சாந்தலட்சுமி பெருமாள் | உலக ஏகாதிபத்தியங்கள், தங்கள் சந்தை நலனுக்காக, நிலம் மற்றும் நீர் வளங்களைக் கொள்ளையடிக்க, அவர்களின் செல்வாக்குமிக்க சூழ்ச்சியாக, ‘மேம்பாடு’ எனும் பெயரில் பல இன அழிப்புகளைச் செய்து வருகின்றன.
பிரிட்டனின் காலனி ஆதிக்கம், மனித உழைப்பையும் நாட்டின் மூல வளங்களையும் சுரண்டி எடுத்தது; வட அமெரிக்கா, அமெரிக்காவின் செவ்விந்தியப் பூர்வக்குடிகளை அழித்து, வெள்ளையர்களின் தேசமாக்கிக் கொண்டது; ஈரான் – ஈராக் யுத்தம், வியட்நாம் யுத்தம், ஈராக் – சடாம் உசேன் மீதான அமெரிக்காவின் தாக்குதல் தொடங்கி, தமிழீழ மக்கள் மீதான இன அழிப்பு உட்பட அனைத்துமே, இந்த ஏகாதிபத்திய நாடுகளின் செல்வாக்கைப் பரைசாற்றி, உலகச் சந்தையைக் கைப்பற்றவே நடந்தேறியவை. இதனால், உலகம் முழுவதும் மனித இனம் ஒரு நிம்மதியான வாழ்க்கையைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கின்றது, அவ்வரிசையில் ரோஹிங்கியா இனமும் ஒன்று.
ரோஹிங்கியா இன இஸ்லாமியர்கள், தாங்கள் மியான்மாரின் ரகைன் மாநிலத்தின் பூர்வக்குடிகள் எனக் கூறிக்கொள்கின்றனர். இதனைச் சில ஆய்வாளர்கள் ஆதரிக்கும் வேளையில், வேறு சிலரோ இவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வங்காள தேசத்தில் இருந்து குடியேறியவர்கள் என்றும்; 1948-ல் பர்மா விடுதலைக்குப் பின்னரும், 1971-ல் வங்கதேச விடுதலைக்குப் பின்னரும் ரகைனில் குடியேறியவர்கள் என்றும் கூறுகின்றனர். இவர்களின் பூர்வீகம் பற்றிய உண்மை நிலவரங்களைக் கட்டுரையின் அடுத்தடுத்த தொடர்ச்சியில் காண்போம். இந்த ரோஹிங்கியாக்கள் மியான்மாரின் பெரும்பான்மையினரான பௌத்த மத வெறியர்களாலும் இராணுவத்தினாலும் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகி, ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பல தசாப்தங்களாக நிலையற்ற தன்மை, மதப் பாகுபாடு மற்றும் இலக்கு வைக்கப்பட்ட வன்முறைகளை எதிர்கொண்ட இவர்கள் (கிட்டதட்ட நான்கரை இலட்சத்துக்கும் அதிகமானோர்), இன்று உலகின் பல நாடுகளுக்கு, குறிப்பாக, இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் வீற்றிருக்கும் வங்காள தேசம், இந்தியா, தாய்லாந்து, பாகிஸ்தான், மலேசியா போன்ற நாடுகளுக்குத் தஞ்சம் தேடி ஓடுகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி (2013), உலகில் அதிகமாகத் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு சிறுபான்மையினம் இந்த இஸ்லாமிய ‘ரோஹிங்கியாக்கள்’. திட்டமிட்ட இனப்படுகொலையின் காரணமாக, 1970-களில் தொடங்கிய வெளியேற்றத்தில், இன்றுவரை 1 மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் அகதிகளாக மாறியுள்ளனர். 1978, 1992, 2012 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வெளியேற்றங்கள் நடந்துள்ளன. ஆகஸ்ட் 2017-ல், நடந்த மிகப்பெரிய மற்றும் வேகமான வெளியேற்றத்தில், சுமார் 855,000 ரோஹிங்கியாக்கள், வங்காள தேசத்தில் அகதிகளாக குடியேறியுள்ளனர்.
மலேசியாவைப் பொறுத்த வரை, பிப்ரவரி 2020 இறுதி வரையில், மலேசிய ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர் ஆணையத்தில் (யு.என்.எச்.சி.ஆர்) பதிவு செய்துகொண்ட சுமார் 178,990 அகதிகள் மற்றும் புகலிடம் கோரியவர்களில், 154,080 பேர் மியான்மாரைச் சேர்ந்தவர்கள், அவர்களில் ரோஹிங்கியாக்கள் மட்டும் 101,010.
தஞ்சம் வந்த ரோஹிங்கியாக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
கடந்த ஏப்ரல் 16-ல், அரச மலேசியக் கடற்படையினர் (தி.எல்.டி.எம்.) ஆண், பெண், குழந்தைகள் என, சுமார் 200 ரோஹிங்கியாக்களை ஏற்றி வந்த ஒரு படகை, மலேசியக் கடற்பகுதிக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பியுள்ளனர். இதற்கு தி.எல்.டி.எம். சொன்ன காரணம் ‘கோவிட்-19’ நெருக்கடி.
ஆனால், அப்படகுகளை மீண்டும் வந்த வழியே திருப்பி அனுப்புவதனால், அத்தகைய கப்பல்களுக்குத் தலைமை தாங்கும் மனிதக் கடத்தல்காரர்களும் கொள்ளையர்களும் மலேசியா அல்லது அண்டை நாடுகளுக்குள் நுழைவதற்கு வேறு வழிகளைக் கண்டுபிடிப்பார்கள், இதனால் ரோஹிங்கியாக்களுக்கு முறையான சுகாதாரப் பரிசோதனையைச் செய்வதற்கான சாளரத்தை நாம் இழந்துவிடுவோம். இது கோவிட் -19 தொற்றுநோயின் ஆபத்தைப் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என ஐரோப்பிய ரோஹிங்கியாக்கள் சபையின் மலேசியத் தூதர் தெங்கு எம்மா சூரியானா தெங்கு அஸ்மி ஓர் அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்தார். (மலேசியாடேட்லைன் 21,ஏப்ரல், 2020)
மேலும், ரோஹிங்கியா மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான மூலகாரணத்திற்குத் திறம்படத் தீர்வுகாண ‘ஆசியான்’ தவறிவிட்டது. எனவே, இந்தக் கடினமான தருணத்தில், ஆசியான் நாடுகள் தங்களுக்கிடையிலான ஒற்றுமையை அடையாளங்காட்டிட, கடலில் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும். ஆசியானில் ஓர் உறுப்பினரான மலேசியாவுக்கும் இந்தக் கடமை உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, ரோஹிங்கியா மக்களுக்காகக் குரல் கொடுத்த தெங்கு எம்மா சூரியானா மலேசியர்களின் ஊடகத் தாக்குதலுக்கு ஆளானார். கடந்த சில நாட்களாக, வழக்கத்தைவிட சற்று அதிகமாக, இந்த ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிரான இன, மதவாதக் கருத்துகள் நம் சமூக வலைத்தலங்களில் பகிரப்படுவதைக் காண முடிகிறது. அதற்கேற்றார் போல, சில செய்தி ஊடகங்களும் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றி, அந்த இன, மத வெறித்தனத்தைக் கொழுந்துவிட்டு எரியச் செய்வதற்கு ஈடாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இவ்வளவு வெறுப்புகளுக்கு ஆளான இந்த ரோஹிங்கியாக்கள் யார்? உயிர் காக்கும் போராட்டத்தில், அந்த உயிரையேப் பணயம் வைத்து, அடிப்படைத் தேவைகள் முழுமையாக இல்லாதப் பட்சத்திலும், கடலில் பல நாட்களாகப் பயணம் மேற்கொண்டு, வேற்று நாடுகளை நாடும் இவர்களின் நோக்கம்தான் என்ன?
“நிலத்தை விட இந்தத் தண்ணீர் பாதுகாப்பானது, என்று எண்ணினால் ஒழிய, யாரும் தங்கள் குழந்தைகளைப் படகில் ஏற்றமாட்டார்கள்,” இது ஓர் அகதியின் மனக்குமுறல். இதன் அர்த்தம், அதிலிருக்கும் வலி நம்மில் எத்தனை பேருக்குப் புரியும்?
சுயநலத்திற்கு முன்னால் மனிதாபிமானம் மண்டியிட்டுதான் போகிறது பல சமயங்களில்….
மியான்மாரின் தேசிய இனப்பிரச்சனை
ரோஹிங்கியா இன அழிப்பு பிரிட்டிஷ் காலனித்துவக் காலத்திலேயே தொடங்கப்பட்ட ஒன்று. இதற்குப் பின்னால், அரசியல் காரணங்கள், வல்லாதிக்க அரசுகளின் பேராசை என பல மறைந்துகிடக்கின்றன. ஆக, ரோஹிங்கியா மக்கள் இனப்படுகொலையின் உண்மைநிலையை அறிய வேண்டுமாயின், மியான்மார் தேசிய இனங்களுக்கு இடையிலான பிரச்சனை பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
பல்வேறு இனங்களின் ஒன்றியமான மியான்மாரில் 8 தேசிய இனங்கள் உட்பட 135 அங்கீகரிக்கப்பட்ட இனக்குழுக்கள் வாழ்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 69% பாமர் இனத்தைச் சார்ந்தவர்கள், ஆகச் சிறும்பான்மையினர் ரோஹிங்கியாக்கள் 0.15%. பௌத்தவர்கள் 90%, கிறிஸ்துவர்கள் 4%, இஸ்லாமியர்கள் 4% என வாழும் மியான்மார், 1948 வரையில், பிரிட்டன் காலனியாதிக்கத்தில் இருந்தது.
மியான்மார் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெறும் முன்னரே, பாமர் இனத்திற்கும் பிற தேசிய இனங்களுக்கும் இடையே முறுகல் இருந்து வந்தது. இது மியான்மாரின் விடுதலைக்குப் பின்னர் ஆயுதப் போராட்டமாக வெடித்து, இன்றுவரை தொடர்கிறது.
1886-ல், அன்று ‘பர்மா’ என்று அழைக்கப்பட்ட மியான்மாரைப் பிரிட்டன் கைப்பற்றியது. பல்வேறு இனங்களின் தனித்தனி தேசமாக இருந்த பர்மாவை, நிர்வாக வசதிக்காக ஒன்றிணைத்து, ஒரே நாடாக உருமாற்றிய பிரிட்டன், தன் காலனியாதிக்கத்தின் வழி தொடர்ந்து பர்மாவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, வழக்கமான ‘பிரித்தாளும்’ சூழ்ச்சியை மேற்கொண்டது.
எல்லையோரத்தில் வாழ்ந்த கரேன், கச்சின் போன்ற பழங்குடி தேசிய இனங்களைத் தனது ஆயுதப் படையில் இணைத்துகொண்ட பிரிட்டன், அவர்களுக்கும் மையப்பகுதியில் இருந்த பாமர் பெரும்பான்மையினருக்கும் இருவேறு நிர்வாக முறைகளை வகுத்து, அவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்தது.
19-ம் நூற்றாண்டில் ஆசியாவின் பலம்பொருந்திய நாடாக உருவான ஜப்பான், தனது பேரரசை ஆசியா முழுவதும் விஸ்தரிக்க விரும்பி, சீனாவின் எல்லையோரப் பகுதிகளைக் கைப்பற்ற போரிட்டது. அதுமட்டுமின்றி, மேற்குலக நாடுகளை ஆசியாவிலிருந்து விரட்டும் நோக்கோடு, ‘கிழக்காசிய ஒருங்கிணைந்த பெரும் வளமை மண்டலம்’ (Great East Asia Co-prosperioty Sphere) என்ற திட்டத்தின் வழி, சீனாவை அடுத்து காலனித்துவ நாடுகளின் மீதும் அது போர் (பசிபிக் போர்) தொடுத்தது.
காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற தன்னோடு இணைந்து போரிடுமாறு ஜப்பான் விடுத்த அழைப்பை ஏற்று, ‘பர்மா விடுதலைப் படை’ (பாமர் இனத்தால் உருவாக்கப்பட்டது) அதனோடு இணைந்து பிரிட்டனுக்கு எதிராகப் போரிட்டது. அதேசமயம், பிரிட்டன் ஆயுதப் படையில் இருந்த எல்லையோர பழங்குடியினர் பிரிட்டனுக்கு ஆதரவாக ஜப்பானை எதிர்த்து போரிட்டனர். பர்மா விடுதலைப் படைக்கு, ஆங் சான் சூகியின் தந்தை, ஜெனரல் ஆங் சான் தலைமையேற்றிருந்தார். இப்போரின் போது, ஜப்பான் கூட்டுப்படையினர் எல்லையோரப் பழங்குடியினர் மீது, கடுமையான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். 1943-ல் ஜப்பான் – பாமர் கூட்டணி வெற்றி பெற்று, பர்மா ஜப்பானிடம் கைமாறியது.
இந்தப் பசிபிக் போர், ஆசியாவில் இரண்டாம் உலகப்போர் தீவிரமடைய காரணமாக இருந்தது. இந்தோனேசியா மற்றும் சீனாவில் மூலதனங்களைக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு, சீனா மீதான ஜப்பானின் ஆக்கிரமிப்பு போர் சிக்கலை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, ஜப்பானுக்கு இந்தோனேசியாவின் எரிபொருள் வளங்களும் தேவையாக இருந்தன. 19-ம் நூற்றாண்டு, அமெரிக்காவும் ஜெர்மனியும் இயந்திரப் புரட்சி காரணமாக தொழில் உற்பத்தியில் ஆதிக்க நாடுகளாக உருவாகின. வணிக வளங்களை ஆசியாவிலிருந்து சுரண்டுவதோடு நின்றுவிடாமல், இயந்திரத் தொழில்நுட்ப சாதனங்களை ஆசியாவில் சந்தைபடுத்தவும் அவர்கள் முயற்சித்தனர்.
இரண்டாம் உலகப்போரில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனா ‘நேச நாடுகளாக’ கூட்டணி அமைத்து, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலியை எதிர்த்து போரிட்டன. சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான ‘இந்திய விடுதலைப் படை’ ஜப்பானுடன் கைக்கோர்த்தது. பர்மாவின் எல்லையோரப் பூர்வக்குடிகள் பிரிட்டனுக்கு ஆதரவாகப் போரிட்டனர்.
1943-ல் பர்மாவைக் கைப்பற்றிய ஜப்பான், பர்மிய மக்களுக்கு எதிராக கொடூர அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. இதனைத் தொடர்ந்து, ஆங் சான், பர்மாவின் முதல் பிரதமரான யு நு மற்றும் பிற அரசியல் தலைவர்களுடன் இணைந்து, ஜப்பானை விரட்டுவதற்கும் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறவும் ‘பாசிசத்திற்கு எதிரான மக்கள் விடுதலை லீக்’-ஐ உருவாக்கினார். பர்மாவிலிருந்து ஜப்பான் வெளியேறியது, 1947 ஜனவரியில், ‘அடுத்த ஒரு வருடத்தில் பர்மாவுக்கு விடுதலை அளிக்கப்படும்’, ‘பிற தேசிய இனங்கள் வசிக்கும் எல்லையோரப் பகுதிகள் பர்மா ஒன்றியத்துடன் இணைக்கப்படும்’ என்று ஆங் சான் – அட்லி ஒப்பந்தம் கையெழுத்தானது. அத்தருணத்தில், பிரிட்டனிடம் கைக்கோர்த்திருந்த கரேன், கச்சின் இனங்கள் தங்களுக்கு எல்லா அதிகாரமும் உடைய சுதந்திர நாட்டை உருவாக்கிக் கொடுக்குமாறு பிரிட்டனைக் கேட்டுக்கொண்டன.
பாமர் இனத்தின் மேலாதிக்கத்தில் வாழ, எல்லையோர பழங்குடியினர் விரும்பவில்லை. இரண்டாம் உலகப் போரில் அவ்விரு குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட பகையை மேலும் வளர்ப்பதாக ஆங் சான்–அட்லி ஒப்பந்தம் அமைந்தது. ‘ஒன்றிணைந்த பர்மா ஒன்றிய’த்தில் நம்பிக்கையில்லாத கரேன், கச்சின் தேசிய இனங்கள், பர்மா விடுதலை அடைவதற்கு முன்னமே, 1947-ல், அரசியல் – இராணுவ அமைப்புகளை உருவாக்கி சொந்த தேசத்திற்காகப் போராடத் தொடங்கினர்.
இது ஒன்றிணைந்த பர்மா ஒன்றியத்திற்கு இடையூறாக அமைந்தது. ஆங் சான் எல்லையோர தேசிய இனங்களின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களின் மொழி, பண்பாட்டு உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அவர்களின் இறையாண்மைக்கு இடையூறு இருக்காது என்றும் உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து, பர்மா ஒன்றியத்தில் இணைய ஷாண், கச்சின், சின் இனத் தலைவர்கள் ஒப்புக்கொண்டு, 1947, பிப்ரவரியில், ‘பாங்க்லாங்க் ஒப்பந்த’த்தில் கையெழுத்திட்டனர். இதன்போது, கரேன் இனத்தினர் பார்வையாளர்களாக மட்டுமே இருந்தனர், மோன் மற்றும் அரக்கான் இனத்தவர் இக்கூட்டத்திற்கு வரவில்லை.
பாங்க்லாங்க் ஒப்பந்தம் கையெழுத்தாகிய சில மாதங்களில், ஜூலை 19-ல், ஆங் சான் படுகொலை செய்யப்பட்டார். பழங்குடிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமலேயே, 1948, ஜனவரி 4-ம் தேதி, பர்மாவை விடுதலை செய்து, பிரிட்டிஷ் அம்மண்ணில் இருந்து வெளியேறினர். பர்மா அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 199, அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தேசிய இனங்கள் பர்மா ஒன்றியத்தோடு இணைந்திருக்க வேண்டும், அக்காலக்கட்டத்தில் திருப்தி ஏற்படவில்லை என்றால் பிரிந்து செல்லும் உரிமை உண்டு என்றும் கூறியது; இருப்பினும் எல்லையோர மக்கள் அதனை ஏற்கவில்லை, பர்மா சுதந்திரம் பாமர்களுக்கானது என அவர்கள் கருதினர்.
வரலாறு தொடரும்…….
மேற்கோள்கள் :-
- Aamna Mohdin.(2017).A brief history of the word “Rohingya” at the heart of a humanitarian crisis. https://qz.com/search/)
- 2018.Who are the Rohingya? https://www.aljazeera.com/
- Erin Blakemor.(2019).Who are the Rohingya people? https://www.nationalgeographic.com/)
- Figure at a Glance.UNHCR-Malaysia 2001-2020
- http://www.keetru.com/
- https://en.wikipedia.org/wiki/Main_Page
- https://en.wikipedia.org/wiki/Rohingya_people
- https://www.tamilwin.com/
- https://www.vinavu.com/
அருமையான கட்டுரை. சிறப்பான விளக்க உரை. எழுத்தாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன். நன்றி
வரலாறு பல விசித்திரங்களை , உள்ளடக்கியது ! உங்கள் பதிவு அதை உறுதி படுத்துகிறது.
Allah is the only thing