சத்தமில்லாத இரத்தமில்லா யுத்தம் – தோட்டா பாயாத உலகப் போர்!

இராகவன் கருப்பையா – கடந்த 1914ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போரையும் பிறகு 25 ஆண்டுகள் கழித்து 2ஆவது உலகப் போரையும் சந்தித்த உலக மக்களுக்கு கோவிட்-19க்கு எதிரான தற்போதைய உக்கிரப் போராட்டம் 3ஆவது உலகப் போருக்கு நிகராகவே உள்ளது.

இப்போதைய நவீன உலகமயத்தில் இன்னொரு உலகப் போர் என்பது பெரும்பாலும் சாத்தியமற்ற ஒன்று என்ற போதிலும் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும இடையில் பிணக்கு ஏற்படும் ஒவ்வொரு முறையும் 3ஆவது உலகப் போர் வெடிக்கப் போகிறது என்கிற வதந்திகளுக்கு பஞ்சமிருக்காது.

அந்த 2 உலகப் போர்களின் போதும் 12க்கும் மேற்பட்ட நாடுகள் எதிரும் புதிருமாக சண்டையிட்டுக்கொண்ட போதிலும் தற்போதைய போரில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கோவிட்-19 எனப்படும் ‘கோறனி நச்சில்’ மட்டுமே ஒரே எதிரி என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்தில் புகுந்து வீடு கட்ட திட்டமிட்ட மனிதனின் நுரையீரலில் புகுந்து கூடு கட்டிக்கொண்டிருக்கிறது இந்த கொடிய கிருமி!

யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென முளைத்த, அங்க அடையாளம் இல்லாத இந்த விரோதிக்கு இதுவரையில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ளது சோகத்திலும் சோகம்!

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிறந்தே இதுபோன்ற கொடிய நச்சுக்கிருமிகளுக்கு அவ்வப்போது கோடிக் கணக்கானோர் கொத்துக் கொத்தாக மடிந்துள்ள போதிலும் மருத்துவ ரீதியில் உலகமே பரிணாம வளர்ச்சிகண்டுள்ள இந்த 21ஆம் நூற்றாண்டில் இப்படிப்பட்ட ஒரு கொடூரத் தாக்குதலுக்கு எந்த நாடும் தயாராய் இருந்ததாகத் தெரியவில்லை.

இதுநாள் வரையில் யாருக்கும் அடங்காத அமெரிக்காவையே ஆட்டிப்படைத்துள்ளது மட்டுமின்றி இக்கொடிய நோய் உலகையே ஒருசேர நிலைகுத்தச் செய்துள்ளது என்றால் அது மிகையில்லை.

வானில் அங்குமிங்கும் உல்லாசமாக பறந்து திரிந்த ஆயிரக்கணக்கான விமானங்களை தற்போது ஆங்காங்கே விமான நிலையங்களில் உறங்க வைத்துள்ள இந்தக் கிருமியின் தாக்கம் கண் இமைக்கும் நொடியில் உலக பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது உண்மையிலேயே ஒரு விபரீதம்தான்.

உலகின் மிகப் பெரிய ரயில் சேவைகளுக்கு சொந்தமான இந்தியாவின் ஆயிரக் கணக்கான ரயில் வண்டிகளும் கூட முதல் முறையாக முடங்கிவிட்டன.

நடமாட்டக் கட்டுப்பாடு என்ற அவசியத்தின் பேரில் உலக மக்களை தங்களுடைய வீட்டுக்குள்ளேயே சிறைபிடித்த இந்த கோவிட்-19, கூடல் இடைவெளி என்ற பெயரில் உறவுகளை தூரப்படுத்தியுள்ளது.

இந்த பூமியின் மீது தங்களுக்கும் சரிசம பங்குண்டு என்பதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் வன விலங்குகள் கூட காட்டைவிட்டு வெளியாகி வெறிச்சோடிக்கிடந்த வீதிகளில் நடமாடத் தொடங்கி விட்டன.

அதிநவீன உலகில் வாழுகிறோம் என்ற மமதையில் இது வரையில் இறுமாப்பாக மிதந்து திரிந்த மனுக்குலத்திற்கு இதுவெல்லாம் ஜீரணிக்க முடியாத அதிர்ச்சி மிக்க ஒரு புதிய அனுபவம் என்றுதான் சொல்லவேண்டும்.

இப்படிப்பட்ட அந்த கொடிய கிருமி கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் அரிய வகை விலங்குகளை உணவாக விற்பனை செய்யும் ஒரு சந்தையிலிருந்து பரவியது என்று நம்பப்படுகிறது.

இதுதான் உண்மை என உலக மக்களை நம்பவைக்க சீனா கடுமையாக போராடி வருகிறபோதிலும் எல்லாருமே இந்தக் கூற்றை நம்பத் தயாராய் இல்லை.

ஏனென்றால் அரிய வகை விலங்குகளை வெந்தும் வேகாமலும் பச்சையாகவும் உண்ணும் பழக்கம் சீனர்களில் பலருக்கு ஆண்டாண்டு காலமாகவே இருந்து வந்துள்ளதை உலகம் அறியும்.

எனவே அந்த வூஹான் சந்தையிலிருந்து இக்கிருமி பரவியிருக்க வாய்ப்பே இல்லை என அனைத்துலக சமூகத்தின் ஒரு சாரார் வாதிடுகின்றனர்.

இதற்கிடையே வூஹான் நகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பரிசோதனை ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து நச்சுக்கிருமி கசிய வாய்ப்பிருக்கிறது என கடந்த 2017ஆம் ஆண்டிலேயே அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அமெரிக்கா தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிற வேளையில், எச்.ஐ.வி. கிருமிக்கு எதிரான மருத்துவ ஆராய்ச்சியின் போது இந்த விபரீதம் நடந்திருக்கக் கூடும் என பிரான்ஸ் நம்புகிறது.

ஆனால் இந்த கிருமியானது சீனாவால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு உயிரியல் ஆயுதம் என்று திட்டவட்டமாக அறிவித்து உலக கவனத்தை ஈர்த்தது இஸ்ரேல்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜப்பானிய விஞ்ஞானி ஒருவர் பல திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

கிருமிகள் தொடர்பான 40 ஆண்டுகால ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு பெற்றுள்ள மருத்துவ பேராசிரியரான டாக்டர் தாசுக்கு அந்த வூஹான் ஆராய்ச்சி கூடத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

அங்கு பணிபுரியும் எல்லா ஊழியர்களையும் தமக்குத் தெரியும் என்றும் இப்போது  அவர்களில் யாருடனும் தொடர்புகொள்ள இயலவில்லை எனவும் கூறிய பேராசிரியர் தாசுக்கு, அவர்கள் அனைவருமே மடிந்திருக்கக் கூடும் என உறுதியாக நம்புகிறார்.

இக்கிருமி முற்றிலும் செயற்கையாகவே தயாரிக்கப்பட்ட ஒரு உயிரியல் ஆயுதம் என்னும் தமது கணிப்பு பொய்யாகுமானால் தமக்கு வழங்கப்பட்டுள்ள நோபல் பரிசு மீட்டுக்கொள்ளப்படுவதற்கும் தாம் தயார் என்று அவர் கூறியது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும் நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு சீனா பதில் சொல்லியாகவேண்டும் என்பது அனைத்துலக சமூகத்தின் ஆதங்கமாகும்.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன், பட்டத்து இளவரசர் சால்ர்ஸ் மற்றும் கனடியப் பிரதமர் ட்ரூடோ உள்பட உலகின் பல முக்கியத் தலைவர்களையும் கூட இக்கிருமி விட்டுவைக்காத நிலையில், சீனத் தலைவர்கள் யாருமே இதனால் பாதிக்கப்படுதாகத் தெரியவில்லை என்பதும் ஆச்சரியம்தான்.

மத்தியகிழக்கிலும் ஆப்பிரிக்காவிலும் சில அரசியல் தலைவர்களும் இந்நோய்க்கு பலியாகியுள்ள நிலையில் போரிஸ் ஜோன்சன் மரணத்தின் விளிம்புக்கே சென்றுத் திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதற்கு கோடிக் கணக்கில் செலவிட்ட பல நாடுகள் அறிவியல் ஆராய்ச்சிக்கும் தடுப்பூசிகளுக்கும் தாராளமாக செலவிட வேண்டிய அவசியத்தை இப்போதுதான் உணர்ந்துள்ளன.

அனைத்துலக நீதிமன்றத்தில் சீனாவுக்கு எதிராக வழக்குத் தொடுக்க 80கும் மேற்பட்ட நாடுகள் முண்டியடித்து நிற்கும் இவ்வேளையில், மிகத்துரிதமாக தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்தியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் முயற்சிகள்தான் உலகை காப்பாற்றும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.