ஜீவி காத்தையா – இறுதி மூச்சுவரை ஒரு தொழிற்சங்கவாதியாகவே வாழ்ந்தவர்! ~ எஸ் அருட்செல்வன்

ஒரு தீவிரமான பேச்சாளர், தொழிலாளர் வர்க்கத்தின் உண்மையான பாதுகாவலர், உணர்வுமிக்க ஒரு தொழிற்சங்கவாதி. முதலாளிகளிடம் – மாபா (MAPA) – தனது கருத்தைத் தெரிவிக்க ஒரு முறை அவர் மேசை மீது நின்றார் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது, இந்த மனிதரைப் பற்றிய எனது முதல் அறிமுகம் இதுதான். நான் சிரித்தேன், அந்த நபர் என்னிடம், அது உண்மைதான், நகைச்சுவை அல்ல என்றார்.

காத்தையாவுடன் பழகி, அவரை அறிந்த பிறகு, நான் அதை நம்ப ஆரம்பித்தேன். தொழிலாளர் வர்க்கத்தைப் பற்றி பேசும்போதோ அல்லது அவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும்போதோ, அந்த மனிதன் முழுக்க உணர்ச்சிவசப்பட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒருமுறை, மே தினத்தைத் தொழிலாளர் தினம் என்று கூறியதற்காக அவர் என்னைக் கடிந்துகொண்டார். ‘நீங்கள் அந்நாளை “மே தினம்” என்றுதான் சொல்ல வேண்டும்,’ என்று என்னிடம் கூறினார். மே தினக் கொண்டாட்டத்தில் இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று, பலமுறை என்னை அழைத்து பேசியுள்ளார்.

தொழில்சார் தொழிற்சங்கவாதிகளை அவர் எப்போதுமே தாக்கி பேசிவந்தார், அவ்வகை தொழிற்சங்கவாதிகளை ‘அவர்கள் யூனியன் தலைவர்கள் அல்ல, யூனியன் விநியோகஸ்தர்கள்’ என்று அழைத்தார். நான் அவர் பேச்சைக் கேட்டு அஞ்சியதுண்டு, ஆனால் அவரோ, தனது வார்த்தைகளையோ தொனியையோ சற்றும் குறைத்ததில்லை.

அகில மலாயா தோட்டச் சிப்பந்திகள் சங்கத்தின் (அமேசு – AMESU All Malayan Estate Staff Union) பொதுச் செயலாளராக காத்தையா இருந்துள்ளார். அக்காலகட்டத்தில், அமேசு மற்றும் என்.யூ.பி.டபிள்யு. (தேசியத் தோட்டத் தொழிலாளர்கள் சங்கம்) இரண்டையும், தொழிலாளர் வர்க்க ஒற்றுமையின் அடிப்படையில் ஒன்றிணைக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். இது அனைவராலும் எதிர்க்கப்பட்டது, ஆனால் வர்க்க அடிப்படையில் – காத்தையாவின் கோரிக்கை சரியானது.

2008-ம் ஆண்டு பொதுத் தேர்தலில், பிஎஸ்எம் பதிவு செய்யப்படாததால், செமினி தொகுதியில் நான் பி.கே.ஆர். சின்னத்தில் போட்டியிட்டேன். ஒரு சோசலிசவாதியிடம் தனது இருக்கையைப் பகிர்ந்துகொள்வதில் பி.கே.ஆர். கட்சிக்கு அவ்வளவாக விருப்பமில்லை. அப்போது எனது பணிமனையில் நடந்த தேர்தல் தொடக்க பிரச்சார உரையில், ஏசுநாதர், கிருஸ்ணர் மற்றும் அனைத்து கடவுள்களுமே கம்யூனிஸ்டுகள்தான் எனக் காத்தையா தீவிரமாகப் பேசினார். அவரது தைரியமான பேச்சால் பார்வையாளர்கள் திகைத்துப்போனார்கள். பி.கே.ஆர். சின்னத்தில் நான் போட்டியிடுவதைத் தடுத்து நிறுத்த, சிலர் அப்பதிவை அன்வார் இப்ராஹிமுக்கு அனுப்பியதாகவும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு சந்தர்ப்பத்தில், ஹட்ஞாய் அமைதி ஒப்பந்தத்தை நினைவுகூரும் விழாவின் போது, தாய்லாந்தில் சின் பெங்குடனான சந்திப்பை அவர் பகிர்ந்து கொண்டார். சின் பெங் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்காக மட்டுமே சின் பெங்கை மலேசியாவுக்கு வருமாறு சவால் விட்டதாக அவர் என்னிடம் கூறினார்.

21 ஜூன் 2014-ல், ஜொகூரில், இந்தியர்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், இனரீதியாக போராடுவதைவிட, வர்க்க ரீதியில் போராடுவதே சிறந்தது, தற்போதைய தேவையும் அதுதான் என்று காத்தையா பார்வையாளர்களிடம் கூறினார். தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட வேண்டும் என்றார்.

அது அவருடைய கொள்கை, தனது இறுதி மூச்சுவரை அவர் தனது கொள்கையில் உறுதியாக நின்றார் என்று நான் நம்புகிறேன். அந்த நிகழ்ச்சியில், அவர் மக்களைப் பி.எஸ்.எம். கட்சியில் உறுப்பினராகச் சொன்னார். அதிகமான இளைஞர்களைச் சேர்க்கும்படியும், இப்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போதாது என்றும் அவர் கூறினார்.

அவரது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அறிந்து, அந்தக் கொள்கைவாதியின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்ய பிஎஸ்எம் விரும்பியது. ஆனால், உடல்நிலை காரணமாக அவர் எங்களைச் சந்திக்க தயக்கம் காட்டியதால், நேர்காணலை செய்வது முடியாமல் போனது.

ஜீவி ஒரு கடின உழைப்பாளி, தனது இறுதி காலம் வரை மலேசியாகினி இணையத்தள பத்திரிக்கைக்கு கட்டுரைகள் எழுதி வந்தார், 80 வயதைக் கடந்த பின்னரும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

கடந்தாண்டு மே மாதம் 4-ம் தேதி, எங்களின் இறுதி சந்திப்பு, வரலாற்று நகரமான பத்து ஆராங்கில் நடந்தது. அப்போது அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், இருந்தும் அவர் அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர் எப்படி அந்த இடத்திற்கு வந்தார் என்பது கூட தெரியவில்லை. ஆனால், ‘மைக்’-ஐ கையில் பிடித்து பேசத் தொடங்கியதும், வழக்கம்போல அவரது சத்தமான தெளிவான பேச்சு வெளிபட்டது. மலேசியத் தொழிலாளர் தலைவர்களான மலாயா கணபதி மற்றும் பி வீரசேனன் பற்றி பேசினார்.

ஒரு காலத்தில், இந்தப் பத்து ஆராங் திடல் மே தினத்தன்று தொழிலாளர்களால் நிரம்பியிருக்கும், ஆனால், இன்று கூடாரத்தை நிரப்பும் அளவுக்கே நம்மால் கூட்டத்தைத் திரட்ட முடிகிறது,’ என்று அவர் தனது உரையில் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது.

தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தில் இளைஞர்களை ஈடுபடுத்துவதில் கடினமாக உழைக்க வேண்டும் என அவர் எங்களுக்கு அழைப்புவிடுத்தார்.

அமைதியாக ஓய்வெடுங்கள் தோழர் காத்தையா. இறுதி மூச்சுவரை ஓர் உண்மையான தொழிலாளர் வர்க்கப் போராளி நீங்கள். உங்கள் உயர்ந்த கொள்கைகளுக்கு இணங்க, நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம்.

தமிழாக்கம் :- சாந்தலட்சுமி பெருமாள்