சிவாலெனின் | மலேசிய மண்ணில் தமிழும் தமிழர் மரபும் தனித்துவத்தோடு இயங்கிக் கொண்டிருக்க பலர் பெரும் பங்காற்றியுள்ளனர், அவர்களில் சிலர் தங்களின் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக ஈகம் செய்தவர்கள்.
தங்களது ஒவ்வொரு நகர்விலும் சிந்தனையிலும் தமிழின் வளர்ச்சியையும் தமிழினத்தின் வாழ்வியல் மேம்பாட்டையும் தமிழர் மரபையும் பேணி காத்த தமிழறிஞர்களில், தனித்தமிழ் அரிமா ஐயா இர.ந.வீரப்பனார் மற்றும் தமிழ்புனல் ஐயா.மு.மணிவெள்ளையனார் ஆகிய இருவரும் தனித்துவம் மிக்கவர்கள்.
மலேசியாவில் மட்டுமின்றி உலகளாவிய நிலையில் மலேசியத் தமிழர்களுக்குச் சிறப்பினை ஏற்படுத்திக் கொடுத்த இவ்விருவரும், உலகத் தமிழர்களை மலேசியத் தமிழர்களோடு இணைத்த பெருமைக்குரியவர்களாவர். மலேசியத் தமிழர் வாழ்வையும் வரலாற்றையும் உலகத் தமிழர்களுக்கு எடுத்துரைத்த இவ்விருவரும் தங்களின் பணி தமிழுக்குத் தொண்டு செய்வது என ஓய்வின்றி இயங்கினார்கள்.
ஐயா இர.ந.வீரப்பனார் தோற்றுவித்த மலேசியத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் மற்றும் தமிழ் இலக்கியக் கழகம் ஆகியவற்றில் அவருக்கு அடுத்து அவரது பணியினைத் திறன்பட, அதன் இலக்கை நோக்கி கொண்டுச் சென்ற பெருமை ஐயா மு.மணிவெள்ளையனாரைச் சாரும். இன்றைக்கும் அவ்வமைப்புகள் சத்தமின்றி போற்றுதலுக்குரியத் தமிழ்ப்பணியை முன்னெடுத்து வருவதற்கு அவ்விருவரும் விதைத்துச் சென்ற சிந்தனைகள்தான் ஊக்கமாக இருந்து வருகின்றன என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். தங்களின் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் ஈகம் செய்த இந்தத் தமிழறிஞர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தது பெருமைக்குரியதுதான்.
உலகத் தமிழர் குரலாக ஒலித்த இர.ந.வீரப்பனார்
எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்ந்தார்களோ, அங்கெல்லாம் சென்று தமிழினத்தின் தடத்தைத் தேடி, தமிழும் தமிழினமும் இப்புவியில் நிலைத்து வாழ பெரும் பங்காற்றி உலகத் தமிழர் குரலாக ஒலித்தவர்தான் மலேசியாவில் ‘தனித்தமிழ் அரிமா’ என்று போற்றப்படும் ஐயா இர.ந.வீரப்பனார்.
தமிழும் தமிழர் நலமுமே மூச்சு என மலேசிய மண்ணில் தமிழ்ப்பணியாற்றிய ஐயா இர.ந.வீரப்பனார் தமிழர் வாழ்ந்த நிலம் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் தம் கால் தடம் பதித்தவராவார். தனது வாழ்நாளைத் தமிழ்மொழி வளர்ச்சி தமிழின மீட்சி எனத் தமிழியச் சிந்தனையோடு இணைத்துக் கொண்டவராவார்.
சிறுகதை, ஆராய்ச்சிக் கட்டுரை, ஆய்வுப் பணிகள், இலக்கிய நாடகம் நடத்துதல், மொழிப் போராட்டம், உலகளாவியத் தமிழ்ப்பண்பாட்டுத் தொடர்புகள் எனப் பல துறைகளில் ஈடுபட்ட பெருந்தகையரான ஐயா இர.ந.வீரப்பனார், மலேசிய மண்ணில் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் பல்வேறு நிகழ்வுகளை முன்னின்று நடத்தியுள்ளார்.
‘மலேசியத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம்’ மற்றும் ‘தமிழ் இலக்கியக் கழகம்’ ஆகியவற்றைத் தோற்றுவித்தப் பெருமைக்குரிய இர.ந.வீரப்பனார், மலேசியாவில் முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தலைமையேற்று நடத்தினார் என்பது வரலாற்றின் பெருமையாகும். தாம் வாழ்ந்த காலத்தில் சுமார் 45 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கெல்லாம் வாழ்ந்தத் தமிழர்களைச் சந்தித்து, தமிழர்கள் தமிழ் பண்பாட்டை இடையறாது பற்றியொழுக வேண்டும் என்றும் அதன் அவசியத்தையும் வலியுறுத்தி வந்துள்ளார்.
இலங்கை, கண்டி மாநிலத்தில் பிறந்து, மலேசியத் திருநாட்டில் வாழ்ந்த பேராசிரியர் வீரப்பனார், ஆரிய மேலாண்மையும் ஆணாதிக்கச் சிந்தனையும் சூழ்ந்திருந்தத் தமிழ் மக்களிடையே, பெண்மையைப் போற்றுதல் தமிழர் மரபு என்பதை வலியுறுத்தும் வண்ணம், தம் பெயருக்குரியத் தலையெழுத்தாக முதலில் தாயின் பெயரையும் அடுத்ததாக தந்தையின் பெயரையும் இணைத்துக் கொண்டார்.
1930, ஜூன் 8-ம் நாள், இரத்தினம் அம்மாள்- நடேசன் இணையருக்குப் பிறந்த வீரப்பனார், மலேசியத் தமிழ்ப்பள்ளியில் தனது ஆரம்பக்கல்வியைத் தொடங்கினார். பின்னர் இடைநிலைப்பள்ளி கல்வியை நிறைவு செய்து, ஆசிரியராகத் தனது பணியினைத் தொடங்கினார். ஆசிரியர் பணியிலிருந்து 1985-ல் ஓய்வு பெற்ற போதிலும், அவர் பகுதிநேரமாக இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்றுக்கொடுத்தார்.
படைக்கருவி ஏந்தாமல், தாளையும் கோலையும் கொண்டு வடித்த தமிழியச் சிந்தனைகளையேக் கருவியாகக் கொண்டு, தமிழியல் பண்பாட்டு புரட்சியை ஏற்படுத்தியத் தமிழ்ப் போராளியாகவே ஐயா இர.ந.வீரப்பனார் வாழ்ந்து வந்துள்ளார் எனலாம்.
‘உலகத் தமிழர் குரல்’ என்ற மாதிகை சிற்றிதழை வெளியிட்டு வந்த அவர், மலாய் தமிழ் ஆங்கில அகரமுதலி, மலேசியத் தமிழர்கள், உலகத் தமிழர், இலக்கிய இதயம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ள பேராசிரியர் இர.ந.வீரப்பனார் தனது வாழ்நாளில் கடைசியாக எழுதிய நூல் “உலகத் தமிழர்” பாகம் 3 என்பதாகும்.
தமிழ் மண், இனம், மொழி, பண்பாடு காக்கப்பட வேண்டும் என்று காலமெல்லாம் முழங்கியதோடு அதற்குரிய பயன்மிகு பணிகளையும் மேற்கொண்டவர். மலேசியத் தமிழரின் நிலையைப் புள்ளி விவரங்களோடும் வரலாற்று எடுத்துக்காட்டுகளோடும் தொகுத்து, இவர் எழுதிய ‘மலேசியத் தமிழர்கள்’ என்ற புத்தகம் மிகவும் புகழ்மிக்கது.
அவர் தோற்றுவித்த மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத்தில் அதன் செயலாளராக தனது அரும்பணியினை ஆற்றியிருந்த இர.ந.வீரப்பனார் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்திற்குத் தலைமையேற்று, சுமார் 25 ஆண்டுகள் தமிழ்த்தொண்டும் செய்துள்ளார். உலகத் தமிழர்களை மலேசியத் தமிழர்களோடு மொழியாலும் இன உணர்வாலும் ஒன்றிணைத்தப் பெருமைக்குரியத் தமிழ்நெஞ்சராக ஐயா இர.ந.வீரப்பனார் விளங்கினார்.
உடல்நலம் நலிவுற்றிருந்த நிலையிலும், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஏழாவது மாநாட்டை வெள்ளி விழா மாநாடாகச் சென்னையில் நடத்தினார். பின்னர், சொந்த கிராமத்துக்குச் சென்ற இர.ந.வீரப்பனாரின் உடல் நிலை மேலும் நலிவுற்றது. அவரது இறுதிமூச்சு 1999-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி முடிவுற்றது. அவரின் மரணம் மலேசியத் தமிழர்கள் மட்டுமின்றி உலகத் தமிழர்களையும் துயரத்தில் ஆழ்த்தியது.
அவர் இம்மண்ணை விட்டு மறைந்திருந்தாலும் அவர் வடித்துத் தந்த தேனொத்த தமிழியச் சிந்தனைகள் உலகத் தமிழர்தம் சிந்தையை ஆளும், அவரது புதிய சிந்தனையும் மாறுப்பட்ட பார்வையும் இன்றைக்கும் உலகத் தமிழர் நினைவுகளில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கிறது.
தமிழ்ப்புனல் மு.மணிவெள்ளையனார்
தமிழ் மக்கள் தமிழர்களாகவே வாழத் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்திருக்க வேண்டும், மொழியை ஆர்வத்துடன் கற்று தமிழினத்தின் பண்பாட்டுக் கூறுகளையும் நெறிமுறைகளையும் தெரிந்து, தெளிவுகொள்ள வேண்டும் என்னும் சிந்தனையோடு, தமிழ்த்தொண்டு செய்து வந்தவர் தமிழ்ப்புனல் ஐயா மு.மணிவெள்ளையனார். நமது மொழி, இனம், மரபு என்றென்றும் காக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று பாடாற்றியத் தமிழறிஞர்.
உலகத் திருக்குறள் தோண்டூழிய நிறுவன அமைப்பாளருமான தமிழ்நெறி தென்றல் ஐயா மு.மணிவெள்ளையனார், வள்ளுவன் தந்த குறள் வழி வாழ்ந்து, இளையோர் மனங்களில் திருக்குறள் சிந்தனையை விதைத்த நெறியாளர். மலேசியக் கல்வித் திட்டத்தில் திருக்குறள் ஒரு பாடமாக இடம்பெற வேண்டும் என்னும் கோரிக்கையைப் பரிந்துரைத்த நற்றமிழர்.
அமரர் இர.ந.வீரப்பனார் உருவாக்கிய மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத்தை இந்நாட்டில் தனித்துவமான இயக்கமாக மிளிரச் செய்தார். தமிழியல் பட்டயக் கல்வியை மலேசியாவில் அறிமுகப்படுத்தி, அதன் மூலமாகத் தமிழ் இலக்கியம் செழிக்க வைத்து, ஆயிரத்திற்கும் மேற்பட்டத் தமிழியல் கல்விப் பட்டதாரிகளை உருவாக்கியப் பெருமைக்குரியவர்.
சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவராகத் திறன்பட இயங்கி வந்த ஐயா மு.மணிவெள்ளையனாரின் தலைமையில் அக்கழகம் சிறப்புற்று இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் விதைத்த விதையின் விருட்சம் தான் இன்றைக்கும் நாட்டில் பல இடங்களில் அக்கழகம் தனித்துவமாக இயங்கி வருவதற்குக் காரணியமாக இருக்கிறது என்பதை மறுத்திடலாகாது.
விளம்பரமே இல்லாமல் தமிழுக்குப் பெரும் பணி ஆற்றிய அவர், தமிழில் பிற மொழி கலப்பை எதிர்த்ததோடு, நாட்டில் தமிழியத் திருமணங்களை நடத்தி தமிழியக் குடும்பங்களை உருவாக்கினார்.
தமிழ்ப்பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கிய இவர், இடைநிலைப்பள்ளியில் படிவம் ஆறு வரை கல்வி கற்றார். மேற்கல்வியைத் தொடர முடியாத நிலையில் தான் கற்ற தமிழ்ப்பள்ளியிலேயே ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கினார். பின்னர், தேசியத் தோட்டத் தொழிற்சங்கம் சிலாங்கூர் மாநிலக் கிளை அலுவலகத்தில் தலைமை குமாஸ்தாவாகப் பணிபுரிந்து, பின்னர் காப்புறுதித் தொழிலில் தம்மை முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்டார்.
தமிழுக்குத் துளியும் தொடர்பில்லாதக் காப்புறுதித் தொழிலில் ஈடுப்பட்டிருந்த போதிலும், அங்கும் அவரது தமிழ்ப்பணி தொடர்ந்துக் கொண்டுதான் இருந்தது. காப்புறுதி நிறுவனத்தில் பிற மொழிகளில் இருந்தவற்றைத் தமிழில் மொழி பெயர்கும் பணியினை விரும்பி ஏற்று, அங்கிருந்த தமிழ்நெஞ்சங்களைப் பெரிதும் கவர்ந்தார். அங்கும் அவர் தமிழைப் பற்றியும் தமிழின் சிறப்பைப் பற்றியும் அழகுப்பட எடுத்துரைக்கும் செயல்களை மேற்கொண்டார்.
கிரேட் ஈஸ்டன் அலுவலகத்தில், தை முதல் நாள் தமிழர் திருநாள், அதுதான் தமிழ்ப்புத்தாண்டு என்பதைத் தமிழர்களும் பிற இனத்தவர்களும் உணர்ந்துக் கொள்ளும் வகையில் அந்நாளைக் கருத்து செறிவுடன் கொண்டாடினார்.
தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு என்னும் குறிப்புகளையும் ஆவணங்களையும் தமிழ் நாட்டின் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதிக்கு அனுப்பி வைத்தவரும் ஐயா மு.மணிவெள்ளையனார்தான். அதன் பின்னர்தான், அவர் அனுப்பியக் குறிப்புகளையும் ஆவணங்களையும் அங்குள்ள அறிஞர் பெருமக்களோடு ஆய்வுசெய்து, தை முதல்நாள்தான் தமிழர் புத்தாண்டு எனக் கலைஞர் கருணாநிதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்பது வரலாற்றுகுரிய பெருமையாகும்.
மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத்தோடு மட்டும் இவரது தமிழ்ப்பணி நின்றுவிடவில்லை. மலேசியத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் உலகம் முழுவதும் விரிவடையவும் இவரது தமிழ்ப்பணி வழிவகுத்தது. அக்காலக்கட்டத்தில் அவர் மலேசியத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் செயலாளராக நனிசிறப்போடு பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.
2002, ஆகஸ்ட் 3-ம் திகதி, கோலாலம்பூர் சோமா அரங்கத்தில் நடைபெற்ற மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் நூல் வெளியீட்டு விழாவிற்கும் தலைமையேற்றிருந்தார். மலேசியாவில் தமிழைச் செழிக்கச் செய்த அறிஞர்களுள் ஒருவரான ஐயா மு.மணிவெள்ளையனார் தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் சிந்திப்பதை 2011-ம் ஆண்டு நவம்பர் 16-ம் நாள் நிறுத்திக் கொண்டார்.
அவர் நம்மோடு இல்லாவிட்டாலும் அவரது தமிழ்ப்பணியும் தமிழ்த்தொண்டும் காலத்தால் அழியாமல் இன்னமும் மலேசிய மண்ணில் உயிர்ப்பித்துக் கொண்டு இருக்கிறது. தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் அதன் மரபிற்காகவும் தம்மை ஈகம் செய்துக் கொண்ட நல்லறிஞரும் நற்றமிழருமான ஐயா மு.மணிவெள்ளையனார் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தது பெருமிதமானது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவின் தமிழ்ச் சான்றோர் இந்நாட்டில் மட்டுமின்றி உலக வாழ் தமிழருக்கும் தமிழுலகத்திற்கும் ஆக்கமான பணிகளைச் செய்துள்ளனர். அத்தகையப் பெருமைக்குரியவர்களாக இவ்விருவரும் திகழ்ந்ததை எண்ணி நாம் அனைவரும் பெருமைகொள்ள வேண்டும். இவர்கள் வகுத்த பாதையில் இன்றைய தலைமுறையும் தங்களைத் தமிழ்ப்பணியில் ஈடுப்படுத்திக் கொள்ள வேண்டும்.