ஜீவி காத்தையா காலமானார் – நாடு ஒரு வர்க்க போரட்டவாதியை இழந்தது!

அரை நூற்றாண்டிற்கும் மேலாக ஒரு தொழிற்சங்கவாதியாக, சமூகச் செயற்பாட்டாளராக, கட்டுரையாளராக, செய்தியாளராக, களப் போராளியாக மலேசியத் தொழிலாளர்களின் மனங்களில் வீற்றிருந்த ஜீவி காத்தையா தனது 82 ஆவது அகவையில் நேற்று காலமானார்.

செம்பருத்தி.காம் மற்றும் மலேசியகிணி.காம் இணையப் பத்திரிக்கைகளின் தமிழ் பிரிவு ஆசிரியராகக் கடந்த 15 வருடங்களாகப் பணியாற்றிய இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் ஓய்வு பெற்றிருந்தார்.

நாட்டின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரான இவர் மூன்று முறை மலேசிய நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் போட்டியிட்டவராவார்.

மலேசியாவின் நிலக்கரிச் சுரங்க நகரான பத்து ஆராங்கில் 1938ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது தொடக்கக் கல்வியைப் பத்து ஆராங் தமிழ் மற்றும் ஆங்கிலப்பள்ளிகளிலும் அதன் பின் கோலாலம்பூர் மகாத்மா காந்தி உயர்நிலைப்பள்ளியிலும் கற்றவர். அதன் பின்னர்ப் பக்கிங்ஹாம், வாரி மற்றும் லண்டன் ஆகிய பல்கலைக்கழகங்களில் தனது உயர்கல்விக்கான படிப்பையும் ஆய்வையும் மேற்கொண்டு பட்டம் பெற்றவர்.

1964-இல் அகில மலாயா தோட்டச் சிப்பந்திகள் சங்கத்தை  (AMESU) உருவாகக் காரணமாக இருந்த காத்தையா, அதை 1971 ஆம் ஆண்டு ஒரு போராடும் இயந்திரமாக உருவாகத் துணைபுரிந்தார். அதன் பொதுச்செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் அச்சங்கம் ஒரு வலிமையானதாக உருவாக்கம் கண்டது.

வேலைநிறுத்தம் என்றால் என்ன என்ற அனுபவமே இல்லாத, தோட்டத் தொழிலாளர்களால் ஏளனம் செய்யப்பட்ட, அச்சங்கத்திற்கு “வேலைநிறுத்தச் சங்கம்” என்ற பெயர் உருவாகக் காரணகருத்தாவாக இருந்தவர் இவராகும்.

நூற்றுக்கணக்கான வழக்குகளுக்கு வேலைநிறுத்தம், தொழிலாளர் அமைச்சு, தொழில் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் மூலம் தீர்வு கண்டதாக அமரர் காத்தையா தனது அனுபவங்களை மேடை பேச்சுகளில் மூலம் பரப்புரை செய்து போராட்ட மக்களின் மனங்களில் நாயகனாக திகழ்ந்தவராவர்.

அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை (19.3.2020) காலை 1100 – பிற்பகல் 130 வரையில் 16 Jalan Desa 8/5, Bandar Country Homes, 48000 Rawang – என்ற இல்லத்தில் நடைபெறும், அதைத் தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் சுங்கை வே கம்போங் துங்கு  மின்சுடலைக்கு எடுத்துச்செல்லப்படும்.

அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு மலேசியகிணியின் அனைத்து நிருவாக உறுப்பினர்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.