சோசலிசப் போராட்டம் தேவையானது என்று, இன்று நிரூபனமாகியுள்ளது! ~ ஆ சிவராஜன்

22 வருடங்களாக, மக்களுடன் இணைந்து, அவர்களின் நலன்காக்கப் போராடி வரும் மலேசிய சோசலிய கட்சி தோற்றுவிக்கப்பட்ட நாள் ஏப்ரல் 30.

22 வருடங்களுக்கு முன், 1998-ல் நாட்டின் சராசரி அரசியல் விதிமுறைகளுக்குச் சவால் விடும் வகையில், ஏப்ரல் 30-ம் நாள், பி.எஸ்.எம். என்ற இக்கட்சி உருவானது. கட்சியைப் பதிவு செய்வதற்கான பாரத்தைப் பதிவாளர் அமைப்பில் (ஆர்.ஓ.எஸ்.) கொடுத்தபோது, பல சமூக ஆர்வளர்கள், சோசலிசத்தை மலேசியர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று எங்களுக்கு ஆலோசனை கூறினர்.

ஆனால், கடந்த 22 ஆண்டுகளாக நாங்கள் முன்வைத்த மக்களின் கோரிக்கைகள், காலத்திற்கு ஏற்றதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. அதிலும், இன்று மலேசியா மற்றும் உலகமே கொரோனா தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, பொருளாதார வீழ்ச்சியை எதிர்க்கொண்டிருக்கும் தருணத்தில், எங்களின் போராட்டம் மிகத் தேவையான ஒன்றாகவே கருதப்படுகிறது. ஏன் அப்படி சொல்கிறோம்? காரணத்தை அறிய எங்கள் போராட்ட வரலாற்றைத் தொடர்ந்து படியுங்கள்.

அடிப்படை மாதச்சம்பளம்

நான் இன்னும் மறக்கவில்லை, 2003-ல், பி.எஸ்.எம். கட்சித் தோழர்கள் தொழிலாளர்களுக்கான மாதச் சம்பளப் போராட்டத்தை முன்வைத்து, நாடு முழுவதும் கையெழுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்; 2012-ம் ஆண்டு, அக்கோரிக்கை அமலாக்கம் காணும்வரை, போராடி வெற்றி கண்டனர். இந்த மாதச்சம்பள சட்டம் இருப்பதாலேயே, இன்று முதலாளிமார்கள் தொழிலாளர்களுக்குச் சம்பள குறைப்பில் அழுத்தம் கொடுக்க முடிவதில்லை, முக்கியமாக இன்று நாம் எதிர்நோக்கியிருக்கும் இதுபோன்ற நெருக்கடி காலத்தில், தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சமுகநலத்திற்கு இந்த ‘மாதச் சம்பளம்’ உத்தரவாதம் அளிக்கிறது. மேலும், இவ்விக்கட்டான சமயத்தில், அரசாங்கமும் தங்களின் பொருளாதாரத் தூண்டுதல் தொகுப்பின் மூலம், குடும்ப வருமானம் RM4,000-த்திற்கும் கீழ் பெறும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், சிறு தொழில் வியாபாரிகளுக்கும் (தொழிலாளர்கள் எண்ணிக்கை 75-க்கும் குறைவு) சம்பள உதவித் தொகையாக RM1,200 வழங்குகிறது. அடிப்படை மாதச்சம்பள சட்டம் இருப்பதாலேயே, இன்று தொழிலாளர்களின் வருமானத்திற்கு ஓர் உத்தரவாதம் இருக்கிறது, அவர்களின் குடும்பச் செலவுகளை நிர்வகிக்க முடிகிறது. இன்றும் மாதச்சம்பள போராட்டத்தைத் தொழிலாளர்கள் தொடர்ந்து முன்வைக்கின்றனர், மேலும் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே அமைகிறது.

சமூகப் பாதுகாப்பு – தொழிலாளர் காப்புறுதித் திட்டம்

முதலாளித்துவத்தின் நிலையற்ற தன்மையினால், 10 வருடத்திற்கு ஒரு முறை கட்டாயம் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் எனும் கணிப்பில், 2016-ம் ஆண்டு, பி.எஸ்.எம். இந்தச் சிந்தனையை முன்வைத்தது. முதலாளித்துவப் பொருளாதார அமைப்பின் இத்தன்மையால், பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் போதெல்லாம் அதில் அதிகம் பாதிக்கப்படுவது தொழிலாளர்களே, அவர்கள் வேலை இழப்பர். தொழிலாளர் சட்டத்தின் கீழ், வேலை நிறுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுருந்தாலும், 30 விழுக்காடு முதலாளிமார்கள், நிறுவனம் திவாலாகிவிட்டது என்று கூறி, வேலை இழந்தத் தொழிலாளர்களுக்கு நஷ்டஈடு கொடுப்பதிலிருந்து கடைசி நேரத்தில் தப்பித்துக் கொள்கின்றனர். இதனால், 2016-ல், பி.எஸ்.எம். தொழிலாளர்களுக்கான ‘வேலை இழப்பு உண்டியல்’ தேவை எனக் கோரி நாடு முழுவதும் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியது. எங்களின் பிரச்சாரத்திற்குப் பலன் கிடைத்தது, 2017-ல், நாடாளுமன்றத்தில் ‘தொழிலாளர் காப்புறுதி திட்டம்’ அங்கீகரிக்கப்பட்டது, வேலை இழக்கும் தொழிலாளிகள் 2019-லிருந்து உதவித் தொகையைப் பெறத் தொடங்கினர்.

இப்போது, கோவிட்-19 தொற்றுநோய் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியில் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் சுமையைக் குறைக்க இந்தத் தொழிலாளர் காப்புறுதி திட்டம் பேருதவியாக உள்ளது.

அனைவருக்குமான வீட்டுரிமை

1980-ல், பி.எஸ்.எம். முன்னாள் தலைவர் டாக்டர் நாசிர் ஹசிம் ஆரம்பித்து வைத்த நகர முன்னோடிகளின் வீட்டுரிமை போராட்டத்தை மற்ற பி.எஸ்.எம். தோழர்களும் தொடர்ந்தனர். பாரிசான் ஆட்சி காலத்திலிருந்து பக்காத்தான் அரசாங்கம் வரை நகர முன்னோடிகள் அவர்களின் பாரம்பரிய கிராமங்களிலிருந்து விரட்டப்பட்டு, குருவிக் கூடு போலான மலிவு விலை அடுக்குமாடி வீடுகளுக்கும், பி.பி.ஆர். குடியிருப்புகளுக்கும் துரத்தப்படுகின்றனர். நகர முன்னோடிகள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களின் பாரம்பரிய கிராமங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே பி.எஸ்.எம்.-மின் நிலைப்பாடு. ஆனால், இந்த இரண்டு அரசாங்கங்களும் நில உரிமையாளர்கள் எனக்கூறி ஒரு பத்திரத்தைக் காட்டி மேம்பாட்டு திட்டத்துடன் வருபவர்களிடம் நில உரிமையை ஒப்படைக்கின்றனர். மக்களின் உரிமைக்குரல் அவர்களின் காதுகளுக்கு எட்டவில்லை, அவர்களின் குடியிருப்புகள் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்படுகின்றன.

இந்தக் கொரோனா தொற்றுநோய் நெருக்கடியில், மக்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லி கூவிக் கொண்டிருக்கிறது அரசாங்கம். மேலும், ஒருவருக்கொருவர் இடைவெளியோடு இருக்கவும் சொல்கிறது. 650 சதுர அடி அளவில், குருவிக்கூடு போன்ற அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் ஒரு பெரிய குடுப்பம், இந்த நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலகட்டத்தை எப்படி சமாளிக்கும்? பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ‘வீட்டிலேயே இரு’ எனும் சவால் நிச்சயம் மாறுபட்டதே!

நகர முன்னோடிகளைத் தவிர்த்து, வீட்டு மாதாந்திர தவணைக் கட்டணத்தைக் கட்ட முடியாமல், வீட்டை இழப்பவர்களும் பி.எஸ்.எம். கட்சியைத் தேடி வருகின்றனர். பொருளாதார நெருக்கடியின் போது, வேலை இழப்பு ஏற்பட்டு வருமானம் பாதிக்கிறது, இதனால் தொடர்ந்து 3 மாதங்கள் வீட்டுத் தவணையைக் கட்ட முடியாமல் வீடு ஏலத்தில் போகிறது. பி40 மக்கள் அதிகம் இதில் பாதிக்கப்படுகின்றனர். இப்போது கொரோனா தொற்றுநோய் காலத்தில், வங்கிகள் 6 மாதகால கடன் விலக்கு கொடுப்பது போல், பொருளாதார நெருக்கடியில் பாதிக்கும் மக்களுக்கும் அந்த நேரத்தில் கடனை மறுசீரமைப்பு செய்து, சில மாதங்கள் கடன் விலக்கு கொடுத்தால் ஏழை மக்கள் வீடுகளை இழக்க நேரிடாது. இதைத்தான் பி.எஸ்.எம். தொடர்ந்து கேட்டு வருகிறது.

பொது சுகாதாரத்தைப் பலப்படுத்துதல்

ஒரு நாட்டின் சுகாதாரத் துறை எத்துணை முக்கியம் என்பதையும் சோசலிச சிந்தனை எங்களுக்குக் கற்றுத்தந்துள்ளது. அரசாங்க மருத்துவமனையிலுள்ள மருந்தகங்கள், சேவை, சுத்தம் மற்றும் பராமரிப்பு துறையைத் தனியார் மயப்படுத்த அரசாங்கம் முயன்றபோது, பி.எஸ்.எம். அதை வன்மையாகக் கண்டித்து, போராடி வருகிறது. பல அரசு சார்பற்ற குழுக்களை ஒன்றிணைத்து உருவாக்கிய கூட்டணிக்குத் தலைமையேற்று, சுகாதாரச் சேவையைத் தனியார் மயமாக்குவதை எதிர்த்து, கடந்த 15 ஆண்டுகளாக பி.எஸ்.எம். போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அரசாங்க மருந்தகத்தைத் தனியார்மயப்படுத்துவதை எதிர்க்கிறோம்; அரசாங்க மருத்துவமனையில் தனியார் சேவையை அமலாக்கம் செய்வதை எதிர்த்து போராடுகிறோம்; அரசாங்க மருத்துவமனையிலிருந்து நிபுணத்துவ மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குப் படையெடுப்பது, ‘மைசலாம்’ காப்புறுதித் திட்டம், சுகாதாரச் சுற்றுப்பயணம் போன்றவற்றை எதிர்த்து, நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்.

இன்று கோவிட்-19 தொற்றுநோய்க்குத் தீர்வு காண்பதில் அரசாங்க மருத்துவமனைகள்தான் ‘முன்னிலை’யில் செயல்பட்டு வருகின்றன; பொது சுகாதாரத்தை நாம் ஏன் பலப்படுத்த வேண்டும் என்பதற்கு இதுவே ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

உணவு பாதுகாப்பு

உணவு பாதுகாப்பு மற்றும் சுயமாக உணவு தயாரிக்கும் நிலையே சோசலிசப் போராட்டத்திற்கு வேராக அமைகிறது. 2005-ல், மலேசியா – அமெரிக்கா இடையிலான சர்வதேச ஒப்பந்த பேச்சுவார்த்தை ஆரம்பித்ததிலிருந்து, அப்பேச்சுவார்தையை எதிர்த்த கூட்டணியுடன் இணைந்து பி.எஸ்.எம். செயல்பட்டு வருகிறது; நாட்டின் விவசாயிகளுக்கு பாதிப்பு கொண்டு வரும் எண்ணத்திலான திரான்ஸ்-பசிபிக் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையையும் (திபிபிஏ) பி.எஸ்.எம். எதிர்த்தது. மேலும், நாடு முழுவதும் 60 இடங்களிலுள்ள சிறு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களின் நில உரிமை போராட்டத்திலும் பி.எஸ்.எம். இன்றும் ஈடுபட்டு வருகிறது.

கோவிட்-19 தொற்று காலத்தில், பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுகளால் நமக்கு பாதிப்பு ஏற்படும் என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உணவு பொருட்களுக்காக மற்ற நாடுகளிடம் கையேந்தி நிற்பது ஆபத்தானது என்பதை நாம் இன்று உணர்கிறோம். நம் நாட்டின் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதது, இந்தத் தருணத்தில்தான் நமக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. ஆக, இனியாவது உள்நாட்டு உணவு உற்பத்திக்கு, விவசாய துறைக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

தட்பவெப்பநிலை மாற்றம்

ஜனவரி 2020-ல், தட்பவெப்ப நிலைமாற்ற நெருக்கடி பிரச்சாரத்தைப் பி.எஸ்.எம் தொடங்கியது. இதன்மூலம், தட்பவெப்பநிலை அவசரகாலத்தை அறிவிக்க வேண்டுமென அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்-19 தொற்று பிரச்சனை நமக்கு மற்றுமொரு உண்மையை உணர்த்தியுள்ளது. மனிதர்களின் பொருளாதார நடவடிக்கைகள் தடைபடும் போது, தாவர மற்றும் விலங்கினங்களின் வாழ்க்கை செழிப்பாவதை நான் கண்கூடாக பார்க்க முடிகிறது. பூமி தன்னைப் புதுப்பித்துகொள்ள இதுதான் அவசியம். ஆக, அரசாங்கம் இதனை உணர்ந்து, இயற்கையைச் சேதப்படுத்தும் மனிதனின் நடவடிக்கைகளைக் குறைக்க ஆவன செய்ய வேண்டும். உலகிலுள்ள சோசலிச அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை இந்தத் தட்பவெப்பநிலை மாற்ற நெருக்கடி கடுமையாக எண்ணி, ஒரு முக்கியப் போராட்டமாக முன்னெடுத்து வருகின்றன.

இன்று, நாம் எதிர்நோக்கி இருக்கும் கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார வீழ்ச்சி, நம் வாழ்க்கையை உலுக்கிப் போட்டுள்ளது. புதிய தாராளமயப் பொருளாதரக் கொள்கையை, அதாவது வரம்பற்ற மேம்பாட்டை ஆதரிப்பவர்களுக்கு ஒரு பெரிய அடி விழுந்துள்ளது. இவர்கள் நோக்கம் சுகாதாரத்தைத் தனியார்மயமாக்குவது, தொழிலாளர்களின் சம்பளத்தை நசுக்குவது, தொழிலாளர்களுக்கானப் பாதுகாப்பைத் தளர்த்துவது, நகர முன்னோடிகளின் நிலத்தைப் பறிப்பது, விவசாயிகளின் நிலத்தை அபகரிப்பது, மேலும் விவசாயத் தொழிலில் விதைகளின் காப்புரிமையைப் பெரு நிருவனங்கள் அபகரிப்பது போன்றவையாகும்.

கடந்த 22 ஆண்டுகளில், மலேசிய தேர்தல் அரசியலில் பி.எஸ்.எம். பெரிய விளைவை ஏற்படுத்தாவிட்டாலும், அதன் சித்தாந்தமும் சோசலிசக் கொள்கையும் நாட்டிற்குக் கூடுதல் தேவையாக உள்ளதையும்; அதுவே இந்நாட்டை இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றக் கூடியது என்பதையும் புரிய வைக்கிறது.

கோவிட் 19-க்குப் பின்னர், சோசலிசக் கொள்கை மற்றும் பகுப்பாய்வு, மக்களுக்கு உண்மையிலேயேப் பயனளிக்கும் சட்டங்களை அரசாங்கம் கொண்டு வருகிறதா, இல்லையா என்பதற்கான ஓர் அளவுகோலாக இருக்க வேண்டும்.

மக்கள் நலனுக்காக நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள், போராட்டங்கள் பயனற்றுப் போகாமல், உலகளாவிய நல்வாழ்வை உறுதிப்படுத்தும் ஒரு சிறந்த கொள்கையாக இறுதியில் நிரூபிக்கப்பட்டதில் பி.எஸ்.எம். மகிழ்ச்சியடைகிறது….. எங்களுடன் சோசலிசப் போராட்டத்தைத் தொடருங்கள்!

மக்களுடன் இணைந்து போராடுவோம்! உலகளாவிய நலனுக்காக, செழிப்பிற்காக!

சிவராஜன் ஆறுமுகம் , பி.எஸ்.எம்.  கட்சியின் தலைமைச் செயலாளர்

தமிழாக்கம் :- சிவரஞ்சனி மாணிக்கம்