மது போதையில் சாலை விபத்து: இதர குற்றங்களும் ஆபத்தானவையே!

இராகவன் கருப்பையா-  மது போதையில் வாகனமோட்டுவோருக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பரிந்துரைகள் நாம் எதிர்பார்த்த ஒன்றுதான்.

சமீப காலமாக நிகழ்ந்த சில சாலை விபத்துகளைத் தொடர்ந்து நாடு முழுவதும் இது தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் பேரளவில் நிலவியதுவே இதற்கான மூலக்காரணம் என்பதையும் மக்கள் அறிவார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே இது குறித்து அவ்வப்போது பரவலாக பேசப்பட்டு வந்தாலும் கூட இப்போது அரசாங்கம் முழு மூச்சாக ஆக்ககரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளது பாராட்டத்தக்க ஒன்று என்றே சொல்ல வேண்டும்.

பொறுப்பில்லாமல் மது அருந்திவிட்டு வாகனமோட்டுவோரினால் ஏற்படும் விபத்துகளில் அப்பாவி உயிர்கள் பலியாவதை யாருமே ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே இத்தகைய கொடூரச் செயல்களுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்குவது நியாயமான ஒரு நடவடிக்கைதான்.

எனினும் சட்டங்களை இயற்றிய பிறகு அவற்றை முறையாக அமல்படுத்தவில்லையென்றால் அதுவும் வெறும் வெத்து வேட்டாகிவிடும் நிலைதான் ஏற்படும்.

சாலைத் தடுப்பில் சோதனை செய்யும் போலீஸ்காரர்கள் முதல் தண்டனையை முடிவு செய்யும் நீதிபதிகள் வரை அனைவருமே இதன் அமலாக்கத்தில் பாரபட்சமின்றி நேர்மையாகவும் நியாயமாகவும் செயலாற்றுவதை அரசாங்கம் உறுதி செய்வது அவசியமாகும்.

பில்லியன் கணக்கில் அரசாங்கப் பணத்தை கையாடல் செய்ததாக அண்மையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட செல்வாக்கு மிக்க சிலர் ஒன்றன் பின் ஒன்றாக விடுவிக்கப்பட்ட சம்பவங்களை நாம் இங்கு நினைவு கூறத்தான் வேண்டியிருக்கிறது.

எனவே நாட்டின் நீதித்துறை மீதான பொது மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் கடப்பாடாகும்.

இதற்கிடையே நாடு முழுவதும் நிகழும் சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மது போதையில் வாகனமோட்டுவதால் ஏற்படும் விபத்துகளில் மரணமடைவோரின் எண்ணிக்கை 1% கும் குறைவுதான்.

இந்நிலையில் தும்பை விட்டு வாலைப் பிடிப்பதைப் போல மது போதையில் வாகனமோட்டுவோருக்கு எதிராக மட்டும் ஏன் இந்த ஆர்ப்பரிப்பு என பிரிதொரு சாரார் கேள்வி எழுப்பத்தான் செய்கின்றனர்.

அவர்களுடைய ஆதங்கமும் நியாயமான ஒன்றுதான். ஏனென்றால் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் மற்றும் ‘மாட் ரெம்ப்பிட்’ எனப்படும் இளையோரின் முரட்டுத்தனமான சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தையங்கள் முதலிய சம்பவங்களினால் நிறைய பேர் மரணமடையும் செய்திகளையும் அவ்வப்போது நாம் பார்க்கின்றோம்.

அப்பாவிப் பெண்களின் கழுத்தில் உள்ள சங்கிலிகள் மற்றும் அவர்களுடைய கைப் பைகளை கொள்ளையர்கள் அபகரிக்கும் போது சாலைகளில் அவர்கள் விழுந்து தரதரவென இழுத்துச் செல்லப்படும் வேளையில் நிகழும் கொடூரமான மரணங்களையும் கூட பல வேளைகளில் மறைக்காணி வழியிலான காணொலிகளில் கான்கின்றோம்.

இத்தகையக் கொடியவர்கள் அனைவருமே பிடிபட்டு தண்டிக்கப்படுகின்றனரா என்று தெரியவில்லை.

ஒரு சில சமையங்களில் வழிப்போக்கர்கள் அவர்களை வளைத்துப் பிடித்து அங்கேயே வெளுத்துக்கட்டுகின்றனர்.

இவற்றைத் தவிர்த்து ஆண்டுதோரும் பெருநாள் காலங்களில் நிகழும் சாலை விபத்துகளிலும் நூற்றுக் கணக்கானோர் பரிதாபமாக மரணமடைகின்றனர்.

இவற்றுக்கான காரணங்களையும் கண்டறிந்து குற்றம் புரிவோரை கடுமையாகத் தண்டிக்க வகை செய்வதும் அரசாங்கத்தின் கடமையாகும்.

ஆக மது போதையில் வாகனமோட்டுவோரை மட்டுமே கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றில்லாமல் சாலைகளில் அபாயகரமான விபத்துகளை ஏற்படுத்தும் இதர குற்றவாளிகளையும் தகுந்த வகையில் தண்டிக்க வகை செய்யும் சட்டத்திருத்தங்களை அரசாங்கம் மேற்கொள்வது அவசியமாகும்.