இடைநிலைப் பள்ளியில் தமிழ்

குமரன் வேலு | ஆங்கிலம், அறிவியல் பாடங்கள் மட்டுமா வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன?

எல்லோரும் டாக்டர்களாக, எஞ்சினியராக, அறிவியல் அறிஞர்களாக ஆகிவிட முடியுமா? அசாதாரணமான மனிதர்கள் தம் திறனால் பளிச்சிடுகிறார்கள். அவர்கள் எங்குச் சென்றாலும் திறமைக்கு உரிய வேலை உண்டு. ஆனால், சாதாரணமானவர்களின் நிலை?

எவ்வளவுதான் படித்திருந்தாலும், இனரீதியான கோட்டாக்கள் இங்கு இருக்கும்போது சாதாரணமான ஒருவருக்கு வேலை கிடைப்பது எளிதன்று, இதுவே யதார்த்தம், உண்மைநிலை. அரசுத் துறையில் கீழ்நிலை முதல் உயர்பதவிவரை பதவியில் இருப்போரைக் கணக்கில் எடுத்தால் போதும் இந்த உண்மை தெரிய வரும்.

ஆனால், நம்மோடு மற்ற இனங்கள் போட்டிக்கு வராத வேலை வாய்ப்பைத் தமிழ் வழங்குகிறது.

நம் நாட்டில், தமிழ்மொழிக்கும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் ஆற்றல் இருக்கிறது. தமிழ்ப் படிப்போர் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தமிழும் வேலை வாய்ப்புகளைச் சிருட்டித்து கொடுக்கும்.

தமிழ்ப்பள்ளி – இடைநிலைப்பள்ளி ஆசிரியர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர், பல்கலைக்கழக விரிவுரையாளர் என வேலை வாய்ப்பை வழங்குகிறது. தமிழ்ப்படித்து முனைவர், இணைப்பேராசிரியர், பேராசிரியர் என்று வளமாக வாழ்ந்துவரும் பலர் இருக்கின்றார்கள். தமிழ்ப்படித்து சம்பாதித்து குழந்தை குட்டிகளை மேல்நிலைக்கு கொண்டு வந்த ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றார்கள்.

தமிழ் படிக்காமல் வேறு ஏதாவது படித்திருந்தால் நான் உலகையே வென்றிருப்பேன் என்று வாய்சவடால் அடிப்போரைத் தவிர்த்து, தமிழால் பிழைத்த மற்றவர்கள் தமிழ்மொழிக்கு நன்றிக் கடன் பட்டிருக்கின்றார்கள்.

அரசு கல்வி அதிகாரிகள், நீதிமன்ற மொழிப் பெயர்ப்பாளர்கள், அரசு ஒலி ஒளி ஊடகவியலாளர்கள் (ஆர்.டி.எம்.), காவல்துறை அதிகாரிகள் போன்றோருக்குத் தமிழ் வேலை வாய்ப்பை வழங்குகிறது. அஸ்திரோ, வலையொளி (Astro, YouTube) Channel, மின்னூடகங்கள், நாளிதழ்கள் (எ.கா., மலேசியா கினி, அநேகன், மக்கள் ஓசை, நண்பன், தமிழ் மலர், வணக்கம் மலேசியா, திசைகள்) எனப் பலபேர் வேலை வாய்ப்பை பெற்று பிழைக்கின்றார்கள்.

தமிழ் எழுத்தாளர்கள், நூல் பதிப்பாளர்கள், வனப்பெழுத்து ஓவியர்கள், கார்டுனிசுகள், பேச்சாளர்கள் போன்றோருக்கும் தமிழ் வேலை வாய்ப்பை வழங்குகிறது. குறும்படம், திரைப்படக் கதாசிரியர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசை அமைப்பாளர்கள், இசை ஆசிரியர்கள், தமிழ் டியூசன் ஆசிரியர்கள் என்று ஒரு கூட்டத்திற்கு வேலை வாய்ப்பைத் தமிழ் வழங்குகிறது. அதோடு, கோயில் அர்ச்சகர்கள், சோதிடர்கள், சமய அறிஞர்கள் போன்றோருக்கும் தமிழ் வேலை வாய்ப்பைக் கொடுக்கிறது.

இலங்கை, சிங்கை ஆகிய இரண்டு நாடுகளில் தமிழ் அதிகாரத்துவ மொழி. செம்மொழி (world classical language) தகுதி பெற்று இருக்கிறது. இதெல்லாம், தமிழுக்கானப் பொருளாதார வாய்ப்புகள். தமிழிய ஆய்வுகள், பண்டைக்கால தமிழ் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் விரிடைந்து உலக நாடுகளில் தமிழுக்கான அங்கீகாரம் கூடி வருகிறது.

ஆசுதிரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா என்று உலக நாடுகள் பலவற்றில் பரந்து வாழும் 100 மில்லியன் தமிழ்ப்பேசுவோர், தமிழைக் கற்றுக்கொள்ள விழையும் போதும், தங்களின் உற்பத்தி பொருள்களைச் சந்தைப்படுத்த, தமிழில் மொழிப் பெயர்க்கவும், தமிழில் விளம்பரம் செய்ய தனியார் நிறுவனங்கள் விரும்பும்போதும் தமிழுக்கான வேலை வாய்ப்பு பரப்பு விரிவடையும்.

இந்த வாய்ப்பைப் பெற, இடைநிலைப் பள்ளியில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் எடுத்து படிக்க மாணவர் வேண்டும். தமிழ் படிக்கும் வாய்ப்புகள் குறைவதால், மாணவர் எண்ணிக்கையும் குறைகிறது, இன்றைய நிலைமை கவலைக் கிடமாக இருக்கிறது.

அரசியல்வாதிகள் சிலர் தமிழ் படித்ததால்தான் இந்திய சமுதாயம் ஏழையாய் இருக்கிறது என்று பிதற்றி வருகின்றார்கள். தமிழ்ப்பள்ளிகளை மூடிவிட்டு, விரும்பினால் ஒரு பாடம் தமிழ்ப்படிக்கலாம் என்று கூறியவர்களும் உண்டு.

அவர்களைப் பொருத்தவரை, ஆங்கிலம் படித்தால்தான் அறிவாளி, மற்றவர்கள் முட்டாள். ஆனால், ஒரு சில அரசியல்வாதிகள் அடுக்குமொழியில் தமிழைப்பேசி தமிழ்மக்களின் ஆதரவைப் பெருக்கிக்கொள்கின்றார்கள். தமிழே ஒழுங்காகப் பேசத் தெரியாத அரசியல்வாதிகளை தமிழ்ச் சமுதாயம் புறக்கணித்தால் என்னவாகும்?

தமிழ் இயக்கங்கள் விழித்துக்கொள்ள வேண்டும். உள் அரசியல் செய்வதை விட்டு விட்டு தமிழ் மொழியைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் வரை படிப்பதற்கான சூழலையும் வாய்ப்பையும் இவர்கள் கண்காணித்து ஏற்படுத்தித் தரவேண்டும்.

எப்படி? ஒன்று படுங்கள். தனித்தனியே ஆவர்த்தனம் பாடாமல், மொழிக்காக ஒரு குடையின்கீழ் திரளுங்கள்.

தமிழ்ப் படித்தால், தமிழ் சோறு போடும்!