கூட்டணியில் புகைச்சல் – முஹிடின் அரசு நீடிக்குமா? ~இராகவன் கருப்பையா

பிரதமர் முஹிடின் யாசின் தலைமையிலான புதிய அரசாங்கம் அமைந்து இன்னும் 2 வாரங்கள் கூட ஆகாத நிலையில், கூட்டணியில் ஏற்பட்டுள்ள புகைச்சல் அரசாங்கத்தின் நிலைத்தன்மையைp பாதிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்கு முன், 60 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து ஆட்சி பீடத்தில் இருந்த அம்னோ இதரப் பங்காளிக் கட்சிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆட்டிப் படைத்த ஒரு கட்சி என்பது நாம் அறிந்ததுதான்.

ஆனால் இப்போது, பெர்சத்து கட்சியின் தயவால் புறவழியாக அரசாங்கத்திற்குள் நுழைந்துள்ள அந்தக் கட்சியின் நிலை பெருமளவில் மாறுபட்டுள்ளதால், அவர்களால் அந்தச் சூழலை ஜீரணிக்க முடியாமல் தவிப்பதாகத் தெரிகிறது.

மொத்தம் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அம்னோதான் பெரிக்காத்தான் கூட்டணியில் ஆகப்பெரிய கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர்களுக்கு 9 அமைச்சர் பதவிகளை மட்டுமே ஒதுக்கிய முஹிடின், வெறும் 25 உறுப்பினர்களைக் கொண்ட தமது பெர்சத்து கட்சிக்கு 11 அமைச்சர் பதவிகளை ஒதுக்கியுள்ளதால், அம்னோ தலைவர்கள் போர் கொடி பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.

அந்த 9 அமைச்சுகள் கூட ‘முதல் நிலை’ அமைச்சுகள் கிடையாது என்பது அவர்களுடைய மற்றொரு ஆதங்கம்.

முக்கியமான அமைச்சுகளில் இருப்பவர்களுக்கு மக்களிடையே அதிக செல்வாக்கும் தொடர்பும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தங்களைத் தயார் படுத்திக்கொள்வதற்கு அது ஏதுவாக அமையும் என்பதும் உண்மைதான். இதுவெல்லாம் அவர்களுடைய அரசியல் சாணக்கியம்.

ஆளும் கூட்டணியில் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டிருந்தும், 2-ம் நிலைக்குத் தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாகக் கருதும் அம்னோவின் கூக்குரல் முஹிடினுக்கு இப்போது மேலும் ஒரு தலைவலியைச் சேர்த்துள்ளது.

நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கியிருப்போருக்கு அமைச்சில் இடமில்லை என முஹிடின் ஏற்கனவே அறிவித்துவிட்டதால், அம்னோ தலைவர் அஹமட் ஸாஹிட் இயல்பாகவே விடுபட்டார்.

இருப்பினும் எவ்வித ஊழல் விவகாரங்களிலும் சம்பந்தப்படாத அதன் துணைத் தலைவர் டத்தோ முஹமட் ஹசான் செனட்டராக்கப்பட்டு அமைச்சராக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அதுவும் நடக்கவில்லை.

முஹமட் ஹசானோடு, குரல் எழுப்பத் தொடங்கியுள்ள மற்ற அம்னோ தலைவர்களான காலிட் நொர்டின், அஸாலினா ஒஸ்மான், ஷாரிர் சாமாட், தாஜூடின், கிர் தோயோ மற்றும் புங் மொக்தார் முதலியோரின் கோபத்திற்கு மற்றொரு காரணம் முன்னாள் பி.கே.ஆர். துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கு முஹிடின் கொடுக்கும் முக்கியத்துவம்தான்.

புதிய அரசாங்கத்தில் குறைந்தபட்சம் 5 பேர் துணைப் பிரதமர் பதவிக்குக் குறி வைத்திருந்ததால், எந்தத் தரப்பையும் பகைத்துக்கொள்ளாமல் இருக்கும் பொருட்டு யாரையும் அப்பதவிக்கு அவர் நியமிக்கவில்லை.

இருந்தபோதிலும், அஸ்மின் உள்பட 4 அமைச்சர்களை மூத்த அமைச்சர்களாக பெயர் குறிப்பிட்ட முஹிடின், அந்நால்வரும் தமக்கு உதவியாகச் செயல்படுவார்கள் என்று அறிவித்தார்.

அனுபவத்திலும் வயதிலும் அஸ்மின்தான் இதர 4 பேரையும்விட இளமையானவர். அப்படியிருக்க, எந்த அடிப்படையில் அவர் மூத்த அமைச்சரானார் என அம்னோ தலைவர்கள் அப்போதே மூக்கின் மேல் விரல் வைத்தனர்.

இந்நிலையில், தாம் இல்லாத பட்சத்தில் அமைச்சரவைக் கூட்டத்தை அஸ்மின் நடத்துவார் என சில தினங்களுக்கு முன் முஹிடின் செய்த அறிவிப்புதான் அவர்களுடைய சினத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது என உறுதியாக சொல்லலாம். ஏனென்றால், அந்த அறிவிப்பானது அஸ்மினை அதிகாரப்பூர்வமற்ற துணைப் பிரதமராகவே மறைமுகமாகக் காட்டுகிறது.

ஆனால், முஹிடின் அஸ்மினுக்குப் பெருமளவில் கடமைப்பட்டுள்ளார் என்பதையும் நாம் மறுக்க இயலாது. ஏனென்றால், பக்காத்தான் ஹராப்பான் அரசு கவிழ்ந்து பிறகு முஹிடின் பிரதமர் பதவியில் அமர்வதற்கு வித்திட்டதே அஸ்மின்தான் என்பதும் நாம் அறிந்த ஒன்றே.

கூட்டணியில் உள்ள எல்லா உறுப்புக் கட்சிகளையும் ஒருசேர திருப்திபடுத்தும் நோக்கத்தில் நாட்டின் வரலாற்றில் 69 பேரைக்கொண்ட மிகப் பெரியதோர் அமைச்சரவையை அமைத்த முஹிடின், இந்தப் புகைச்சலுக்கு உடனடித் தீர்வுகாண முற்படுவது மிகவும் அவசியமாகும். இல்லையேல் இவர்களுடைய அரசியல் சித்து விளையாட்டினால் பாதிக்கப்படுவது மக்கள்தான்.

அதனை எப்படி செய்யப் போகிறார் என்பதுதான் இப்போது மக்களுடைய கேள்வி.