கொரோனா கொடுத்த பாடம்

இராகவன் கருப்பையா– மலேசியாவை பொறுத்த வரையில் கோவிட்-19 கொடிய நோய் ஒரு முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ள போதிலும் 2ஆவது அலை ஏற்படக்கூடிய சாத்தியத்தை நாம் முற்றாக நிராகரித்துவிட முடியாது.

மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நிறைவு பெறுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்களுக்கு மேல் உள்ள போதிலும் இவ்வாரம் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் திறக்கப்படும் நிலையில் நாம் அனைவருமே தொடர்ந்து ச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியமாகும்.

உலக சுகாதார நிறுவனம் மட்டுமின்றி சர்வதேச அளவில் உள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளையும் மருத்துவ நிபுணர்களையும் கூட திக்குமுக்காடச் செய்த இந்த தொற்று நோய் எண்ணிலடங்கா பாடங்களை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

உலகின் பணக்கார நாடுகள் முதல் அடிமட்ட ஏழை மக்கள் வரை அனைவரது பொருளாதாரத்தையும் நொடிப் பொழுதில் புரட்டிப் போட்ட இக்கொடிய நோயினால் இதுவரையில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளனர்.

அதே வேளை உலகமே முடங்கிய நிலையில் பசி பட்டினியால் எத்தனை பேர் மடிந்தனர் என்ற புள்ளி விவரம் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.

இதற்கு முன்னதுமாக கடந்த 1918ஆம் ஆண்டில் பரவிய ‘ஸ்பேனிஷ் ஃப்ளூ’ எனப்படும் தொற்று நோய் 50 மில்லியனுக்கும் மேற்பட்டோரை பலிகொண்டது என வரலாற்றுக் கூறுகள் காட்டுகின்றன.

அந்த கொடூரம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போதைய நவீன யுகத்தில் அத்தகைய பேரிடர் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை என நாம் சவடாலாக இருந்த சயத்தில்தான் இந்த எதிர்பாராத விளைவு.

எனவே எந்நேரத்திலும் இத்தகைய சூழ்நிலை மீண்டும் ஏற்படாது என்ற உத்தரவாதம் இல்லாத நிலையில் இதுபோன்ற சவாலை எதிர்கொள்வதற்கு எவ்வாறான தயார் நிலையில் நாம் உள்ளோம் என்பதுதான் கேள்விக்குறி.

சாதாரணமான காலங்களில் தனிப்பட்ட முறையில் ஏற்படும் திடீர் பண முடக்கத்தை சமாளிப்பதற்கு ஒவ்வொரு தனிமனிதனும்  குறைந்தபட்சம் 6 மாதகால வருமானத்திற்கு ஈடான ஒரு தொகையை சேமிப்பில் வைத்திருக்க வேண்டும் என்பது நியதி.

அப்படி இல்லாவிட்டாலும் கூட மற்றவர்களின் உதவியோடு நிலைமையை தற்காலிகமாக சமாளிப்பதற்கு ஓரளவு வழிகள் இருக்கும்.

ஆனால் நம்மை சுற்றியுள்ள அனைவருமே ஒருசேர பாதிக்கப்படும் வேளையில் சுய சேமிப்பின் வழி அவசரகால நிதி இல்லையென்றால் அதுவே  மிகப்பெரிய தனிப்பட்ட பேரிடராக அமைந்துவிடுகிறது.

காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் பொருளகங்கள் முதலிய நிதி நிறுவனங்கள் ‘மொரெட்டோரியம்’ எனும் கடன் ஒத்திவைப்புத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுத்த போதிலும் சிறிது காலம் கழித்து அந்த கடப்பாடுகளை சம்பந்தப்பட்டவர்கள் நிறைவேற்றத்தான் வேண்டும். கடன்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதேத் தவிர ரத்து செய்யப்படவில்ல என்பதை நாம் உணரவேண்டும்.

எனவே எந்த ஒரு சூழ்நிலையிலும் குறைந்த பட்சம் 6 மாதங்களுக்கு வருமானமில்லாமல் வாழ்க்கையை நகர்த்துவதற்கான சேமிப்பு இருப்பது நம் அனைவருக்குமே அத்தியாவசியமான ஒன்று என்ற எழுதப்படாத ஒரு சட்டத்தை இந்த கோவிட்-19 நமக்கு உணர்த்தியுள்ளது மறுக்க முடியாத உண்மை.

இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் குறைந்த வருமானமுடைய அனைவருக்கும் உதவ அரசாங்கம் முற்பட்ட போதிலும் அந்த முயற்சிகளிலும் சிக்கல்கள் இருக்கத்தான் செய்தன.

அரசாங்கத்தை பொறுத்தவரையில் குறைந்த வருமானமுடையோரை அடையாளம் காணும் பிரதான வழி வருமான வரி பதிவுகள்தான்.

ஆனால் நிறைய பேர் இன்னும் தங்களை வருமான வரி இலாகாவில் பதிவு செய்து கொள்ளாமல் இருப்பதால் அரசின் இந்த உதவித் திட்டத்திலிருந்து விடுபட்டு போனது பரிதாபகரமான நிலைதான்.

எனவே வரி செலுத்தத் தேவையில்லாத அளவுக்கு வருமானம் மிகக் குறைவாக இருந்தாலும் கூட, வருமான வரி இலாகாவில் நமது பதிவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதும் இந்த கொரோனா பேரிடர் நமக்கு கற்றுத்தந்த மற்றொரு பாடமாகும்.

இத்தகைய தவற்றினால் ஆயிரக்கணக்கான சிறு தொழில் செய்பவர்களும் கூட அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக ‘நாசி லெமாக்’, பலகாரங்கள், கடலை மற்றும் முறுக்கு வகைகளை வியாபாரம் செய்வோர் தங்களுடைய தொழில்களை அரசாங்கத்தில் பதிவு செய்திராததால் அவர்களுக்கான அரசின் உதவியையும் இழக்க நேரிட்டது.

ஆக எவ்வளவு சிறிய வியாபாரமாக இருந்தாலும்  அரசாங்கப் பதிவு என்பது மிகவும் அவசியமாகும். இத்தகைய வியாபாரிகள் தொழில் பதிவு இலாகா மட்டுமின்றி வருமான வரி இலாகாவிலும் பதிவு செய்திருக்க வேண்டும்.

இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே திட்டமிட்டு செயல்படுத்தினால் எதிர்வரும் காலங்களில் கொரோனா போன்ற பேரிடர்களினால் நமது வாழ்வாதாரம் சிதையாமல் இருப்பதை ஓரளவு உறுதி செய்ய வாய்ப்பிருக்கிறது.