் நிறுத்தி வைத்துவிட்டது, அனைத்து பெரிய ஒன்று கூடல்களையும் கட்டுப்படுத்த முடிந்தது. ஆக, இந்தக் கூட்டத்தினருக்கு – பொறுமையாக, நிதானமாக செயல்படுங்கள்.

ஒரு மனிதனாகவும் ஒரு தேசமாகவும் நாம் இணைந்து போராட வேண்டும் என்பதனை கோவிட்-19 நமக்குக் கற்பித்துள்ளது. இத்தாலி போன்ற முதல் உலக நாடுகள் கூட இந்த நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை மற்ற நாடுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சூழல் இன்று ஏற்பட்டுள்ளது.

எனவே, எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு பெரிய கூட்டாக தங்கள் பங்கை ஆற்றினால் மட்டுமே, இந்தச் சிக்கலைக் குறைக்க முடியும். இன்று வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு நாம் அறிவுறுத்தப்படுகிறோம். இது வரவேற்கத்தக்கது, ஆனால் அனைத்து பணியாளர்களுக்கும் இது சாத்தியமல்ல, அவர்கள் ஊதியம் இல்லா விடுப்பு எடுக்கக்கூடிய சூழல்களும் ஏற்படுகின்றன. இந்நிலையில், உபரி நிதியைக் கொண்ட பணக்காரர்கள் மற்ற தொழிலாளர்கள் நெருக்கடியைச் சமாளிக்க பண உதவி செய்ய முன்வர வேண்டிய நேரமும் இதுதான். இதனைத்தான் செல்வப் பங்கீடு எனச் சொல்கிறார்கள். ‘கோவிட்-19 நிதி திரட்டு’ பிரச்சாரத்தைவிட, பணக்காரர்களிடம் வரி வசூலிப்பு நடவடிக்கையானது நிச்சயமாக அரசாங்கத்தின் புத்திசாலித்தனமான நடவடிக்கையாக அமையும்.

கோவிட்-19 நெருக்கடியை அமைதியாகவும் ஒன்றாகவும் எதிர்கொள்வோம்.

தமிழாக்கம் :- சாந்தலட்சுமி பெருமாள்