200 கிமீ பேரணி : அசஹான் தோட்டத் தொழிலாளர் புரட்சி!!

சிவாலெனின் | மலேசியாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டும் அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டும் தான் வந்துள்ளது. தங்களின் உரிமைக்காகவும் ஊதிய உயர்விற்காகவும் அவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள், வலி நிறைந்த வரலாற்றை நமக்கு விட்டுச் சென்றுள்ளன. இந்நாட்டில் இந்தியத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிலிருந்து சஞ்சிக்கூலிகளாய் கொண்டு வரப்பட்டதுமுதல் தொழிலாளர் உரிமைக்கான குரலும் சத்தமின்றி ஒலிக்கத் தொடங்கியிருந்தது.

ஆனால், தோட்டத் தொழிலாளர்களின் குரல் 1930-களுக்குப் பின்னர், காலனித்துவ ஆட்சியாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் எதிராக வெளிப்படையாகவே முழங்க தொடங்கியது. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்கள் தீவிரம் அடைந்தபோதுதான் மரணங்களும், கைது நடவடிக்கைகளும், வன்முறைகளும் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக ஆட்சியாளர்களாலும் முதலாளி வர்க்கத்தாலும் கட்டவிழ்த்து விடப்பட்டன.

அந்த வகையில், மலேசியாவில் நிகழ்ந்த தொழிலாளர் போராட்டங்களில் இன்றைக்கும் பேசப்படும் வரலாறாக ஒரு சில தொழிலாளர் போராட்டங்கள் நம் நினைவில் வந்து போகும். அப்படியொரு தொழிலாளர் போராட்டம் தான் 1967-ல், மலாக்கா மாநிலத்தின் அசஹான் தோட்டத்தில் நிகழ்ந்த தொழிலாளர் போராட்டமாகும். அக்காலக்கட்டத்தில், நாட்டையே உலுக்கியத் தொழிலாளர் போராட்டங்களில் ஒன்றாக இப்போராட்டம் இருந்ததோடுமட்டுமின்றி, முதலாளிகளுக்கும் அரசாங்கத்திற்கும் பெரும் மருட்டலாக இப்போராட்டம் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போராட்டத்தின் போது, தொழிலாளர்கள் அந்தத் தோட்டத்திலிருந்து, கோலாலம்பூரில் இருந்த பிரதமர் அலுவலகம் வரை சுமார் 200 கிமீ நடந்தே சென்றனர். அப்போது பிரதமராக இருந்தவர் துங்கு அப்துல் இரஹ்மான். 1967, பிப்ரவரி 25-ம் நாள் தொடங்கிய இவ்வேலை நிறுத்தம், மே மாதத்தில்தான் முடிவுற்றது.

தொழிலாளர்கள் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும், “UMEWU” எனப்படும் யுனைடெட் மலாயா தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கத்தை (யு.ம.தோ.தொ.தொ.) அங்கீகரிக்கும்படியும் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் முதலாளிகளை வலியுறுத்தி அப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கமான (என்.யூ.டி.பி.) மீது அதிருப்திக் கொண்ட தொழிலாளர்கள், தொழிலாளர் வர்க்கத்தின் நலனையும் உரிமையையும் விவேகமாக முன்னெடுத்து, தொழிலாளர் வர்க்கத்தின் அரணாக இயங்கிய UMEWU இணையவும் அதனை முதலாளிகள் தரப்பு அங்கீகரிக்க வேண்டும் என்றும் முழங்கினார்கள்.

பிரிட்டிஷ் முதலாளிகளின் கத்ரி (GUTHRIE) குழுமத்திற்குச் சொந்தமான மிகப் பெரிய தோட்டமாக அப்போது அது இருந்தது. 1966-ன் இறுதியில், தோட்ட நிர்வாகம் அத்தோட்டத்தின் 56 தொழிலாளர்களைப் படிப்படியாக பணி நீக்கம் செய்தது. தொழிலாளர்கள் தொடர்ந்து பணி நீக்கம் செயப்படும் விவகாரத்தில் என்.யூ.டி.பி. ஆக்கப்பூர்வமான செயல்பாடு இல்லாமல் அலட்சியம் காட்டியதன் காரணமாக தொழிலாளர்கள் அத்தொழிற்சங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்தனர். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காக உதவிட என்.யூ.டி.பி. முன் வரவில்லை என்பதும் வரலாற்று பதிவாகும்.

இந்நிலையில், அக்காலக்கட்டத்தில் தொழிலாளர் உரிமைக்காக மிகவும் தீவிரமாகவும் அதேவேளையில் உண்மையாகவும் இயங்கிக் கொண்டிருந்த யு.ம.தோ.தொ.தொ. மீது தொழிலாளர்களின் கவனம் திரும்பியது. தொழிலாளர்களின் நலன் யு.ம.தோ.தொ.தொ.-வால் பாதுக்காக்கப்படும் என நம்பிய தொழிலாளர்கள் அத்தொழிற்சங்கத்தில் உறுப்பியம் பெற தொடங்கியதோடு, அச்சங்கத்தை அங்கீகரிக்கவும் முதலாளி தரப்பிற்கு அழுத்தமும் கொடுத்தனர். குறுகிய காலத்தில் அத்தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் யு.ம.தோ.தொ.தொ.-இல் இணைந்தனர்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாத முதலாளிகள், யு.ம.தோ.தொ.தொ.-ஐ அங்கீகரிக்க மறுத்ததோடு மட்டுமின்றி, அச்சங்கத்தில் சேர்ந்த 17 தொழிலாளர்களையும் வேலை நீக்கம் செய்ய ஆயத்தமானார்கள். தொழிலாளர் அமைச்சு, மலாக்கா மாநில முதல்வர் எனப் பல்வேறு தரப்பினரைச் சந்தித்த பின்னரும்கூட கத்ரி நிறுவனம் யு.ம.தோ.தொ.தொ.-வுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இணங்கவில்லை.

இந்நிலையில் தொழிலாளர்கள் தங்களின் இறுதிக்கட்ட முன்னெடுப்பாக வேலை நிறுத்த போராட்டத்தைக் கையிலெடுத்தனர். முதற்கட்டமாக, கோலாலம்பூரிலிருந்த கத்ரி நிறுவன அலுவலகத்தின் முன்பும் மனிதவள அமைச்சின் அலுவலத்தின் முன்பும் பதாகை ஏந்தி போராட்டத்தைத் தொடங்கினார்கள். பின்னர், அசஹான் தோட்டத்தில் வேலை நிறுத்தமும் தொடங்கியது.

வேலை நிறுத்தம் பரப்பரப்பாகத் தொடங்கியது, தோட்டத்தின் நுழைவாயிலில் பெரும்பான்மையான தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுப்பட்டனர். தோட்டத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தைக் கத்ரி நிறுவனம் கண்டுக்கொள்ளாத நிலையில், அரசாங்கத்தின் பார்வையும் இப்போராட்டத்தின் மீதும் அந்தத் தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் விழவில்லை.

மாறாய், வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்களைத் தடுப்பதற்கும், அவர்களைக் களைப்பதற்கும் காவல்துறையினரும் கலகத்தடுப்பு பிரிவினரும் (ஃப்.ஆர்.யூ) களமிறக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. அவர்கள் அமைத்த போராட்ட மேடை இடித்து தள்ளப்பட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்களின் உணவுகளும் அவர்களுக்கு தேவையான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி, போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்களைக் காவல்துறை தடுத்தும் வைத்தது.

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கை அரசாங்கத்தின் பார்வையில் விழவில்லை என்பதை உணர்ந்த தொழிலாளர்களும் யு.ம.தோ.தொ.தொ. தொழிற்சங்கவாதிகளும் இப்போராட்டத்தைத் தோட்டத்திற்குள்ளேயே அடக்க விரும்பாமல் தேசிய நிலையில் அனைவரும் அறியும் வண்ணம் செய்ய வேண்டும் என எண்ணினர்.

அதுமட்டுமின்றி, அசாங்கமும் இப்பிரச்சனையில் தலையீடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் எதிர்பார்த்தனர். அதற்காக, சுமார் 200 கிமீ நடைப்பயணம் செய்ய அவர்கள் முடிவெடுத்தனர். வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட 49-வது நாள் (ஏப்ரல் 14,1967) அவர்கள் இம்முடிவை எடுத்தனர்.

அசஹான் தோட்டத்திலிருந்து, கோலாலம்பூருக்குப் பேரணியாக நடக்கத் தொடங்கினார்கள். அவர்களது அப்போராட்டத்திற்கு மற்றத் தோட்டத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொது மக்களின் ஆதரவும் கிடைத்தது. அப்பேரணியின் போது உணவு, தங்குமிடம் உட்பட பல்வேறு உதவிகளைப் பல்வேறு தரப்பினர் செய்துக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூரை நோக்கி ஊர்வலமாக சுமார் 300 தொழிலாளர்கள் 200 கிமீ நடக்க தொடங்கிய வேளையில், சுமார் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்டத்தின் நுழைவாயிலில் தங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இப்போராட்டத்தின் போது, தொழிலாளர்கள் ஒவ்வொரு இடத்தைக் கடக்கும் போதும், அவர்களின் போராட்டத்தை ஆதரிப்பதை உணர்த்துவதற்காகவும் தொழிலாளர் ஒற்றுமையை மெய்ப்பிக்கும் அடையாளமாகவும் அவர்களோடு அங்குள்ளவர்களும் நடப்பார்கள்.

பேரணியின் போது, வழியில் அவர்களுக்குப் பல்வேறு தடைகளும் இருந்தன. அவர்கள் பலமுறை காவல்துறையினரால் தடுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். மலாக்கா ஜாசினில் காவல்துறையும் கலக்கத்தடுப்பு பிரிவும் போராட்டவாதிகள் மீது அடித்தடி நடத்தியதோடு, கண்ணீர் புகைக்குண்டும் வீசினர். அதில் அதிகமானோர் காயம் அடைந்ததோடு மட்டுமின்றி, சிலர் கைதும் செய்யப்பட்டனர்.

அந்நேரத்தில் அங்கு, சுமார் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் கலக்கத்தடுப்பு பிரிவினரோடு, 20 கலக்கத்தடுப்பு வாகனங்களும் இருந்தன. இவற்றோடு, ஜாசின் காவல்நிலையத் தலைமை காவல்அதிகாரியும் மலாக்கா மஜீஸ்ட்ரெட் நீதிமன்ற நீதிபதியும் அங்கிருந்தனர். போராட்டவாதிகளை நோக்கி “தாங்கள் மேற்கொள்ளும் இப்போராட்டம் சட்டவிரோதமானது, இது சட்டத்திற்கு உட்பட்டதல்ல, 3 நிமிடத்தில் அனைவரும் களைந்து செல்லாவிட்டால், போலிஸ் கடும் நடவடிக்கையை எடுக்கும்,” என எச்சரிக்கை முழங்கப்பட்டது.

காவல்துறையின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், 25 வயது நிரம்பிய லீ பாஃன் செங் எனும் போராட்டவாதி உரத்த குரலில் “நாங்கள் அமைதியான முறையில் தான் நடக்கிறோம், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கவில்லை. எங்களைக் களைந்து போகச்சொல்ல, எந்தவொரு நியாயமான காரணமும் இல்லை. தொடர்ந்து கட்டாயப்படுத்தினால், நாங்கள் எங்களின் உரிமைக்காக சிறை செல்லவும் தயார்,” என்று தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காக முழங்கினார்.

அதேவேளையில், ஊர்வலத்தைத் தடுக்கும் நோக்கத்தில், போராட்டவாதிகள் தங்கியிருந்த கம்போங் கன்டாங் கிராமத்தில் காவல்துறை ஊரடங்கு நடவடிக்கையை விதித்தது. இதன் மூலம் போராட்டவாதிகளைத் தடுக்கவும் கைது செய்யவும் காவல்துறை திட்டம் போட்டது.

அதனை அடுத்து, தம்பீன், நெகிரி செம்பிலானிலும் போராட்டவாதிகளைத் தடுத்த காவல்துறை, கைது நடவடிக்கையிலும் ஈடுப்பட்டது. போராட்டவாதிகளின் வருகைக்காகவே சிலாங்கூர், காஜாங்கில் காத்திருந்த காவல்துறை மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் மீண்டும் ஒருமுறை போராட்டவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் நிறைய பேர் காயம் அடைந்ததோடு, கைது செய்து சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

கைது செய்து தடுத்து வைக்கப்பட்ட போராட்டவாதிகளை, ஜாமினில் விடுவிக்க காஜாங் காவல் நிலையத்திற்கு வருகை புரிந்த யு.ம.தோ.தொ.தொ. -இன் சட்ட ஆலோசகர், வழக்கறிஞர் கராம் சிங் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கறிஞர் கராம் சிங் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போது, அவருடன் தொழிலாளர் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் கோ ஹன் குவாங் மற்றும் மக்கள் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினரான சென் கோக் காஃன் ஆகிய இருவரும் இருந்தனர்.

எல்லாத் தடைகளையும் தொழிலாளர் வர்க்கம் தங்களின் உறுதியான மனவலிமையால் உடைத்தெறிந்து, இறுதியாக 1967-ம் ஆண்டு, ஏப்ரல் 21-ம் தேதி, கோலாலம்பூர் வந்தடைந்தனர். கோலாலம்பூர் வந்தடைந்த அவர்களை 27 ஏப்ரல் -ல், பிரதமரும் தொழிலாளர் அமைச்சரும் சந்தித்துப் பேசினார்கள். அவர்கள் அசஹான் தோட்டத் தொழிலாளர் பிரச்னைக்கு உதவுவதாக உறுதி அளித்தனர்.

பிரதமர் துறை சார்பில் பிரதமர் துங்கு அப்துல் இரஹ்மான், மனிதவள அமைச்சர் மாணிக்கவாசகம், மனிதவள அமைச்சின் செயலாளர் பயநாதன் மற்றும் பிரதமர் துறை செயலாளர் யாப் ஜூன் குய் ஆகியோர் இடம் பெற்றிருந்த நிலையில், தொழிலாளர்கள் பிரதிநிதியாக யோங் குன் ஹோய், இப்ராஹிம், சோ யூ லொங் ஆகியோருடன் யு.ம.தோ.தொ.தொ.-தின் பிரதிநிதியாக லிம் ஜோ மற்றும் எஸ்.என்.ராஜாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, 5 மே, 1967-ல், அசஹான் தோட்ட முதலாளிகளுக்கும் தொழிலாளர் அமைச்சுக்கும் மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்பேச்சுவார்த்தைக்குப் பின்னர், வேலை நீக்கம் செய்யப்பட்ட 73 தொழிலாளர்களையும் தோட்ட நிர்வாகம் வேலைக்கு அமர்த்தியது. இருந்தபோதிலும், முதலாளிகள் தரப்பில் யு.ம.தோ.தொ.தொ. தொடர்ந்து அங்கீகரிக்கப்படாமல் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.