நிர்பயா : ‘நீதி’ சாமானியர்களின் இறுதி நம்பிக்கை!

ஏறக்குறைய 7 ஆண்டுகளாக தொடர்ந்த ஒரு பாலியல் பலாத்கார வழக்கு….

விரைவு நீதிமன்றம் தண்டனை பிறப்பித்தும்…… மேல்முறையீட்டில், மாநில உச்ச நீதிமன்றம், இந்திய உயர்நீதிமன்றம் என நாடிய குற்றவாளிகளுக்கு….. இறுதியாக, இந்திய உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனையை வழங்கி, நிறைவேற்றியது, தூக்குக் கயிறு கொடூரர்களின் கழுத்தை நெறித்தது….

என்ன வழக்கு?

யார் இந்த நிர்பயா?

அவரின் இயற்பெயர்தான் என்ன?

குற்றம் புரிந்தவர்கள் இரண்டே நாட்களில் கைது செய்யப்பட்டது எப்படி?

விரைவு நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகும், 7 ஆண்டுகள் வழக்கு நீண்டது எதனால்?

2012-ல், டெல்லியில் நடந்த இந்தக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை, மகளிர் பாதுகாப்பு குறித்த அத்துணைச் சட்டங்களையும் இந்திய அரசை மறுபரிசீலனை செய்ய வைத்தது…..

பெண்ணியம் காக்கும் இலக்கியங்களைக் கொண்ட நாட்டில், இக்கொடூரம் நடந்தேறியது மிகப்பேர் அவலமாகவும்; உலக நாடுகள் மத்தியில், இந்தியாவுக்குக் கரும்புள்ளி இட்டதாகவுமே இருந்தது.

நிர்பயா இறந்தும், நடந்தேறியவைகளைக் கோர்வையாக கோர்கிறேன்…..

‘நிர்பயா’ என்றால் ‘அச்சமற்றவள்’ எனப் பொருட்படும்.

23 வயதான, ஓர் அழகான ஆத்மா, ஒளிமயமான எதிர்காலம் கொண்ட மருத்துவத்துறை மாணவிதான் ஜோதி சிங் பாண்டே, மற்ற பெண்களைப் போலவே மிக உயர்ந்த குறிக்கோள்களுடன் கனவு கண்டுகொண்டிருந்தவள்….. ஆனால் ஒரு நாள், அவளுக்கு ஏதோ ஒன்று நடந்தது…… அது அவளை உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்ச்சி ரீதியாக அழித்ததோடு மட்டுமல்லாமல், இறுதியில் அவள் மரணத்திற்கும் வழிவகுத்தது.

16 டிசம்பர் 2012 – அன்று இரவு 9:30 மணி முதல் 11:00 மணி வரை என்ன நடந்தது? அந்த ஒன்றரை மணி நேரம், இந்தியத் தேசத்தையே உலுக்கி, மனிதகுலத்தையே அவமானத்திற்குள்ளாக்கியது.

அவிந்திரா பிரதாப் பாண்டே

ஜோதி தனது 28 வயது ஆண் நண்பரான அவிந்திரா பிரதாப் பாண்டேவுடன் டில்லியின் சாகேட்டில் உள்ள சிட்டிவாக் மாலில் (Citywalk Mall), “லைஃப் ஆஃப் பிஐ” (Life Of PI) திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, இரவு 7:30 மணிக்கு, முனீர்கா பேருந்து நிறுத்தத்தில் அவரவர் வீடுகளுக்குச் செல்ல, பேருந்து அல்லது ஆட்டோ கிடைக்குமா எனக் காத்திருந்தனர், இருவருக்கும் அருகருகேதான் வீடு.

அச்சமயம், அங்கு வந்த ஒரு பேருந்தில், அதன் நடத்துநர்களில் ஒருவனான 17 வயது சிறுவனின் வற்புறுத்தலினாலும், இரவு மணி 9.30-ஐ நெருங்கத் தொடங்கிய காரணத்தினாலும் இருவரும் ஏறினர். அப்பேருந்தில் ஜோதி மற்றும் அவரது நண்பர் உட்பட எட்டு பேர் மட்டுமே இருந்தனர்.

அப்போதுதான் பேருந்து ஓட்டுநர் உட்பட, ஆறு பேரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார் நிர்பயா.

வன்கொடுமைக்குப் பின்னர், ஆறு பேரும் குற்றத்திலிருந்து தப்பிப்பதற்கான ஆதாரங்களை அழிக்க முயன்றனர், அதற்காக அவர்கள் ஜோதி மற்றும் அவிந்திராவைக் கொல்ல முயன்றனர். ஏற்கனவே, பாலியல் வன்கொடுமை காரணமாக வயிறு, குடல், கருப்பை மற்றும் பிறப்புறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிர்பயா இரும்பு கம்பியால் மேலும் தாக்கப்பட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற நண்பரும் குற்றவாளிகளால் தாக்கப்பட்டார். அதன்பிறகு, இருவரையும் சாலையோரத்தின் கால்வாயில் தூக்கி எறிந்தனர், அக்காமக்கொடூரர்கள்.

அதன்பிறகு, 15 – 20 நிமிடங்களில், சுமார் 11 மணியளவில், தெருவில் வந்த ஒருவர், கால்வாயிலிருந்து முணகல் சத்தம் கேட்க, அங்கு நிர்வாணமாகக் கிடந்த இருவரின் உடல்களையும் கண்டு மிரண்டு போய், தொலைப்பேசியில் இந்திய அவசரப் பிரிவிற்குத் தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு மருத்துவ ஊர்தியும் காவல் அதிகாரிகளும் விரைந்தனர்…… நிர்பயாவும் அவர் நண்பரும், சம்பவ இடத்திலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் இருந்த, சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டுச்செல்லப்பட்டனர்.

இதற்கிடையே, அங்கு நிர்வாணக் கோலத்தில், குளிரின் பிடியின் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த நிர்பயாவுக்கோ அவரது நண்பருக்கோ அங்குக் கூடியிருந்த மக்களில் யாரும் உதவவில்லை என்பதும் ஒரு வருத்தத்திற்குரிய விஷயமே. சொல்லொன்னா வயிற்று வலியிலும் தாகத்திலும் துடித்துகொண்டிருந்த நிர்பயாவிற்கு ஏன் பொது மக்கள் உதவ முன்வரவில்லை? அவளின் உடலை மறைக்க ஏன் யாரும் எந்தத் துணியையும் வழங்கவில்லை?

காவல்துறையினரின் கலந்துரையாடலுக்குப் பின்னரே, அருகிலிருந்த விடுதியிலிருந்து ஒரு போர்வைக் கொண்டுவரப்பட்டு, நிர்பயாவின் உடல் காவல்துறையினரால் மறைக்கப்பட்டுள்ளது. இப்போதெல்லாம் மக்கள் மிகவும் பரபரப்பாக இருக்கிறார்கள், மற்றவர்களின் துன்பங்களைக் கூட அவர்களால் உணர முடிவதில்லை.

தகவல் கூறியவரின் வாக்குமூலம், குழுமியிருந்த ஊடக நிருபர்களின் வாயிலாக மணிச் செய்திகளிலும் மாலை இதழ்களிலும் நாடு முழுவதும் பரவியது. முகநூல், கீச்சகம் என மின்னியல் ஊடகங்களின் வழி, உலகம் முழுக்க பரவி, உலக மக்களின் பேசும் பொருளானது இக்கூட்டுப்பாலியல் வன்கொடுமை.

17 டிசம்பர் 2012 – ஆங்காங்கே, மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்படும் அளவிற்கும் டெல்லி மாநிலத்தின் பொருளாதாரம் முடங்கும் அளவிற்கும் கடையடைப்பும் மக்கள் போராட்டமும் வெடித்திருந்தது.

மக்களின் போராட்டமாதலால், அவசர நாடாளுமன்றம் கூட்டப்பட்டு, விசாரணைச் சிறப்பு அதிகாரியாக திருமதி சாயா சர்மா ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டார். இன்றையிலிருந்து பாலியல் வன்கொடுமை வழக்குகள் யாவும் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தண்டனைகள் நிறைவேற்றப்படும் என நாடாளுமன்றத்தில் சட்டத் தலைவர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திருமதி சாயா சர்மா ஐ.பி.எஸ். தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்குக் காரணமான பேருந்து ஓட்டுநர் ராம் சிங், ஓட்டுநரின் சகோதரர் முகேஷ் சிங், முகேஷின் நண்பர்கள் என வினய் சர்மா, பவன் குப்தர், அக்‌ஷய் குமார் சிங் ஆகியோரை 24 மணி நேரத்தில் கைது செய்தனர், காவல்துறையினர். மேலும், கைதானவர்களின் சாட்சியம்படி, பதின்ம வயதில் ஒருவனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

19 டிசம்பர் 2012 – நிர்பயாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், எழுதுவதன் மூலம் தனது வாக்குமூலத்தை அவரால் வழங்க முடியுமெனத் தெரிவித்தனர்.

20 டிசம்பர் 2012 – நேரடி சாட்சியும், பாதிக்கப்பட்டவருமான அவிந்திரா தனது வாக்குமூலத்தைக் காவல்துறையினரிடம் வழங்கினார்.

21 டிசம்பர் 2012  – மருத்துவர்கள் நிர்பயாவுக்குச் சுயநினைவு திரும்பிவிட்டது, ஆனால் இன்னும் அவர் மோசமான நிலையிலேயே இருப்பதாகக் கூறினார்.

சுயநினைவு திரும்பிய நிர்பயாவின் வாக்குமூலம் நீதிபதியின் முன்னிலையில் பதிவுச் செய்யப்பட்டது. நிர்பயாவின் வாக்குமூலத்தை முழுவதாக காவல்துறையினரின் குற்றப்பத்திரிக்கையைத் தவிர்த்து இதுவரையில் யாரும் எழுத்தால் பதிவிடவில்லை.

சாயா சர்மா ஐ.பி.எஸ்.

அக்கொடூரத்தை எழுத்தால் வடிவிக்க அப்போது ஊடகத்தார் யாருக்கும் நெஞ்சைக் கல்லாக்க இயலவில்லை. ஆம், யாராயினும் மனதைக் கல்லாக்கச் செய்யும் கொடூரம் அது….. இலக்கியங்களில் வடிவமைக்கப்பட்ட அரக்கர்களின் செயலைவிடவும் கொடூரமான செயல்களுக்குப் பலியானவர்தான் நிர்பயா.

தலையில் இடதுப் பக்கம் இரும்பால் தாக்கப்பட்டு, இடது கை முறிக்கப்பட்டு, இடது கண் இமை கிழிக்கப்பட்டு, உதட்டிலிருந்து கன்னம் வரையில் இருபக்கமும் கத்தியால் கிழிக்கப்பட்டு, இரு மார்பகங்களிலும் கத்தியால் குத்தப்பட்டு, இடுப்பு எலும்பு முறிக்கப்பட்டு, முதுகுத் தண்டில் தாக்கியதால் முதுகுத்தண்டும் நொறுக்கப்பட்டுள்ளது, பெண் உறுப்பு முழுவதும் சிதைக்கப்பட்டுள்ளது, கண்ணாடி புட்டியை ஆசணவாய் வழியாக உடலினுள் செலுத்தி, உடைத்து உள்ளனர் அந்த கொடூரர்கள். காலின் இரண்டு முட்டிகளும் உடைக்கப்பட்டுள்ளன. இந்தக் கொடூரங்கள் யாவும் ஓடும் பேருந்திலேயே நடந்திருக்கிறது.

22 டிசம்பர் 2012 – கைது செய்யப்பட்டவர்களின் ஒருவன் 18 வயதிற்குற்பட்டவன் என்பதால், சிறார் குற்றப்பிரிவில் தண்டனை வழங்கப்படும் என விரைவு நீதிமன்றம் அறிவித்தது.

23 டிசம்பர் 2012 – அதுவரையில் அமைதியாக நடந்த மக்கள் போராட்டம் ஆர்ப்பாட்டமானது. ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த காவலதிகாரிகள் குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களின் தள்ளு முள்ளில் காவலதிகாரி திரு தோமர் பலத்த காயமடைகிறார். விடயம் கைமீறி போக, டில்லியில் ஆங்காங்கேப் பொது இடங்களில் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.

24 டிசம்பர் 2012 – நிர்பயாவின் உடல் நிலை மோசமாக, சிகிச்சைகள் தீவிரமாக்கப்பட்டன. தன் மகளின் உயிருக்கு ஆபத்தில்லை என நிர்பயாவின் தாயார் திருமதி ஆஷா தேவி பேட்டியளித்தார்

25 டிசம்பர் 2012 – ஆர்ப்பட்டத்தில் தாக்கப்பட்ட காவலர் திரு. தோமர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழக்க, நிர்பயா வழக்கு விசாரணை அதிகாரி திருமதி சாயா சர்மா ஐ.பி.எஸ், போராட்டக்காரர்களிடம் பேசினார், காவலர்களின் அர்ப்பணிப்பு, வழக்கில் உள்ள சிக்கல்களை விவரித்தார். திருமதி சாயா சர்மாவின் கோரிக்கைக்குப் பின் போராட்டத்தில் குழுமியிருந்தவர்கள் சிறுக சிறுக கலைந்தனர்.

26 டிசம்பர் 2012 – நிர்பயாவுக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட, துரித சிகிச்சைக்காக தனி விமானத்தில் சிகிச்சைக்கான ஆவணங்கள் நிரப்பப்பட்டு, உடனடியாக சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

29 டிசம்பர் 2012 – உயிர் போராட்டத்தில் பாடுபட முடியாமல் நிர்பயாவின் முச்சு நின்றது. டில்லி மாநில அரசே நடுங்கியது. இந்தியப் பாதுக்காப்புத் துறை அமைச்சகம் உட்பட, பொதுமக்கள் டில்லி விமான நிலையத்தில் குழுமியிருந்தனர்.

ஊடகங்களிடம் நிர்பயாவின் இறப்பை உறுதிப்படுத்தினார், டெல்லி மாநில முதலமைச்சர் ஷைலா டீக்‌ஷித் (Sheila Dikshit) அம்மையார். காவல் துறையினர் குற்றப்பத்திரிக்கையில் பாலியல் வன்கொடுமை என இருந்த வழக்கு, பாலியல் வன்கொடுமையும் கொலையும் எனத் திருத்தி எழுதப்பட்டது.

பொதுவெளியில் அறிவிக்கப்படாமல், அவசர அவசரமாகவும் ஆர்ப்பாட்டமின்றியும் அமைதியாக நிர்பயாவின் உடல் பிரேதப்படுத்தப்பட்டது.

31 டிசம்பர் 2012 – இந்தியா முழுக்க ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை நிர்பயாவுக்கான அஞ்சலியாக செலுத்தினர். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் மாநிலச் சட்டங்களைப் பாலியல் கொடுமைக்கு அரிதான வழக்காகவும், உடனடி தீர்வுக்கு வழிவகுக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

01 ஜனவரி 2013 – பாலியல் குற்றங்களைத் துரிதமாக விசாரிக்க, விரைவு விசாரணை நீதிமன்றங்களை முன்மொழிந்தது இந்திய உச்சநீதிமன்றம், அனைத்து மாநில அரசுகளும் அதற்கு வழிமொழிந்தன.

03 ஜனவரி 2013 – குற்றம்சாட்டப்பட்டவர்களில் 18 வயதிற்குற்பட்டவனைத் தவிர்த்து ஐந்து பேர் மீதும் கடத்தல், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் திட்டமிட்டக் கொலை ஆகியப் பிரிவுகளின் கீழ், டில்லி காவல்துறை குற்றப்பத்திரிக்கையை விரைவு நீதிமன்றம் வழக்காக எடுத்து விசாரித்தது.

05 ஜனவரி 2013 – இவ்வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகள், வழக்காடுகள் யாவும், ஊடகங்களில் நேரலையாக மக்களுக்கு ஔிப்பரப்பாகும், மக்கள் யாரும் போராட்டத்தில் ஈடுப்பட வேண்டாம் என்ற சட்டத்துறைத் தலைவரின் உறுதியின்படி மக்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை.

17 ஜனவரி 2013 – ஐவர் மீதான வழக்கு விசாரணை தொடங்கியது.

28 ஜனவரி 2013 – குற்றம் சுமத்தப்பட்டவர்களின் ஒருவன் சிறார் என உறுதிச்செய்யப்பட்டு, சிறார் வழக்கு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

ராம் சிங்

11 மார்ச் 2013  – நிர்பயா வழக்கின் முதல் குற்றவாளியெனக் கருதப்படும் ராம் சிங், விசாரணைக் கைதியாக இருந்த தீகார் சிறைச்சாலையில் தற்கொலைச் செய்துகொண்டான்.

05 ஜூலை 2013 – ஜுவனைல் குற்றவாளி மீதான வழக்கு விசாரணைக்குப்பின், தீர்ப்பு ஜூலை 11-ம் திகதி அறிவிக்கப்படும் என்றார் நீதிபதி.

11 ஜூலை 2013 – சிறார் நீதிமன்றத்தில் ஜுவானைலைத் தற்காக்க வழக்கறிஞர் கால அவகாசம் முறையிட்டதால், தீர்ப்பு 31 ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

22 ஆகஸ்ட் 2013 – குற்றஞ்சாட்டப்பட்ட நால்வர் மீதும் இறுதிக்கட்ட விசாரணை, விரைவு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்டது.

31 ஆகஸ்ட் 2013 – சிறார் குற்றவியல் நீதிமன்றம் ஜுவானைலுக்கு 3 ஆண்டுகள், சிறார் சீர்த்திருத்தப் பள்ளியில் கடுங்காவல் தண்டனை விதித்தது.

03 செப்டம்பர் 2013 – விரைவு நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு செப்டம்பர் 10-ம் திகதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

10 செப்டம்பர் 2013 – இறுதிக்கட்ட விசாரணையில், கூட்டுப்பாலியல் வன்கொடுமை, கொலை, உட்பட 13 பிரிவுகளின் கீழ், நான்கு பேரும் குற்றவாளிகள் என விரைவு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. தீர்ப்பை 13 செப்டம்பருக்கு ஒத்தி வைத்தனர்.

13 செப்டம்பர் 2013 – விரைவு நீதிமன்றத்தில் நான்கு பேருக்கும் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

23 செப்டம்பர் 2013 – விரைவு நீதிமன்றத் தீர்பை எதிர்த்து, டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர், குற்றம் சுமத்தப்பட்ட தரப்பினர். மேல்முறையீட்டை டில்லி உயர்நீதிமன்றமும் ஏற்று, விசாரணைக்கு ஆயுத்தமானது.

03 ஜனவரி 2014 – டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது.

13 மார்ச் 2014 – நால்வரின் மரணத் தண்டனையையும் டில்லி உயர்நீதிமன்றம் உறுதிபடுத்தியது.

15 மார்ச் 2014 – குற்றவாளிகள் நான்கு பேரின் மீதான மரண தண்டனையை நிறைவேற்ற, டில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.

03 பிப்ரவரி 2017 – டில்லி உயர் நீதிமன்றத்தின் தூக்குத்தண்டனையை இரத்துச் செய்து, விசாரணையை மீண்டும் தொடங்கியது இந்திய உச்ச நீதிமன்றம்.

05 மே 2017 – நிர்பயா கூட்டுப்பாலியல் வன்கொடுமை, கொள்ளை மற்றும் கொலை, உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியாகக் கூறி, நான்கு பேரின் மரண தண்டனையையும் மீண்டும் உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

08 நவம்பர் 2017 – குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனைச் செய்யக் கோரி மறுமுறையீடு செய்தான்.

12 டிசம்பர் 2017 – முகேஷின் மறுமுறையீட்டை டில்லி காவல்துறை எதிர்த்தது.

15 டிசம்பர் 2017 – முகேஷின் முறையீட்டைத் தொடர்ந்து, குற்றவாளிகளில் இருவரான வினய் மற்றும் பவன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனுவைத் தாக்கல் செய்தனர்.

(கூட்டுமுறையில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தனித்தனியே மேல்முறையீடு செய்ததால், தனித் தனியாக விசாரணைச் செய்யப்படும். தனி தனியாக விசாரணை நடத்தப்படுவதால் தூக்குத் தண்டனைக்கானக் காலம் தாமதமாகும் என்பது குற்றவாளிகளின் நிலைப்பாடு)

09 ஜூலை 2018 – அனைவரது மறுபரிசீலனை மனுவையும் ஒரு சேர நிராகரித்தது இந்திய உச்ச நீதிமன்றம்.

05 பிப்ரவரி 2019 – மரண தண்டனையை விரைந்து நிறைவேற்றக் கோரி, நிர்பயாவின் பெற்றோர் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர்.

10 டிசம்பர் 2019 – குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய், விசாரணையின் போது, தான் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனைச் செய்யக் கோரி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தான்.

13 டிசம்பர் 2019 – குற்றவாளியின் மறுபரிசீலனை மனுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார் நிர்பயாவின் தாய்.

18 டிசம்பர் 2019 – அக்‌ஷய்-இன் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. குற்றவாளிகள் நால்வருக்கும் மரணத் தண்டனையை உடனடியாக நிறைவேற்றுமாறு, உச்ச நீதிமன்றத்தை டில்லி மாநில அரசு கேட்டுக்கொண்டது.

நிர்பயா பெற்றோர்

2020 ……

ஜனவரி 7 – 2020, ஜனவரி 22-ம் தேதி (காலை 7 மணி), நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிட மரண ‘கருப்பு’ ஆணையில் (black warrants) விசாரணை நீதிமன்றம் கையெழுத்திட்டது.

ஜனவரி 14 – வினய் மற்றும் முகேஷின் ‘குராதிவ்’ மனுவை (curative petition) உச்ச நீதிமன்றம் நிராகரித்தது; முகேஷ் கருணை மனுவை ஜனாதிபதி முன் தாக்கல் செய்தான்.

(குராதிவ் மனு – மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டால் அல்லது தீர்ந்து போனால், நீதிமன்றத்தில் குறைகளைச் சரி செய்ய அல்லது தீர்ப்பதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்படும் கடைசி வாய்ப்பு)

ஜனவரி 17 – முகேஷின் கருணை மனுவை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நிராகரித்தார்; விசாரணை நீதிமன்றம் பிப்ரவரி 1, 2020 (காலை 6 மணி) மரணதண்டனை வழங்கப்படும் என மரண உத்தரவுகளை மீண்டும் வெளியிட்டது.

ஜனவரி 25 – உச்ச நீதிமன்றம் கருணை மனுவை நிராகரித்ததை முகேஸ் எதிர்த்தான்.

ஜனவரி 29 – ‘குராதிவ்’ மனுவுடன் அக்‌ஷய் உச்ச நீதிமனறத்தை அணுகினான்; முகேஷ் நிராகரிக்கப்பட்ட தனது கருணை கோரிக்கையை எதிர்த்து வழக்கு பதிவு செய்தான்.

ஜனவரி 30 – அக்‌ஷயின் ‘குராதிவ்’ மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜனவரி 31 – தனது சிறார் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, பவன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது; விசாரணை நீதிமன்றம் ‘கறுப்பு’ ஆணையை நிறைவேற்றுவதை இரண்டாவது முறையாக ஒத்திவைத்தது.

பிப்ரவரி 1 – விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, டில்லி உயர் நீதிமன்றத்தை மையம் நகர்த்தியது.

பிப்ரவரி 5 – விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மையம் அளித்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, நான்கு குற்றவாளிகளையும் ஒன்றாகத் தூக்கிலிட வேண்டும் என்று கூறியது; இது ஒரு வாரத்திற்குள் அனைத்து சட்டரீதியான தீர்வுகளையும் தொடரக் குற்றவாளிகளுக்கு வழிகோருகிறது, அதில் தோல்வி கண்டால், சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிப்ரவரி 6 – அக்‌ஷயின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.

பிப்ரவரி 7 – குற்றவாளிகளைத் தூக்கிலிட, புதிய தேதி கோரிய திஹார் சிறைச்சாலையின் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிப்ரவரி 11 – கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, வினய் உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்தான்; உச்ச நீதிமன்றம் டில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, மையம் மேல்முறையீடு செய்த நான்கு மரண தண்டனை குற்றவாளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

பிப்ரவரி 13 – சிறையில் சித்திரவதைச் செய்யப்படுவதாக வினய் குற்றம் சாட்டினான், அவனது கருணை மனுவை மதிப்பீடு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது; உச்ச நீதிமன்றம் பவனுக்கு ஒரு புதிய வழக்கறிஞரை நியமித்தது.

பிப்ரவரி 14 – ‘கருணை இல்லை’ மற்றும் ‘மன நோய்’ எனும் வினய்-இன் வாதத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிப்ரவரி 17 – மார்ச் 3-ம் தேதியை மரணதண்டனை நாளாக விசாரணை நீதிமன்றம் அறிவித்தது.

பிப்ரவரி 22 – மருத்துவ சிகிச்சைக்கான வினய்-இன் கோரிக்கையை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிப்ரவரி 28 – உச்ச நீதிமன்றத்தில் பவன் ‘குராதிவ்’ மனுவை தாக்கல் செய்தான்.

மார்ச் 2 – மரணத் தண்டனை ஆணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற குற்றவாளிகளின் கோரிக்கையைப் பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தூக்கிலிடப்படுவதற்கு ஒருநாள் முன்னதாக, உச்ச நீதிமன்றம் நிராகரித்த ‘குராதிவ்’ மனுவுக்கு எதிராக பவன் கருணை மனுவைத் தாக்கல் செய்தான்.

மார்ச் 3 – மூன்றாவது முறையாக, நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிடும் தண்டனையை விசாரணை நீதிமன்றம் தள்ளிவைத்தது.

மார்ச் 4 – குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க, புதியத் தேதி கோரி டில்லி அரசு நீதிமன்றத்தைக் கோரியது; பவனின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

மார்ச் 5 – மார்ச் 20-ம் தேதியை (காலை 5:30 மணி) தூக்கிலிடும் நாளாக விசாரணை நீதிமன்றம் ஆணையில் கையெழுத்திட்டது.

மார்ச் 7 – அவசர விசாரணை கோரும் முகேஷின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

மார்ச் 13 – கருணை மனுவை நிராகரிப்பதில் நடைமுறை குறைபாடு இருப்பதாகக் கூறி வினய் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.

மார்ச் 16 – குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்திற்கு (ஐ.சி.ஜே.) வழக்கை நகர்த்தினர்.

‘குராதிவ்’ மனு மற்றும் கருணை மனுவை மறுசீரமைக்க முகேஷ் செய்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மார்ச் 17 – முதல் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அக்‌ஷய் ஜனாதிபதிக்கு இரண்டாவது கருணை மனுவை எழுதுகிறான்; மரண தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்ற முகேஷ்-இன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மார்ச் 18 – மார்ச் 18-ம் நாள் மரணத் தண்டனையை நிறுத்தக் கோரி, குற்றவாளிகளின் ஆலோசகர் ஏ.பி.சிங் டில்லியின் பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தை நாடினார்; இனி இவ்வழக்கு சம்பந்தமாக எந்த ஒரு மனுவையும் இந்நீதிமன்றம் ஏற்காது. அதுமட்டுமின்றி குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்காடிய வழக்கறிஞர் ஏ.பி.சிங் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகக் கடுமையாக எச்சரித்து நீதிமன்றம்.

மார்ச் 19 – ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்ததற்கும், மரணதண்டனை விதிக்கக் கோருவதற்கும் எதிரான பவனின் மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது; மரண தண்டனை உத்தரவுகளை நிறுத்த, கீழ் நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் எனும் இறுதி தீர்ப்பை வழங்கியது இந்திய உயர்நீதிமன்றம்.

மார்ச் 20 – டில்லி திஹார் சிறைச்சாலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு, அக்‌ஷய் தாக்கூர், முகேஸ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா ஆகியோருக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியது இந்தியச் சட்டம். காலை 6.00 மணிக்கு அந்த நான்கு காமக் கொடூரர்களும் இறந்து போனதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

ஏழாண்டு கால சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, தூக்கில் தொங்கவிடப்பட்டக் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் அவர்களது வாழ்நாளின் கடைசி 11 மணி நேரம், இவர்களால் சின்னாபின்னம் ஆக்கப்பட்டு உயிரிழந்த நிர்பயா, தனது வாழ்நாளின் கடைசி 11 நாள்கள் பட்ட அவஸ்தை, மனவேதனை நிச்சயம் கண்முன் வந்து சென்றிருக்கும் என்பது மட்டும் உண்மை.

இந்தியாவின் மகளுக்காக உலகம் முழுக்க பல்வேறு குழுமத்தினர் பிரார்த்தனைகளைச் செய்தனர். தன்னை உருகுலைத்தவர்களுக்குச் சட்டம் தண்டனைக் கொடுத்ததா என்பதை அறியாமலேயே ஆழ்துயிலில் சங்கமித்தால் நிர்பயா. ஆண்டுகள் பல ஆயினும், திடமாக நின்று, நீதிக்காக நீதிமன்றம் வந்துச் சென்ற நிர்பயாவின் அம்மாவின் மனம் இப்போது நிம்மதியடையும்.

நீதி சாமானியர்களின் இறுதி நம்பிக்கை!

எழுத்து :- ச.அ.இலெ.தினகரன் சங்கரன்