நீதி கிடைத்தும் நிம்மதியில்லை, தொடர்கிறது இந்திராவின் துயரம்

இராகவன் கருப்பையா – கடந்த 2009ஆம் ஆண்டில் தமது முன்னாள் கணவரால் கடத்திச்செல்லப்பட்ட அன்பு மகளை மீட்பதற்கு பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தி மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம் மலேசிய வரலாற்றில் அவசியம் பதிவு செய்யப்படவேண்டிய ஒரு முக்கிய குறிப்பு என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

இந்நாட்டில் மதமாற்றம் தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையிலான இழுபறி சம்பந்தப்பட்ட வழக்குகளில் இந்திராவின் நிலைதான் மிகவும் சோகமானதாக இருக்கக்கூடும் என்று தாராளமாகச் சொல்லலாம்.

ஏனென்றால் 11 மாதக் குழந்தையாக வீட்டில் தவழ்ந்து திரிந்த பிரசண்ணா டிக்க்ஷா என்ற தமது அன்புச் செல்லத்தை 11 ஆண்டுகளாகத் தேடி வரும் அந்தத் தாய்க்கு நீதி கிடைத்த போதிலும் நிம்மதியின்றி நெஞ்சில் ரண வலியோடு நாட்களை நகர்த்தி வருகிறார்.

இப்போது 12 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் பிரசண்ணாவை தமது இரு கரங்களிலும் கட்டியணைக்க துடிக்கும் இந்திராவின் சோகத்தைச் சற்று நினைத்தால் நம் அனைவரின் கண்களிலும் நம்மை அறியாமலேயே கண்ணீர் சுரக்கத்தான் செய்கிறது.

அவருடைய கணவர் பத்மநாதன் கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் தத்தில் இஸ்லாத்தை தழுவியதோடு அவர்களுடைய 3 பிள்ளைகளையும் தன்னிச்சையாக மதமாற்றம் செய்ததும் நாம் அறிந்த ஒன்றே.

15 மற்றும் 16 வயதுடைய முதல் இரு பிள்ளைகளையும் நெருங்க முடியாத லையில், பிரசண்ணாவை தூக்கிக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தார் பத்மநாதன்.

அதற்கு அடுத்த மாதமே ஷாரியா நீதிமன்றத்தில் தொடங்கிய இந்திராவின் நீதிக்கான நெடுங்காலப் பயணம் கூட்டரசு நீதிமன்றம் வரையில் 9 ஆண்டுகளாகத் தொடர்ந்ததையும் மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

தன்னிச்சையாக மதமாற்றம் செய்தது செல்லாது என்றும் 3 பிள்ளைகளும் இந்துக்களாக இந்திராவிடமே இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும் அதனை அமலாக்கம் செய்வதில் இன்றுவரையில் நிகழும் குளறுபடிகள்தான் இந்திராவின் வற்றாத கண்ணீருக்கான காரணம் என்பதில் ஒருபோதும் சந்தேகமில்லை.

இந்த 11 ஆண்டுகளில் 3 அரசாங்கங்கள் ஆட்சி நடத்தியுள்ள போதிலும் இந்திராவின் சோகத்திற்கு இன்னமும் ஒரு விடியலைக் காணவில்லை என்பதுதான் வருத்தமான விசயம்.

பத்மநாபனைக் கைது செய்து, பிரசண்ணாவை இந்திராவிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும்பாரிசான் ஆட்சியின் போது  தலைமை போலீஸ் அதிகாரியாக இருந்த காலிட் அபு பாக்கார் அதனை பொருட்படுத்தவே இல்லை.

அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஃபூஸி ஹருனும் கூட இந்த விவகாரத்தில் மெத்தனமாகத்தான் இருந்தார். பத்மநாதனை கண்டுபிடிக்க திறப்பு குழு ஒன்று அமைக்கப்படும் என அவர் அறிவித்த போதிலும், குழு அமைக்கப்பட்டதா அல்லது நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டதா என்று நமக்குத் தெரியவில்லை.

இவ்வட்டாரத்தின் மிகச் சிறந்த போலீஸ் படைகளில்  ஒன்றான மலேசிய போலீஸ் எப்பேர்ப்பட்ட குற்றவாளிகளையும் லாவகமாக வளைத்துப் பிடிப்பதில் வல்லமை பெற்றவர்கள் என்பது நமக்கும் தெரியும். இருந்த போதிலும் பத்மநாதனை கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறுவதுதான் நம் எல்லாருக்குமே ஆச்சரியமாக உள்ளது.

பக்காத்தான் ஆட்சியின் போது ஃபூஸி ஹருனுக்குப் பிறகு பதவிக்கு வந்த அப்துல் ஹமிட் படோர் இந்த விவகாரம் தொடர்பாக விடுத்த ஒரு அறிக்கை மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது என்றுதான் சொல்லவேண்டும்.

பத்மநாதன் எங்கு இருக்கிறார் என்று தமக்குத் தெரியும் என்றும் இரு தரப்பினரும் மகிழ்ச்சி அடையும் வகையில் ஒரு தீர்வு காணப்படும் எனவும் அவர் செய்த அறிவிப்பானது இதன் தொடர்பான கேள்விகளை மேலும் அதிகரித்தது.

அவற்றுள் பிரதான கேள்வி ஒன்றுதான். பத்மநாதன் கைது செய்யப்பட்டு பிரசண்ணா அவளுடைய தாயிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பை 3 போலீஸ் தலைவர்களுமே நிறைவேற்றாமல் ஏன்  காலம் கடத்துகின்றனர் என்பதுதான் மக்களின் குழப்பம் இப்போது.

சுலபமாக அமல் செய்யப்பட வேண்டிய ஒரு நீதிமன்றத் தீர்ப்பு இந்த அளவுக்கு அல்லோலப்படுவது நீதிக்காகப் போராடும் அனைத்துத் தரப்பினரின் நெஞ்சங்களையும் இன்று வரையில் வருடிக்கொண்டுதான் இருக்கிறது.

இந்திரா சார்பில் தொடக்கத்திலிருந்தே இந்து வழக்கை நடத்தி வெற்றிகரமாக முடித்துக் கொடுத்த குலசேகரன், பக்காத்தான் ஆட்சியின் போது தொழிலாளர் அமைச்சராக நியமிக்கப்பட்டதால் வழக்கறிஞர் என்ற வகையில் அதற்கு மேற்கொண்டு தம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றார்.

இதற்கிடையே கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் ‘இங்ஙாட்’ எனும் அரசு சாரா இயக்கம் ஒன்று பத்மநாபனைக் கண்டுபிடிப்பவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்தது. அருண் துரைசாமி தலைமையிலான அந்த இயக்கம் இந்த முயற்சியை தொடர வேண்டும்.

இந்திராவின் துயரம் பொதிந்த இந்த சகாப்தம் வெளி நாட்டவரின் கவனத்தையும் ஓரளவு ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடக்கத்திலிருந்தே இவ்வழக்கை அனுக்கமாக கண்காணித்து வந்துள்ள மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் கமலா ஷிரின், கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திராவை தமது தூதரகத்திற்கு அழைத்துச் சிறப்புச் செய்தார்.

பெண்களுக்கான அமெரிக்காவின் உயரிய விருதான ‘அனைத்துலக துணிச்சல் மிக்க பெண்’ எனும் விருதுக்கான மலேசியாவின் வேட்பாளராக இந்திராவைத் தேர்வு செய்து அவர் உற்சாகப்படுத்தியதை நாம் மறந்திருக்க முடியாது.

சிங்கப் பெண் இந்திராவின் துணிச்சலுக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்துள்ள இந்த அனைத்துலக அங்கீகாரம் ஒரு மகிழ்ச்சியான விசயம்தான். இருந்த போதிலும் இதுபோல எத்தனை ஆயிரம் விருதுகள் வந்து குவிந்தாலும் அவரைப் பொருத்த வரையில் பிரசன்னா கிடைப்பதற்கு ஈடாக வேறு எதுவுமே இருக்க முடியாது என்பதுவே நிதர்சன உண்மை!