சிவாலெனின் | மே நாள் உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்த உன்னத நாள். அந்நாள் மட்டும் உருவாகாமல் இருந்திருந்தால், இன்றைய நவீனக் காலத்திலும் உழைக்கும் வர்க்கம் இயந்திரம் போல் சுழன்றுக் கொண்டிருக்க வேண்டியக் கட்டாயம் நேரிட்டிருக்கும். மே நாள் என்பது தொழிலாளர் உரிமையை மீட்டெடுத்த நாள் மட்டுமில்லை, மாறாய், மனித விடுதலையையும் வென்றெடுத்த விடியலாகவும் அது விளங்குகிறது.
மே நாள் உருவாவதற்குக் குறைந்த வேலை நேரத்திற்காக தொழிலாளர் வர்க்கம் மேற்கொண்ட போராட்டமே மூலதனமானது. 18-ம் நூற்றாண்டின் இறுதியிலும், 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், தொழிலாளர்கள் முதலில் 10 மணிநேரம் வேலை கோரிக்கையையும், பின்னர் 8 மணிநேர வேலை கோரிக்கையையும் முன் வைத்து போராடினார்கள்.
நாள் ஒன்றுக்கு 8 மணிநேர கோரிக்கை சிந்தனை 1834-ல், பிரான்சில்தான் தொடங்கியது எனலாம். 1830-ல், பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 15 மணிநேரம் உழைத்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் கையிலெடுத்த “ஜனநாயகம் அல்லது மரணம்” என்னும் 8 மணிநேர வேலைநேரப் போராட்டம் தோல்வியில் முடிந்தது. ஆனால்,1856-ல் ஆஸ்த்திரேலியா, மெல்பர்ன் நகரக் கட்டிடத் தொழிலாளர்கள் முன்னெடுத்த 8 மணி நேர வேலை போராட்டம் வெற்றியை எட்டியது.
அதனைத்தொடர்ந்து, 8 மணிநேர வேலை என்னும் விழிப்புணர்வு உலகத் தொழிலாளர்கள் மத்தியில் உயித்தெழுந்தது. இதன் தொடக்கக்கட்டமாக, அமெரிக்காவிலுள்ள பல்வேறு மாநிலங்களின் தொழிலாளர் இயக்கங்கள் ஒன்றிணைந்து, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு என்னும் இயக்கத்தை உருவாக்கினார்கள். இந்த இயக்கம்தான், மே 1, 1886-ல் நாடு தழுவிய நிலையில் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்து, மே நாள் உயிர்பெற வழிவகுத்தது.
அன்றையக் காலக்கட்டத்தில் தொழில்துறை நகரங்களான நியூயோர்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் தொடங்கியது. தொழிலாளர்களின் இந்த எழுச்சி மிக்க வேலை நிறுத்ததால், அமெரிக்காவின் பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து இயங்கவில்லை. வேலை நிறுத்ததில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது.
சிக்காகோவில் மட்டும் சுமார் 70 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த எழுச்சி சிக்காகோவிலுள்ள இதர பிரதேசங்களிலும் பரவி, தொடர்ந்தது. இதனால், சிக்காகோவில் வேலை நிறுத்தப் போராட்டம் தனித்துவமாக சூடுபிடிக்க தொடங்கியது. ஆங்காங்கே நடந்த போராட்டங்களில் உலக முதலாளித்துவம் நிலைகுத்திப்போனது.
மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின் வாயிலில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது, 4 தொழிலாளர்கள் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள். இச்சம்பவத்தைக் கண்டித்து ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டனக் கூட்டத்தில் மூண்ட கலவரத்தில், மேலும் நான்கு தொழிலாளர்கள் கொல்லப்பட்ட நிலையில், 7 காவல்துறையினரும் மாண்டனர்.
மேலும், அன்றைய நாளில் தொழிலாளர் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கும் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு விசாரணை 1886-ம் ஆண்டு ஜூன் 21-ம் நாளில் தொடங்கப்பட்டு, இறுதியில் 7 தொழிலாளர் தலைவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கானப் போராட்டமும் சிகாகோ போராட்ட தியாகிகளின் உயிர்தியாகமும்தான், இன்றைக்கு மே நாள், உழைப்பாளர் நாளாகவும் நம் முன் உயிர்த்தெழுந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து, உலகின் முதல் சர்வதேசத் தொழிலாளர் பாராளுமன்றம், 1889-ல் பிரான்ஸ்சில் கூடியது. இதில் 18 நாடுகளைச் சார்ந்த 400 பேராளர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கார்ல் மார்க்சு முன் வைத்த 8 மணிநேர வேலை போராட்டத்தை முன்னெடுக்கும் திட்டம் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர், அனைத்துலக ரீதியில் தொழிலாளர் இயக்கங்களை நடத்திட அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவல்தான் மே 1-ம் நாள், 1890 முதல் உலக நாடுகளில் மே நாள் விடுமுறைக்கு வித்திட்டது.
உலகின் பல நாடுகளில் அந்நாள் விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டது.
உலகமெங்கும் உழைக்கும் வர்க்கத்தின் உன்னத நாளாகக் கொண்டாடப்படும் இந்நாள் இனம், மதம், மொழி, நாடு என்ற யாதொரு வேறுபாடுமின்றி உழைக்கும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, ஒற்றுமையைப் பறைசாற்றும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
தியாகத்தாலும் அர்ப்பணிப்பாலும் உருவான இந்நாள், தொழிலாளர்களின் ஆற்றலின் தேவையை உணர்த்த வேண்டிய, போற்ற வேண்டிய இந்நாள், அதன் உண்மையான நோக்கத்தினை இன்றையக் காலக்கட்டத்தில் கொண்டிருக்கிறதா என்றால், இல்லையெனும் பதில்தான் முதலில் வரும். இந்நாளில் தொழிலாளர் வர்க்கம் ஒன்றுப்பட்டு தங்களின் உரிமைக்கான சிந்தனையிலும் சித்தாந்ததிலும் மெய்மம் கொண்டுவிடக்கூடாது என்பதற்காகவே, இந்நாளை முதலாளி வர்க்கம் கேளிக்கை நாளாக உருவாக்கி வருவதையும் நாம் ஆங்காங்கே பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
தொழிலாளர்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்த உரமேற்றிக் கொள்ளும் இந்நாளில் தொழிலாளர்களின் உரிமைகள் வெற்றிக் கொள்ள ஒன்றுபட்டுக் குரல் எழுப்ப வேண்டிய இந்நாள் பல்வேறு பிரிவினைகளுக்கு உரமூட்டும் நாளாக அமைந்துவிட்ட அவலத்தை நாம் மூன்றாம் உலக நாடுகளில் காணக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
மலேசியாவில் தொடக்கக்காலத்தில் மே நாள் தொழிலாளர்களின் உரிமையை எடுத்துரைக்கும் நாளாக, தொழிலாளர் தலைவர்களின் உரைகளோடு மிக நேர்த்தியாக நிகழ்ந்துள்ளது. பத்து ஆராங்கில் மாபேரும் பேரணியே நடந்துள்ளது என்பது வரலாறு. சோசலீசத் தலைவர்களின் நிழல்படங்களை ஏந்தி, பத்து ஆராங்கில் நடந்த தொழிலாளர் நாள் பேரணியெல்லாம் வரலாற்றில் பொக்கிசம் என்றுதான் கூற வேண்டும்.
மலேசியத் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்த சோசலீச சிந்தனையையும் பொதுவுடமை கொள்கையையும் வீழ்த்துவதற்காகவே, பின்னர் தோட்டங்களிலும் பெரும் நகரங்களிலும் ஆங்கிலேயே முதலாளிகள் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி தொழிலாளர்களின் சிந்தனையை திசை திருப்பினார்கள். காலனித்துவ முதலாளிகள் தொடக்கி வைத்த அந்த நடைமுறையை, இன்றைக்கு உள்ளூர் முதலாளிகள் பின்பற்றி தொழிலாளர்கள் வர்க்கத்தை சிந்திக்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறார்.
இருந்தபோதிலும், இந்நாட்டில் தொழிலாளர் நாளை அதன் உன்னததுடன் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்கள் மத்தியில் அவர்களின் உரிமையையும் தேவைகளையும் வென்றெடுக்கும் நாளாக மலேசிய சோசலீசக் கட்சி (பி.எஸ்.எம்.) மாபெரும் தொழிலாளர் பேரணியின் மூலம் விதைத்து வருவது நிறைவான ஒன்றாகவே அமைந்துள்ளது. அவர்களின் இந்தக் களப்பணிதான், இன்னமும் நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் மீது முதலாளிகளுக்கு ஒருவகை அச்சத்தை ஏற்படுத்தி வருவதோடு மட்டுமின்றி மருட்டலாகவும் உள்ளது எனலாம்.
இந்நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் குரலாக பி.எஸ்.எம். கட்சி மட்டுமே தொடர்ந்து துணிந்து குரல் எழுப்பி வருகிறது. தொழிலாளர் வர்க்கத்தின் குரலைத் தெருவில் தொடங்கி, நாடாளுமன்றம் வரை ஒலிக்க வைத்த பெருமை அவர்களையேச் சாரும். அவர்களின் முன்னெடுப்புகளால் நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் பல்வேறு பிரச்னைகள் தீர்வை நோக்கி நகர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் தொழிலாளர் நாள் கொண்டாட்டம் நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னதாகவே பத்து ஆராங் உட்பட சில இடங்களில் கொண்டாடப்பட்டிருந்தாலும், அது மலேசியாவின் விடுமுறை நாளாகவோ அல்லது நாடு முழுவதும் கொண்டாடும் நாளாகவோ வரையறுக்கப்படவில்லை. மலேசியாவில், மே நாள் விடுமுறை நாளாக உருவாக வித்திட்டவர் பாட்டாளிகளின் தோழன், மக்கள் தொண்டன் டாக்டர் வி.டேவிட் ஆவார். மலேசியாவில், 1972 முதல்தான் மே நாள் பொது விடுமுறையாகவும் தொழிலாளர் நாளாகவும் அங்கீகரிக்கப்பட்டது.
அன்றையக் காலக்கட்டத்தில், தொழிற்சங்கத்திடம் இருந்த பலமும் வேகம் மிகுந்த போராட்ட உணர்வும் இன்றையத் தொழிற்சங்கவாதிகளிடம் இல்லாதது மிகவும் வேதனையானது. தொழிலாளர்களின் நலனைக் காட்டிலும் முதலாளிகளின் சிந்தனையோடு ஒத்துப்போகும் தொழிற்சங்கவாதிகள் இன்றைக்கு நிறைந்து விட்டனர் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
இன்றையச் சூழலில், முதலாளி வர்க்கத்தின் கைக்கூலியாகவும் அரசியல்வாதிகளின் பினாமிகளாகவும் அவர்களின் குரலாகவும் ஒலிப்பதே பெரும்பான்மையான தொழிற்சங்கங்களின், தொழிற்சங்கவாதிகளின் நிலையாக மாறியுள்ளது என்பதை மறுத்திடதான் முடியுமா? இது தொழிலாளர் வர்க்கத்திற்கு அவர்கள் செய்த வரலாற்றுத் துரோகமாகும்.
உலகளாவிய நிலையில் தொழிலாளர்களின் ஊதியமும் உரிமையும் இன்றைக்கும் கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில், மலேசியாவிலும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெற முடியாமல் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் வருகிறார். தொழிலாளர்களின் உரிமையைத் தடுப்பதற்காக, குத்தகை முறையிலான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முறையை மிக தந்திரமாக மேற்கொள்கிறார்கள். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது நிகழ்ந்த தொழிலாளர் கொடுமைகளைப் போல் இந்தக் குத்தகை முறையிலான வேலை ஒப்பந்ததில் மலேசியத் தொழிலாளர்கள் பல்வேறு சிக்கல்களையும் இன்னல்களையும் எதிர்நோக்குகிறார்கள்.
மலேசியாவில், உழைப்பிற்கு ஏற்ற மாத ஊதியம், வீட்டுடமைத் திட்டம், தொழிலாளர் காப்புறுதி, ஆண்-பெண் சரிநிகர் ஊதியம், அனைத்து தொழில்துறையிலும் தொழிற்சங்கம் (யூனியன்), முறையான விடுப்பு, வேலை இட பாதுகாப்பு, தொழிலாளர் தேவைகள், தொழிலாளர் அடிப்படை உரிமைகள், திடிர் வேலை இழப்பிற்கான சிறப்பு நிதியம், நிறுவனங்கள் கைமாறும் போது தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இழப்பீடு எனப் பல்வேறு சிக்கல்களும் பிரச்சினைகளும் அவலமாய் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. முதலாளிகளுக்குத் தொழிலாளர்கள் வெறும் இயந்திரம் என்பதால், அவர்களின் நலனில் துளியும் அக்கறையில்லாமல், அவர்களின் உழைப்பைச் சுரண்டவும் அவர்களை அடிமைப்படுத்தவும் தான் முதலாளிகள் தீவிர முனைப்பாக உள்ளனர். இது சாதாரண சாலையோர அங்காடி கடை தொடங்கி மாபெரும் பெரிய நிறுவனங்கள் வரை ஒரே மனப்போக்குதான்.
அதேவேளையில், வாக்களிக்கும் மக்களைக் காட்டிலும் முதலாளிகளுக்கு விசுவாசமாக இருக்கும் அரசாங்கத்திடமோ இதுநாள் வரை தொழிலாளர் வர்க்கத்திற்கான நீண்டக்கால நலத்திட்டங்கள் எதுவும் இல்லை, அதில் அவர்களுக்கு அக்கறையும் இல்லை. உழைக்கும் வர்க்கம் என்பது அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் வெறும் வாக்களிக்கும் இயந்திரம் மட்டுமே. தொழிலாளர்களின் உழைப்பில் உண்டுக்கொழுத்த முதலாளிகளுக்கும் அக்கறையில்லை; அவர்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் உழைக்கும் மக்கள் மீது அக்கறையில்லை. இதுதான் மலேசியத் தொழிலாளர்களின் இக்கட்டான சூழல்.
“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள், இழப்பதற்கு ஒன்றுமில்லை” என்னும் தொழிலாளர்களின் தோழர் கார்ல் மார்க்சின் அறைகூவலுக்கு ஒப்ப, தொழிலாளர் வர்க்கம் ஒன்றுப்பட்டு மீண்டும் ஒரு புரட்சிக்குத் தயாரானால் மட்டுமே, தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளையும் அடிப்படைகளையும் இங்கு வென்றெடுக்க முடியும். கடந்த காலங்களில் தொழிலாளர்கள் தங்களின் உரிமைக்காக மேற்கொண்ட போராட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் இன்றையத் தலைமுறை நினைவில் கொள்ள வேண்டும்.
அன்று தோட்டங்களில் நடந்த போராட்டங்கள், இன்று நாட்டின் பெரும் நகரங்களில், தொழிலாளர் வர்க்கத்தை முடக்கும், அவர்களின் உரிமையைத் தடுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நிகழ வேண்டும். அன்றையக் காலங்களில், நாட்டில் தோட்டங்களில் மக்களின் உழைப்பு சுரண்டப்பட்டது. இன்றைக்கு நாட்டின் பெரும் நகரங்களில் உழைப்போடு சேர்ந்து அறிவையும், மக்களின் நேரத்தையும் நவீன முதலாளிகள் தொடர்ந்து சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். சூழ்நிலை வெவ்வேறாக இருந்தாலும், தொழிலாளர் வர்க்கம் ஏமாற்றப்படுவது மட்டும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
தொழிலாளர் வர்க்கத்தின் சக்தியை, ஒற்றுமையை ஓங்கியொலிக்க வேண்டிய இந்நாள் நடப்பில் அரசியல் மயப்படுத்தப்பட்ட அவல நிலையைக் கண்டு நாம் வேதனைப்படதான் வேண்டும். இந்நிலைக்குத் தொழிலாளர் வர்க்கத்தின் வர்க்கப் புரட்சி மட்டுமே தீர்வாகும். தொழிலாளர் வர்க்கமே ஒன்றுபட்டு உரிமைகளை வென்றெடுக்க, நமது உரிமையை நிலைநாட்ட, புரட்சியின் பாதையில் மீண்டும் உயிர்த்தெழ வேண்டும். பெரும் மதிப்பு மிக்க இந்நாளில், மூன்றாம் உலக நாடுகளின் நவீன சுரண்டல்கள் பற்றியும் நமது நாட்டின் தொழிலாளர் நிலையின் அவலங்களைப் பற்றியும் சிந்திப்பது காலத்தின் தேவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
“உழைக்கும் வர்க்கமே ஒன்றுசேர்; கற்பி; புரட்சி செய்!”