ஹெலின் பெலெக், துருக்கியைச் சார்ந்த, இடதுசாரி கொள்கை கொண்ட ஓர் இசைக்கலைஞர், கடந்த ஏப்ரல் 3-ம் தேதி, 288 நாள் உண்ணா விரதத்தின் இறுதியில் மரணித்துப் போனார். சுதந்திரமாகப் பாடுவதற்கு உரிமை வேண்டும் எனும் போராட்டத்தில், அந்த 28 வயது இளம்பெண் கொல்லப்பட்டார், துருக்கியின் ரெசெப் தயிப் ஏர்டோகன் அரசாங்கத்தின் கொடுங்கோன்மைக்கு சமீபத்தியப் பலி அவர்தான்.
துருக்கியில் பிரபலமான இடதுசாரி இசைக் குழுவான “யோரூம் குரூப்” எனும் குழுவின் உறுப்பினராக ஹெலின் பெலெக் இருந்தார். 1985-ம் ஆண்டு நிறுவப்பட்ட இக்குழு, இலத்தீன் அமெரிக்க “புதிய பாடல்” இயக்கத்தால் (நியூவா கேன்சியன்) ஈர்க்கப்பட்டது. இந்தக் குழு துருக்கிய மற்றும் குர்திஸ்தான் நாட்டுப்புற இசையை, ஓர் இடதுசாரி அரசியல் கண்ணோட்டத்துடன் இணைத்து, முதலாளித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முற்போக்கான பாடல்களை உருவாக்குவதற்கும், ஏழைகளை ஒடுக்கும் துருக்கிய அரசாங்கத்தின் கொள்கையை விமர்சிப்பதற்கும் பாடல்களை உருவாக்கி வந்தது.
துருக்கிய அரசாங்கம், யோரூம் குழுமத்தைப் பல ஆண்டுகளாக தொடர்ந்து துன்புறுத்துவதை எதிர்த்து, ஜூன் 2019-ல், யோரூம் குழுமத்தின் மற்ற நான்கு உறுப்பினர்களுடன் ஹெலின் பெலெக் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அப்போது அந்த ஐந்து இசைக்கலைஞர்களும் சிறையில் இருந்தனர்.
அந்த அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தின் உரிமைகோரல்கள் பின்வருமாறு :-
- ஐடில் கலாச்சார மையத்தின் மீதான சோதனைகளை நிறுத்துங்கள்;
(ஐடில் குல்தூர் மெர்கேஜி – இஸ்தான்பூல், ஓக்மெய்டானா பகுதியில் அமைந்துள்ள, யோரம் குழுமத்தின் உறுப்பினர்களால் நடத்தப்படும் கலாச்சார மையம்)
- யோரூம் குழுமம் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான தடையை நீக்குதல்;
- தடுத்து வைக்கப்பட்டுள்ள இசைக் குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் விடுவிக்கவும்;
- இசைக் குழுவின் மற்ற உறுப்பினர்கள் மீதான கைது வாரண்டை இரத்துசெய்;
- யோரூம் குழுமத்தின் உறுப்பினர்கள் மீதான வழக்கை இரத்து செய்.
உண்ணாவிரதத்தில் ஒரு சிறு வெற்றியைக் குறிக்கும் வகையில், யோரும் குழுமத்தின் உறுப்பினர்களாக இருந்த ஹெலின் பெலெக் மற்றும் பஹார் கர்ட் ஆகியோர் 2019 நவம்பரில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், தடுத்து வைக்கப்பட்டுள்ள யோரூம் இசைக் குழுவின் மற்ற உறுப்பினர்களை விடுவிக்கவும், யோரூம் குழுமம் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான தடையை இரத்து செய்யவும் கோரி ஹெலின் பெலெக் மற்றும் பஹார் கர்ட் இருவரும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர். தடுத்து வைக்கப்பட்டிருந்த இன்னொரு இசைக்கலைஞரான இப்ராஹிம் கோக்செக், இவ்வாண்டு, பிப்ரவரி 25-ம் தேதி விடுவிக்கப்பட்டார், ஆனால் அவரும் தனது உண்ணா விரதத்தைக் கைவிடவில்லை.
2020, மார்ச் 11, இரவு, ஹெலின் மற்றும் இப்ராஹிம் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்த “எதிர்ப்பு வீடு”, ஸ்வாட் சிறப்புப் போலிஸ் படையினராலும் அரசியல் போலீஸ் முகவர்களாலும் சோதனை செய்யப்பட்டது. இருவரும் போலிசாரால் கடத்தப்பட்டு, கிழக்கு இஸ்தான்புல், உம்ரானியே மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். துருக்கிய உள்துறை அமைச்சு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இஸ்தான்புல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில், இருவரையும் உம்ரானியே மருத்துவமனை ஒரு வாரம் தடுத்து வைத்து, வலுக்கட்டாயமாக “சிகிச்சை” செய்தது.
கட்டாய “மருத்துவ சிகிச்சை” என்பது, கட்டாயமாக உணவளிப்பதையும் உள்ளடக்கியது, உண்ணாவிரதத்தால் சோர்ந்துபோனவர்களின் ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் ஆபத்தை விளைவிக்கும் ஒரு செயல். மாவட்ட நீதிமன்றத்தின் முந்தையத் தீர்ப்பை, மேல்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்ததனால், இருவரும் ஒரு வாரம் கழித்து விடுவிக்கப்பட்டனர்.
2020, ஏப்ரல் 3, “எதிர்ப்பு வீட்டில்” தனது இறுதி மூச்சு நிற்கும் வரை, ஹெலின் பெலெக் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.
2020, ஏப்ரல் 4-ம் தேதி, ஹெலின் பெலெக் இறுதிச் சடங்கு அணிவகுப்பில் பலர் கலந்துகொண்டனர், ஆனால் துருக்கிய காவல்துறையினர் அந்த அணிவகுப்பைத் தடுத்துள்ளனர். போலீசார் அணிவகுப்பில் கலந்துகொண்டவர்களைத் தாக்கியதோடு, அவர்கள் மீது சோதனை நடத்தி பலரைக் கைது செய்தனர். ஹெலின் உடலைக் கைப்பற்றி, போலிசாரே கல்லறைக்குக் கொண்டு சென்றனர்.
யார் இந்த ஹெலின் பெலெக்?
மேற்கு துருக்கியில் அமைந்துள்ள தனது சொந்த ஊரான ‘சானக்காலே’யில், இலவசக் கல்விக்கான இளைஞர் போராட்டத்தில் சேர்ந்து, ஹெலின் பெலெக் இடதுசாரி அரசியல் செயல்பாட்டில் ஈடுபடத் தொடங்கினார். பின்னர் அவர், யோரூம் குழுமப் பாடகர்களால் பயிற்சியளிக்கப்பட்ட இளம் பாடகர்களில் ஒருவரானார். 2014 கோடையில், ஹெலின் பெலெக், துருக்கியைச் சேர்ந்த மற்ற இடதுசாரி ஆர்வலர்களுடன், இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிரான பாலஸ்தீனியப் போராட்டத்தை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட “மனித கேடயம்” பிரச்சாரத்தில் பங்கேற்றார்.
2016-ல், ஹெலின் பெலெக் அதிகாரப்பூர்வமாக யோரும் குழுமத்தில் சேர்ந்து, இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.
ஹெலின் யோரூம் குழுமத்தில் சேர்ந்த சிறிது காலத்திலேயே, 2016 நவம்பரில் எடில் கலாச்சார மையத்தில் சோதனை நடத்திய போலிஸ் நடவடிக்கையின் போது அவர் முதல்முறையாக கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், ஹெலின் பெலெக் பல முறை கைது செய்யப்பட்டார்.
துருக்கியில், இடதுசாரிக் கொள்கை கொண்ட யோரூம் குழுமம் ஏழைகளின் விடுதலைக்காகப் போராடியதால், அதிகாரிகளால் துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறைக்கு இலக்காகியது.
நேட்டோ எதிர்ப்பு மார்க்சிச-லெனினிச போராளிக்குழுவான “புரட்சிகர மக்கள் விடுதலை முன்னணி”- உடன் (டி.எச்.கே.பி-சி) இணைந்து செயலாற்றுவதாகவும்; துருக்கி அரசாங்கம் ஒரு மேற்கு ஏகாதிபத்திய கைப்பாவை என்று கருதுவதாகவும் அரசாங்கம் பலமுறை யோரூம் குழுவினர் மீது குற்றம் சாட்டியதோடு, அவர்களைப் பயங்கரவாதக் குழு என்றும் துருக்கிய அரசாங்கம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முத்திரை குத்தின.
துருக்கிய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட டி.எச்.கே.பி-சி உட்பட, எந்த இடதுசாரி அரசியல் குழுவுடனும் யோரூம் குழு ஒருபோதும் இணைந்து செயலாற்றவில்லை. இருந்தபோதிலும், துருக்கி அரசாங்கம், குறிப்பாக எர்டோகனின் ஆட்சியில் இருந்தபோது, யோரூம் குழுமத்தின் மீதான அரசியல் அடக்குமுறையை நிறுத்த முடியவில்லை. யோரூம் குழுமத்தின் பல உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். யோரூம் குழு வெளியிட்ட இசை ஆல்பங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன, அவற்றின் இசை நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆயினும்,
யோரூம் குழுவினரின் ஆல்பம், துருக்கிய வரலாற்றில் சிறந்த விற்பனையான ஆல்பங்களில் ஒன்றாகும், மேலும் அதன் இசை நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் கலந்துகொள்கிறார்கள்.
2016-ம் ஆண்டு முதல், நாட்டில், திறந்தவெளி நிகழ்ச்சிகளை நடத்த துருக்கி அரசாங்கத்தால் யோரூம் குழுமத்திற்குத் தடை விதிக்கப்பட்டது.
ஹெலின் பெலெக் தனது இளமை காலத்தை, அவரது குறுகிய வாழ்க்கையை மனிதநேயம், சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கான போராட்டத்திற்காக அர்ப்பணித்துள்ளார். இந்தப் போராட்டத்திற்காக அவர் தனது உயிரைத் தியாகம் செய்தார், ஒருபோதும் போராட்டத்தை அவர் கைவிடவில்லை, தூய தனது கருத்திற்கு ஒருபோதும் அவர் துரோகம் இழைக்கவில்லை…… அவரது வாழ்க்கையின் இறுதி வரை.
இருப்பினும், ஹெலின் பெலெக் தனது போராட்டத்தில் தனியாக இருக்கவில்லை, அவரைப் போலவே துருக்கிய தன்னலக்குழுக்களால் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட யோரூம் குழுவும். ஹெலின் பெலெக்கின் பெற்றோர் மற்றும் அவரது சக தோழர்களும் இப்போராட்டத்தில் அவருடன் சேர்ந்துதிருந்தனர். துருக்கி மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற ஆதரவு நடவடிக்கைகள் மூலம், யோரூம் குழுவின் உண்ணாவிரதம் மற்றும் அதன் கோரிக்கைகளை பொது மக்கள் கவனத்திற்குக் கொண்டு வர அவர்கள் பாடுபட்டனர். யோரூம் குழுவின் போராட்டம், துருக்கியில் உள்ள பல்வேறு இடதுசாரி அமைப்புகளின் ஆதரவைப் பெற்றது, குர்திஷ் தேசியவாத இயக்கம் உட்பட. பல பத்திரிக்கையாளர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் அறிவுமான்கள் யோரூம் குழுவினரின் கோரிக்கைகளுக்கு ஆதரவளித்துள்ளனர்.
ஹெலின் பெலக்கின் மரணம், துருக்கிய அரசாங்கத்தின் அட்டூழியங்களை உலகுக்கு நினைவூட்டுகிறது, மேலும், அவரது தியாகம் துருக்கியிலோ அல்லது உலகின் பிற இடங்களிலோ மக்கள் விடுதலைப் போராட்டத்தில் ஒரு உந்து சக்தியாக தொடரும்.
விடுதலையைப் பாடும் எந்தப் பாடலையும் அணைக்க முடியாது!
நீதியை நிலைநிறுத்தும் எந்தக் குரலையும் நிறுத்த முடியாது!
யோரூம் குழுவைச் சேர்ந்த, இப்ராஹிம் கோக்சேக் மற்றும் இன்னும் சிறையில் உள்ள முஸ்தபா கோசக் இருவரும் உண்ணாவிரதத்தை இன்னும் தொடர்கின்றனர், அவர்களும் ஹெலின் பெலெக் போன்று விதியின் விளிம்பில் உள்ளனர்……
நன்றி :- சோசலிஸ் ([email protected])
தமிழாக்கம் :- சாந்தலட்சுமி பெருமாள்